நாய் ஒன்று குழியில் விழுந்துவிட்டது. மேலே வரமுடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது. அந்த வழியாக கிழட்டு ஆடு ஒன்று செல்வதைப் பார்த்தது.
ஓநாய், கிழட்டு ஆட்டிடம் கெஞ்சியது-
“பெரியவரே, என்னைக் காப்பாற்றுங்கள்… நீங்கள் உதவி செய்தால் நான் உயிர் பிழைத்துக் கொள்வேன்…’
கிழட்டு ஆடு, ஓநாயைக் கூர்ந்து பார்த்தது. வயதான காரணத்தால் எந்த மிருகம் என்று அடையாளம் காண முடியவில்லை.
“யார் நீ? எப்படிக் குழிக்குள் விழுந்தாய்?’ என்று கேட்டது.
“பெரியவரே, நான் நன்றிக்குப் பேர் போன நாய் இனத்தைச் சேர்ந்தவன். கோழி ஒன்று தவறி உள்ளே விழுந்துவிட்டது. அதைக் காப்பாற்ற நான் குழியில் குதித்தேன். இப்போது நான் மாட்டிக் கொண்டுவிட்டேன். தயவுசெய்து என்னைக் காப்பாற்றுங்கள்..’ என்றது ஓநாய்.
கிழட்டு ஆடு சுதாரித்துக் கொண்டது.
“உன் குரல் ஓநாயின் குரல் போலல்லவா இருக்கிறது?’ என்று கேட்டது.
“நான் வேட்டை நாய். காட்டிலேயே திரிவேன். அதனால் என் குரல் ஓநாயின் குரல் போல உனக்குப்படுகிறது’ என்றபடியே தனது வாலை ஆட்டியது.
கிழட்டு ஆடு இன்னும் கூர்ந்து பார்த்தது. ஓநாயின் வால் ஆடுவது தெரிந்தது.
“உண்மைதான்… நீ வாலாட்டுகிறாய்… இருப்பினும் நீ உண்மையைச் சொல். நீ நாய்தானா? வாலாட்டும் மிருகமெல்லாம் நாயாகிவிட முடியாது என்று எனக்குத் தெரியும்!’ என்றது.
ஓநாய் படபடத்தது…
“என்னை நம்புங்கள்… நான் சொல்வது அத்தனையும் உண்மை, சத்தியம்! வேண்டுமானால் உங்கள் காலை நீட்டுங்கள். நான் அதைப் பிடித்து மேலே வந்துவிடுகிறேன். பின்னர் என்னை அருகில் பார்த்தால் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்வீர்கள்…’ என்றது.
ஆட்டுக்கு இன்னும் சந்தேகம் தீர்ந்தபாடில்லை.
“நண்பா… உனக்கு நான் உதவத் தயார். எனக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் தேவை!’ என்றது.
இப்போது ஓநாய்க்குக் கோபம் தலைக்கேறியது!
“கிழட்டு ஆடே, பேயே… பிசாசே… இன்னுமா உனக்கு யோசனை… ஏன் இப்படித் தாமதம் செய்கிறாய்?’ என்று கத்தியது.
கிழட்டு ஆட்டுக்கு இப்போது குழிக்குள் இருப்பது ஓநாய்தான் என்று நன்கு தெரிந்துவிட்டது.
“நண்பா, நீ ஓநாய் என்பதை உன் கோபமே காட்டிக் கொடுத்துவிட்டது. நல்லவேளை, நான் தப்பித்தேன்…’ என்றபடி ஓட்டம் பிடித்தது.
– அருவி.சிவபாரதி (மார்ச் 2012)