கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 12,886 
 
 

ஒரு சமயம், பள்ளியில் ஆசிரியர் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும்போது, விவேகானந்தர், மாணவர்களிடையே சம்பவம் ஒன்றைச் சொல்லி சிரிக்க வைத்தார். அதைக் கண்ட ஆசிரியர் கோபம் கொண்டு, நடத்தின பாடத்திலிருந்து கேள்வி கேட்டார்.

SariyanaBadilவிவேகானந்தர் மட்டும் சரியான பதில் கூறினார். மற்ற மாணவர்கள் பதில் கூறாததால், “பாடத்தைக் கவனிக்காமல் அரட்டை அடித்ததற்காக, எல்லாரும் பெஞ்சு மேல் ஏறுங்கடா!’ என்று ஆசிரியர் சொன்னதும், முதலில் பெஞ்சு மேல் ஏறி நின்றவர் விவேகானந்தர். “நீ ஏன் நிற்கிறாய்? நீ தான் கேள்விக்குச் சரியான பதில் சொல்லி விட்டாயே!’ என்று கேட்டார் ஆசிரியர். “”நான் சொன்ன நகைச்சுவை சம்பவத்தைக் கேட்டுத் தானே பாடத்தைக் கவனிக்காமலும், பதில் சொல்லாமலும் இருந்தனர். அதனால், தப்பு என்மேல் தான். அவர்களிடம் இல்லை” என்றார் விவேகானந்தர்.

எல்லா மாணவர்களையும் கீழே இறங்கச் சொல்லிய ஆசிரியர், உண்மையைச் சொன்ன விவேகானந்தரைப் பெரிதும் பாராட்டினார். மற்றொரு சமயம், நடுத்தெருவில் ஒரு குதிரை வண்டி தறிகெட்டு தாறுமாறாக அதிக வேகத்துடன் ஓடிக் கொண்டிருந்தது. எதிரே ஒரு சின்னஞ்சிறு குழந்தை வந்து கொண்டிருந்தது. கண் திறப்பதற்குள், குதிரை வண்டி, குழந்தை மீது ஏறி நசுங்கிக் கொன்றுவிடப் போகிற நிலை, தெருவிலிருந்தோர்க்கு ரத்தம் உறைவது போன்று… அனைவரும் கண்களை மூடிக் கொண்டனர். ஒருவர் கூட குழந்தையைக் காப்பாற்ற முன்வரவில்லை.
ஆனால், அனைவரும் எதிர்பார்த்ததுபோல் குழந்தைக்கு ஒன்றும் ஆகிவிடாமல், குழந்தை காப்பாற்றப்பட்டதைக் கண்டவர்கள் ஆச்சரியத்துடன், குழந்தை எப்படி காப்பாற்றப்பட்டது எனப் பார்த்தனர். ஏழு வயது சிறுவனால் காப்பாற்றப்பட்டதை அறிந்து அச்சிறுவனை பெரிதும் பாராட்டினர். அப்படிப் பாராட்டப்பட்ட சிறுவன் தான் விவேகானந்தர்.
வீரதீர சாகசங்களை சிறுவயதிலே செய்து வந்தவர், உயர்நிலைக் கல்வியை முடித்துவிட்டு கல்லூரி படிப்பை மேற்கொண்டார். ஐ.சி.எஸ்., பட்டப்படிப்பில் மகனைப் படிக்க வைக்க வேண்டும் என்பது தந்தையின் விருப்பமாக இருந்தது. விவேகானந்தருக்கோ, அப்படிப்பின் மீது விருப்பமில்லை. பதிலாக, மத ஈடுபாட்டின் மீது விருப்பமிருந்தது.
அப்போது, “பிரம்ம சமாஜம்’ என்ற இந்துமத அமைப்பை, ராஜாராம் மோகன்ராய் துவக்கி நடத்தி வந்தார். அவ்வியக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டார் விவேகானந்தர். விஷயமறிந்த அவரது தந்தை, மகன் துறவியாகி விடுவானோ என அஞ்சி, விவேகானந்தரின் மனதை திசை திருப்புவதற்காக, மணமுடித்து வைக்க, செல்வந்தர் குடும்பத்தில் பெண் கேட்டார். செல்வந்தரும் பெண் கொடுக்க சம்மதித்து, ஏராளமான நகை, பணம், வண்டி அனைத்தும் தருவதாக வாக்குறுதி அளித்தார். பொன், பொருள், பெண் எதுவும் வேண்டாம் என்று ஒரேயடியாக மறுத்தவர், “பிரம்ம சமாஜத்தில்’ முன்பைவிட தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். ஒருமுறை, பிரம்ம சமாஜத் தலைவர் ராஜாராம் மோகன்ராயிடம், “நான் உங்கள் அமைப்பில் உறுப்பினர். கடவுள் பற்றைப் பற்றி வலியுறுத்துகிறது நம் அமைப்பு. கடவுளைப் பற்றிப் பேசப் போகும் நாம், மக்கள் நம்மிடம் கடவுள் எங்கே இருக்கிறார் என்று கேட்டால் என்ன பதில் சொல்வது? நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா? பார்த்திருந்தால் சொல்லுங்கள். மக்களிடம் அதைப் பற்றி சொல்லலாம்!’ என்று விவேகானந்தர் கேட்டார்.
எதிர்பாராத விதமாக கேட்கப்பட்ட இந்தக் கேள்வியால், ராஜாராம் மோகன்ராய் அசந்து விட்டார். கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாத மோகன்ராய், இந்த இளைஞன் பிற்காலத்தில் ஞானியாவான் என்று தனக்குள் சொல்லிக் கொண்டார். மோகன் ராயிடமிருந்து பதில் வராததைக் கண்ட விவேகானந்தர், பிரம்ம சமாஜத்தின் மீது வெறுப்பு கொண்டார். அதன் மீதிருந்த பிடிப்பு குறைந்தது. “கடவுள் இல்லை’ என்று நாத்திகர் சொல்வது சரிதானோ? என்ற ரீதியில் அவரது மனம் சிந்திக்கத் தொடங்கியது. கடவுளைக் கண்டதுண்டா? அவரைக் காண முடியுமா? அப்படி ஒருவர் இருக்கிறாரா? இருந்தால், நம் குடும்பத்தை இவ்வளவு கஷ்டத்தில் விடுவாரா? என வேதனையால் விரக்தியடைந்த வேளையில், ராமகிருஷ்ணர் அவர் இருந்த பகுதிக்கு வந்தபோது, அவரிடம் தங்களது குடும்பத்தின் வறுமையை சொல்லி, அதற்கான நிவாரணம் பெற தாய் அனுப்பினார். ராமகிருஷ்ணரின் அருகில் சென்ற விவேகானந்தர், தமது குடும்ப கஷ்ட ஜீவனத்தைச் சொல்ல மறந்தார். ஜீவனத்திற்கு சுவாமிகள் என்ன சொன்னார்? என்று கேட்ட தாயிடம், “இல்லை’ என்று தலையாட்டினார்.
இரண்டாவது முறையும் ராமகிருஷ்ணரிடம் கஷ்ட ஜீவனத்திற்கு நிவாரணம் காண அனுப்பினார். அப்போதும் சொல்ல மறந்தார்.
இதேபோன்று, மூன்றாம் முறை சென்றார். ராமகிருஷ்ணரிடம் ஐக்கியமானவர், திரும்ப தாயிடம் செல்லவில்லை. மகன், ராமகிருஷ்ண சுவாமிகளிடம் ஐக்கியமானதை அறிந்த தாய், விவேகானந்தரை வீட்டுக்கு வருமாறு அழைத்தார்; வர மறுத்தார். “தாய் அழைக்கிறேன்’ என்றார். “இவ்வுலகில் நீங்கள் மட்டும் தாயல்ல. அனைவருமே தாய்’ என்றார். அதன் பின்பு ராமகிருஷ்ணன் அவரைத் தொட்டார். விவேகானந்தரின் உடலில் மின்சாரம் பாய்வது போன்ற உணர்வு ஏற்பட்டது. இருப்பினும், “கடவுளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?’ என்ற கேள்வியைக் கேட்டார்.
“கடவுளைப் பார்த்துமிருக்கிறேன்; பேசியுமிருக்கிறேன்’ என்றார்.
கடவுள் என்பவர் யார்? அவரிடம் கேட்க வேண்டியது என்ன? என்ற விவரங்களை விளக்கமாகப் போதித்தார். ராமகிருஷ்ணரின் போதனை, விவேகானந்தருக்கு வெகுவாகப் பிடித்துவிட்டது. “விவேகானந்தர்’ பெயருடன் இந்தியா முழுவதும் சுற்றினார். கன்னியாகுமரி கடலில் குதித்து நீந்தி, நடுவிலுள்ள பாறைக்குச் சென்று, மூன்று நாட்கள் அங்கேயே தியானத்தில் அமர்ந்து, “மக்களுக்குச் சேவை செய்வதே சிறந்த சேவை, உண்மையான ஆன்மீகம்’ என்பதை உணர்ந்தார்; உணர்த்தவும் செய்தார். “நாம் செலுத்துகிற பணிவுக்கும், மரியாதைக்கும் பிரதிபலனாக, இறைவன் ஏதேனும் ஒரு நலனைத் தர வேண்டுமென்று நாம் எதிர்பார்க்கும் வரை, இறைவன் மீது உண்மையான பக்தி உண்டாகாது’ என்றார் விவேகானந்தர்.
அவரது உயரிய கருத்துக்களைப் பின்பற்றி வாழ்வோமாக…

– ஜூலை 02,2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *