குடியே பாவத்தின் வித்து

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 8, 2022
பார்வையிட்டோர்: 7,494 
 
 

(1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆசிரியர் குறிப்பு:உயர்ந்த நோக்கங்களை மக்கள் மனத்தில் நன்கு பதியச் செய்வதற்குச் சுலபமாக எழுதப்பட்ட சிறு கதைகளே தக்க கருவிகளாகும். ருசிய நாட்டுத் தத்துவ ஞானியாராகிய டால்ஸ்டாய் என்பார் எழுதிய சிறு கதைகள் இத்தகையவை என்பது உலக அறிஞர்கள் ஒப்புக் கொண்ட உண்மை. டால்ஸ்டாய் எழுதிய கதைகளுள் ஆறு கதைகள் இந்நூலில் அமைந்துள்ளன. டால்ஸ்டாயின் உயரிய கருத்துக்களைத் தமிழ் மாணவர்கள் தெளிவாக உணரும் முறையில் இக்கதைகள் தமிழில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

I

சோற்று மூட்டை மறைதல்

ஏழைக் குடியானவன் ஒருவன் வை கறைப் பொழுதில் உழுவதற்காகத் தன் வயலுக்குப் புறப்பட்டான். திரும்பி வருவ தற்கு நாழிகையாகுமென்று எண்ணி, அவன் மனைவி கட்டமுதைக் கட்டி அவனிடம் கொடுத்தாள். குடியானவன் வயலை அடைந்ததும் அருகிலுள்ள ஒரு மரத்தினடியில் கட்ட முதை வைத்து, அதன்மேல் தன் துணியை மூடினான்.

அவன் பதினொரு மணி வரை நிலத்தை உழுது கொண்டிருந்தான். வெயில் அதிகரித் தது. அவனுக்குப் பசி மிகுந்தது. அவன் வேலை செய்ததால் உண்டான களைப்பைப் போக்கிக்கொள்ளச் ‘சற்று இளைப்பாறுவோம்,’ என்று மரத்தின் நிழலில் உட்கார்ந்தான்; தான் கொண்டு வந்த உணவை உட்கொண்டு பசியை ஆற்றிக்கொள்ள எண்ணிக் கட்டமுதை எடுக்கப் போனான். மூடியிருந்த துணியை நீக்கிப் பார்க்கையில் சோற்று மூட்டையைக் காணவில்லை.

“இதென்ன வேடிக்கையாய் இருக்கிறதே! இவ்விடத்தில் ஒருவரும் வரவில்லையே! அப்படியிருக்க, சோற்று மூட்டை காணாமற் போய்விட்டதே! அது காணாமல் போன காரணம் எனக்கு விளங்கவில்லையே?” என்று அந்தக் குடியானவன் தானே சொல்லிக் கொண்டு ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான்.

கட்டுச் சோற்றை எடுத்து ஒளித்து வைத்தது ஒரு சாத்தான். அது அப்போது அங்கேயே மறைந்திருந்தது. மனிதர்களை நேர் வழியில் செல்லாதபடி தடுத்துத் தீநெறி யில் செல்லும்படி செய்யக் காப்புக் கட்டிக் கொண்டு வேலை செய்யும் இயல்புடையது சாத்தான். அது அன்பு, அருள், அடக்கம், பொறுமை, உண்மை முதலிய சிறந்த குணங் களைக் கிள்ளி எறிந்து, மனிதர்களிடையே தன் எண்ணத்தை நிலவச் செய்வதில் கண்ணுங்கருத்துமாயிருக்கும். மனிதர்கள் பாவப் படுகுழியில் விழும்பொழுது அதன் மனம் குளிரும். அந்தச் சாத்தான் தன் கீழுள்ள ஒரு குட்டிச்சாத்தானை அழைத்துக் குடியானவனைத் தீயநெறியில் புகச் செய்யக் கட்டளையிட்டிருந்தது. அந்தக் குட்டிச்சாத்தான் செய்த சூழ்ச்சிதான் இது.

குடியானவன், “கட்டமுதோ போய்விட்டது. அதைப்பற்றி இனி வீணாக வருந்து வதாற்பயனில்லை. ஒரு வேளை பட்டினி கிடந்தால் என்ன? குடிமுழுகிவிடப்போகிறதா! நான் இறந்தா போய்விடுவேன்! யாரோ பசித்தீ வருத்தியதால் அந்த உணவை எடுத்து உண்டிருக்க வேண்டும். அவர் வயிறு நிரம்பியதே எனக்குத் திருத்தி. இவ்வளவாவது என் கட்டமுது ஒருவருக்குப் பயன்பட்டதே எனது நற்பேறு! ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்’ ஆவரல்லவா? இந்த அறம் செய்ய எனக்குக் கடவுள் அருள் இருந்தவாறு என்னே!” என்று சொல்லிக் கட்டமுது எடுத்தவரையும் வாயார வாழ்த்தினான்; அருகிலிருந்த ஒரு கால்வாயில் சென்று தெள்ளிய நீரைப் பருகித் தன் களைப்பைத் தீர்த்துக்கொண்டான்.

II

சாத்தான் சீற்றம்

இதைப்பார்த்த குட்டிச்சாத்தான் நாணித் தலை கவிழ்ந்தது. ‘கட்டமுதை எடுத்தவனைக் குடியானவன் கண்டபடி திட்டிச் சபிப்பான்; அதனால் அவனைப் பாவப்படுகுடுழியில் தள்ளி விடலாம்” என்று தான் எண்ணியது வீணாயிற்றே என்று அது வருத்தப்பட்டது;”நான் எதிர் பார்த்ததற்கு மாறாகச் செயல் நடந்து விட்டதே! என் ஆற்றல் குடியானவனிடம் செல்லவில்லையே! தலைவனிடம் என்ன சொல்லப் போகிறேன்!” என்று பலவாறு எண்ணிக் கவலை கொண்டு தன் தலைவனான சாத்தானிடம் வந்து நின்றது. சாத்தான் முன்னிலையில் அது கை கட்டி வாய் புதைத்து நின்று, குடியானவனைத் தீ நெறியில் இழுக்கத் தான் செய்த சூழ்ச்சியையும், அது பலியாமற்போன தையும், குடியானவன் கட்டமுது எடுத்தவனை வாழ்த்தினதையும் விளக்கமாகச் சொன்னது.

இதைக் கேட்ட உடனே வந்துவிட்டது சினம் சாத்தானுக்கு! சாத்தான் முகம் சிவந் தது. அது தன் கண்களில் தீப்பொறி பறக்க, பற்களை நறநறவென்று கடித்து, “கையா லாகாத முழு முண்டமே, உன் ஆற்றல் குடியானவனிடம் பலிக்கவில்லையென்று என் னிடம் சொல்வதற்கு உனக்கு வெட்கம் இல்லையா? நீ வெற்றி பெறாதது உன் குற்றமே அல்லவா? உன் வேலையை உனக்கு இன்னும் சரிவரச் செய்யத் தெரியவில்லை. இவ்வாறு குடியானவர்களையும் அவர்கள் மனைவிகளை யும் நல்லொழுக்கத்தைப் பின் பற்ற விட்டு விடுவது, நமக்குக் கேடுதான். பின்பு நமக்கு என்ன வேலை! நம் ஆட்சி சிதைந்து போய் விடும். இவ்விதம் செயலை மிஞ்சவிடலாகாது. உடனே மறுபடி அங்கு நீ விரைந்து சென்று இதைச் செய்து முடி. உனக்கு மூன்று ஆண்டு தவணை கொடுக்கிறேன். இந்தக் குறித்த காலத்துக்குள் குடியானவனை மயக்கி உன் வலையில் சிக்கவைத்து அவனைப் பாவச் செயல்களைச் செய்ய நீ தூண்டினால் ஆயிற்று! இல்லையேல், உன்னைத் தண்ணீரினுள் அமுக்கி எமனுலகத்துக்கு அனுப்பி விடுவேன்! பத்திரம்!” என்று கட்டளையிட்டது.

குட்டிச்சாத்தானது உடல் நடுங்கிற்று. அது மறுபடியும் பூமிக்கு வந்து, எந்த விதத் தில் குடியானவனைத் தீய வழியில் புகுத்தலா மென்று எண்ணிப் பார்த்தது. ஒரு வழியும் தென்படவில்லை. கடைசியாக ஏதோ ஓர் எண்ணம் அதன் மனத்தில் தோன்றியது. “இதுவே வழி! இதுவே வழி! நம் செயல் நிச்சயம் வெற்றியளிக்கும்!” என்று மிக்க மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்தது.

III

குட்டிச்சாத்தான் சூழ்ச்சி

பிறகு அது மனித வடிவங்கொண்டு குடி யானவனிடம் ஒரு வேலையாளாய் அமர்ந்தது. பின்பு அது தன்னுடைய நடத்தையாலும், பேச்சுத் திறத்தாலும் குடியானவன் மனத் தைக் கவர்ந்தது. அவன் தன் வேலையாள் இட்டதே சட்டமாக எண்ணி நடந்தான். வேலையாளின் வார்த்தை அவனுக்கு வேத மாகவே இருந்தது. அவன் தூண்டியபடியே குடியானவன் நடந்து வந்தான்.

விதைக்கும் காலம் வந்தது. தண்ணீர் தேங்கியுள்ள பள்ளமான நிலத்தில் விதைக்கும்படி குட்டிச்சாத்தான் சொல்ல, குடியானவனும் மறு வார்த்தை சொல்லாமல் அவ்வாறே செய்தான். அவ்வாண்டில் பெருமழையும் பெய்யவில்லை. வெயில் கடுமையாயிருந்தது. அதனால், அயலார் பயிரெல்லாம் தீய்ந்து பட்டுப் போயின. குடியானவனுடைய பயிர்கள் மட்டும் செழித்து வளர்ந்து நல்ல விளைவைக் கொடுத்தன. குடியானவன் தன் வேலையாளின் தூண்டுதலினாலேயே தனக்கு இவ்வளவு நன்மை கிடைத்ததென்று எண்ணி மனம் பூரித்தான்; வேலையாளைப் புகழ்ந்தான்.

அடுத்த ஆண்டு மேட்டு நிலத்தில் பயி ரிடும்படி வேலையாள் குடியானவனைத் தூண்டினான். அந்த ஆண்டில் மழை மிக அதிக மாய்ப் பெய்தது. எங்கே பார்த்தாலும் வெள்ளக் காடாயிற்று. மற்றவர்களின் வயல்களில் மழைத்தண்ணீர் தேங்கிவிடவே, அவர்கள் பயிர்களெல்லாம் அழுகிக் கெட்டுப் போயின. குடியானவனுடைய பயிர் செழித்து வளர்ந்து நல்ல பலனைக் கொடுத்தது.

இவ்விதம் ஏராளமான பலனை அடைந்த குடியானவனுக்கு இன்னது செய்வதென்பது தெரியவில்லை. தன் தேவைக்கு வேண்டி யதைக்காட்டிலும் மிகமிக அதிகமாக நெல் மிஞ்சியிருந்தது. அவன் தன் வேலையாளி டம், “இவ்விதம் மிஞ்சின நெல்லைக்கொண்டு நாம் என்ன செய்யலாம்?” என்று ஆலோசனை கேட்டான். அப்பொழுது வேலையாளாகிய குட்டிப்பேய், “ஐயா, நாம் இந்த நெல்லிலிருந்து ஒரு வித இனிய குடிநீர் இறக்கலாம். அதைக் குடித்தால் அது உங்களைக் களிப்புக் கடலில் ஆழ்த்திவிடும்!” என்று சொல்லிற்று. அவனும் அதன் கற்பனைப்படியே செய்தான்; இவ்வாறு இறக்கின மதுவைத் தானும் தாராளமாக உட்கொண்டு, தன் மனைவிக்கும் கொடுத்து வந்தான். விரைவில் அவன் பெரிய குடிகாரனாய்விட்டான்.

