காரணம் புரிந்தது…

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 8, 2013
பார்வையிட்டோர்: 10,335 
 
 

நூலகத்துக்குப் போயிருந்த தாத்தா வீடு திரும்பியபோது –

பாலுவின் முகத்தில் கோபம் கொப்பளித்துக் கொண்டிருந்தது. கண்கள் கலங்கியிருந்தன. பாலுவின் அம்மாவும் அப்பாவும் அவனுக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார்கள்.

“”என்ன நடந்தது?” கேட்டார் தாத்தா.

காரணம் புரிந்தது“”மாநில விளையாட்டு அணிக்கான தேர்விலே, பாலு எதிர்பார்த்தபடி அவனுக்கு இடம் கிடைக்கலே. அதற்காக வருந்துகிறான்…” என்றனர் பாலுவின் பெற்றோர்.

“”அப்படியா? காரணத்தைப் புரிந்துகொண்டால் சமாதானமாகி விடுவான்” என்றார் தாத்தா.

தாத்தா கூறியதைக் கேட்டதும். “”இதுல என்ன காரணம் இருக்கு? மாவட்ட அளவிலே நான்தான் முதலிடத்தில் இருக்கிறேன். நான்காவது இடத்திலே அவன் இருக்கிறான். இது எல்லோருக்கும் தெரியும்” என்ற பாலு, தொடர்ந்தான்…

“”நமக்குத்தான் நடக்க வேண்டிய எதுவும் நடப்பதில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்னால் அம்மாவும் கோடி வீட்டுச் சேகரின் அம்மாவும் யாரோ ஒருவர் அருள்வாக்கு சொல்றாருன்னு கேட்கப் போனாங்க. அவர் மச்சு வீடு கட்டுவீங்கன்னு சேகரின் அம்மாவுக்குச் சொன்னார். அம்மாவிடமும் விரைவில் மச்சு வீடு கட்டிக் குடி போவீங்கன்னு சொன்னார். அவர் சொல்லியபடிய் சேகரோடு குடும்பம் மச்சு வீடு கட்டிட்டாங்க. அம்மாவுக்குச் சொல்லியபடி நடக்கலையே..? நாம் இன்னும் இந்தக் குச்சி வீட்டுலேதானே இருக்கோம்…” என்றான் பாலு.

“”நீ நினைப்பதும் சரிதான். ஆனால் நடந்திடும் ஒவ்வொன்றுக்கும் காரணம் உண்டு. நீ இங்கேயே உட்கார்ந்து இருந்தால் இதே நினைப்பில் கோபம்தான் வரும். வா, வெளியில் போய் வருவோம்” என்று பாலுவின் கையைப் பிடித்தார் தாத்தா.

இருவரும் சாலையில் நடந்து கொண்டிருந்தார்கள்.

சாலையோரத்தில் ஒரு சிவன் கோவில் இருந்தது.

“”தாத்தா, இந்தக் கோவிலின் கோபுரம் அதிக உயரம்!” என்றான் பாலு.

“”உம்…” என்றார் தாத்தா.

அந்தக் கோவிலுக்கு அருகில் இருந்த அரச மரத்திலிருந்து பழுப்பானதும் காய்ந்து போனதுமான சில இலைகள் தரையில் விழுந்து கிடந்தன. பிய்ந்து போன சருகு ஒன்று தனியே கிடந்தது.

ஒரு பழுப்பு இலையை எடுத்த பாலு, “”இந்த இலை மருந்துக்கு ஆகும் என்பார்களே..?” என்றான்.

“”ஆமா, அரச இலைச் சருகை நெருப்பில் கருக்கி, தேங்காய் எண்ணெயில் குழப்பி தீ பட்ட புண்ணுக்குப் போட்டால் புண் ஆறிவிடும்” என்றார் தாத்தா.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது, எதிரில் சூறாவளிக் காற்று சுழன்று வந்து கொண்டிருந்தது.

“”தாத்தா! அந்தக் காற்றைப் பாருங்க…” என்றான் பாலு.

“”சூறாவளி, சுழன்று சுழன்று வீசிக் கொண்டே போகும். கீழே கிடக்கும் குப்பை, சிறுகுச்சி, வைக்கோல் போன்றவற்றைத் தூக்கி மேலே கொண்டு போகும்…”

“”கிழக்குப் பக்கமாக வீசிக் கொண்டிருந்த சூறாவளி, இப்போது வடக்குப் பக்கம் திரும்பிப் போகிறது…”

“”அது எப்போது, எந்தப் பக்கம் போகும் என்று சொல்ல முடியாது… அதோ, திரும்பி நம்மை நோக்கி வருகிறது பார்… விலகிக்கோ… நம் மீது புழுதியை வாரி வீசிவிடும்” என்று சொல்லிக் கொண்டே பாலுவின் கையைப் பிடித்துப் பின்னோக்கி இழுத்தார், தாத்தா.

அவர்கள் நின்று கொண்டிருக்கும் பக்கமாகச் சுழன்றுகொண்டே வந்த சூறாவளி, தனியே கிடந்த அந்தப் பிய்ந்து போனச் சருகின் பக்கமாகப் போய், அதையும் தூக்கிக் கொண்டு மேலெழுந்து சுழன்று கொண்டே போனது.

மேலே சென்ற சூறாவளி, கோவிலின் கோபுரத்தைக் கடந்து போய் விட்டது. சூறாவளியால் தூக்கிச் செல்லப்பட்ட அந்தச் சருகு, கோவிலின் கோபுரத்தில் ஒட்டியிருந்தது.

அதைப் பார்த்த பாலு, “”இங்கே கிடந்த காய்ந்த சருகு, கோபுரத்தின் உச்சிக்குப் போய்விட்டதே!” என்றான் வியப்புடன்.

“”வா, இன்னும் சற்று தூரம் போய் வரலாம்…” என்று அழைத்தார் தாத்தா.
சாலையோரத்தில் இருந்த ஒரு பனை மரத்தின் உச்சியில் தொங்கிய குலையில் பனம்பழங்கள் இருந்தன.

“”தாத்தா, பனம் பழம்…” என்றான் பாலு.

பனங்குலையைப் பார்த்த தாத்தா, “”அந்தக் குலையில் உள்ள பழங்களில் ஒன்று மூட்டு விட்டு, விழும் நிலையில் இருக்கிறது. இப்போதோ சற்றுப் பின்னோ அது விழுந்து விடும்…” என்றார் தாத்தா.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது, பறந்து வந்த காகம் ஒன்று அந்தப் பனம்பழத்தின் மீது உட்கார்ந்தது. உடனே தொப்பென்று கீழே விழுந்தது அந்தப் பழம். காகம் தாவி, அடுத்த பழத்தின் மீது போய் உட்கார்ந்து கொண்டது.

“”இப்போது சொல், அந்தக் காகம்தான் பனம்பழத்தைத் தள்ளி விட்டதா?” தாத்தா கேட்டார்.

“”இல்லையில்லை…காகம் வருவதற்கு முன்பே, அந்தப் பழம் விழக்கூடிய நிலையில்தான் இருந்தது. காகம் உட்காரவும் பனம்பழம் விழவும் சரியாக இருந்தது…. அவ்வளவுதான்” என்றான் பாலு.
“”அதாவது, அருள்வாக்கு சொன்னது போல…”

“”புரியலே, தாத்தா…”

“”உன் அம்மாவுக்கும் சேகரின் அம்மாவுக்கும் அருள்வாக்கு கூறியது ஒருவர்தான்…”

“”சேகரின் அம்மாவுக்குப் பலித்ததே!”

“”அது எப்படி நடந்தது என்பது உனக்குத் தெரியாது” என்ற தாத்தா,

“”சேகரின் அம்மா பிறந்த வீட்டுச் சொத்தாக நகரை ஒட்டி சிறிது நிலம் இருந்தது. அதை இருபது லட்ச ரூபாய்க்கு விற்றார்கள். சேகரின் அம்மாவின் சகோதரர்கள் இருவரும் நல்ல பணியில் உள்ளவர்களாகவும் பணவசதி உடையவர்களாகவும் இருப்பதால், அந்தப் பணத்தை அப்படியே கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த தங்கள் சகோதரிக்காகக் கொடுத்துவிட்டார்கள். அதனால்தான் அவர்களால் மச்சு வீடு கட்ட முடிந்தது. உன் அம்மாவுக்கு அப்படிப் பணம் வர வாய்ப்பில்லை. அதனால் மச்சு வீடு கட்ட முடியவில்லை…” என்றார் தாத்தா.

“”தாத்தா, காரணம் விளங்கிவிட்டது. திரும்பிப் போவோம்…”

“”மாநில அணித் தேர்வு..?”

“”அந்தச் சூறாவளிக் காற்றுதான் புரிய வைத்துவிட்டதே..!”

“”அருள் வாக்கு? மச்சு வீடு?”

“”பனம்பழம் விழுந்த கதைதான்…”என்றான் பாலு.

“”ஒருவர் திறமையாகவும் ஊக்கமாகவும் செயல்பட்டாலும் முடிவு என்பது அவரது காலத்தைப் பொறுத்ததாகவே அமையும். ஆகவே, நியாயம் நம் பக்கம் இருந்தும் நடக்க வேண்டியது நடந்திடவில்லையே என்று கலங்கி இருந்துவிடக் கூடாது. ஆற்றில் நீர் வரலாம்; வற்றிப் போகலாம். ஆனால், ஆறு அதன் போக்கில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதுபோல காலம் வரலாம், போகலாம். அதையே எண்ணிக் கொண்டிருக்காமல், நமது திறமையில் நம்பிக்கை வைத்து, முயற்சியைக் கைவிடாமல் தொடர வேண்டும்…” என்றார் தாத்தா.
“”புரிந்து கொண்டேன் தாத்தா…” குழப்பம் நீங்கி, தெளிந்த மனத்துடன் நடந்தான் பாலு.

– புலேந்திரன் (நவம்பர் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *