(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒரு சிற்றூரில் ஒரு குயவன் இருந்தான். ஒரு நாள் அவன் சூளையிலிருந்து மண் பாண்டங்களை எடுக்கும் போது இரண்டு பானைகள் ஒன்றாய் ஒட்டிக்கொண்டிருந்தன. அவற்றைப் பிரிக்க முயலும் போது, ஒரு பானை உடைந்து சில்லுச் சில்லாகச் சிதறியது. சிதறிய சில்லுகளில் கூர்மையான ஒன்று அவன் நெற்றியில் பாய்ந்தது. நெற்றியில் ஒரு பெரிய காயம் ஏற்பட்டது. அந்தக் காயத்தின் வடு பிறைமதி போல வளைந்திருந்தது. அந்த வடு பெரிதாக இருந்ததால் அது மறையவேயில்லை.
ஒரு முறை அவன் இருந்த நாட்டில் பஞ்சம் வந்தது. அதனால் அவன் குடிபெயர்ந்து மற்றொரு வளமான நாட்டுக்குச் சென்றான். அந்த நாட்டின் அரசன் எப்போதும் போரில் ஈடுபட்டிருப்பவன். வீரக்களத்தில் விளையாடுவதே அவன் பொழுது போக்கு. அவனிடம் போய் இந்தக் குயவன் ஏதாவது வேலை கேட்டான். குயவனுடைய நெற்றியில் இருந்த நீண்டு வளைந்த வடுவைப் பார்த்தவுடன், அரத அரசன் பெருமகிழ்ச்சி கொண்டான். முன் ஏதோ போரில் இவன் காயப்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணி இவனுக்குச் சேனாபதி வேலை கொடுத்தான். குயவன் தன் வேலையைச் சிறப்பாகச் செய்து வெற்றி பல பெற்று அரசனுடைய நன் மதிப்பையும் பெற்றான்.
ஒரு நாள் அரசன் சேனாபதியுடன் பேசிக் கொண்டிருக்கும் போது ‘சேனாபதி, உங்கள் நெற்றியில் ஒரு வடு இருக்கிறதே, அது யாருடன் செய்த போரில் ஏற்பட்டதென்று நீங்கள் இதுவரை சொல்லவில்லையே?” என்று கேட்டான்.
“அரசே, இது போரில் வாள் குத்திக் கிழித்த காயம் அல்ல. நான் ஒரு குயவன், சட்டி பானைகளிலிருந்து சிதறிய ஓடு கிழித்த காயம் இது” என்று அறிவில்லாமல் அந்தக் குயவன் உண்மையைக் கூறி விட்டான்.
“கேவலம் நீ ஒரு குயவனா? உன்னையா நான் என் சேனாபதியாக்கி என்னருகில் வைத்துப் பேசிக் கொண்டிருந்தேன். மற்ற அரசர்களுக்குத் தெரிந்தால் இதைச் சுட்டிக்காட்டியே என்னைப் பழித்துப் பேசுவார்கள், நீ இன்னார் என்று தெரிந்து கொள்வதற்கு முன்னாலேயே இந்த இடத்தை விட்டுப் போய்விடு” என்று சீறினான் அந்தச் சாதி வெறி பிடித்த அரசன்.
”அரசே, நான் குயவனாக இருந்தாலும் போர்த்தொழிலில் தாழ்ந்தவன் அல்ல. போரில் என்னை வெல்லக் கூடியவர்கள் யாருமே இல்லை. அப்படியிருக்க நீங்கள் என்னை வேலையை விட்டுப் போச் சொல்வது நீதியல்ல” என்று குயவன் வேண்டினான்.
“அற்பனே, சும்மா பிதற்றாதே! சிங்கத்தோடு சேர்ந்திருந்த நரிக்குட்டி தன்னைச் சிங்கம் என்று எண்ணிக் கொண்டு துள்ளியது போல், நீயும் வீரன் என்று கூறித் துள்ளாதே! உன் குலம் பிறர்க்கு வெளிப்படு முன்னால் ஓடி விடு” என்றான் அரசன்.
வேறு வழியில்லாமல், குயவன் தன் சேனாபதி உடைகளைக் களைந்து விட்டு அங்கிருந்து வேறொரு நாடு நோக்கிச் சென்று விட்டான்.
– பஞ்சதந்திரக் கதைகள், பகுதி 4 – பெற்றதை இழக்கச் செய்தல், முதற் பதிப்பு: மார்ச் 1996, அன்னை நாகம்மை பதிப்பகம், சென்னை.