கிளி சொல்லும் வழி

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 8,983 
 

ஊருக்கு வெளியே உயர்ந்தோங்கிய ஒரு மரம். எல்லாத் திசைகளிலும் கிளை விரித்து பச்சைப் பசேலென்ற இலைகளுடன்.. கொத்துக் கொத்தாய் குளுங்கும் கனிகளுடன் ஊதாப் பூக்களை உடம்பெல்லாம் சூடிக்கொண்டு கல்யாணப் பந்தல் போல குளிர் நிழலைப் பரப்பிக் கொண்டு.. அந்த மரம் பறவைகளுக்கு சொர்க்கலோகம். நீர் நிலைகளைத் தேட அவ்வழியாகச் செல்லும் கொக்குக் கூட்டம் சிறிது நேரமாவது அந்த மரத்தில் அமர்ந்து இளைபாறிவிட்டுத்தான் செல்லும்.

தேனாக இனிக்கும் அதனுடைய பழங்களுக்காகவே சில பறவைகள் வரும். போகும். குடியிருக்கும் குயில்களுக்கும் புகலிடம் தேடி வந்த புறாக்களுக்கும் இரவைக் கழிக்க வரும் காகங்களுக்கும் மைனாக்களுக்கும் அது சரணாலயமாகவும் விளையாட்டு மைதானமாகவும் விளங்கியது.

அந்த மரத்தில் ஒரு அழகிய பச்சைக் கிளி வசித்தது. அது எப்போது, எப்படி அந்த மரத்துக்கு வந்து சேர்ந்தது என்பது அதற்கே தெரியாது. அந்த மரம்தான் தன்னைப் பெற்ற தாய் என்று அந்தக் கிளி எண்ணிக் கொண்டிருந்தது.

வெகு உயரத்தில் அந்த மரம் கிளைவிட்டு இரண்டாகப் பிரிந்த இடத்தில், இலைகளின் மறைவில், பாதுகாப்பான தொட்டிலைப் போல கிளிக்கு ஒரு கூட்டை அமைத்துத் தந்திருந்தது அந்த மரம்.

அந்தக் கிளிக் கூட்டுக்குள் சுட்டெரிக்கும் வெயில், சூறாவளிக் காற்று, புயல் மழை எதுவும் சுலபமாக நுழைந்துவிடமுடியாது.

பசித்த நேரங்களில் கிளி வெளியே வரும். மரத்தில் உள்ள கனிகளை உண்டு மகிழும். பொழுது போகவில்லையென்றால், கிளைக்குக் கிளை தாவிச் சென்று சகோதர பறவைகளுடன் கொஞ்சி விளையாடும். ரத்தவெறி கொண்ட கழுகும் பருந்தும் வானத்தில் வட்டமிட்டால் கிளியின் வசிப்பிடமே அதற்கு பதுங்கு குழியாகி அதைக் காப்பாற்றிவிடும்.

ஒருநாள் நிழல் தேடி வந்த ஒரு புள்ளிமான் அந்த மரத்தடியில் மேய்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்துவிட்ட ஒரு வேடன் தன் வில்லில் இருந்து ஒரு விஷ அம்பை விடுவித்தான்.

குறி சற்று பிசகியதால் மான் மயிரிழையில் தப்பித்துவிட்டது. தரையில் அடிக்கப்பட்ட ரப்பர் பந்தைப் போல அந்த மான் எகிறிக் குதித்து எங்கோ மறைந்துவிட்டது. வேடன் மானுக்கு ஏவிய அம்பு மரத்தின் பக்க வேர் ஒன்றில் பாய்ந்திருந்தது.

அடுத்த சில தினங்களில், அம்பில் தடவப்பட்டிருந்த கொடிய விஷம் மரத்தின் கிளைகளுக்குப் பரவியதால் இலைகள் சிறுகச் சிறுக வாட ஆரம்பித்தன. காய்ந்து சருகாகி காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. விரியாத மொட்டுகள் கருகி உதிர்ந்தன. காயாக வேண்டிய பிஞ்சுகள் வெம்பி விழுந்தன.

மரம் நாளுக்கு நாள் பொலிவிழந்து கொண்டே போவதற்கு காரணம் புரியாமல் கலங்கியது கிளி.

மரத்தில் வாழ்ந்த எல்லா பறவைகளும் காட்டை நோக்கி ஓடிவிட்டன. வாடிக்கையாக வந்து கொண்டிருந்த கொக்குக் கூட்டம் கூட அந்த பட்ட மரத்தைக் கண்டு கொள்ளுவதில்லை.

குச்சிகுச்சியாக நின்ற அந்த மொட்டை மரத்தை விடாது பற்றிக் கொண்டிருந்தது, கிளிமட்டுமே.

அது இரை தேட மனமில்லாமல் மிகுந்த வேதனையோடு, பசியாலும் பட்டினியாலும் மெலிந்து கொண்டே போயிற்று.

கிளியின் அன்பு, பாசம், தியாகம், அசைக்கமுடியாத நன்றி விசுவாசம் ஆகியவை தேவலோகத்தில் இருந்த இந்திரனின் கவனத்தை ஈர்த்தன.

பூமிக்கு இறங்கிவந்த இந்திரன் கிளிக்கு தரிசனமளித்தார்.

கிளி அவரை அடையாளம் கண்டு கொண்டது.

அப்போது இந்திரன், “”அன்புள்ள கிளியே! இந்த மரத்தில் இலைகளும் இல்லை. பழங்களும் இல்லை. எந்தப் பறவையும் இந்த மரத்துக்கு வருவதில்லை. நீ காட்டுக்குப் போ. அங்கே பூக்களும் பழங்களும் நிறைந்த மரங்கள் ஏராளமாக இருக்கின்றன. இனிமேல் இந்த மரம் உனக்கு எதையுமே தராது – சாவைத் தவிர..” என்றார்.

உடனே அந்தக் கிளி, “”தேவர்களுக்கெல்லாம் கடவுளாக விளங்கும் தேவேந்திரா! தாங்கள் இப்படி ஒரு தவறான ஆலோசனையைச் சொல்லலாமா? இந்த மரம் செழிப்பாக இருந்த காலத்தில் தனது சந்தோஷங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டது. இப்போது, எனக்கு வாழ்வளித்துக் காப்பாற்றிய இந்த மரத்தின் வேதனைகளை நான் சந்தோஷமாக பகிர்ந்து கொள்ளுகிறேன். யார் என்ன சொன்னாலும் என் உயிருள்ளவரை இந்த மரத்தைப் பிரிந்து நான் செல்லமாட்டேன்…” என்றது.

கிளியின் இனிமையான பதிலைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த இந்திரன், “”உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார்.

கிளி சற்று யோசித்துவிட்டு, “”தேவேந்திரா! இங்கிருந்து காட்டுக்குப் போயிவிட்ட என் சகோதர பறவைகளை எல்லாம் மறுபடியும் நான் பார்க்க வேண்டும்…” என்றது.

“”உன் விருப்பம் நாளையே நிறைவேறும்…” என்று சொல்லிவிட்டு இந்திரன் மறைந்து விட்டார்.

இந்திரன் கொடுத்திருந்த வரத்தினால் கிளர்ச்சியடைந்திருந்த கிளிக்கு அன்றிரவே உறக்கம் வரவில்லை.

“நான் காட்டுக்குப் போகப் போவதில்லை. காட்டுக்குப் போன பறவைகளும் திரும்பி இந்த பட்ட மரத்துக்கு வரப்போவதில்லை. அப்புறம் நான் எப்படி அந்தப் பறவைகளை நாளைக்கு சந்திக்க முடியும்?’ என்று எண்ணிக் குழம்பியவண்ணம் கண் விழித்திருந்தது.

நள்ளிரவில் வானத்தில் மேகம் திரண்டது. இடி மின்னலுடன் மழை கொட்ட ஆரம்பித்தது. விடியும் வேளையில் மழை வெறித்து கீழ் வானம் வெளுத்தபோது, கிளிக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை.

பட்டுப் போயிருந்த மரம், பூக்களும் கனிகளும் குலுங்கிப் பழைய, பசுமையான மரமாக மாறியிருந்தது. வானத்தில் பறவைகள் கூட்டமாக வருவதைப் பார்த்துவிட்டு கிளிக்கு மேலும் ஆச்சரியம், மகிழ்ச்சி.

இரவில் காட்டுக்குள்ளிருந்த ஒரு பச்சை மரத்தை மின்னல் தாக்கியதால் அது பற்றி எரிந்த அதிசயத்தையும் , அதனால் காட்டுத் தீ வேகமாகப் பரவியதையும் அங்கிருந்து உயிர் தப்பி வந்தததையும் முதலில் வந்த புறா, கிளியிடம் மூச்சுவிடாமல் விவரித்து முடித்தது.

பின்னால் வந்த இன்னொரு பறவை “”பட்டுப்போன மரம் எப்படி பசுமையான மரமாக மாறிற்று..?” என்று ஆச்சரியத்துடன் கேட்டது.

“”அன்பு, பாசம், நன்றி, விசுவாசம், நம்பிக்கை, தியாகம் ஆகியவை பட்ட மரத்தையும் துளிர்க்க வைக்கும்..” என்றது அந்தப் பைங்கிளி.

– ஆகஸ்ட் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *