(1999ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பின்னணியில்….
உலகிடை என்றும் நின்று வாழ்-தரணி புகழ் செம்மொழியாம் தமிழ்மொழிக்கு உலகப் புகழ் தேடித் தந்த தெய்வத்திருவருள் பெற்ற பெருமுனிவர்களுள் திருக்குறள் இயற்றிய திருவள்ளுவரையே திலகமாகக் கொள்கின்றனர், சான்றோர்.
மனித சமுதாயத்துக்கு வாழும் வழிகாட்டிய இரு பெருமகனாரின் வரலாறு, சான்றோர்களால் முழுமையாக ஒப்புக் கொள்ளக்கூடியதாக எங்கும் காணப்படவில்லை. திருவள்ளுவர் கடைச் சங்ககாலத்தில் வாழ்ந்தார் என்றும், ஒளவையாரின் காலத்தவர் என்றும் கூறப்படுகிறது. திருவள்ளுவரின் பிறப்பு வரலாறு பற்றி திட்டமான முடிவு இல்லை. திருக்குறளை எழுதிய திருவள்ளுவரே தன் வாழ்க்கை வரலாறு வருங்காலத்துக்குத் தெரிய வேண்டாம் என எண்ணித் தம்மைப் பற்றி எங்குமே காட்டாது சென்றுவிட்டார். இக்காலத்தைப் போல் அக்காலப் புலவர்கள் சுய விளம்பரதாரிகளாக இருக்கவில்லை என்பதற்கு, வள்ளுர் தம் வரலாறு எழுதாமைக்கு ஒரு சான்று ஆகின்றது. தன் படைப்பால் உலகம் உய்ந்தாற் போதும் என எண்ணி திருக்குறளை மதுரைச் சங்கத்தில், பல எதிர்ப்பின் மத்தியில் அரங்கேற்றினார். அந்த அரங்கேற்ற நிகழ்ச்சி இங்கே. மேடையிலே…
காட்சி-1
இடம் : வீதி
பாத்திரங்கள் : திருவள்ளுவர், முற்றறிந்தார், முருகன், ஒளவையார், இடைக்காடர்
(எதிர் எதிரே சந்தித்தல்)
இடைக்காடர் : (திருவள்ளுவரைக் கண்டு ஔவையாரிடம்) இங்கே வள்ளுவர் வருகிறார்.
திருவள்ளுவர் : (இருவரையும் பார்த்து) வணக்கம்! தமிழ் வாழ்க!
இடைக்காடர்
ஒளவையார் : வணக்கம் புலவர் பெருமானே!
திருவள்ளுவர் : தமிழ்த்தாயே! செந்தமிழ்ப்புலவர் சிரோன் மணியே! உங்கள் இருவரையும் ஒன்றாகக் காணும்போது, கலை மகளையும், முருகப் பெருமானையும் நேரிற்கண்டது போல் என்னுள்ளம் மகிழ்கின்றது. இந்தப் பக்கம் எங்கே பயணம்?
ஒளவையார் : தெய்வப் புலவரே! அளவுக்கு மீறிப் புகழு கின்றீர்கள்! தங்களின் புகழுரைக்கு நான் தகுந்தவள் அல்ல. தங்களின் திறமையும், பண்பும், அன்பும் எவருக்கு உண்டு?
இடைக்காடர்: தேடிய மூலிகை கையில் அகப்பட்டது போலாகிவிட்டது. தங்கள் தரிசனம் கண்டு மகிழ்கின்றோம்.
திருவள்ளுவர்: என்ன புதிர் போடுகிறீர்கள்! என்ன செய்தி கூறுங்கள்!
இடைக்காடர் : முக்கியமான செய்தி ஒன்று உண்டு. முதலில் தாங்கள் எங்கு செல்கின்றீர்கள்? இவர்கள் யார்? என்ற விபரங்களைக் கூறுங்கள் புலவரே!
திருவள்ளுவர் ; இவர், அரசவைப் புலவர் முற்றறிந்தார். என் நண்பர்; இவன் எனது சகோதரன்; பெயர் முருகன். மதுரைத் தமிழ்ச் சங்கத்துக்குச் செல்கின்றோம். (கையில் உள்ள சுவடியைக் காட்டி) நூல் ஒன்று எழுதியுள்ளேன். அதை அரங்கேற்ற வேண்டும்.
(ஒளவையும், இடைக்காடரும் பார்த்துத் தலையை ஆட்டி மகிழ்தல்)
ஒளவையார் : நாங்கள் எந்தப் பணிக்காகத் தேடி வந்தோ மோ? அந்தப் பணியே முழுமை பெற்று விட்டது போன்ற உணர்வு ஏற்படுகின்றது. மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவர் தமது ஆணவத்தால் தலை, கால் தெரியாது எம் போன்ற புலவர்களை அவமதிக்கின்றார்கள். அவர்களின் செருக்கை அடக்கி நல்ல பாடம் படிப்பிக்க வேண்டும். இனி சங்கப் புலவரின் செருக்கு ஒழிந்தது! (கோபத்துடன்)
இடைக்காடர்: புலவர் முற்றறிந்தாரும் திருமயிலை மன்னனும் இப்பணியைச் செய்யும்படி உங்களைத் தூண்டினார்கள் போலும்…
முற்றறிந்தார் : அவர்கள் மட்டும் அல்ல அமைச்சர் ஏலேல சிங்கர் உட்பட எல்லோரும் திருவள்ளுவரை வேண்டினோம்.
ஒளவையார் : அவசியம் செய்யவேண்டிய பணி! பெண் புலவர் என்று என்னையும் ஏளனம் செய்கிறார்கள்! பெண்ணின் பெருமை பற்றி அவர்களுக்கு புரிய வைத்து அவர்களின் கொட்டத்தை அடக்க வேண்டும், அதுசரி… நீங்கள் ஆக்கிய நூலின் பெயர் என்ன?
திருவள்ளுவர் : இது 1330 குறட்பாக்கள் கொண்ட நூல். (சுவடியைத் தொட்டுக்காட்டி) அறம், பொருள், இன்பம் என்ற அழியாத உறுதிப் பொருட்களைச் சிறிய குறட்பாவால் பாடி, ‘குறள்’ என்று பெயர் வைத்துள்ளேன். அவ்வளவுதான். பெரிதாக ஒன்றும் இல்லை. நீங்கள் பாடிய நல்வழி, மூதுரை, ஆத்திசூடி, கொன்றைவேந்தன் போல் என் நூல் இல்லை.
இடைக்காடர் : நன்றாகச் சொன்னீர்கள்! ஔவையாரும் சளைத்தவரல்ல. ஆனால் நீங்கள் உலகத்தையே உங்கள் குறளுக்குள் அடிக்கி வைத்திருப் பீர்களே! தங்கள் திறமையை நான் அறியாதவனா?
ஒளவையார் : சந்தேகம் என்ன? வள்ளுவர் வழி, எதிலும் தனிவழி! துணிவான வழி! ஆதவன் உதித்தால் உலகம் வெளிக்கும். குறளைப் படித்தால் உண்மை விளங்கும்? எல்லோரும் பேசிக்கொண்டு நடப்போம். மதுரையில் ‘குறள்’ உதயமாகட்டும்!
திருவள்ளுவர் : தாங்களும் உடன் வருகிறீர்களா? ஆகா! எனக்குப் புதிய சக்தியே பிறக்கிறது!
ஒளவையார் : நான் வரலாமா? தருணம் எங்கே எனப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு, தேடிய பொருள் என்னை நாடி வந்தல்லவா இருக் கின்றது. மதுரைச் சங்கப் புலவர்களிடம் நாக்கு விழுகிறது மாதிரி நாலு கேள்வி கேட்கவேண்டும்!
டைக்காடர் : உண்மை உண்மை… பெண்மையின் பிரதிநிதி இவர் சும்மா விடுவாரா? உடலில் தான் கிழவி… உள்ளத்தில் இவர் மங்கை அல்லவா?
முருகன் : ஓ… சிறுவனாகிய முருகனால் ஏமாற்றப்பட்டவர் அல்லவா?
திருவள்ளுவர்: பேசாமல் இரு! அவரைப் பற்றி நீ கதைக்க உனக்கு வயது போதாது.
முருகன் : மன்னித்து விடுங்கள் அண்ணா!
காட்சி-2
இடம் : நக்கீரர் வாசஸ்தலம் பாத்திரங்கள் : நக்கீரர், புலவர் மாமூலர்
நக்கீரர் : வணக்கம் மாமூலரே! அமருங்கள்!
மாமூலர் : வந்தனம்! வந்தனம்!! புலவர் பெருவேளே!
நக்கீரர் : என்ன முகம் ஒருமாதிரியாக இருக்கிறது. ஏதும் செய்யுளில் சந்தேகமா?
மாமூலர் : என் தேகமே நடுங்குகிறது.
நக்கீரர் : உமக்கு என்ன சோகம்? அறிய எனக்குத் தாகம்! சொல்லுங்கள் மாமூலரே! (கோபத்துடன் உரத்து)
மாமூலர் : சொல்கிறேன், நாகம் போல் ஏன் சீறுகிறீர்கள்? தமிழ்ச்சங்கத்தில் நாளை ஒரு பெரும் நிகழ்ச்சி நடக்கப் போகிறதாம். எப்படித்தான் சமாளிக்கப் போகிறீர்களோ எனக்குத் தெரியாது.
நக்கீரர் : ஏன் பதற்றப்படுகிறீர்கள்! போனால் போச்சுது. இந்தப் பெருநாகத்தின் முன்னே. சின்ன நீர்ப்பாம்புகள் எதிர் நிற்கமுடியுமா?
மாமூலர் : திருவள்ளுவர் என்ற புலவர் தாம் எழுதிய சுவடியோடு அங்கு வருகிறாராம். அவரை வீழ்த்த வேண்டாமா?
நக்கீரர் : சுவடி- சுவடி- நல்ல பகிடி அவரின் மகுடிக்கு இந்த நாகம் அடங்காது. அஞ்சாதீர்கள்! அந்தப் பாம்பாட்டத்தை நீர் மதுரைச் சங்கத்தில் அல்லவா பார்க்க வேண்டும்!
மாமூலர் : அப்படி என்றால் எமது சங்கம் நாளை பெரும் கலகலப்பாக இருக்கும் என்று சொல்கிறீர்கள்!
நக்கீரர் : திருவள்ளுவர் இவ்வளவு கஷ்டப்பட்டு, இவ்வளவு காலமும் வருத்தி ஒரே ஒரு நூல் தான் எழுதி வைத்திருக்கிறார் போலும். நான் பாடிய திருமுருகாற்றுப்படை பற்றி அவர் அறியவில்லை போலும்!! அவருடைய நூலுக்கு அரங்கேற்றமா? பார்ப்போம் அரங்கு ஏறுதா என்று!
மாமூலர்: நீங்கள் சாதாரணமாக எண்ணுகிறீர்கள். திருவள்ளுவர் பற்றி நான் இன்றுதான் அறிகிறேன். அவர் தனியாகவா வருகிறார்?
நக்கீரர் : அவருடன் கூட யாரும் வருகிறார்களா?
மாமூலர் : அதுதானே பயமாக இருக்கிறது! ஒளவை யாரும் இடைக்காடரும் வருகிறார்களாம்!
நக்கீரர் : யார் வந்தால் என்ன? ஒளவையோ கொவ்வையோ, ஒளடதமோ? மண் கௌவ வேண்டியதுதான். காகங்கள் ஆயிரம் சேர்ந்து கூடு கட்டினாலும் ஒரு கல்லுக்கு எதிர் நிக்க முடியுமா?
மாமூலர் : எனக்கு என்னவோ உயிர் போகிறது போல் இருக்கின்றது. நாளையுடன் எங்கள் தலைக் கனம் நொறுங்கப் போகிறது.. அதுதான்…
நக்கீரர் : பயந்தால் நீர் அவர்களுடன் போய்ச் சேரலாம்.
மாமூலர் : புலவரே! அப்படி நான் கட்சி மாறுவேனா?
நக்கீரர் : அப்படிச் அடித்துச் சொல்லும். நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால் புதிய வர்களைத் திணற வைக்கலாம். யோசிக்காதீர் மாமூலரே! (வைராக்கியத்துடன்)
காட்சி-3
இடம் : மதுரைத் தமிழ்ச் சங்கம்
பாத்திரங்கள் : 1. நக்கீரரைத் தலைமையாகக் கொண்ட மாமூலர், கபிலர் முதலிய சங்கப் புலவர்கள். 2. திருவள்ளுவர், ஒளவையார், இடைக்காடர், முற்றறிந்தார்-மன்னர்.
நக்கீரர் : அவையோர்களே! தமிழ் வல்லோர்களே!! ‘குறள்’ என்னும் நூலை அரங்கேற்ற வேண்டும் என, நண்பர் வள்ளுவர் வந்துள் ளார். அதன் பொருட்குற்றம், சொற்குற்றம், அல்லது நிறைகள் கண்டு, ஆவன செய்வோம்! (திருவள்ளுவரை நோக்கி) தங்கள் ஊர்?
திருவள்ளுவர்: என்னுடைய ஊர்…
நக்கீரர் : (இடைமறித்து) வெண்பாவிற் பதில் கூறுக!
திருவள்ளுவர் : அப்படியா நல்லது? நான் விரும்பிய பா!
‘எந்த ஊரென்றிருந்த ஊர்நீர் கேளீர் அந்த ஊர் செய்தி அறியீரோ – வந்தஊர் முப்பாழும் பாழா வடிவிலொரு சூனியமாய் அப்பாலும் பாழா வரும்.
நக்கீரர் : (முகம் சிவக்க பிற புலவர்களைப் பார்த்து கண் சுழித்து) ம்.. ம்.. வேதாந்தப் பதிலா? தாங்கள் இயற்றியுள்ள நூல் வெண் பாக்களால் ஆனதா? பெண் பாக்களால் பற்றியதா?
திருவள்ளுவர் : (கோபத்துடன்) குறட் பாக்கள்!
நக்கீரர் : குறட்பாக்களா? எத்தனை அடிகள்.
திருவள்ளுவர்: ஈரடிகள்.
நக்கீரர் : (சிரித்து) ஈரடிகளா? இதுவா நீர் மாரடித்து எழுதிய நூல்? வெண்பாவிலும் இது சேரவில்லை. என்ன பாவம் – தாழிசைக்கும் பொருந்தவில்லை. என்ன புலவரே! நாட்டுப் பாடலிலும் நயம் இருக்கும். கரகப் பாடலி லும் கனம் இருக்கும். உம்முடைய குறளோ? எம் சங்கத்தின் தரத்தையே குறைக்கின்றதே!
மாமூலர் : அறியாப் புலவர் வறுமையால் வாடும் கருமப் பிறவி. தம் நூல் அரங்கேறினால் பொன்னை அள்ளிப் பரிசாகத் தருவார்கள் என்று திசைமாறி வந்துவிட்டார். ஆளைப் பார் ஆளை! என்ன இறுமாப்பு?
இடைக்காடர் : வள்ளுவர் உரிய இடம் தெரிந்துதான் வந்துள்ளார். கொடிய நாகங்கள் புற்றெடுத் துள்ள இடத்துக்கு வந்து, அந்த நாகங்களை மயக்கி அடக்கிவிடும் மகுடியாகத்தான் சுவடி ஏந்தி வந்துள்ளார். புதுமைக்குறள் உங்களுக்கு வெதுவெதுப்பைத் தருகிறதா? புதுமை புகுத்துவது காலத்தின் தேவை. பழைமையைச் சுவைப்பது, உங்களுக்குப் பூவையை அணைப்பது போன்றதோ?
நக்கீரர் : அடக்கு உன் நாவை! (கோபமாக) இந்தப் புதுமை எல்லாம் நன்னூல்கள் ஆகா. பொறு மையைப் பின்பற்றும் புலவரே! அப்படி என்ன புதுமை இருக்கிறது ஈரடிக் குறளிலே, சொல்லும்.
ஒளவையார் : ஈரேழு உலகமும் இருக்கும். தங்களை ஆட்டிப் படைக்கும் செருக்கு பற்றியும் இருக்கும். இன்னும் எல்லாமே இருக்கும்.!.. தாங்கள் படித்துப் பார்த்திருக்க வேண்டுமே!
டைக்காடர் : அதைச் செய்யாமல் புதுமை என்ன என்று வள்ளுவரைக் கேட்டால்… உங்கள் அறிவு முதுமை அடைந்து தள்ளாடுகிறது என்று தான் எமக்குத் தோன்றுகிறது.
நக்கீரர் : தாங்கள் என்னை ஏளனம் செய்கிறீர்களா?
இடைக்காடர் : சந்தர்ப்பம் வந்தால் ஏளனம் செய்யாமல் ஏற்றிப் போற்றும் புலவர்கள் அல்ல நாங்கள்.
நக்கீரர் : நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே எனச் சிவனின் முன்னே வாதிட்ட என்திறமை தங்களுக்குத் தெரியாதோ? பயந்தவன்தான் அஞ்சவேண்டும். என் திற மையை விரும்பினால் நீங்களே சோதிக்க லாம்.
மாமூலர் : எது வேண்டுமானாலும் நக்கீரரைக் கேளுங்கள். எம் தலைவர் மலைக்க மாட்டார்.
இடைக்காடர் : சரி.. கேட்கிறேன்… காகம் ஒன்று ஆற்றங் கரையில் உள்ள மரத்தில் இருந்து கத்துகிறது. அதைக் கலைக்க நாவால் அதட்டியதை குறிப்பால் ஒலிக்குறிப்பால் விளக்க முடியுமா? ஒரு செய்யுள் இசைக்க வேண்டும்.
நக்கீரர் : (திகைத்து, பின் சமாளித்து) இதுவும் ஒரு கேள்வியா?
மாமூலர் : இதைவிட பெரிய பெரிய வினாக்களுக்கே பதில் கூறித் தலைகுனிய வைக்கும் உங் களுக்கு இதென்ன பெரிய கேள்வியா?
நக்கீரர் : (அவையைப் பார்த்து தன்னை சுதாரித்துக் கொண்டு) நீ சொல்வது சரிதான்…. ஆனால் காகத்தின் சத்தத்தை செய்யுளில் எவ்வாறு இசைப்பது?
இடைக்காடர்: உங்களால் முடியாது. உண்மையை ஒப்புக் கொள்ளுங்கள்.
ஒளவையார் : வெட்கப்பட வேண்டாம். நாம் ஒன்றும் நினைக்க மாட்டோம். முடியாது என்று இந்த ஒளவை முன்னே அவையோருக்குக் கூறிவிடுங்கள்.
மாமூலர் : என்ன நினைத்துவிட்டீர்கள் எங்கள் நக்கீரர் பற்றி? நக்கீரரால் இயலாத ஒன்று உண்டோ?
நக்கீரர் : என்னால் மட்டுமல்ல. எவராலுமே முடியாது மாமூலர்.
இடைக்காடர்: (குறுக்கிட்டு.. பெருமிதத்துடன்) ஏன் முடியாது? அந்த முடிவுக்கு நீங்கள் வர முடியாது. சிறுகல்லைத் தூக்க முடியாதவர் கள் மலையைத் தூக்குவேன் என்று சொல்பவர்களின் பட்டியலில்தான் நீங்கள் இருக்கிறீர்கள்!
மாமூலர் : ஏன் விதண்டாவாதப் பேச்சு… தங்களால் முடியும் என்றால் பாடிக் காட்ட வேண்டி யதுதானே!
நக்கீரர் : அதுதானே… செய்து காட்ட வேண்டியது தானே.
இடைக்காடர் : நல்லது.. அவையோரே கேளுங்கள்!
ஆற்றங் கரையின் அருகிருந்த மாமரத்திற்
காக்கை யிருந்து கஃகஃ கெனக் – காக்கைதனை
எய்யக்கோல் இல்லாமல் விச்விச் செனவெய்தான்
வையக்கோ னார்தம் மகன்.
புலவர்கள் : ஆகா! அருமையான பாடல்! நயமான பொருள்! திறமையான ஒலிக்குறிப்பு!
ஒளவையார் : (நக்கீரரைப் பார்த்து) இடைக்காடருக்கே பதில் உரைக்க முடியாத தாங்கள் திரு வள்ளுவர் தம் திருக்குறளைக் குறை கூற முயல்கின்றீர்கள்!
மாமூலர் : ஒளவையார் கூறியது முற்றிலும் பொருத்த மானதே. திருவள்ளுவர் குறள் திருக்குறன் என்போம். தாயே! நக்கீரரின் நாவுக்கு அஞ்சி இவ்வளவு காலமும் வாளாவிருந்தோம். திருக்குறளிலே இல்லாதது எதுவும் இல்லை. திருவள்ளுவரின் முப்பால் அருந்தியோர் முத்தி நிலை எய்துவர்.
நக்கீரர் : என்ன இது? எல்லோரும் ஒரு கட்சியாகி விட்டீர்கள். நிபந்தனைகளை நிறைவேற்ற முன்பே துதிபாடுகிறீர்கள்!
திருவள்ளுவர்: கூறுங்கள் மற்ற நிபந்தனைகளை..
தமிழ்வேள் : நக்கீரரே நான் சில கேள்விகளை வள்ளுவரிடம் கேட்க விரும்புகிறேன்.
நக்கீரர் : கேட்கத்தானே வேண்டும். அரங்கேற்றம் செய்யும் ஒரு புலவரின் அறிவைப் பரீட்சிக்க வேண்டும். தாராளமாகக் கேளும்!
தமிழ்வேள் : அறம், தர்மம் என்று சொல்கின்றோம். அதன் காரணம் என்ன?
நக்கீரர் : தமிழ்வேளே! போதும் இனி! வினாக்களை நிறுத்துங்கள். திருவள்ளுவரின் நூலுக்கு சங்கப்பலகை இடம் கொடுக்கிறதா எனப் பார்க்கவேண்டும்.
திருவள்ளுவர்: அப்படியே செய்யலாம். மறுப்பு இல்லை. எங்கே சங்கப் பலகை.
நக்கீரர் : (தானும் – மற்றைய புலவர்களும் இருக்கும் இடத்திற்கு முன்காட்டி) இது சங்கப்பலகை, நூலை வையுங்கள்!
திருவள்ளுவர்: (கரங்களைக்கூப்பி, கண்மூடி)
அகரமுதல எழுத் தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
கற்றதனாலாய பயன் என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை முதலாகக் கொண்டிருக்கின்றன. அதேபோல உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டிருக் கிறது.
முடியுமா – முடியுமாவென முத்தமிழ்ச் சங்கம் தன்னில்” இடியென இகழ்ந்துரைக்கும் நற்புலவர் நக்கீரர்முன் அடியெடுத்தாடும் சிவனார் அன்புருவான கண்ணன் அடி தொழுதேத்தி வைத்தேன் அகிலமே இந்நூல் உளதே.
(பாடியதும் சங்கப்பலகையில் வைக்க, அப்பலகை நூலின் அளவு கருங்க, நக்கீரர் உட்பட எல்லோரும் வீழ்ந்து வணங்கல்.)
நக்கீரர் : (தவறு உணர்ந்து, வெட்கமடைந்து) மன்னிக்கவேண்டும். இன்று மட்டுமல்ல என்றுமே சிறந்த நூலாக விளங்கவல்லது திருக்குறள். என் செருக்கு ஒழித்த பெரு மானே! ஈரடிக்குறளால் என் அகங்காரத்தை உடைத்து, கற்றோர் கர்வத்தை நீக்கினீர்கள். வாழ்க! உங்கள் புலமை!
தானே முழுதுணர்ந்து தண்டமிழின் வெண்குறளால் ஆன அறம்முதலாம் நான்கு அளித்தவரே வாழி!
இடைக்காடர் : கடுகைத்துளைத்து ஏழ்கடலைப் புகட்டி குறுகத் தறித்த குறள்
ஒளவையார் : அப்படி அல்ல. இடைக்காடரே! இப்படி நான் சொல்கிறேன்.
கடுகிலும் விடச் சிறியது அணு – அந்த அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள்…. எனலாம்… அது மட்டுமா?
தேவர் குறளும் திருநான்மறை முடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை திருவா சகமும் திருமூலர் சொல்லும் ஒருவா சகம்என் றுணர்.
ஆயிரத்து முந்நூற்றி முப்பது குறள் அடங்கிய குறள். ‘அ’ வில் தொடங்கி… கடைசி எழுத்தான ‘ன்’ ல் முடிந்துள்ளதே என்னே வள்ளுவன் படைப்புத்திறன்!
திருவள்ளுவர் : அறிஞர் பெருமக்களே! யான்பெற்ற கல்வி யின் பயனை இந்த உலகமும் பெறவேண்டும் என்று முப்பாலைப் பாடினேன். அதைக் கற்று இன்றும் என்றும் உலகம் பயன் அடைய வேண்டும். அதுவே எனக்கு மகிழ்ச்சி.
மன்னன் : காவிரிப் பூம் பட்டினத்தைப் புகழ்ந்து பட்டினப்பாலை பாடிய புலவருக்குக் கரிகாற்சோழன் பதினாறு ஆயிரம் பொன் பரிசளித்தான். தமிழுக்கு அறம்பாடிய உங்க ளுக்குப் பாண்டிய மண்டலத்தையே பரி சாகத் தந்தாலும் ஈடாகாது. கோடிப் பொன்னை உங்களுக்கு காணிக்கையாகத் தரவேண்டும் என்பது புலவர் பெருமக்கள், அறிஞர்கள், வணிகர்களின் விண்ணப்பம். கருணை கூர்ந்து காணிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
திருவள்ளுவர் : உக்கிரப் பெருவழுதி! என் உள்ளம் அறிந்தவன் நீ! அந்தக்கோடிப் பொன்னை அறச்செயல்களுக்கும், ஏழைகளுக்கும் பயன் படுத்துங்கள். அதுவே எனக்குத் தரும் காணிக்கை. நான் வருகிறேன்.
எல்லோரும் : அப்படியே ஆகட்டும். நீங்கள் போய் வாருங்கள். நாங்களும் விடைபெற்றுக் கொள்கின்றோம்.
சேவகன் : மன்னரே! திருவள்ளுவரை நாடி சில துறவிகளும், புலவர் கபிலரும் வந்துள்ளனர். அவர்கள் இங்கு வருவதற்கு தங்கள் அனுமதி வேண்டுகின்றேன்.
கபிலர் : தாங்கள் எழுதிய முப்பால் நூலறிந்து, என்னுடன் சைவ, வைணவ, சமண, பௌத்தத் துறவிகள் வந்துள்ளனர்.
சைவத்துறவி : பதி, பசு, பாசம் என்னும் சைவசமயத்தின் கொள்கைகள்தாம் முப்பாலில் இருக்கின்றன. அகரம் போல் இறைவன் முதன்மை கொண்டிருப்பது வினைப்பயன். இறைஅடி சேர்வது என்பன எங்கள் சமயத்துக்குச் சிறப்பாக உரியவை. அதனால் வள்ளுவர் எங்களுக்கே சொந்தம்.
வைணவத் துறவி : அது எப்படி முடியும்? திருமால் வாமன் அவதாரத்தில் இந்த இரண்டு அடிகளால் அளந்துவிட்டார். அதைப்போல வள்ளு வரும் தம் அடிகள் கொண்ட குறளால் உலகத்தை அளந்துவிட்டார். வள்ளுவர் திருமாலையும் முப்பாலிலே குறிப் பிட்டிருக்கிறார். இதனால் எங்கள் வைணவ மதத்திற்கே உரியவர்.
சமணத்துறவி : யாகத்தை எதிர்ப்பதும், கொல்லாமை போற்றுவதும், உடமையைத் துறப்பதும், நல்வினை தீவினைகளை நம்புவதும் எங்கள் சிறந்த கொள்கையே. வள்ளுவர் இவற்றை ஏற்று அதன்படி குறள் எழுதியுள்ளார். இதனால் இவர் எங்கள் சமணத்திற்கே உரியவர்.
பௌத்த துறவி : ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? வறுமை துன்பத்துக்குக் காரணம் என்று வள்ளுவர் சொன்னாலும் ஆசையே பிறப்புக்குக் காரணம் என்று கூறியுள்ளார். பிறப்பால் வருவதுதானே துன்பம். புத்தரின் பஞ்ச சீலத்தையும் போற்றியிருக்கிறார் வள்ளுவர். புத்தரின் தர்ம போதமே வள்ளுவரின் வழி. எனவே வள்ளுவர் எங்கள் பெளத்த மதத் துக்கே உரியவர். வீணாக நீங்கள் கற்பனை பண்ண வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
கபிலர் : துறவிகளே! என் அருமை யோகிகளே! நீங்கள் இப்படி வாதம் பண்ணலாமா? சாந்தமே உருவான நீங்கள் வள்ளுவரைப் பந்தம் எனக்கூறலாமா?
திருக்குறள், சாதி மதம் இனம் கடந்த உலகப் பொதுமறை தமிழ்ச்சங்கத்தின் புலவன் யான் என்ற முறையில் இறுதியாகக் கூற விரும்புகின்றேன். கள்ளையும் சூதையும் கணிகையர் உறவையும், புலால் உண்ணு வதையும் கண்டித்த முதற் புலவர் வள்ளு வரே. கல்வியை ஆண்களுக்கும் பெண் களுக்கும் பொதுவாகக்கூறி, வாழ்க்கைத் துணை நலம் என மனைவியைச் சிறப்பித்து, பெண்ணைப் போற்றிப் புகழ்ந்த முதல் அறிஞர் – முதல் ஞானி வள்ளுவரே!
துறவி : அறிவு நூலில் ஏற்பட்ட மோகத்தால் நாம் நிலைகுலையலானோம். அந்தளவு சிறப்பு வாய்ந்தது இக்குறன். ஆசா பாசங்களை உதறிய நாங்கள் இப்படி ஒரு நூலை எம்மால் ஆக்கமுடியவில்லையே ஆதங்கப்படுகிறோம்.
கபிலர் : நீங்கள் சொல்வது சாலப்பொருந்தும். வான் புகழ் சிறப்புப் பெறும், வள்ளுவருக்கு உங்கள் சார்பாக தெய்வப்புலவர் என்றும், ஈரடிக்குறள் வெண்பாவில் பாடி இந்நூல் வெற்றி கண்டமையால், இவருக்கு முதற் பாவலர் என்றும், இன்றுமுதல் அழைக்கப் படுவார். திருவள்ளுவர் வேறு, அவரது குறள் வேறு அல்ல. இவர் இயற்றிய குறளுக்குப் பொய்யாமொழி, தமிழ்மறை, பொதுமறை, தெய்வநூல் என்று மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பணிந்துரைக்கும் புலவர் பெரு மக்களின் வேண்டுகோளுக்கும் அமைய பெயர்சூட்டிக்கொள்வோம்.
எல்லோரும் : அப்படியே செய்வோம். தமிழுக்கு வள மளித்த தமிழ்மறை உலகம் உள்ளமட்டும் நின்று ஒளிவீசும்.
– சிறார்களுக்கான சிறு நாடகங்கள், முதல் பதிப்பு: 1999, மணிமேகலை பிரசுரம், சென்னை.