அக்பர் சக்கரவர்த்தி சபையில் வந்து, தமது சிம்மாசனத்தில் அமர்ந்தார்.
அமைச்சர், பிரதானிகள் யாவரும் சக்கரவர்த்தியை வணங்கிவிட்டு அவரவர் இருக்கைகளில் அமர்ந்தனர்.
ஆனால், பீர்பால் மட்டும் வரவில்லை; அவருடைய ஆசனம் காலியாக இருந்தது. அக்பரின் பார்வை அங்கே சென்றது. பீர்பால் காணப்படாமையால் அக்பருக்கு உற்சாகம் இல்லை. சிறிது நேரம் பொறுத்திருந்தார்: அப்பொழுதும் பீர்பால் வரவில்லை.
ஒரு சேவகனை பீர்பால் இல்லத்துக்கு அனுப்பி அவரை அழைத்து வரும்படி உத்தரவிட்டார்அக்பர்.
‘ இதோ வருகிறேன்’ எனச் சொல்லி அனுப்பினார் பீர்பால்.
நேரம் கடந்தது; ஆனால் அவரோ வரவில்லை.
மறுபடியும் சேவகனை அனுப்பிவைத்தார் அரசர்.
முதலில் கூறியபடியே, ‘ இதோ வருகிறேன்’ எனக் கூறினார் பீர்பால்.
ஒரு மணி நேரம் கடந்தது!
சபையில் வீற்றிருந்தவர்கள் பலதிறத்தினர்; பீர்பாலை விரும்பாத பொறாமைக்காரர்களும் அங்கே இருந்தனர். அவர்கள் இந்தச் சந்தர்ப்பதைதைப் பயன்படுத்திக் கொண்டனர்.
‘சக்கரவர்த்தி இருமுறை கூப்பிட்டு அனுப்பியும்கூட அவர் வரவில்லையே, அவருக்கு எவ்வளவு கர்வம்’ எனக் கூறி தூபம் போட்டு அக்பருக்குக் கோபத்தை உண்டாக்கத் தொடங்கினர்.
பலரும் சொன்னவுடன் உண்மையிலேயே அக்பருக்குக் கோபம் பொங்கியது.
பீர்பாலைக் கைது செய்து கொண்டு வரும்படி சேவகர்களை அனுப்பினார் அக்பர்.
சேவகர்கள் பீர்பாலிடம் சென்று அரசர் உத்தரவை தெரிவித்தனர்.
பீர்பால் உடனே அரண்மனையை நோக்கிப் புறப்பட்டு வந்தார். அக்பரை வணங்கிவிட்டு தமது ஆசனத்தில் அமர்ந்தார்.
அக்பருக்குக் கோபம் தணியவில்லை. ‘ இரண்டு முறை சேவகர்களை அனுப்பியும்கூட ஏன் உடனே வரவில்லை?’ எனக் கேட்டார்.
‘சக்கரவர்த்தியே, என் குழந்தை அழுது தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தது. அதனால் உடனே வர இயலவில்லை. இப்பொழுதும்கூட அழுது கொண்டிருக்கும் குழந்தையை அப்படியே விட்டுவிட்டுத்தான் இங்கே விரைவாக வந்தேன்’ எனப் பதில் கூறினார்.
‘ இவ்வளவு நேரம் எங்கேயாவது குழந்தை அழுது கொண்டிருக்குமா? இப்படி நான் கேள்விப்பட்டதுகூட இல்லையே?’ என்றார் அக்பர்.
‘என் வார்த்தையைச் சிறிது பொறுமையோடு அரசர் கேட்க வேண்டும். அப்பொழுதுதான் உண்மை விளங்கும். சபைக்கு நான் புறப்படும் சமயம் குழந்தை அழத் தொடங்கியது; ‘என்ன வேண்டும்? ஏன் அழுகிறாய்?’ என்றேன் பதில் கூறாமல் அழுது கொண்டே இருந்தது; என்ன கேட்டும் பதில் கூறவில்லை. நானும் சமாதானம் கூறிக்கூறி அலுத்துப் போனேன். ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டது. பிறகு, ‘கரும்பு வேண்டும்’ என்று கேட்டது ‘வாங்கி வரச் சொல்லிக் கொடுத்தேன். மறுபடியும் அழுகை; ‘கரும்பை நறுக்கித் துண்டுகளாக்கித் தருமாறு’ கேட்டது. அப்படியே செய்து கொடுத்தேன். தின்று கொண்டே இருந்த குழந்தை மறுபடியும் அழத் தொடங்கியது. மறுபடியும் ஏன் அழுகிறாய்? என்று கேட்டேன்; குழந்தையின் கோரிக்கை விநோதமாயிருந்தது. சுவைத்துத் துப்பிய சக்கைகளை எல்லாம் எடுத்து மறுபடியும் முழுக் கரும்பாக ஆக்கித் தருமாறு அடம் பிடித்தது.
நான் என்ன செய்வேன்? அற்புதங்கள் செய்யும் மந்திர சக்தி என்னிடம் இருக்கிறதா? எதுவும் தோன்றாமல் திகைத்துப் போனேன்; குழந்தையின் தொந்தரவு தாங்க இயலவில்லை!
இந்தக் குழந்தைகளே இப்படித்தான். நினைத்த நேரத்தில் எதையாவது கேட்டு அழுது, அழுது துன்புறுத்துகின்றன. நல்ல வேளையாக சேவகர்கள் வந்தார்கள்; நான் தப்பித்தேன் என வந்து விட்டேன்’ என்றார்.
சபையில் இருந்தோர், பீர்பால் கூறுவது உண்மைதான் என்பதைப் போல் மெளனமாகத் தலையை அசைத்தார்கள்.
அக்பரின் கோபமும் ஒருவாறு தணிந்தது. ‘எந்த வீட்டிலும் குழந்தைகளின் தொந்தரவு பொறுக்க முடியவில்லைதான். முடிவில் குழந்தைகளின் பிடிவாதமே வெற்றி பெறுகின்றது; தாய்க்குத்தான் பொறுமை அதிகம்; தந்தைக்குக் குறைவுதான். கரும்புச் சக்கையை மீண்டும் கரும்பாக்க பீர்பால் என்ன, தெய்வமா?’ என்றார் அக்பர்.