பஞ்ச பாண்டவர்கள் முக்கியமான ஆலோசனை ஒன்றில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது அதிதி ஒருவர் அங்கே வந்தார். தருமரைப் பார்த்து தர்மம் கேட்டார்.
ஆலோசனையில் மும்முரமாக இருந்த தருமர் முன்பின் யோசிக்காமல், “”நாளை வாருங்கள்… தருகிறேன்…” என்று கூறினார்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த தம்பி பீமன் சட்டென்று எழுந்தார்.
தனதருகில் இருந்த முரசைப் படபடவென்று அடித்தார்.
“”இப்போது ஏன் முரசைக் கொட்டுகிறாய்?” என்று தருமர் கேட்டார்.
“”அண்ணா, காலத்தை நீங்கள் வென்றுவிட்டீர்கள்… அந்த வெற்றியைக் கொண்டாடத்தான் முரசு கொட்டுகிறேன்” என்றார் பீமன்.
“”என்ன, காலத்தை நான் வென்றுவிட்டேனா? என்ன சொல்கிறாய் நீ..?” என்று கேட்டார் தருமர்.
“”அண்ணா, தங்களிடம் தர்மம் கேட்டுவந்த அதிதியிடம், “நாளை வா..’ என்று கூறினீர்களே..! அப்படியென்றால் நாளைவரை உயிருடன் இருப்போம் என்னும் உறுதி உங்கள் மனதில் உண்டாகிவிட்டதல்லவா! இது காலத்தை வென்றதற்கு அறிகுறியல்லவா?” என்றார் பீமன்.
தவறை உணர்ந்த தருமர், உடனே அந்த அதிதியை அழைத்து வரச் செய்து அவருக்கு வேண்டிய தானதருமங்களைச் செய்தார்.
எந்த நல்ல காரியத்தையும் நாள், நட்சத்திரம் பார்த்துத் தள்ளிப் போடுவதைக் காட்டிலும் அன்றே செய்து முடிப்பதுதான் நற்பலனைத் தரும்.
– யாழினிபர்வதம், சென்னை. (மார்ச் 2013)