குடியானவனின் மனக்கோட்டை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 15,813 
 
 

குடியானவன் ஒருவன், வெள்ளரிக்காயைத் திருடுவதற்காக, ஒரு தோட்டத்துக்குச் சென்றான். ஒரு மூட்டை வெள்ளரிக் காய்களைப் பறித்துக் கொண்டு போய் விற்றால் பணம் கிடைக்கும். கிடைத்த பணத்திற்கு கோழி வாங்குவேன். என்று அவன் கற்பனை செய்தான். மேலும், அவன் யோசனை செய்யலானான்; கோழி, முட்டைகள் இடும். அவைகளை அடை காக்கும். குஞ்சுகள் பொறிக்கும். கூட்டம் கூட்டமாக குஞ்சுகளை வளர்ப்பேன்.

பிறகு, அந்தக் குஞ்சுகளை விற்று ஒரு பன்றி வாங்குவேன் பன்றி குட்டிகள் போடும் அந்தக் குட்டிகளை விற்று குதிரை வாங்குவேன். குதிரையும் குட்டிகளை ஈனும். அவைகளை வளர்த்து விற்றால், ஏராளமாகப் பணம் கிடைக்கும்.

அந்தப் பணத்தைக் கொண்டு ஒரு வீடும் அத்துடன் ஒரு தோட்டமும் வாங்குவேன்.

அந்தத் தோட்டத்தில் வெள்ளரிக் காய்களை பயிரிடுவேன். “வெள்ளரிக்காய்களை எவரும் திருடாதபடி காவலுக்கு ஏற்பாடு செய்வேன்.

“முரட்டுக் காவல்காரன் ஒருவனை நியமிப்பேன். அடிக்கடி நானும் தோட்டத்திற்குச் சென்று, “யாரடா அங்கே ? எச்சரிக்கை!” என்று உரக்கக் கூவுவேன் !

குடியானவன் இவ்வாறு யோசனை செய்து கொண்டிருந்ததில், தன்னையே மறந்து விட்டான்.

தான் வேறு ஒருவனுடைய தோட்டத்தில் நிற்பதும் அவனுக்கு நினைவில்லை.

மன மகிழ்ச்சியினால், அவன் கடைசியாக எண்ணியபடி உரத்த குரலில், “யாரடா அங்கே எச்சரிக்கை !” என்ற கூறி விட்டான்.

தோட்டத்தில், வேற்று ஆள் குரல் கேட்கவே, காவல்காரன் ஓடி வந்து, குடியானவனைப் பிடித்து, நையப் புடைத்து அனுப்பினான்.

– மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள் – முதற்பதிப்பு: ஜூன் 1998 – முல்லை பதிப்பகம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *