(1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அயர்லாந்து நாட்டிலே, லெய்த்திரிம் தாலுகாவில், ஒரு கிராமத்தில் செல்வம் மிகுந்த குடியானவன் ஒருவன் இருந்தான். அவனுடைய மகன் காத்தான் என்பவன் இளைஞன்; உறுதியான உடல் படைத்தவன்; எப்பொழுதும் உற்சாகமாயிருக்க விரும்புபவன். அவன் கேட்ட பொழுதெல்லாம் தந்தை பணம் கொடுத்து வந்தான். அவனுக்கு வயது ஆக ஆக, அவன் வேலை செய்வதில் பிரியமில்லாமல், வேடிக்கையாகச் சுற்றித் திரிவதிலேயே காலம் கழித்து வந்தான். தந்தைக்கு அவன் ஒரே மகனாயிருந்ததால், அவன் பிரியம் போல் நடப்பதைத் தடுப்பார் எவருமிலர். பொற்காசுகளை அவன் தண்ணீர் போல் அள்ளிச் செலவிட்டு வந்தான். வீட்டிலே அவனைக் காண்பது அரிது; சுற்றிப் பத்து மைல் எல்லைக்குள் ஏதாவது சந்தை, பந்தய ஆட்டம், பொதுக்கூட்டம் முதலிய எது நடந்தாலும் அவனை அங்கே நிச்சயமாய்க் காணலாம். இரவு நேரங்களில் அவன் வீதிகளிலே சுற்றிக்கொண் டிருப்பான். பெண்களைக் கண்டுவிட்டால், அவர்கள் பின்னாலேயே ஓடுவான். அவன் அழகனாயும் இருந்ததால், பல பெண்கள் அவனைக் காதலித்தனர்.
அடக்குவாரில்லாததால் அவன் திமிர்கொண்டு திரிந்துகொண்டேயிருந்தான். இரவிலும் பகலிலும் அவன் தந்தையின் வீட்டில் தங்குவதேயில்லை. வீதிதோறும், வீடுதோறும் திரிந்துகொண்டிருந்த அவனைப் பார்த்த வர்கள், ‘தந்தை மண்டையைப் போட்ட பிறகு, அவனுடைய நிலங்களையெல்லாம் இவன் ஒரே ஆண்டில் காலி செய்து விடுவான். அவை ஒரு வருடங்கூட நிலைத் திருக்குமோ என்னவோ!’ என்று பேசிக்கொள்வார்கள்.
நாளடைவில் சீட்டாட்டம், சூதாட்டம், மதுபானம் முதலியவைகளில் அவன் அதிகமாக ஈடுபடலானான். தந்தையோ அவனைக் கண்டிக்கவுமில்லை, தண்டிக்கவு மில்லை . ஒரு நாள் ஒரு குடியானவன் மகளிடம் காத்தான் தகாத முறையில் நடந்ததாக அவன் தந்தை கேள்விப்பட்டு, அவனைத் தன் முன்பு அழைத்துப் பேசலானான் : “அப்பா மகனே! எப்பொழுதும் உன் கை நிறையச் செலவுக்குப் பணம் கொடுத்து வருகிறேன். இதுவரை உன்னை எதிலும் நான் தடை செய்யவில்லை. ஆனால், இப்பொழுது நான் கேள்விப்பட்ட செய்தியிலிருந்து எனக்கு மிகவும் அவமான மாயிருக்கிறது. நீ எந்தப் பெண்ணிடம் முறை தவறி நடந்தாயோ, அவளை உடனே நீயே திருமணம் செய்து கொள்ளவேண்டும். அப்படிச் செய்துகொண்டால்தான் என் நிலங்களையும், நாம் குடியிருக்கும் இந்த வீட்டையும் உன் பெயரில் எழுதி வைப்பேன். இல்லாவிட்டால் இவைகளையெல்லாம் என் தம்பி மகனுக்குக் கொடுத்து விடப்போகிறேன். நாளைக் காலையில் இதுபற்றி உன் கருத்தை என்னிடம் தெரிவிக்கவேண்டும்!”
“எவ்வளவோ நல்ல பிள்ளையாகிய என்னிடம் இப்படிப் பேசுகிறீர்களே! அந்தப் பெண்ணை நான் மணந்துகொள்ள மாட்டேனென்று உங்களிடம் எவன் சொன்னான்?” என்றான், மைந்தன்.
தந்தை உள்ளே சென்றுவிட்டார். அவர் பிடிவாத முள்ளவர் என்பதும், சொன்ன சொல்லை மாற்றமாட்டார் என்பதும் இளைஞனுக்குத் தெரியும். அவனுக்கு என்ன செய்வதென்று விளங்கவில்லை. அவனுக்கு அந்தப் பெண் மேரியிடம் இயற்கையிலேயே காதலுண்டு. இப்பொழுதோ, பின்னரோ, அவளை மணந்துகொள்வதில் அவனுக்கு ஆட்சேபமில்லை. ஆனால், அவனுடைய தந்தை இதற்காகக் கடிந்துகொண்டு கட்டளையிட வேண்டுமா? அவளை மணந்துகொள்ளாவிட்டால் சொத்தில் உரிமை இல்லை யென்று பயமுறுத்த வேண்டுமா? இவ்வாறு எண்ணமிட்டுக் கொண்டு, அவன் மேலும் சிறிது காலம் சீட்டு, சூது, குடி ஆகியவற்றிலேயே பொழுதுபோக்க விரும்பினான். ‘நானாகவே மேரியை மகிழ்ச்சியுடன் மணந்திருப்பேன் ஆனால், மூடத்தந்தை கட்டளையிட்டதால், திருமணத்தைப் பற்றிப் பின்னால்தான் கவனிக்கவேண்டும்!’ என்று அவன் தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.
அவன் மனம் குழப்பமடைந்திருந்தது. உதிரமும் கொதித்தது. தந்தை சொல்லுக்குக் கட்டுப்படுவதா, அதை மீறுவதா என்ற இரண்டனுள் ஒன்றை அவனால் முடிவு செய்ய இயலவில்லை. எனவே, அவன் குளிர்ந்த காற்று வீசும் இடத்திலே சிறிது நேரம் நடந்து கொண்டிருக்க எண்ணிச் சாலை வழியாகச் சென்றான். அவன் கால்கள் வேகமாக நடக்கத் தொடங்கின. அந்த வேகத்தினால் மூளையின் கொதிப்பும் சற்றே குறைவது போல் அவனுக்குத் தோன்றிற்று!. எனவே, அவன் விடாமல் நடந்துகொண்டே இருந்தான். வானத்தில் வளர்மதியின் நிலவு வான் வழி காட்டிக்கொண்டிருந்தது. பாவாடை சுற்றிலும் ஒரே அமைதி. அவன் தன்னந்தனியே நடந்து வெகு தூரம் சென்றுவிட்டான். அவன் புறப்பட்டு மூன்று மணி நேரம் கழிந்துவிட்டது. திடீரென்று அவன், அடடா! என்னையே மறந்து நெடுந்தூரம் வந்துவிட்டேனே! மணி பன்னிரண்டு அகியிருக்கும்! என்று சொல்லிக்கொண்டான்.
அவன் சொல்லி வாய் மூடியதும், பல குரல்கள் ஒலிப்பதையும், அநேகர் நடந்து வரும் காலோசையையம் அவன் கேட்டான் “இந்த ஏகாந்தமான் சாலையில் இந்த நடுநிசியில் எவர்கள் இப்படி வருகிறார்கள். என்று அவன் எண்ணமிட்டான.
அவனுக்கு எதிர்ப்பக்கத்தில் பலர் கூடிப் பேசிக் கொண்டு வருவதை அவன் உணர்ந்தான் அவர்கள் பேசிய மொழி ஐரிஷ் மொழியமில்லை, ஆங்கிலமுமில்லை. ஒருவேளை ஃபிரெஞ்சு மொழியாயிருக்கலாமென்றால், அதுவுமில்லை. அவன் முன்னால் சில அடிகள் எடுத்து வைத்து நகர்ந்தான. நிலவொளியில் குள்ளமான பல உருவங்கள் தென்பட்டன. அவை அதிகக் கனமான எதையோ சுமந்து வந்து கொண்டிருந்தன.
‘ஓ, எதோ கொலைதான் நடந்திருக்கிறது! என்னையும் விடமாட்டார்கள்! இவர்கள் நல்லவர்களல்லர் ! எதோ துர்தேவதைகளாகவே இருக்க வேண்டும்!’ என்று அவன் முணுமுணுத்துச்சொன்டான் அவன் தலையிலிருந்த உரோமங்களில் ஒவ்வொன்றும் எழுத்தாணிபோல் தட்ட மாக எழுந்து நின்றன. அவன் உடலினுள்ளே எலும்புகள் யாவும் குலுங்கின அவர்கள் வேகமாக அவனை நோக்கியே வந்துகொண்டிருந்தார்கள்.
அவன் மீண்டும் அவர்களை உற்றுப்பார்த்தான்; சுமார் இருபது பேர் இருந்தனர். எல்லோரும் குள்ளமான மனிதர்கள்; அவர்களுள் மூன்று அல்லது மூன்றரை அடிக்குமேல் உயா முள்ளவரே இலர். சிலர் சாம்பல் நிறமாகவும், மிகவும் வயதானவர்களாகவும் காணப் பட்டனர். அவர்கள் எதைத் தூக்கி வந்தார்கள் என்பது தெரியவில்லை. அவன் மீண்டும் உற்று நோக்கினான். அதற்குள் அவர்கள் அனைவரும் அவனைச் சுற்றி வளையமிட்டுக்கொண்டனர். அவர்கள் சுமந்துகொண்டு வந்த பொருளைச் சாலையிலே போட்டார்கள். அவன் மறுபடி அதைப் பார்த்து, அது ஒரு பிணம் என்று தெரிந்து கொண்டான்.
கிழட்டுக் குள்ளன் ஒருவன் அவனிடம் நெருங்கி வந்து, “என்ன, காத்தான்! உன்னை நாங்கள் சந்தித்தது பெரிய அதிர்ஷ்ட மல்லவா?” என்று கீச்சுக் குரலில் கேட்டான். அந்தக் கணத்திலேயே காத்தானுடைய உடல் சில்லிட்டுப் போயிற்று, நரம்புகளில் உதிரம் உறைந்து போய்விட்டது.
ஏழைக் காத்தான் வாயைத் திறக்க முடியாமல் திணறினான்; அவன் வாயும் இறுக்கமாக மூடியிருந்தது.
ஆகவே, அவன் பதில் சொல்ல முடியவில்லை .
“ஏ காத்தான்! நாங்கள் சரியான சமயத்தில்தானே உன்னைச் சந்தித்திருக்கிறோம்?” என்று கிழவன் மீண்டும் கேட்டான்.
காத்தான் வாயைத் திறக்கவில்லை.
“என்ன, காத்தான்! மூன்றாவது தடவையாகக் கேட்கிறேன் : நாங்கள் சரியான சமயத்தில் உன்னைச் சந்தித்தது அதிர்ஷ்டந்தானே?”
காத்தான் இதற்கு என்ன மறுமொழி சொல்வதென்று தெரியாமல் திகைத்தான். மேலும், அவன் நாக்கு வாயின் மேல் முகட்டில் ஒட்டிக்கொண்டு அசையவே மறுத்தது.
குள்ளக்கிழவன் மகிழ்ச்சியடைந்து தன் நண்பர்களைப் பார்த்து, “காத்தானோ பதிலே பேசவில்லை. இனி நாம் அவனை நம் விருப்பம் போல் பயன்படுத்திக்கொள்ளலாம்!” என்று சொன்னான். அவன் காத்தானை நோக்கி, “காத்தான், நீ தீயொழுக்கமுள்ளவன். உன்னை நாங்கள் இப்பொழுது அடிமையாக்கிக்கொள்வோம். உன்னால் எங்களை எதிர்த்து நிற்கவும் முடியாது! இதோ இந்தப் பிணத்தைத் தூக்கு!” என்றான்.
காத்தான் நடுங்கிப்போயிருந்த நிலையில், “முடியாது!” என்று ஒரே வார்த்தை கூறினான். அவனுடைய பழைய செருக்கும் உறுதியும் அந்த ஒரு சொல்லில் வெளிப்பட்டன.
கிழவன் குறும்புத்தனமாகச் சிரித்துக்கொண்டே, “நம்முடைய காத்தான் பிணம் தூக்குவானா? அவன் தூக்கவே மாட்டான்! அவனைத் தூக்கவையுங்கள்!” என்று கூறினான்.
உடனே குள்ளர்கள் அனைவரும் சிரித்து, ஒருவருக் கொருவர் பேசிக்கொண்டு, காத்தானை நெருங்கி வந்தனர். அவன் ஓட முயன்றான். ஆனால், அவர்கள் சுற்றி நின்று தடுத்தார்கள். அவன் ஓடும்போதே ஒரு குள்ளன், காலை நீட்டி அவன் கால்களைத் தட்டிவிட்டான். காத்தான் தரையிலே குப்புற விழுந்தான். உடனே சில குள்ளர்கள் அவனுடைய கைகளைப் பிடித்துக்கொண்டார்கள். சிலர், கால்களைப் பற்றி அமுக்கிக்கொண்டார்கள். அவனால் எழுந்திருக்க முடியவில்லை; உடலை அசைக்கவே முடிய வில்லை. ஏழெட்டுக் குள்ளர்கள் சாலையிலே கிடந்த பிணத்தைத் தூக்கி அவன் முதுகிலே சார்த்தினார்கள். பிணத்தின் மார்பு அவனுடைய முதுகுடன் சேரவும், அதன் கைகள் இரண்டும் அவனுடைய கழுத்தைச் சுற்றிப் பின்னிக் கொள்ளவும் செய்துவிட்டு, அவர்கள் சற்றுப் பின்னால் நகர்ந்து நின்று, அவனை எழுந்திருக்கும்படி செய்தார்கள். அவன், வாயிலிருந்து நுரை கக்கிக்கொண்டே எழுந் திருந்தான். அவன் ஒரே மூச்சில் முதுகிலிருந்த பிணத்தை உலுக்கிக் கீழே தள்ளிவிட முயன்றான். ஆனால், பிணம் அவனை விடவில்லை . அதன் கைகள் அவன் கழுத்தை இறுகப் பிணித்திருந்தன. அதன் கால்கள் அவன் இடுப்பைச் சுற்றி அழுத்திக்கொண்டிருந்தன. இந்த நிலையில் அவன் ஆச்சரியமடைந்து பயந்து நடுங்கினான். அவன் எவ்வளவு பலமாக முயன்றும் அந்தச் சடலத்தை அசைக்க முடியவில்லை. அது அவன் முதுகுடன் ஒட்டிக்கொண் டிருந்தது. இனிமேல் தனக்குக் கதியில்லையென்றும், இத்துடன் தன் வாழ்வு முடிந்துவிடுமென்றும் அவன் அஞ்சினான். பிறகு, என்னுடைய தீய வாழ்க்கையே இந்த நல்ல தேவதைகளை என்னைப் பழி வாங்கும்படி செய்திருக் கிறது. ஆண்டவன்மீது சத்தியமாகச் சொல்கிறேன், மேரி அன்னை சத்தியமாகவும், பீட்டர், பவுல், பாட்ரிக், பிரிட்ஜெட் முதலிய ஞான முனிவர்கள் சத்தியமாகவும் சொல்கிறேன் – இனி நான் என் வாழ்நாள் முழுதும் நேர்மையாக வாழ்கிறேன். இந்த ஆபத்திலிருந்து நான் தப்பிவிட்டால், நான் மேரியையே மணந்துகொள்கிறேன்!’ என்று அவன் சொல்லிக்கொண்டான்.
குள்ளக் கிழவன் மீண்டும் அவனண்டையில் வந்து, “நான் தூக்கச் சொன்னவுடன் நீ பிணத்தைத் தூக்கவில்லை. ஆனால், இப்பொழுது நீதான் அதைச் சுமந்து நிற்கிறாய் இனி அதைக் கொண்டுபோய்ப் புதைக்க வேண்டும்; அதையும் நீயாகச் செய்ய மாட்டாயல்லவா? அதையும் நீ செய்யும்படி நாங்களே செய்ய வேண்டுமோ?” என்று கேட்டான்.
“மேன்மை தங்கியவரே, உங்களுக்காக என்னாலியன்ற வற்றையெல்லாம் செய்கிறேன் !” என்றான், காத்தான். அவனுக்குப் புத்தி தெளிந்து விட்டது. பயத்தினால் மரியாதையுள்ள சொற்கள் தாமாகவே அவன் வாயிலிருந்து வெளிவந்துவிட்டன.
மீண்டும் கிழவன் எள்ளி நகைத்தான். “இப்பொழுது அமைதியாக அடங்கிவிட்டாய். போகப்போக இன்னும் அமைதியடைந்து விடுவாய்! காத்தான், இனி நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டு, அதன்படி செய்ய வேண்டும்! இல்லாவிட்டால், பின்னால் நீ மிகவும் வருந்த வேண்டியிருக்கும். நீ இந்தப் பிணத்தைத் தூக்கிக்கொண்டு முதலில் டீம்போல்டேமஸ் என்ற இடத்திலுள்ள இடுகாட் டிற்குப் போய், அங்கே தக்க இடம் பார்த்து இதைப் புதைக்க வேண்டும். குழி தோண்டி எடுத்த மண்ணில் மிஞ்சியதைக் கவனமாக வெளியே தூரத்தில் கொண்டு போய் நீயே கொட்டவேண்டும்!” என்று அவன் உத்தர விட்டான். அத்துடன், அவன் முதலிலே சொன்ன இடு காட்டில் இடம் கிடைக்கவில்லையானால், வரிசையாக வேறு நான்கு ஊர்களின் பெயரைச் சொல்லி, அந்த இடங்களுள் ஒன்றில் புதைக்க வேண்டுமென்றும் தெரிவித்தான்.
அவனுடைய பேச்சு முடிந்தவுடன் எல்லாக் குள்ளர்களும் பலமாகச் சிரித்துக் கை கொட்டி ஆரவாரம் செய்தார்கள்; ‘ஹோ! ஹோ! ஹூயீ! ஹூயீ! என்று ஊளையிட்டார்கள். பிறகு, அவர்கள் அனைவரும் சேர்ந்து, “விடிவதற்கு இன்னும் எட்டு மணி நேரம் இருக்கிறது, அதற்குள் நீ இந்த மனித உடலைப் புதைத்துவிட வேண்டும், தவறினால் நீ பிழைக்கமாட்டாய்!” என்று எச்சரிக்கை செய்தார்கள். அத்துடன் அவர்கள் பின்னால் இருந்து கொண்டு அவனைக் கைகளால் குத்தியும், கால்களால் பற்றியும், “ஒடு, ஓடு!” என்று விரட்டினார்கள்.
செக்கின் உலக்கை போல் கனமாயிருந்த சடலத்தை தாங்க முடியாமற் சுமந்துகொண்டே, அவர்கள் காட்டிய திசையை நோக்கிக் காத்தான் நடக்கலானான். அவனுக்கு அந்த ஊர்களும் தெரியாது, பாதையும் தெரியாது. எப்படியோ நிலவின் ஒளியைத் துணைக்கொண்டு அவன் நடந்து சென்றான். சந்திரனை மேகங்கள் மறைத்தபொழுது அவன் இருளிலே சில இடங்களில் தடுக்கி விழுந்து காயமடைந்தான். ஆனால், கீழே விழுந்த அவன், உடனே எழுந்திருந்து மீண்டும் நடக்கத் தொடங்கினான். அவனுக்குப் பின்னால் சிறிது தூரத்தில் குள்ளர்களும் தொடர்ந்து வந்துகொண்டிருந்தனர். வழியெல்லாம் அவர்களுடைய கூத்தும் கும்மாளமும் பேச்சும் பிதற்றலும் எல்லைமீறியிருந்தன.
நெடுந்தூரம் நடந்து காத்தான் கடைசியாக டீம்போல் டெமஸ் என்ற இடத்திலிருந்த மாதா கோயிலை அடைந்தான். அங்கே கோயிலுக்குப் பின்புறமுள்ள இடு காட்டிற்குப் போனான். வழியில் ஒரு திட்டிக் கதவு இருந்தது. அது பூட்டி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு, அவன் சிறிது திகைத்து நின்றான். அப்பொழுது “போ, சாவியை எடுத்து வா! கோயிலுக்குள் போய்ச் சாவியை எடுத்து வா !” என்று ஒரு குரல் ஒலித்தது. அவன் வியப்படைந்தான், சுற்றிச் சுற்றிப் பார்த்தான். ஒருவரையும் காணவில்லை. அவன் மெய் நடுங்கி, நெற்றியிலிருந்து வியர்வை வழிந்தது. “இது என்னது? என்னிடம் பேசியவர் யார்?” என்று அவன் கூவினான்.
“நான்தான், பிணம் பேசினேன்!” என்று குரல் ஒலித்தது.
“உன்னால் பேசவும் முடியுமா?” என்று கேட்டான், காத்தான்.
“சில சமயங்களில்-” என்றது, சடலம்.
“பிணத்திலும் பிணம், பேசும் பிணமாக வந்து அமைந்ததே!” என்று அவன் மேலும் நடுக்கமடைந்து, சாவியை எடுத்துவந்து, பூட்டைத் திறந்து, வேகமாக உள்ளே போனான். அங்கிருந்த மண்வெட்டி ஒன்றனால் இரண்டு மூன்று இடங்களைத் தோண்டிப் பார்த்தான். அவன் தோண்டிய இடங்களிலிருந்து வேறு பிணங்கள் எழுந்து விட்டன! அன்றிரவு அவன் கண்ட காட்சிகளுள் அவையே மிகவும் கோரமானவை. அவன் குழிகளில் மீண்டும் மண்ணைக் கொட்டி மூடிவிட்டு இடுகாட்டை விட்டே வெளியேறினான்.
“அடுத்த ஊர் கார்ரிக்” என்றது, பிரேதம்.
காத்தான் தன் தலைவிதியை நொந்துகொண்டே நடந்தான். கிழவன் சொன்ன கார்ரிக் முதலிய மூன்று ஊர்களிலும் இடம் கிடைக்கவில்லை. கால்கள் தள்ளாடிக் கொண்டே ஐந்தாவது ஊராகிய கில்-பிரீடியாவை அடைந்தான், காத்தான்.
அங்கே இடுகாட்டில் புதுக் குழி ஒன்று தயாராகவே யிருந்தது. அதனுள்ளே ஒரு சவப்பெட்டியும் இருந்தது. காத்தான் அப்பெட்டியின் மூடியைக் கையிலே எடுத்தான். பெட்டி காலியாகக் காணப்பட்டது. அந்தக் கணத்திலேயே அவன் முதுகிலிருந்த பிணம் துள்ளியெழுந்து அப் பெட்டிக்குள் விழுந்தது. உடனே அவன் பெட்டியை மூடிக் குழியில் மண்ணைக் கொட்டி நிரப்பிவிட்டு வெளி யேறினான்.
அப்பொழுது கீழ்வானத்திலே சூரியன் உதயமாகிக் கொண்டிருந்தான். காத்தான் சாலைக்குச் சென்று அருகில் ஏதாவது வீடு தெரிகிறதா என்று பார்த்தான். கடைசியாக ஒரு சத்திரத்தைக் கண்டுபிடித்து, அதனுள்ளே சென்று, நீட்டி நிமிர்ந்து படுத்துவிட்டான். இரவுவரை ஒரே தூக்கந்தான். இரவில் விழித்ததும், சிறிது உணவெடுத்துக் கொண்டு, மீண்டும் துயில் கொண்டுவிட்டான். மறுநாள் காலையில் எழுந்தவுடன், ஒரு குதிரையை வாடகைக்கு வாங்கிக்கொண்டு, அவன் அதில் ஏறி வீட்டுக்குத் திரும்பிச் சென்றான். அவன் பிரயாணம் செய்த தூரம் இருபத்தாறு மைல். ஒரு நாளைக்கு முன்னால் இந்த இருபத்தாறு மைல் தூரமும் அவன் முதுகிலே பிணத்தைத் தாங்கிக்கொண்டு எட்டு மணி நேரத்தில் நடந்திருப்பதை அப்பொழுதுதான் அவன் உணர்ந்தான்.
வீட்டிலே அவன் மற்றவர்களிடம் எதுவும் சொல்ல வில்லை; தன் தந்தையிடத்தில் மட்டும் நடந்ததைத் தெரிவித்தான்.
அன்று முதல் அவன் திருந்தி விட்டான், புதிய மனிதனாக மாறிவிட்டான். கள், சீட்டு, சூது முதலியவற்றின் பக்கமே அவன் தலைவைத்துப் படுப்பதில்லை. இரவில் நேரம் கழித்து அவன் வெளியே செல்வதுமில்லை.
இரண்டு வாரங்களுக்குப் பின்பு, அவன் முன்பு காதலித்திருந்த மேரியைக் கடிமணம் புரிந்துகொண்டான். அவன் அடைந்த ஆனந்தத்தைப் போல் நாம் எல்லோரும் அடைவோமாக!
– இறுமாப்புள்ள இளவரசி (அயர்லாந்து நாட்டுக்கு கதைகள்), முதற் பதிப்பு: 14-11-1979 (குழந்தைகள் தின வெளியீடு), பழனியப்பா பிரதர்ஸ், சென்னை.