(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஹிட்லரின் பிரச்சார மந்திரியாக இருந்தவர், கோயபெல்ஸ். ஒரு முறை அவர் ஒரு வயோதிக யூதப் பாதிரியாரைச் சந்தித்தார். கோயபெல்ஸ் அவரை “நீங்கள் யூதர்கள். உங்களுடைய மத தர்ம நூல் “தால் முத்” என்று சொல்லப்படுகிறது. அதை நீங்கள் நன்கு பயின்றிருப்பதனால் ஒரு விதமாக தார்மீக ரீதியில் தர்க்கம் செய்கிறீர்கள் என்றும், அதிலிருந்து உங்களுடைய அறிவுச் சக்தி வெளிப்படுகிறது என்றும் நான் கேள்விப் பட்டுள்ளேன். நீர், எனக்கு அதைக் கற்பிப்பீர்களா?” என்றான்.
இதனைக் கேட்ட பாதிரியார், விருப்பும் வெறுப்புமற்ற பாவனையோடு சாந்தமான குரலில், “அதை நான் உங்களுக்குக் கற்பிப்பதில் எந்த விதத் தயக்கமும் இல்லை. ஆனால், அந்த அரிய நூலை நீர் கற்றுக் கொள்வதற்கான வயதுதான் கடந்து போய்விட்டது” என்றார், பாதிரியார்.
“என்ன?, இந்த வயதில் அதனை நான் கற்றுக் கொள்ள முடியாதா? அது அவ்வளவு கடினமான ஒரு நூலா?” என்று சற்றுத் தன் குரலை உயர்த்தினான் கோயபெல்ஸ்.
“ஐயா, உண்மையைச் சொன்னால், யூத இனத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன், அந்த மத நூலைக் கற்க விரும்பினாலும் கூட, அவனை நாங்கள் தீரப் பரிசோதிப்போம். முதலில் மூன்று கேள்விகளைக் கேட்போம். அவற்றிற்குச் சரியாக விடை அவன் தரவில்லையெனில் அவனுக்கு அது கற்பிக்கப்படுவதில்லை” என்று வினய பூர்வமாக அறிவித்தார், பாதிரியார்.
“நல்லது, அப்படியானால், அப்பரிசோ தனையை இப்போதே தொடங்குங்கள். நான் அதில் நிச்சயம் தேர்ச்சி பெறுவேன்” என்றான், கோயபெல்ஸ்.
“மிகவும் நல்லது, கேளுங்கள் : இரண்டு வாலிபர்கள் புகையும், புழுதியுமாகவுள்ள ஒரு குழாய்க்குள் புகுந்து சற்று நேரம் விளையாடு கிறார்கள். பிறகு, வெளியே வந்து நேருக்கு நேர் நின்று ஒருவனையொருவன் பார்க்கிறான். அவர்களில் ஒருவன் புழுதியும் புகையும் படிந்த உடையும், உடல் முழுவதும் அழுக்குப் படிந்தவனாகவும் காணப்படுகிறான். மற்றொரு வனுடைய உடலிலோ உடையிலோ ஒரு துளியுங் கூட அழுக்குப் படிந்திருக்க வில்லை. அந்த இருவரில், “உடனே சென்று குளிக்க வேண்டும்” என்ற எண்ணம் யாருக்கு முதலில் தோன்றக்கூடும் சொல்லுங்கள் பார்க்கலாம்” என்ற தன்னுடைய முதல் கேள்வியைக் கேட்டார், அந்தச் சாதுவான பாதிரியார்.
“ஓ, இதுதானா அந்தக் கேள்வி? இதில் யோசிக்க, என்ன சிரமம். அழுக்குப் படிந்திருந்த வாலிபன் தான் முதலில் போய்க் குளிப்பான்” என்றான்.
கோயபெல்ஸின் இந்த விடையைக் கேட்ட பாதிரியார், “தப்பு………… அழுக்குப் படியாதிருந்த வாலிபன் தான் முதலில் போய்க் குளிப்பான்” என்றார்.
“எப்படி?” என்று வியப்பாகத் திருப்பிக் கேட்டான், கோயபெல்ஸ்.
“எப்படியென்றால், இருவரும் விளையாடி விட்டு வெளியே வந்து ஒருவனை ஒருவன் பார்த்துக் கொள்கிறான். அழுக்குப் படிந்த வாலிபன், மற்றவனைப் பார்த்து ‘புகையும், புழுதியும் படிந்த குழாயுக்குள் சென்று விளையாடி விட்டு வந்தும், தனக்கு ஒரு துளி அழுக்கும் படியவில்லையல்லவா? என்று யோசித்தால் அழுக்குப்படியாத மற்ற வாலிபன், இந்த அழுக்குப் படிந்தவனைப் பார்த்தவுடனே, ‘இருவரும் அழுக்குப் படிந்தவராயுள்ளோம்’ என்று யோசித்தவாறு குளிப்பதற்காக உடனே முயலுவான்” என்றார், பாதிரியார்.
“உங்களுடைய பதில் மிகவும் சரியானது. அப்படியே இருக்கலாம். சரி அடுத்த கேள்வியைக் கேளுங்கள்” என்றான், கோயபெல்ஸ்.
“இரண்டாவது கேள்வி : இரண்டு வாலிபர்கள் புகையும் புழுதியுமாகவுள்ள ஒரு குழாய்க்குள் புகுந்து சற்று நேரம் விளையாடுகிறார்கள். பிறகு வெளியே வந்து நேருக்கு நேர் நின்று ஒருவனை யொருவன் பார்க்கிறான். அவர்களில் ஒருவன் புழுதியும், புகையும் படிந்து உடையும், உடல் முழுவதும் அழுக்குப் படிந்தவனாகவும் காணப்படுகிறான். மற்றொருவனுடைய உடலில் ஒரு துளியுங் கூட அழுக்குப் படிந்திருக்கவில்லை. அந்த இருவரில் ‘உடனே சென்று குளிக்க வேண்டும்’ என்ற எண்ணம் யாருக்கு முதலில் தோன்றக் கூடும்?”
“இது, முதலில் கேட்ட அதே கேள்விதான்” என்றான், கோயபெல்ஸ்.
“அல்ல; இது முற்றிலும் வேறான கேள்வி” என்றார், பாதிரியார்.
“அப்படியே இருக்கட்டும். இந்த இரண்டாவது கேள்வியில் நீர் என்னைத் தோற்கடிக்க முடியாது. அழுக்குப் படியாதிருந்த வாலிபனே, முதலில் குளிக்க முயலுவான்” என்றான், கோயபெல்ஸ்.
“தப்பு” என்றார், பாதிரியார்.
“அப்படியானால், இந்த விடை உங்களாலேயே முன்னால் சொல்லப்பட்டதல்லவா” என்றான் கோயபெல்ஸ்.
“அந்தக் கேள்வி, வேறொன்றைப் பற்றியது. இந்தக் கேள்வியின் சரியான விடை அதுவல்ல. அழுக்குப் படிந்த வாலிபன் தான் முதலில் குளிக்கச் செல்கிறான்’ என்பதுவே இந்தக் கேள்வியின் விடை. எப்படியென்றால், முன்பு போலவே இருவரும் நேருக்கு நேர் நின்று ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளும் போது, அழுக்குப் படியாதிருந்த வாலிபன் அழுக்குப் படிந்தவனைப் பார்த்து, ‘ஐயோ, நானும் இவனைப் போன்று தான் அழுக்கடைந் திருப்பேன் என்று சிந்திக்கிறான். ஆனால், உடனே தன்னைத் தான் பார்த்துக் கொண்டு அவனைப் போல் நான் மாசு படிந்தவனாக யில்லை என்று நினைப்பான். அப்போது, அழுக்குப் படிந்த வாலிபனும், தன் தோழனைக் கண்டு தானும் இவனைப் போலவே மாசற்றவனாக உள்ளேனோ? என்று தனக்குள்ளேயே எண்ணுவான். மேலும் தன்னுடைய உடலையும், உடையையும் உற்றுப் பார்ப்பான். அவனுடைய அழுக்கு படிந்த தோற்றம் “உடனேயே குளிக்க வேண்டும்” என்ற எண்ணத்தை உண்டாக்கக் கூடுமல்லவா?” என்றார் பாதிரியார்.
“ஓ, மிகவும் சரி, உம்முடைய சாதுர்யத்துக்கு ஒரு அளவை என்னால் காண இயலவில்லை. சரி, அந்த மூன்றாவது கேள்வியையும் கேட்டு விடுங்கள்” என்றார், கோயபெல்ஸ்.
“மூன்றாவது கேள்வி : மிகமிகக் கடின மானது. இரண்டு வாலிபர்கள் புகையும், புழுதியுமாகவுள்ள ஒரு குழாய்க்குள் புகுந்து சற்று நேரம் விளையாடுகிறார்கள். பிறகு வெளியே வந்து………”
“இதுவும் நீர் முன்பு கேட்ட கேள்வியே”
“அல்ல…. சொற்கள் மட்டும் அவைகளே தான். ஆயினும், கேள்வி முற்றிலும் வேறானது”
“அப்படியானால், அழுக்குப் படியாத வாலிபனே குளிக்க முயலுவான்” என்றான், இடைமறித்து, கோயபெல்ஸ்.
“தப்பு” என்று பாதிரியார் மறுத்தார்.
“அது தவறென்றால், அழுக்குப் படிந்திருந்த வாலிபன்தான் குளிப்பான்” என்கிறான், கோயபெல்ஸ்.
“தப்பு” என்றார், பாதிரியார்.
“இரண்டும் தப்பு என்றால், சரியான விடைதான் என்ன?” என்ற அதிகாரக் குரலோடு கர்ஜித்தான், கோயபெல்ஸ்.
“இந்தக் கேள்வியே அறிவீனமானது என்பதுதான் சரியான பதில். எப்படியென்றால் இரண்டு வாலிபர்கள் ஒன்றாகப் போய்க் குழாய்க்குள் புகுந்து விளையாடினால் ஒருவருக்கு அழுக்குப் படிந்தும் மற்றொரு வருக்கு அழுக்குப் படியாதும் இருப்பது தான் எப்படி? இந்தச் சிறிய வினாவில் இருக்கக் கூடிய சிக்கலான, “இயல்புக்கு மாறானது இது” என்று புரிந்து கொள்ளாத ஒருவன் அந்த மகத்தான ‘தால் முத்’ என்ற நூலை எப்படிச் சரியாகப் புரிந்து கொள்ள முடியும். நீங்களே சொல்லுங்கள்” என்றார் யூதப் பாதிரியார்.
பொய் சொல்லியே புகழ் பெற்ற கோயபெல்ஸ்க்கு இந்த உண்மை மிகவும் கசந்தது.
– நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2005, வெளியீடு: வெ.இரா.நளினி, கோயம்பத்தூர்.