(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஓர் ஊரில் ஒரு பார்ப்பனன் இருந்தான். அவன் அந்த நாட்டு அரசனுக்குப் பஞ்சாங்கம் சொல்லும் வேலை பார்த்து வந்தான். அவன் மனைவிக்கு நெடுநாளாகப் பிள்ளை பிறக்கவில்லை. அதனால் அவர்கள் ஒரு கீரிப்பிள்ளையை ஆசையோடு எடுத்து வளர்த்து வந்தார்கள்.
அந்தப் பார்ப்பனன் தன் பிள்ளையாசை முழு வதையும் அந்தக் கீரிப் பிள்ளையின் மேல் வைத் திருந்தான். அதை அன்போடு எடுத்து மடியின் மேல் வைத்துக் கொள்வான். மார்பில் சேர்த்து வைத்துத் தழுவிக் கொள்வான். முத்தம் இடுவான். பாலும் சோறும் தன் கையாலேயே ஊட்டுவான். தன் மார்பின் மேல் போட்டுத் தூங்க வைப்பான். இப்படி
அன்பாகக் கீரிப்பிள்ளையை வளர்த்து வரும்போது அவன் மனைவி வயிற்றில் கருப்பம் உண்டாகியது.
பஞ்சாங்கம் சொல்பவனாகிய அந்தப் பார்ப்பனன் தன் மனைவியைப் பார்த்து, ‘அன்பே, உனக்கு ஓர் ஆண் பிள்ளை பிறப்பான். அவன் நான்கு வேதங்களுக்கும் தலைவனாக விளங்குவான். பெரும் செல்வமும் செல்வாக்கும் பெற்றுத் திகழ்வான்.உன்னையும் என்னையும் நம் குலத்தை யுமே ஆதரித்துக் காப்பாற்றுவான். அரசர் மெச்சிப் புகழும்படி புரோகிதம் சொல்லிக் கொண்டு நூறு வயது வரை இருப்பான்’ என்று பிறக்கப் போகும் தன் மகனைப் பற்றி ஆரூடம் கணித்துச் சொன்னான்.
‘பகற் கனவு கண்ட பிரமசாரியைம் போல் நீங்கள் மனக் கோட்டை கட்டாதீர்கள். எல்லாம் நடக்கும் காலத்தில் பார்த்துக் கொள்ளலாம்” என்று அவன் மனைவி செல்லமாக மறுத்துச் சொன்னாள்•
அவன் மனைவிக்குக் கர்ப்பம் முற்றிக் கடைசி யில் ஒரு நாள் நல்ல வேளையில் ஓர் அழகான ஆண் பிள்ளை பிறந்தது. அந்தப் பிள்ளை பிறந்த பின் ஒரு நாள் தீட்டுக கழிப்பதற்காக அவள் சுனைக்கு நீராடச் சென்றாள், பார்ப்பனன் பிள்ளையைப் பார்த்துக் கொண்டு வீட்டில் இருந்தான்.
அப்போது அரச தூதர்கள் வந்து அரண்மனை- யில் சிரார்த்தம். அதற்கு வாருங்கள்’ என்று அழைத் தார்கள். அந்தச் சமயத்தில் தான போகா விட்டால் மற்ற பார்ப்பனர்கள் சிரார்த்த தட்சணைகள் வாங்கிக் கொண்டு போய் விடுவார்கள்; தனக்குக் கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போய்விடும் என்று பார்ப்பனன் உடனே புறப்பட்டான். வீட்டில் பிள்ளைக்கு வேறு துணையில்லாததால், தான் வளர்த்த கீரிப் பிள்ளையைக் கொண்டு வந்து, தன் பிள்ளையின் பக்கம் வைத்துவிட்டு அரண்மனைக்குச் சென்றான்.
அரண்மனையில் சிரார்த்தம் முடித்து, அங்கிருந்து பெற்ற சரிகை வேட்டி, அரிசி, பருப்பு எல்லாவற்றையும் மூட்டைகளாகக் கட்டிக் கொண்டு வீட்டுக்குத் திருமபி வந்தான்.
அவன் அரண்மனை போய்த் திரும்பி வரு முன் னால் வீட்டிற்குள் ஒரு கருநாகம் புகுந்தது. அது குழந்தையிருந்த இடத்தை நோக்கிச் சென்றது. அதைக் கண்ட கீரிப்பிள்ளை உடனே கருநாகத்தின் மேல் பாய்ந்து, அதைக் கடித்து இரண்டு துண் டாக்கிப் போட்டு விட்டது. அதன் வாயெல்லாம் இரத்தம் ஒழுகத் தன் சாதனையைக் காட்ட வேண்டும் என எண்ணி, மிகுந்த மகிழ்ச்சியோடு, அது வீட்டு வாசலில் வந்து நின்றது. அரண்மனை யிலிருந்து திரும்பி வந்த பார்ப்பனன் இரத்தம் ஒழுகும் வாயோடு நின்ற கீரிப்பிள்ளையைக் கண்டதும் அது தன் குழந்தையைத்தான் கடித்து விட்டது என்று நினைத்துக் கொண்டு அதைத் தடியினால் அடித்துக் கொன்று விட்டான். தன் பிள்ளை என்ன ஆயிற்றோ என்ற கலவரத்தோடு அவன் வீட்டிற்குள் வந்தான்.
அங்கே அவன் பிள்ளை சிரித்துக் கொண்டு கிடந்தது. அதன் எதிரில் தூரத்தில் கரும்பாம்பு இரண்டு துண்டாகக் கிடந்தது. அப்போதுதான் உண்மையாக என்ன நடந்ததென்று அவனுக்குப் புரிந்தது. ஆராயாமல் அருமையாக வளர்த்த அந்த நல்ல கீரிப் பிள்ளையை வீணாகக் கொன்று விட் டோமே என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டான. பைத்தியக்காரன் போல் தன் தலை யில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்டான். ‘பெற்ற பிள்ளையைக் காட்டிலும் அதிகமாக உன்னைப் பேணி வளர்த்தேனே! வாசலில் எதிரே வந்து நின்று என்னையே எமனாகத் தேடிக் கொண் டாயே” என்று அந்தக் கீரிப் பிள்ளையின் மேல் விழுந்து விழுந்து தரையில் முட்டி மோதிக் கொண்டு அழுதான். நீராடப் போன அவன் மனைவி திரும்பி வந்து, கீரிப் பிள்ளை இறந்து கிடப்பதைக் கண்டு ஓவெனக் கூவியழுதாள். நடந்ததைக் கேட்ட பிறகு நெருப்பிலிட்ட மெழுகுபோல் அவள் உள்ளம் உருகி நின்றாள். தீர விசாரியாமல் செயல் புரிந்தோர் அடைந்த துன்பங்களையெல்லாம் கதை கதையாய்ச் சொல்லி அவள் அழுதாள்.
அவர்கள் கடைசியில் கீரிப் பிள்ளையைக் கொன்ற பாவத்திற்குக் கழுவாய் செய்து ஓரளவு துன்பம் நீங்கியிருந்தார்கள்.
– பஞ்சதந்திரக் கதைகள், பகுதி 5 – ஆராயாத செயல் தவிர்த்தல், முதற் பதிப்பு: மார்ச் 1996, அன்னை நாகம்மை பதிப்பகம், சென்னை.