(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அந்த இளைஞன் நாற்காலியிலே உட்கார்ந்திருக் கிறான். சௌகரியத்துக்காக அவனது வலது கால், இடது காலின் மீது இடப்பட்டிருக்கிறது. அவன் தனது வலது காலின் தொடையிலே ஒரு புத்தகத்தை வைத்து வெகு இலாவகமாய் விரித்து ஆழ்ந்து வாசித்துக் கொண்டிருக் கிறான். பக்கங்கள் புரள்கின்றன. அவனின் விழிகளோ அதனைத் தொடர்கின்றன. நேரம் அரை மணித்தியாலம் அல்லது முக்கால் மணித்தியாலம் ஆகியிருக்கலாம். அதற்கு மேல் அவனால் வாசிக்க இயலவில்லை. அலுப்பு மேவ அப்படியே நிறுத்திக் கொள்கிறான். “ச்..சா..நல்லவிஷயம்” என்றவாறு இறுதியாக வாசித்த பக்கங்களுக்கிடையில் முத்தமிட்டுக் கொள்கிறான். பின், அப்பக்கங் களுக்கிடையிலே ஒரு துண்டுக் காகிதத்தை அடையாளத் திற்காகச் சொருகி விட்டு அப்புத்தகத்தை மூடிக்கொள் கிறான். மறுகணம், தன் நெற்றியிலே வந்து கலிந்து கிடந்த தலைமயிரை ஒதுக்கி விட்டுக் கொண்டு, புத்த கத்தை எடுத்துச் சென்று பத்திரமாக ஓரிடத்திலே மறைத்து வைக்கிறான்.
அவன் அந்த நூலை இவ்வாறு, உற்சாகம் கரை புரளும் வேளைகளில் வாசிப்பதும், அலுப்பு ஆட்கொள்ளும் வேளைகளில் அப்படியே மூடிவைப்பதுமாயிருந்தான். சில தினங்களுக்குள் அப்புத்தகம் அவனால் வாசிக்கப்பட்டு நிறைவு பெற்றது. முற்றுப் பெற்ற அன்று புத்தகத்தை அப்படியே மூடிவைத்து விட்டு, அதனை நினைத்துப் பார்த்தான். அந்நூலிலுள்ள அத்தனை விடயங்களும் தன் மனதிலே பதிந்து நன்கு வேரூன்றி விட்டதாகவும், இப்போது அப்புத்தகம் வெறும் சக்கையே என்றும் அவனுக்குத் தோன்றியது. உடனே அதனைத் தூக்கி, கிழிந்த காகி தங்கள் சிதறிக் கிடந்த அறையில், ஒரு மூலையிலே எறிந்து விடுகிறான்.
அன்று முதல் அவன் அதனைக் கிஞ்சித்துமே மதிப்பதில்லை. அதன் பக்கமாகச் செல்லும் போது சில வேளைகளில் அதன் மேல் உராய்ந்து கொண்டும் செல்வான். ஆனால் அந்தப் புத்தகமோ இவை யாவற்றையும் கவனித் தும் கவனியாதது போல் இருந்து வந்தது. இவ்வாறு நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தன. அவனது போக்கில் எவ்வித மாற்றமும் நிகழவில்லை. ஆனால் ஐந்து ஆறு மாதங்களின் பின் ஒரு நாள்… அவன் கலை இலக்கியச் சஞ்சிகை ஒன்றுக்காக ஓர் ஆய்வுக் கட்டுரை வரைய எண்ணிய போது, அக் கட்டுரைக்கான பல எடுத்துக் காட்டு கள் அப் புத்தகத்திலே விரவிக்கிடப்பது அவனது நினை வுக்கு வந்தன. ஒரு முறை அவ்விடயங்களை எண்ணிப் பார்த்தான். முற்றாக எதுவுமே ஞாபகம் வரவில்லை.
எனவே, அவன் அப்புத்தகத்தின் துணையை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்து, அது கிடந்த அறையையே நோக்கி நடந்து அதன் பக்கமாகச் சென்று நின்றான். ஆனால் அதனை நெருங்க அவனின் நெஞ்சம் கூசியது.
‘இதனிடம் நான் கல்வி கற்றது சில நாட்களே. என்றாலும் இதுவும் ஓர் உதவியல்லவா? நான் இதை மறந்து இதனிடம் மிக்க அலட்சியமாக நடந்து கொண் டேனே. இப்போது மீண்டும் இதனிடம் எவ்வாறு உதவி வேண்டுவேன்’ என்று எண்ணமிட்ட அவன், ‘எதற்கும் பார்ப்போம்’ என்றவாறு தன்னைச் சமாளித்துக் கொண்டு அந்த ஏட்டின் அருகிலே அடியெடுத்து வைத்தான். அடுத்த வினாடி, அறையின் மூலையிலே வீசியெறிந்தபடி புழுதி தோய்ந்து அலங்கோலமாகக் கிடந்த அதனை இரு கை களாலும் தூக்கி, ‘என்ன மாதிரியிருக்கிறது… சே… என்று ஓர் அனுதாபத்தைக் காட்டி, புழுதியைத் தட்டி விட்டுக் கொண்டு நாற்காலியிலே வந்து அமர்கிறான். ஆனால் அவனது கரத்திலேயிருந்த புத்தகமோ எதுவுமே இயம்பாது மௌனத்தில் மூழ்கியிருந்தது. அவன் தனக் கெதிரே கிடந்த மேசையிலே அந்தப் புத்தகத்தை அப்ப டியே வைத்து ஒரு முறை நோட்டமிடுகிறான். அவனின் அந்தப் பார்வை, “ஐயா, மீண்டும் தங்களிடமிருந்து சில விடயங்களை அறிந்து கொள்ள விரும்புகிறேன்” என்று இயம்புவது போலிருந்தது.
அதனை விளங்கிக் கொண்ட அந்தப் புத்தகம் தனது மௌனத்தைக் கலைத்துக் கொண்டு இளைஞனை நோக்கிப் புன்முறுவல் ஒன்றை உதிர்த்து விட்டுப் பின்வருமாறு பகர்ந்தது:
“மகனே, என் மாணவனே! நீர் முன்பு என்னிடம் சில தினங்கள் கல்வி கற்றீர்; அப்போது என்னிடம் ஃபிக்க மரியாதையோடும், பணிவாகவும் நடந்து கொண்டீர். ஆனால், நீர் என்னை விட்டு நீங்கிய பின் என்னை மறந்து நான் அவமதிப்புக்கு ஆளாகக் கூடிய முறையிலும் நடந்து கொண்டீர். என்னைப் பொறுத்தவரையில் அதனை நான் பெரிதாகப் பொருட்படுத்த வில்லை. என்றாலும் பொதுவாக நோக்குமிடத்து ஒரு குருவிடம் அவனது சீடன் ஒருவன் இவ்வாறு நடந்து கொள்வது மிகவும் பாவம். குருவானவன் மிகவும் உயர்ந்த நிலையிலே மதிக்கப்படுபவன். அவன் எந்த விதமான இலாபத்தையும் கருதிக் கல்வியை மற்ற வருக்கு ஈவதில்லை. ஆனால், அவன் கருதுவது நன்றி மறவாத் தன்மை ஒன்றையே. நான் இவ்வாறு கூறுவதால் நீர் வித்தியாசமாக நினைக்க வேண்டாம். நான் உரைப்பது உண்மையே. அவ்வளவுதான். அதிருக்க, நீர் இப்போது மட்டுமல்ல. எப்போதும் என்னிடமிருந்து தாராளமாக விடயங்களை அறிந்து கொள்ளலாம். சற்றுமே அஞ்சத் தேவையில்லை’ நூலின் வதனத்தில் சாந்தம் நிலவியது.
அந்தப் புத்தகம் செப்பிய இவ்வார்த்தைகளை இளைஞன் உணர்ந்து கொண்டிருக்க வேண்டும். இப் பொழுது அவனது தலை தாழ்ந்திருந்தது. அப்புத்தகத்தை நோக்கிய அவனின் பார்வையோ, வார்த்தைகளைச் சொரிந்தது:
“குருவே! நீங்கள் கூறியது யாவும் உண்மையே. என்னைச் சுற்றிலும் வாழ்பவர்களின் தன்மைகள் என்னி லும் தொற்றியிருக்க வேண்டும். அதன் காரணமாகவே நானும் இவ்வாறு நடந்து கொள்ள நேர்ந்திருக்கலாம். என்னை மன்னியுங்கள். இனிமேல் நான் இவ்வாறு நடந்து கொள்ள மாட்டேன்”
அந்த இளைஞனது பார்வையின் இந்தப் பொருளை விளங்கிக் கொண்ட புத்தகமோ ஒரு புன் முறுவலை மட்டும் முகிழ்த்துக் கொண்டது. மறு கணம் அந்த இளைஞன் மிக்க விநயத்தோடு அப்புத்தகத்தை விரித்து வாசிப்பதிலே ஆழ்கிறான்.
– தினகரன் வார மஞ்சரி – 1980.11.02.
– நாங்கள் மனித இனம் (உருவகக் கதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1991, கல்முனை ஸாஹிறாக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் வெளியீடு.