(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மதுரை மாநகரில் பத்திரசேனன் என்று ஓர் அரசன் இருந்தான். அவன் மகள் இரத்தினாவதி. அவள் அழகில் சிறந்தவள். அவளைக் கைப்பற்றக் கருதி ஓர் அரக்கன் அவள் அறைக்குள் வந்து ஒளிந் திருந்தான். அதை அறிந்த அவள், தன் தோழி யிடம், தன்னைக் கைப்பற்ற ஓர் அரக்கன் முயற்சி செய்வதாகக் கூறிக்கொண்டிருந்தாள். இதைக் கேட்ட அரக்கன், தன்னையல்லாமல் வேறோர் அரக்கன், அவனைக் காதலிப்பதாக எண்ணிக் கொண்டான். அவன் தன்னைக் காட்டிலும் வலிய வனாக இருந்தால் என்ன செய்வது என்று அஞ்சி னான். அந்த அரக்கன் அங்கு வந்து தன்னைக் கண்டுவிட்டால் என்ன நடக்கும் என்று எண்ணி நடுங்கினான். ஆகவே அவள் அறையிலிருந்து வெளியேறிக் குதிரை லாயத்திற்குச் சென்று தானும் ஒரு குதிரையாக மாறி அங்கு வருத்தத்துடன் நின்று கொண்டிருந்தான்.
அப்போது குதிரை திருடுவதற்காக அங்கு ஒரு கள்ளன் வந்து சேர்ந்தான். அவன் குதிரையாக மாறியிருந்த அந்த அரக்கன் மீது ஏறிக் கொண்டு அதை ஓட்டிச் சென்றான். குதிரை நேராகச் செல்லாமல் இடக்குச் செய்வது கண்டு கள்ளன் அடித்தான். அடி பட்ட உடனே குதிரை முரட்டுத்தனமாக கண் காது தெரியாமல் ஓடத் தொடங்கியது. அது எங்கேயாவது தன்னைத் தள்ளிவிடக் கூடும் என்று பயந்த அந்தக் கள்ளன், வழியில் தென்பட்ட ஓர் ஆலமரத்தின் விழுதைப் பற்றித் தொங்கிக் கொண்டு குதிரையைத் தன் போக்கில் ஓடவிட்டான்.
குதிரையோ அச்சத்தோடு தலை தெறிக்க ஓடிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்து அந்த ஆல மரத்தில் இருந்த குரங்கு ஒன்று, ‘ஏ! அரக்கனாகிய குதிரையே, சாதாரண மனிதனுக்கா இப்படிப் பயந்து ஓடுகிறாய்?’ என்று இழித்துக் கேட்டது. தனக்கு அஞ்சியோடும் அரக்கனின் அச்சத்தை மாற்ற அந்தக்குரங்கு முற்படுவதைக் கண்ட கள்வன் தனக்கு வந்த கோபத்தில், குரங்கின் வாலைப் பற்றித் திருகினான். குரங்கு வலி தாங்க முடியாமல் எட்டுத் திக்கும் கேட்கக் கத்திக் கதறியது.
குரங்கு தன்னைக் கள்ளனிடம் அகப்படுத்தத் தான் சூழ்ச்சி செய்கிறது என்று எண்ணிய அரக்கன், மேலும் வேகமாக அங்கிருந்து ஓடினான். கள்வனும் தான் தப்பியது குறித்து மகிழ்ச்சியடைந்தான்.
– பஞ்சதந்திரக் கதைகள், பகுதி 5 – ஆராயாத செயல் தவிர்த்தல், முதற் பதிப்பு: மார்ச் 1996, அன்னை நாகம்மை பதிப்பகம், சென்னை.