குட்டிப்பேய், தன் எண்ணம் பலித்ததைக் கண்டு களித்துத் தன் தலைவனாகிய சாத்தானிடம் சென்று குடியானவனைப் படு குழியில் தள்ளிய விதத்தை அறிவித்துப் பெருமை கொண்டது. சாத்தான், “உன் பேரில் எனக்கு நம்பிக்கை இல்லை. நேரில் பார்த்துதான் நான் உண்மையை அறிய வேண்டும்,” என்று பதில் சொல்ல, இரண்டும் குடியானவன் வீட்டிற்கு வந்து சேர்ந்தன.

IV

குடியால் விளைந்த குழப்பம்

குடியானவன் தன் நண்பர்களுடன் உட் கார்ந்திருந்தான். நடுவில் ஒரு மேசை இடப் பட்டிருந்தது. அதன்மேல் பல குவளைகளும், மது நிறைந்த மிடாக்களும் இருந்தன. குடி யானவன் குவளைகளில் மதுவை முகந்து நண் பர்களுக்கும் கொடுத்துத் தானும் குடித்துக் கொண்டிருந்தான். அவன் மனைவி இன்னும் ஒரு குவளையில் மதுக் கொண்டு வருகையில் மேசைமேல் இடறி விழுந்துவிட்டாள். அவள் கொண்டு வந்த மது முழுவதும் தரையில் ஓடி வீணாயிற்று.

அப்பொழுது குடியானவன் மிகுந்த சினங்கொண்டான்; “அது என்ன! வாய்க் கால் நீரென எண்ணினாயா, இம்மாதிரி கீழே கொட்டுவதற்கு?” என்று அவளை மிரட்டினான்.

அப்பொழுது குட்டிப்பேய், தன் தலைவனைத் தன் தோளால் இடித்து, கண்களைச் சிமிட்டிக்கொண்டு, “பார்த்தீர்களா! இவனுடைய இயல்பு முழுதும் மாறிவிட்டதைப் பார்த்தீர்களா? தன்னுடைய கட்டுச்சோறு போனதைப் பற்றி மனம் வருந்தாமல் அதைத் திருடினவனை மனமார வாழ்த்திய நல்லோன் இந்தப் பேர்வழிதான்!” என்றது.

குடியானவனும் அவனுடைய நண்பர்களும் குடித்து மகிழ்ந்திருக்கையில் அங்கு வேறொரு குடியானவன் வந்தான். அவன் வேலை செய்து களைத்திருந்தான்; தன்னை ஒருவரும் வரவேற்காவிட்டாலும், தானே உள்ளே நுழைந்தான். அவனை அங்கு ஒரு வரும் ஏறிட்டுப் பார்க்கவில்லை. ஆனால், அவனோ , அசட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டே அவர்களருகில் அமர்ந்தான். எல்லாரும் குடிப்பதைக் காண அவன் நாக்கிலும் நீர் ஊறிற்று. அவன் தானும் சிறிது குடித் துத் தனது களைப்பைப் போக்கிக்கொள்ள எண்ணினான். ஆனால், யாராவது அவனுக்குக் கொடுத்தால்தானே! அவன் உட்கார்ந்து பார்த்தான். அவனை ஒருவரும் பொருட்படுத்தவில்லை. ‘ஆசை வெட்கமறியாது,’ அல்லவா? அவன் தனக்கும் கொஞ்சம் மதுத் தரும்படி குடியானவனை வாய்விட்டே கேட்டு விட்டான். “என்னடா! இது சத்திரமென்று எண்ணினாயா? அல்லது இது என்ன தண்ணீர்ப்பந்தலா? வருகிற போகிற நாய்களுக் கெல்லாம் மதுவைக் கொடுக்கவா இங்கு நான் இருக்கிறேன்! சீ! வெட்கங்கெட்ட நாயே, போ வெளியே!பதரே,” என்று பலவாறு திட்டி அவனை அனுப்பிவிட்டான் குடியானவன்.

அப்பொழுது சாத்தான் மனங்குளிர்ந்தது. அது மட்டற்ற மகிழ்ச்சி கொண்டது; குட்டிப்பேயின் கையை அழுத்தி ஒரு குலுக்குக் குலுக்கிற்று; அதன் தோளைத் தட்டிக் கொடுத்தது; அதைக் களிப்புடன் தழுவிக் கொண்டது. “நன்று நன்று! என் வயிற்றில் பாலை வார்த்தாயடா என் கண்ணே! பயலை ஒழுங்கான வழிக்குத் திருப்பிக் கொண்டுவந்துவிட்டாய் அப்பா! உன் திறமையை மெச்சினேன்!” என்று சொல்லித் தன் மகிழ்ச்சியைக் காட்டிக்கொண்டது பெரிய சாத்தான்.

“எல்லாம் உங்கள் அருளாலே தான் நிகழ்கின்றன. நீங்கள் பதறாதீர்கள். இனி மேலேதான் நாடகம் தொடங்கப் போகிறது! சுவையான காட்சிகள் இனி வரும். சற்றுப் பொறுத்திருந்து இன்பத்தைக் கொடுக்கும் பல காட்சிகளையும் கண்டு மகிழுங்கள்!” என்றது சின்னப்பேய்.

குடியானவர்கள் குடி வெறியினால் குழப்பம் செய்தார்கள். பேச்சும் வலுத்தது. அவர்கள் கண் பார்வையும் அஞ்சத்தக்கதாய் இருந்தது. அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டது நரிகளின் பார்வையைப் போன்றிருந்தது. “என் அன்பனே, இவர்களுடைய பார்வை நரிப்பார்வை போலத் திருட்டுத் தனமுள்ளதாய் அல்லவா இருக்கிறது? விரைவில் இவர்கள் ஒருவரையொருவர் வஞ்சிக்க முயல்வார்கள். வஞ்சக எண்ணம் இவர்களிடம் குடிகொண்டாய்விட்டது. விதையை நன்றாய் ஊன்றிவிட்டாய்! அது முளைத்துவிட்டது! இவர்கள் நம் வலையில் சிக்கிவிட்டார்கள்! இனி நமக்குக் கவலையில்லை!” என்று பெரிய சாத்தான் குட்டிச் சாத்தானிடம் சொல்லி அதன் ஆற்றலைப் பலவாறு புகழ்ந்தது.

“என்ன! நீங்கள் இவ்வளவு அவசரப்படலாமோ? இன்னும் ஒரு குவளை மதுவை இவர்கள் உள்ளே விட்ட பிற்பாடு பாருங்கள் இவர்கள் செய்யும் குழப்பத்தை! அது ஓர் அரிய காட்சியாகும்! இக்காட்சியைப் பார்க்கப் பதினாயிரம் கண்கள் வேண்டும்! இப்பொழுது இவர்கள் நரிகளைப் போல ஒருவரை ஒருவர் தாக்க முயற்சி செய்கிறார்கள். இன்னும் சில நாழிகையில் ஓநாய்களாய், ஒரு வரோடொருவர் சண்டை செய்யும் காட்சியை நமக்கு அளிப்பார்கள்!” என்றது சின்னப் பேய்.

எல்லாக் குடியானவர்களும் இன்னும் ஒரு குவளை மதுவை உள்ளே விட்டார்கள். காட்சி தொடங்கிவிட்டது. ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ள ஆரம்பித்தனர். அவர்கள் சொன்ன வார்த்தைகளை இங்கு எழுதுதல் இயலாது. பல்லை நறநறவென்று கடித்துக்கொண்டு ஒரு வரையொருவர் தாக்கலாயினர். சண்டை தொடங்கிவிட்டது. ஒருவர் மூக்கை ஒருவர் கடித்தனர். இந்தக் கலவரத்தில் நம் கதைத் தலைவனான குடியானவனும் கலந்து கொண்டான் என்பதைச் சொல்லவும் வேண்டுமா! அவனுக்கும் அடிகளும் உதைகளும் கிடைத்தன.

இந்தக் காட்சி சாத்தானைக் களிப்புக் கடலில் ஆழ்த்திவிட்டது. இந்த இன்பத்தில் மூழ்கிச் சிறிது நேரம் மெய்ம்மறந்திருந்து, “என் அருமைக் குட்டிப்பேயே, நீ செய்த செயல் முதல் தரமானது!” என்று சொல்லி அதை மெச்சித் தன் மார்பில் தழுவிக்கொண் டது சாத்தான். “சிறிது நேரம் பொறுங்கள்! இந்த நாடகத்தில் தேனினும் இனிய காட்சி இனித்தான் வரப்போகிறது! இன்னும் ஒரு குவளை மதுவை இவர்கள் குடித்துப் பன்றிகள் போல உறுமுவதை நீங்கள் பார்ப்பீர்கள்!” என்று குட்டிப்பேய் சொல்லிற்று.

குடியானவர்கள் இன்னும் ஒரு குவளை மதுவை அருந்தினார்கள்; காட்டு மிராண்டி கள்போல நடக்கத் தொடங்கினார்கள்; பேசத் தகாத பேச்சுக்களைப் பேசினார்கள்; வீணாகக் கூக்குரல் இட்டார்கள். வீடுமுழுவதும் ஒரே இரைச்சலும் குழப்பமும் நிரம்பின. பின்பு அவர்கள் ஒவ்வொருவராக வெளிக்கிளம்பினார்கள். அவர்கள் நடை தள்ளாடிற்று. கல்லில் மோதிக்கொண்டு விழுந்தனர் சிலர். நடக்க முடியாமல் கீழே தள்ளாடி விழுந்து உணர்ச்சி யற்றுக் கட்டை போலச் சிலர் கிடந்தனர். நம்முடைய கதைத் தலைவனும் விருந்தினரை வழி அனுப்ப வருகையில் சேறுள்ள ஒரு குட்டையில் விழுந்தான்; தன் உடல் முழுவதும் சேறாகி அதிலிருந்து எழுந்திருக்க முடியாமல். பிணம் போலக் கிடந்தான்.

இந்தக் காட்சியினால் ஏற்பட்ட மகிழ்ச்சியால் சாத்தானால் பேசக்கூட இயலவில்லை. “நீ கை தேர்ந்த பேர்வழி! உன்னிடம் இவ் வளவு சரக்கு இருக்குமென்று நான் இதுவரை எண்ணவில்லை! நீ முன் செய்த தவறுகளுக்கெல்லாம் இது கழுவாயாயிற்று. முதல் தரமான மதுவை நீ இவர்களுக்குக் கொடுத்திருக்கிறாய். இதிலுள்ள மருமம் எனக்கு நன்றாய் விளங்கிவிட்டது! முதலாவது நீ நரியின் இரத்தத்தை இந்த மதுவில் சேர்த்திருக்க வேண்டும்! அதனாலேதான் இவர்கள் நரி போலத் திருட்டு விழி விழித்தார்கள். உண்டா, இல்லையா? பின்னர் ஓநாயின் இரத் தத்தைச் சேர்த்துக்கொடுத்திருக்கவேண்டும். இவ்வாறு செய்து இவர்களைப் பன்றிகளைப் போல நடந்துகொள்ளும்படி செய்து உன் எண்ணத்தை நிறைவேற்றிவிட்டாய்! நான் கருதியது சரிதானே?” என்று சாத்தான் குட்டிப்பேயிடம் கேட்டது.

அப்பொழுது குட்டிப்பேய், “நான் செய்தது அதுவன்று. நான் செய்ததெல்லாம், குடியானவன் தன் தேவைக்கு அதிகமான நெல்லை அடையும்படி செய்ததேயாகும். மனிதன் தன் பகுத்தறிவைப் பயன்படுத்தவில்லையானால் அவனுக்கும் விலங்குக்கும் யாதொரு வேறுபாடும் இல்லை. சரியானபடி மனம் பண்படாத மனிதனிடம் விலங்கின் இயல்பு இயற்கையிலேயே இருக்கிறது. தன் தேவைக்கு மட்டும் போதுமான உணவுப் பொருள் இருக்கும் வரை, அவனிடம் உள்ள இந்த விலங்கின் இயல்பு தலை எடுப்பதில்லை; அடங்கிக் கிடக்கும். இந்த நிலைமையிலே தான் தன் கட்டுச்சாதம் காணாமற்போனதைப் பற்றிக் குடியானவன் மனவருத்தப்படவில்லை; அதைத் திருடினவனைக் கோபிக்கவும் இல்லை; திட்டவும் இல்லை; அவனை வாழ்த்தினான். ஆனால், தன் தேவையின் அளவுக்கு மிஞ்சின உணவுப் பொருள் கிடைத்ததும், ‘இதைக் கொண்டு எவ்விதத்தில் இன்ப மடையலாம்? அதற்குரிய வழிகள் எவை? என்று சிந்திக்கத் தொடங்கினான். அப்பொழுதுதான் நான் அவனுக்கு இன்பமடையும் வழியைக் காட்டினேன். அதுதான் குடிப்பழக்கம். கடவுளால் அருளப்பட்ட நல்ல உணவுகளை மதுவாக மாற்றிக் குடிக்கத் தொடங்கியதும் அவனிடம் அடங்கியிருந்த தீயகுணம் தலை காட்டத் தொடங்கியது. இன் னும் விடாது குடித்துக்கொண்டிருப்பானானால், அவன் விலங்குதான். இதில் ஐயமே வேண்டா,” என்றது.

“மனிதனைப் பாவ வழியில் இழுத்துப் படுநரகத்தில் தள்ளுவதற்கு நீ கண்டு பிடித்த குடிப்பழக்கமே மிகச் சிறந்தது! குடியே பாவத்துக்கு வித்து. ஐம்பெரும்பாவங்களுக்கும் இதுவே அடிப்படை. இந்த ஒன்றையே நாம் கருவியாகக் கொண்டு மனிதர்களிடமுள்ள தெய்வத்தன்மையை ஒழித்து நம் வசப் படுத்திப் பாவ வடிவமாக அவர்களை மாற்றி விடலாம். இவ்வளவு சிறந்த வழியைக் கண்டு பிடித்த உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்! நீயே எனக்கு இனி முதல் மந்திரி! நீ முன் செய்த தவறுகளை யெல்லாம் மன்னித்தேன்! உனக்குப் பல விதப் பரிசுகளை அளிக்கவும் ஆயத்தமாயிருக்கிறேன். நம் ஆட்சியை வலுப்படுத்தி நம் குடிமக்கள் தழைத்தோங்கச் செய்ய மனிதர்களிடையே இந்தக் குடியைப் பரவச்செய்ய வேண்டும். அந்தச் செயலைக் கண்ணுங் கருத்துமாயிருந்து கவனிக்க வேண்டும்!” என்று பெரிய பேய் சொல்லிக் குட்டிப் பேயைப் பெரிதும் புகழ்ந்தது.

– டால்ஸ்டாய் சிறுகதைகள் (ஆறாம் வகுப்புக்குரியது), முதற் பதிப்பு: நவம்பர் 1960, எம்.எஸ்.சுப்பிரமணியம் பிரசுரம், திருநெல்வேலி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *