கழுகு ஒன்று வானத்தைச் சுற்றிச் சுற்றி வட்டமடித்துக் கொண்டிருந்து. அது அந்த ஊரில் வசித்து வந்த பழமையான கழுகு. அது எங்கு நோக்கினும் வானத்தைத் தொடத் துடிக்கும் கட்டடங்களும், அலைபேசிக் கோபுரங்களும்தான் தெரிந்தன. பசுமை போர்த்திய மரங்களை எங்கும் காணவேயில்லை.
சரி, நமது பறவை நண்பர்கள் யாரேனும் தென்படுகிறார்களா என்று பார்த்தால், எங்கும் யாரையும் காணவில்லை.
கழுகு யோசித்தது – இந்த மனிதர்கள் தங்களுடன் படித்த பழைய நண்பர்களை அழைத்து அவ்வப்போது விழா கொண்டாடுகிறார்களே, நாமும் அவ்வாறு கொண்டாடினால் என்ன என்று தோன்றியது.
உடனே, தனது மற்றொரு நண்பனான புறாவை தனது உதவிக்கு அழைத்தது. புறாவும் மிகவும் சந்தோஷத்துடன், “”எனக்கும் பழைய நண்பர்களைக் காண வேண்டும் போல் உள்ளது… அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து எங்கெங்கோ சென்று விட்டார்கள். நாம் ஒரு மடல் தயாரித்து எல்லோருக்கும் அனுப்புவோம்… ஏன், நானே கொண்டு செல்கிறேன்” என்றது.
மேலும், ”இந்தக் கூட்டத்தை எங்கு வைத்துக் கொள்ளலாம்? நமக்குத்தான் காடு என்ற இடம் இருக்கே.. அங்க வெச்சுக்கலாமா” என்று கேட்டது புறா.
“”காடா… அப்படீன்னு ஓர் இடம் இப்போது இல்லையே… உனக்கு இன்னுமா தெரியல…” என்றது கழுகு கோபமாக.
“”சரி, அதோ தெரியுதே… ஆலமரம்… அங்கு நாம எல்லாம் சந்தித்து உரையாடலாம்” என்றது புறா.
பின்னர் இருவரும் சேர்ந்து அழைப்பு மடல் தயாரித்து எல்லாப் பறவையினங்களுக்கும் அனுப்பி வைத்தனர். அந்த மடலைக் கண்ட பறவையினங்கள் மிகவும் சந்தோஷமடைந்தன.
அந்தக் குறிப்பிட்ட நாளும் வந்தது. மைனா அழகாக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியது. முதலில் குயில் கடவுள் வாழ்த்து பாடியது. நாட்டின் தேசியப் பறவையான மயிலின் நடனம் தொடர்ந்தது.
பின்னர்,ஒவ்வொரு பறவையும் பேச ஆரம்பித்தன.
வரவேற்புரை ஆற்றிய கிளி, “”அன்பான நண்பர்களே, நாம வசிக்க இப்போ ஓர் இடம் கூட இல்லை. இந்த மனிதர்கள் ஆக்கிரமித்துக் கொண்டு விட்டார்கள்.
காடு என்பது பறவைகளான நாமும், நமது நண்பர்களான விலங்குகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழும் வீடு என்பதை ஏனோ மனிதர்கள் மறந்துட்டாங்க. நாம எல்லாம் சேர்ந்து இதற்கு ஓர் முடிவு கட்டணும். என்னையே எடுத்துக்கங்களேன், நான் உணவுக்காகப் பறந்து செல்லும்போது என்னைப் பிடிச்சி கூண்டுல அடைச்சிடறாங்க, என் இறகை ஒடித்துப் பேசு, பேசுன்னு துன்புறுத்தறாங்க” என்றது.
அடுத்துப் பேசிய புறா, “”இப்போ எல்லாம் வளர்ச்சி என்ற பேர்ல அழகிய, பழைய கட்டடங்களை எல்லாம் இடிக்கிறாங்க… நானும் என் இனமும் எங்கே போவதுன்னே தெரியலை, மிகவும் வருத்தமா இருக்கு” என்றது.
அடுத்துப் பேசிய காகம், “”எங்க இனமே அழிஞ்சிட்டிருக்கு.. எதிர்கால மனிதர்கள் பறவை என்று சொன்னால் எப்படியிருக்கும்? என்று கேட்பார்கள் போலிருக்கு. காடுகள், நீர்நிலைகள் எல்லாம் வீடுகளாகவும், பெரிய பெரிய கல்லூரிகளாவும் மாறி விட்டன. காடுகள்தான் நமது வீடு. கானுயிர்களான நமக்குத்தான் இங்கு வாழ உரிமை உண்டு. நாம் உணவிற்காகவும், தண்ணீருக்காகவும் இப்போதெல்லாம் அலைகிறோம். முன்பெல்லாம், என் பெயர் சொல்லி அழைத்து உணவு அளிப்பார்கள். இப்போது வீட்டில் யாருமே இருப்பது இல்லை. வேலை வேலைன்னு எங்காவது வெளியே போறாங்க. நம் இனத்திற்காக முன்பு பெரியவர்கள் வீட்டின் வெளியே தண்ணீர் வைப்பாங்க.. இப்போது அந்தப் பெரியவர்கள் யாரும் காணல…” என்று வருத்தமுடன் கூறியது.
பின்னர், மயில் தத்தி தத்தி நடந்து வந்து, பேச ஆரம்பித்தது – “”என்னை மழை மேகம் கண்டால் ஆடுவேன் என்கிறார்கள். இப்போ எல்லாம் எப்போ மழை பெய்துன்னே தெரியல. மேகக் கூட்டமும் தென்படறதேயில்லை. இந்தக் காடுகளை அழிச்சிட்டால் எங்கே மேகக் கூட்டம் வந்து மழையைப் பெய்ய வைக்கப் போவுது. என் இனத்தைக் கொன்று, அழகான தோகைகளை இந்த மனுசங்க, வெளிநாட்டுக்கு அனுப்பறாங்களாம்… பல லட்சம் ஆண்டுகளாக நமக்கு சொந்தமாக இருந்த காடுகளில் மனிதர்களின் அத்துமீறல் அதிகரித்து வருகிறது.
சாலைகள் கானகத்தை இரண்டாகப் பிரித்து விடுகின்றன. இடைவிடாத வாகன ஓட்டத்தில் துண்டாக்கப்படுகிறது. உணவிற்காகவும் தண்ணீருக்காகவும் சாலையைக் கடக்கும் போது அசுர வேகத்தில் செல்லும் வாகனங்களில் அடிபட்டு நம் இனங்களில் பலர் பரிதாபமாக செத்துப் போறாங்க” என்றது.
பின்னர், கொக்கு அழுதுகொண்டே பேச ஆரம்பித்தது, “”நான் குளம், குட்டை, ஏரி போன்ற நீர்நிலைகளில் வசித்து வந்தேன். இப்போதெல்லாம் அவைகள் யாவும் வீடுகளாகவும், சுற்றுச் சூழலைப் பாதிக்கும் தொழிற்சாலைகளாகவும் மாறி விட்டன. அவைகள் கக்கும் புகையும், வெளியேற்றும் இரசாயனக் கழிவுகளும் காற்றையும் மாசுபடுத்தி எங்களையும் அழிக்குது” என்றது.
நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய மைனா, “”இப்போது நமது நண்பர் சிட்டுக் குருவி பேசுவார்” என்றது.
எல்லாப் பறவைகளும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டன. அந்தக் கூட்டத்தில் சிட்டுக் குருவியை காணவேயில்லை. “எங்கே..? நம்ம நண்பன் சிட்டுக் குருவி’ என்று ஒருவரையொருவர் விசாரித்துக் கொண்டன.
அப்போது, வயதான சிட்டுக்குருவி ஒன்று நடுங்கியபடியே, தள்ளாடித் தள்ளாடி வாசல் ஓரம் நின்று கொண்டிருந்தது. அதைக் கண்ட மற்ற பறவைகள் மிகவும் வருந்தின.
பின்னர், அதன் நண்பர்கள் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதால், குருவி மேடை ஏறி பேச ஆரம்பித்தது.
“”எங்க இனத்தை இப்போ எல்லாம் நீங்க பார்த்திருக்கவே மாட்டீங்க. நான் எப்படியோ தப்பிச்சு, நமது நண்பர்களை எல்லாம் காண வேண்டும் என்று விரும்பி வந்துள்ளேன். மேலும், முன்பெல்லாம் பழங்கால மக்கள் குடிசைகளின் வாயில்களில் நெற்கதிர்களைக் கட்டி எங்களை வரவேற்பாங்க. நாங்களும் அவங்க பெத்த பிள்ளைகளைப் போல அவங்க வீட்டுக்குள் வந்து போவோம்.
அவர்களின் ஒரு அங்கமாக இருந்த நாங்க எல்லாம் இப்போ மாயமாகி வருகிறோம். இதற்குக் காரணம் செல்போன் டவர்ன்னு மனுசங்க பேசிக்கிறாங்க. செல்போன் டவரிலிருந்து வரும் மின் காந்த அலைகள் எங்க இனத்தையே மலடாக்குகின்றன. எங்களுக்குப் பூச்சிகள்தான் முக்கிய உணவு.
ஆனால், இந்த மனுசன்கள், பயிர்கள் வேகமா வளரணும்னு, வயல்கள் வீட்டுத் தோட்டங்கள் ஆகியவைகளில் பூச்சி மருந்துகளையெல்லாம் தெளிச்சி பூச்சிகளை எல்லாம் கொல்றாங்க. நம்ம சோத்துலேயும் கை வைக்கிறாங்க… அந்தப் பூச்சிகளை சாப்பிடும் நாமும் அழிஞ்சிடறோம். தாவர விதைகள் பறவைகளின் எச்சங்கள் வழியே இயற்கையாக விதைக்கப்படுகிறது என்பதை மனுசங்க உணர்ந்தால் இயற்கை சுழற்சியை அறிய முடியும். நமது சேவை அவர்களுக்குத் தேவை என்பதையும் உணருவார்கள்… என்னைப் பேச அழைத்தமைக்கு நன்றி” என்றது.
மேலும், பேச முடியாமல் சிட்டுக்குருவி தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தது.
இறுதியில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கழுகார் பேச ஆரம்பித்தார், “”அன்பு நண்பர்களே, பறவையினங்களையும் நமது நண்பர்களுமான விலங்குகளையும், நமது வீடுகளான காடுகளையும் அழித்தால் என்ன நஷ்டம் வந்திடப் போவுதுன்னு இந்த மனுசங்க கேட்கிறாங்க.
இந்த பூமிப் பந்தில் மனிதர்கள் முதல் ஒரு சிறு புழு வரை எல்லா உயிரினமும் இயற்கையின் ஓர் அங்கம்தானே! இந்த உலகமே சங்கிலி போன்ற தொடர் அமைப்பால்தானே சுழலுகிறது. அதில் ஒரு கண்ணி அறுந்தாலும் பெரும் அழிவு ஏற்படும். அதனால்தான் இயற்கைச் சீற்றங்களான பூகம்பம், சுனாமி போன்றவைகள் ஏற்படுகின்றன.
நமக்குத் தெரிந்ததுகூட இந்த மனிதர்களுக்குத் தெரியவில்லையே என்பது நமது கவலை. உலகில் தாவரங்களும் விலங்கினங்களும் பறவைகளும் இல்லாமல் போனால் மனிதன் நிலை என்னவாகும்? நான் ஒன்று கேட்கிறேன்… பிராண வாயு இல்லாத இடத்தில் மனிதன் உயிர் வாழ முடியுமா?
நாம பல கோடி வருசமா இங்கே வாழ்ந்துட்டு வரோம், இவங்க நம்மள விரட்டுறாங்க. நான் சவால் விடறேன்… மனுசங்க இல்லாத இடத்தில் நாம நிம்மதியா உயிர் வாழ்வோம், ஆனால், பறவைகளும் விலங்குகளும் இல்லாத உலகில் அவங்களால உயிர் வாழ முடியுமா?” என்று கேட்டது.
இதைக் கேட்ட மற்ற பறவைகள் கைதட்டி ஆர்ப்பரித்தன. புறா நன்றி நவின்றது.
பின்னர், அனைத்துப் பறவைகளும் கை குலுக்கி மீண்டும் ஒரு முறை சந்திப்போம் என்று கூறிக்கொண்டு ஆளுக்கொரு திசையாகப் பறந்து சென்றன.
– பா.இராதாகிருஷ்ணன் (ஏப்ரல் 2012)