தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 9,661 
 
 

ஒரு நகரத்தில் ஒரு ராஜா இருந்தார். அவர் எந்தக் கலைகளையும் அறியாதவர். அவ்வளவாகப் புத்திசாலித்தனமும் கிடையாது. ஆனால் அவருக்கு மதியூகியான ஒரு மந்திரி இருந்தார். அவர் எல்லா ஞானமும் பெற்றவர்.

நல்ல கைதேர்ந்த பாடகர் ஒருவர் அந்த அரண்மனைக்கு வந்தார். அரசவையிலே பாட அரசரிடம் அனுமதி கேட்டார்.

சபாஷ் ராஜாஅரசர் மந்திரியைப் பார்த்தார். மந்திரி தலையை அசைத்தவுடன், பாடகருக்கு அடுத்தநாள் பாட அனுமதி கொடுத்துவிட்டார். பாடகரும் அடுத்தநாள் பாட வருவதாகக் கூறிவிட்டு அரண்மனையை விட்டுச் சென்றார்.

அரசருக்கு இசையை ரசிக்கத் தெரியாது. எப்படி இந்த இக்கட்டான நிலையைச் சமாளிப்பது என யோசித்துக் கொண்டு அங்கும் இங்குமாக உலவிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கே மந்திரி வந்து சேர்ந்தார். மந்திரியைப் பார்த்ததும் ராஜாவிற்கு ஏகப்பட்ட சந்தோஷம்.

“”வாருங்கள் மந்திரியாரே…. நாளை நடைபெறும் பாட்டுக் கச்சேரியை எப்படி எதிர்கொள்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். நீங்களே வந்துவிட்டீர்கள்…”

“”கவலைப்படாதீர்கள் மகாராஜா.. அதற்கு ஒரு தீர்வு கொண்டுவந்திருக்கிறேன்…” என்று மந்திரி கூறினார்.

“”நல்ல தீர்வாகக் கூறுங்கள் மந்திரியாரே…” என்றார் ராஜா.

“”உங்களுக்குத்தான் நீண்ட முடியிருக்கிறதே.. அந்த முடியில் யாருக்கும் தெரியாதவாறு நீண்ட கயிற்றைக் கட்டி நுனியை என் கையில் பிடித்துக் கொண்டு பாடகன் பாடும்போது இடையிடையே இழுப்பேன். அப்பொழுது “சபாஷ்’ மட்டும் சொல்லிக் கொள்ளுங்கள்…” என்று மந்திரி கூறினார்.

“”சரி” என்று ராஜாவும் ஒத்துக்கொண்டார்.

அடுத்தநாள் அவை கூடியது. யாருக்கும் தெரியாமல் ராஜா முடியில் கட்டப்பட்டிருந்த கயிற்றின் நுனியைப் பிடித்துக் கொண்டு மந்திரியும் அமர்ந்து கொண்டார். ராஜாவும் அவர் இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

அவையினர் எல்லோரும் அமர்ந்திருந்தனர். பாடகர் வந்தார். அவருக்கு ஒரு தனி இருக்கை போடப்பட்டது. பாடகர் பாட ஆரம்பித்தார். சுவைமிகுந்த பகுதி வரும்போது மந்திரி கயிற்றை இழுக்க, ராஜா “சபாஷ்’ சொல்லிக் கொண்டே இருந்தார்.

பாடகர் பல பாடல்களைப் பாடினார். ராஜாவும் “சபாஷ்’ போட்டுக் கொண்டே இருந்தார். முடிவாக முகாரி ராகப் பாடல் ஒன்றை பாடகர் பாட ஆரம்பித்தார். ராஜா அழுதுகொண்டே சபாஷ் போட ஆரம்பித்தார். நிகழ்ச்சி முடிந்ததும், ராஜா, பாடகருக்கு பரிசில்கள் வழங்கி அனுப்பிவைத்தார்.

அன்று மாலை ராஜா தனிமையில் இருந்தார். மெதுவாக அவரிடம் வந்த மந்திரி, “”ராஜாவே நான் இழுக்க பாடல்களுக்கு சபாஷ் போட்டீர்கள் அதெல்லாம் சரிதான். முகாரி ராகப் பாடல்கள் வந்தவுடன் அழுது கொண்டே, சபாஷ் போட்டீர்களே.. உங்களுக்கு அது அழுகைப் பாடல் என்று தெரியுமா?” என்றார்.

“”என்ன மந்திரியாரே… இப்படியா என்னை நீங்கள் வதைப்பது? முடியை இழுத்து வலிக்கச் செய்துவிட்டீர்களே, வலிதாங்க முடியாமல்தான் நான் அழுதேன்…” என்றார் ராஜா.

– ம.விஜயன் (ஜூன் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *