குடியானவனின் யோசனை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: February 12, 2019
பார்வையிட்டோர்: 8,214 
 
 

முன்னொரு காலத்தில் ஒரு சிறு வயது குடியானவன் வாழ்ந்து வந்தான். அவன் கொஞ்சம் புத்திசாலி. அவன் வீட்டில் ஒரு பசு மாட்டை வளர்த்து வந்தான். அந்த பசு மாட்டில் பால் கறந்து வீடு வீடாய் சென்று பால் ஊற்றி தானியங்களை அதற்கு ஈடாக பெற்றுக்கொள்வான்.

சேகரித்த தானியங்களை கொண்டு போய் நகை கடைகளில் கொடுத்து நகைகளாக பெற்றுக்கொள்வான். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக நகைகளை சேகா¢த்து ஒரு மண் சட்டிக்குள் வைத்து ஒரு இடத்தில் புதைத்து வைத்து விடுவான்.புதைத்து வைத்த இடத்தை அடையாளம் வைத்துக்கொள்ள செடி கொடிகளை நட்டு பெரிய காய்கறிகள் தோட்டம் போட்டு வைத்தான்.

அவன சிறு வயது முதல் பால் ஊற்றி சம்பாதித்து பத்து வருடங்கள் கழித்து, அவனுக்கு திருமணம் செய்து கொள்ள ஆசை வந்தது. அப்பொழுதெல்லாம் திருமணத்துக்கு பெண் வேண்டுமென்றால் பெண்ணின் பெற்றோர்களுக்கு நிறைய நகைகள் கொடுக்க வேண்டும்.

அவர்களும் பதிலுக்கு மாப்பிள்ளை என்ன தொழில் செய்து கொண்டிருக்கிறாரோ அதற்கு உதவி செய்வார்கள். இவனுக்கு, பெண்ணை பெற்றவர்கள் ஒரு பசு மாடு தருவதாக வாக்குறுதி கொடுத்தார்கள்.பெண்ணை பெற்றவர்கள் நாலு மைல் தள்ளி இருக்கிறார்கள். இவனும் பெண் வீட்டாரின் ஒப்பந்தத்துக்கு ஒப்புக்கொண்டு இவன் வீட்டுக்கு பெண் வீட்டாரை வரச்சொல்லி விட்டான். அவர்களும் வண்டி கட்டிக்கொண்டு அவன் வீட்டிற்கு வந்து விட்டனர். அவர்களுடன் ஒரு களவாணியும் எப்படியோ உறவு முறை சொல்லி அவ்ர்களுடன் இவன் வீட்டிற்கு வந்து விட்டான்.

நல்ல வெயிலில் வந்து இறங்கிய எல்லோரையும் வரவேற்று அனைவருக்கும் தாகம் தீர போர் கொடுத்தான்.அதன் பின் அனைவரையும் கூட்டிச்சென்று இவன் தோட்டத்தை சுற்றி காண்பித்தான். அவர்களுக்கு இவன் தோட்டம் பிடித்து போய் விட்டது. காய்கறிகள் நன்கு காய்த்து இருந்த்து. அந்த காய்கறிகளை பறித்து வந்து சமையல் செய்து பெண் வீட்டாருக்கு விருந்து வைத்தான். நன்கு சாப்பிட்ட பின் ஓய்வு எடுத்த பெண் வீட்டார், அதன் பின் மாப்பிள்ளை சீதனம் வழங்க பெண் வீட்டாரின் முக்கியமான ஒருவரை மட்டும் அழைத்துக்கொண்டு தோட்டத்துக்கு சென்றான்.அங்கு அவன் புதைத்து வைத்திருந்த சட்டியை எடுத்துக்கொண்டு வீடு வந்தான்.அங்கு அனைவா¢ன் முன்னால் சட்டியுடன் நகைகளை எடுத்து மாப்பிள்ளை சீதனமாக கொடுத்தான்.அதனை பெற்றுக்கொண்ட பெண் வீட்டார், சொல்லியபடி நாளைக்கலையில் சந்தைக்கு சென்று ஒரு நல்ல பசு மாட்டை வாங்கி கொடுத்து விட்டு ஒரு நல்ல நாளில் பெண்ணை அழைத்துக்கொண்டு வந்து மணமுடித்து கொடுப்பதாக அறிவித்தனர்.

இப்பொழுது இரவு வேளை ஆகிவிட்டதால், வழியில் கள்வர் பயம் இருக்கும். ஆதலால் மாப்பிள்ளை வீட்டில் இரவு தங்கிவிட்டு நாளை காலையில் அப்படியே சந்தைக்கு கிளம்பலாம் என்று முடிவு செய்து அங்கேயே இரவு தங்கினர்.

அவர்களுடன் வந்திருந்த களவாணி நடு இரவில அனைவரும் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த வேளையில் மெல்ல எழுந்து பெண் வீட்டார் பத்திரப்படுத்து வைத்திருந்த சட்டியை மெல்ல எடுத்து அதில் இருந்த அனைத்து நகைகளையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்த பச்சைமிளகாய்களை அதனுள் போட்டு சத்தமில்லாமல் வந்து படுத்து விட்டான்.

மறு நாள் காலையில் எழுந்திருந்த பெண் வீட்டார் சந்தைக்கு சென்று நல்ல பசு மாட்டை பிடித்து மீண்டும் இவன் வீட்டில் கொண்டு வந்து கட்டி விட்டு இனி பேசியபடி பெண்ணை மணமுடித்து தருவதாக சொல்லிவிட்டு கிளம்பிவிட்டனர்.

ஒரு வாரம் கழித்து பெண் வீட்டாரிடமிருந்து எந்த பதிலும் வராததால் குடியானவன் பெண் வீட்டாரிடம் சென்று அதற்கு பின் ஏன் ஒருவரும் வரவில்லை என்று கேட்டான்.

பெண் வீட்டார் கோபத்துடன் நகைகளை கொடுத்து இரவோடு இரவாக மாற்றி வைத்து விட்டவனுக்கு, எங்கள் பெண்ணை கொடுக்க சம்மதமில்லை என்று தெரிவித்து விட்டனர்.

குடியானவனுக்கு ஒன்றும் புரியவில்லை, என்ன நடந்தது என்று விளக்கமாக கூறுங்கள் என்று கேட்டான். இவர்கள் வீடு வந்து சட்டியை திறந்து பார்த்தபொழுது பச்சை மிளகாய்தான் உள்ளே இருந்த்து என்று கூறினார்கள்.

கூடவே வந்தவர்கள் யாரோ நகையை எடுத்து இருக்க வேண்டும் என்று முடிவு செய்த குடியானவன், உங்களுடன் வந்திருந்த உறவுக்காரர்களிடம் இந்த விசய்த்தை சொல்லிவிட்டீர்களா என்று கேட்டான். அவர்கள் இன்னும் யாரிடமும் சொல்லவில்லை.நீங்கள் வந்து கேட்ட பின்னால் சொல்லிக்கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தோம் என்றனர்.

நல்லது உங்களுடன் வந்த உறவுக்காரர்கள் அனைவரையும் அழைத்து, எதுவும் தெரியாதது போல, நகைகள் எல்லாம் எங்களுக்கு திருப்தியாக இருந்தது. நாளைக்கு மாப்பிள்ளை வீட்டுக்கு போய் திருமணத்திற்கு நல்ல நாள் பார்க்கலாம் என்று சொல்லுங்கள். சரி என்று அனைவரும் சொல்லி விட்டு அவர்கள் வீட்டுக்கு திரும்பி செல்லும்போது ஒவ்வொருவர் பின்னால் ஒரு ஆளை தொடர்ந்து போக செல்லுங்கள்.நகைகள் இருந்தது என்று நீங்கள் சொல்லியிருப்பதால், நகைகள் எடுத்தவன் எப்படியும் தான் எடுத்து வைத்த நகைகள் இருக்கிறதா என்று சோதனை செய்ய செல்வான். அவனை பின் தொடர்பவன் அதை கண்டு பிடித்து விடலாம் என்று யோசனை சொன்னான்.

அதன் படி பெண் வீட்டார் அன்று உடன் வந்தவர்கள் அனைவரையும் அழைத்து நாளை மாப்பிள்ளை வீட்டுக்கு போகலாம், நகைகள் எல்லாம் திருப்தியாக இருந்தது என்று சொன்னார்கள். வந்தவர்களில் களவாணியும் இருந்தான். அவனுக்கு இதை கேட்டவுடன் “கருக்” என்று இருந்த்து. அதெப்படி? நாம்தான் நகைகளை எடுத்துவிட்டு பச்சை மிளகாய்களை போட்டிருந்தோமே, இவர்களுக்கு நகைகள் எப்படி கிடைத்திருக்கும்? என்று யோசனையுடனே, திரும்பும்போது வீட்டுக்கு போகாமல் அவன் அந்த நகைகளை புதைத்து வைத்த இடத்துக்கு சென்று அதை தோண்டி, கையில் எடுத்து பார்த்தான், எல்லாமே இருந்தது.

அப்படி என்றால் பெண் வீட்டாருக்கு நகை எப்படி கிடைத்திருக்கும்? யோசனையுடன் அவசர அவசரமாக அதே இடத்தில் புதைத்து விட்டு விறு விறுவென வீட்டுக்கு வந்துவிட்டான். அவனை பின் தொடர்ந்து வந்த ஆள் அந்த இடத்தை மீண்டும் தோண்டி அனைத்து நகைகளையும் எடுத்து கொண்டு வந்து பெண் வீட்டாரிடம் கொடுத்து விட்டான்.பெண் வீட்டார் குடியானவனை சந்தேகப்பட்டதற்கு வருத்தப்பட்டு மன்னிப்பு கோரினர்.

மறு நாள் பெண் வீட்டார் அவர்கள் உறவினர்களுடன் மாப்பிள்ளை வீடு சென்று நல்ல முகூர்த்த நாளை குறித்து, அன்று குடியானவனுக்கு திருமணம் செய்வித்து பெண்ணை அனுப்பி வைப்பதாக உறுதி கூறி சென்றனர். அவர்களுடனே வந்த உறவினர்கள் மகிழ்ச்சியாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும், களவாணிக்கு மட்டும் அதெப்படி? அதெப்படி? என்று சந்தேகம் வந்து கொண்டே இருந்தது.

திடீரென்று சந்தேகம் வர நம்மை ஏமாற்றுவதற்காக இந்த நாடகம் போட்டிருப்பார்களோ என்று யோசித்தவன் வீடு வந்தவுடன், இரவோடு இரவாக அவன் நகைகளை புதைத்து வைத்த இடத்துக்கு சென்று பார்த்த பொழுது அங்கு வைக்கப்படிருந்த நகைகள் எடுக்கப்பட்டிருந்தன.

“திருடனுக்கு தேள் கொட்டியது போல இருந்தது”.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *