ஓர் அடர்ந்த காட்டில்,ஒரு குட்டி யானையும் இரு குட்டி கரடிகளும் வாழ்ந்து வந்தன. அன்று ஓர் இனிமையான காலை நேரம். குட்டி யானை உவகையுடன் குளத்தில் குளிக்கச் சென்றது.
யானையின் முகம் தங்கம் போல் ஜொலித்தது. சில மணித் துளிகள் சென்றன. இரு குட்டி கரடிகள் குளத்திற்கு தண்ணீர் அருந்த வந்தன.அந்த கரடிகளின் கண்களுக்கு அந்த குட்டி யானைத் தென்பட்டது.
கண் இமைக்கும் நேரத்தில், அந்த இரு குட்டி கரடிகளுக்கும் ஒரு யோசனை உதித்தது. அந்த கரடிகள் சற்றும் தாமதிக்காமல், அந்த யானையிடம் சென்றன. கரடிகளில் ஒன்று,“ குட்டி யானையே! நீ பார்க்க மிகவும் பருமனாக இருக்கிறாய்!’’ என்று யானையை கேலி செய்தது.அதைக் கேட்டதும் யானையின் முகம் பூப்போல் வாடியது. அது கப்பல் கவிழ்ந்தது போல் இருந்தது. அதன் கண்களிலிருந்தது கண்ணீர் தாரை தாரையாகக் கொட்டியது.குட்டி யானை அந்த இடத்தைவிட்டு ஓடிச் சென்றது.
அடுத்த நாள், யானை இலை தழைகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. திடீரென்று, அதற்கு அலறல் சத்தம் கேட்டது. அதற்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. அதனுடைய மனம் பதைபதைத்தது.வியர்வை முத்துக்கள் அதனுடைய முகத்தில் அரும்பின. பிறகு, அது அலறல் சத்தம் வந்த திசையை நோக்கி, வில்லிலிருந்து புறப்பட்ட அம்பைப் போலச் சென்றது. சத்தம் வந்த இடத்தை அடைந்ததும், அதற்கு அது கண்டது கனவா நனவா என்று புலப்படவில்லை. எல்லா மிருகங்களும் அங்கும் இங்கும் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தன.
அந்த இடத்தில் காட்டுத் தீ எரிந்துக் கொண்டிருந்ததால், இரு குட்டி கரடிகளும் தீயில் மாட்டிக்கொண்டன. அந்த கரடிகளின் மனம் பயத்தில் “படக் படக்’’ என்று தாளம் போட்டன. அந்த குட்டி யானை உதவிக் கரம் நீட்ட முன்வந்தது. அது எதையும் பொருட்படுத்தாமல் அந்த குட்டி கரடிகளை காப்பாற்றியது. மற்ற மிருகங்கள் ஆடாமல் அசையாமல் சிலைப் போல் நின்றன.
நல்ல வேளை! அந்த குட்டி கரடிகளுக்கு காயம் ஒன்றும் ஏற்படவில்லை. ஆனால், குட்டி யானையின் கால்களிலும் கைகளிலும் தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தன. அது பாலில் விழுந்த எறும்பைப் போல வலியால் துடிதுடித்தது. அந்த இரு கரடிகள் தங்கள் செய்த தவற்றை எண்ணி வருந்தின.
பின்,அந்த இரு கரடிகள் யானையை உச்சிக் குளிரப் பாராட்டின மற்றும் தங்களின் நன்றியை யானையிடம் தெரிவித்தன. அந்த நாள் முதல், இரு குட்டி கரடிகளும் அந்த குட்டி யானையும் நகமும் சதையும் போல ஒற்றுமையாக இருந்தன.
திருக்குறள்:
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
Super