காணாமல் போன பூனைக்குட்டி!

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 10,550 
 
 

பள்ளியிலிருந்து வீட்டிற்கு கலைச்செல்வி உற்சாகமாக, துள்ளல் நடையில் வந்தாள். வழக்கமாக திண்ணையில் உட்கார்ந்திருக்கும் தாத்தாவிடம் பேசி விட்டுத்தான் செல்வாள். அன்று அவரைக் கண்டுகொள்ளவில்லை.

“”அம்மா, என்ன கொண்டு வந்திருக்கேன், பாரேன்” என்று அம்மாவிடம் உரத்த குரலில் ஒலிபரப்பினாள்.

காணாமல் போன பூனைக்குட்டி“”என்ன கலை, அப்டி என்ன அதிசயமா கொண்டு வந்திருக்க?” என்று கேட்டுக்கொண்டே சமையற்கட்டிலிருந்து அம்மா வெளிப்பட்டாள்.

கலை கையில் சின்னஞ்சிறு பூனைக் குட்டி. பிறந்து சிள நாட்கள்தான் ஆகியிருக்கும். மஞ்சளும், வெள்ளையும் கலந்த பழுப்பு நிறம். சிரமப்பட்டுத் தலையைத் தூக்கிப் பார்த்தது. மெல்லிய குரலில் “மிஞ்ஞா’ என்று குரல் கொடுத்து தன்னை அறிமுகம் செய்துகொண்டது. மிக அழகாக உயிருள்ள பொம்மையாகக் காட்சி தந்தது.

“”ஏய் கலை, இதை எங்கிருந்து பிடிச்சிக்கிட்டு வந்தே? பூனைக்குட்டியை வீட்டுக்குள்ளே கொண்டு வரக் கூடாது. எங்கே எடுத்தியோ அங்கே கொண்டு போட்டுட்டு வா” என்று அம்மா அதட்டினாள். அம்மாவுக்குப் பூனை என்றால் அலர்ஜி; பிடிக்காது.

“”அம்மா, இதை நான் தெருவிலே கிடந்து தூக்கிட்டு வரலை. எங்கூடப் படிக்கிற கனி வீட்டிலிருந்து கேட்டு வாங்கிட்டு வந்தேன். அவுங்க வீட்டுப் பூனை நாலு குட்டி போட்டிருக்கு. அதிலே ஒண்ணு இது. ஆசையா வளக்கனும்னு கொண்டுட்டு வந்திருக்கேன். பிளீஸ்மா” என்று கெஞ்சினாள் கலை.

கலை ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள். நல்ல கெட்டிக்காரப் பெண். அம்மா, அப்பாவின் செல்லப் பெண். அவளுக்கு ஒரு அண்ணன்; கண்ணன். அவன் எட்டாம் வகுப்பு படிக்கிறான். விளையாட்டுப் பிரியன். தாத்தா அவளுக்கு நிறையக் கதைகள் சொல்வார். அப்பாதான் கொஞ்சம் கட்டுப்பாடு. சின்னக்குடும்பம். எல்லோரும் பாசக்காரர்கள்.

“”கலை, சொன்னாக் கேளு. பூனையை வளர்க்கிறது ரொம்பக் கஷ்டம். ஒரு குழந்தையைக் கூட வளர்த்திடலாம். ஆனால் பூனை அப்படியில்லை. வீட்டுக்குள்ளே எங்கேயும் போகும். சமயத்திலேயே வீட்டை நாறடிச்சிடும். சொன்னாக் கேள். கொண்டுபோய் விட்டுட்டு வா” என்று அம்மா அதட்டினாள்.

கலை முன்னறையில் என்ன செய்வதென்று தெரியாமல் நின்று கொண்டிருந்தாள். அவளது கைகளுக்குள் பூனைக்குட்டி பதுங்கிக் கொண்டிருந்தது. அதன் மென்மையான பட்டு மேனியை கலையின் விரல்கள் வருடிக் கொடுத்தன.

அப்பொழுது அப்பா வீட்டிற்குள் வந்தார். கலையையும் அவள் கையிலிருந்த பூனைக்குட்டியையும் பார்த்தார். “அப்பா’ என்று கலை தனது வேண்டுகோளை வைக்கும் முன்பு, அம்மா படபடவென்று பொரிந்து தள்ளினாள். பூனைக்குட்டியை வளர்க்கக் கூடாதென்று அடித்துக் கூறினாள். அப்பா பேசாமல் வீட்டிற்குள் சென்று விட்டார்.

அந்த நேரத்தில் கண்ணன் வந்தான். அம்மா “”டேய் கண்ணா. இந்தப் பூனைக் குட்டியைக் கொண்டுபோய் கலைகூடப் படிக்கிற கனி வீட்டிலே விட்டுட்டு வா” என்றாள்.

கலை, “”அண்ணா, அம்மாகிட்ட பூனையை வளக்கலாம்னு சொல்லு. எனக்கு இதை வளர்க்க ரொம்ப ஆசை” என்று தனது விருப்பத்தைக் கூறி, அண்ணனின் ஆதரவைக் கண்களால் வேண்டினாள்.

அந்தப் பூனைக் குட்டியை உற்றுக் கவனித்த கண்ணன், அது அழகாய் இருப்பதைக் கண்டான். தனது தங்கையைப் பார்க்கப் பாவமாக இருந்தது. அவனிடம் இயல்பாக இருக்கும் முரட்டுத்தனத்தில் மாறுதல். “”அம்மா, கலை இவ்வளவு பிரியமா பூனைக் குட்டியைத் தூக்கிட்டு வந்திருக்கா, வளத்துட்டுப் போறாம்மா” என்று தங்கைக்காகப் பரிந்து பேசினான்.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த தாத்தா திண்ணையிலிருந்து எழுந்து வந்தார். தனது மருமகளிடம், “”கோதை, நீ சொல்றபடி வீட்டுக்குள்ளே கொண்டு வராமல் திண்ணையிலே ஓர் அட்டைப் பெட்டியிலே வைச்சு கலை வளர்க்கட்டும். வீட்டுக்குள்ளே வராமல் நான் பார்த்துக்கிறேன்” என்றார்.

கண்ணனும் தாத்தாவும் இப்படி தனக்கு ஆதரவாகப் பேசுவார்களென்று கலை எதிர்பார்க்கவில்லை. நன்றியோடு இருவரையும் பார்த்தாள். இப்பொழுது அம்மாவின் போக்கிலும் மாற்றம்.

“”எப்படியும் போங்க. இந்தப் பூனைக்குட்டி வீட்டுக்குள்ளே மட்டும் வரக்கூடாது. வந்துச்சின்னா அவ்வளவுதான். தூக்கிக்கொண்டுபோய் தெருவிலே போட்டுருவேன்” என்று சொல்லிவிட்டுத் தனது வேலையைக் கவனிக்க அடுப்படிக்குப் போய்விட்டாள்.

தாத்தா வீட்டிலிருந்து ஓர் அகலமான அட்டைப் பெட்டியைக் கொண்டுவந்து திண்ணையில் வைத்தார். கலை பூனைக்குட்டியை அந்தப் பெட்டிக்குள் விட்டாள். அது மெதுவாக நடை பழகியது. தாத்தா கூறியபடி ஒரு கிண்ணத்தில் பால் கொண்டு வைத்தாள். அதற்கு நல்ல பசி. உறிஞ்சிக் குடித்தது. பெட்டியின் மூலையில் படுத்துக் கொண்டது.

கலை படிக்கிற நேரம், பள்ளிக்கூடம் போகிற நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் பூனைக்குட்டி அருகிலேயே இருப்பாள். பூனைக்குட்டியும் அவளிடம் ஒட்டிக்கொண்டது. நன்றாக நடக்க ஆரம்பித்தது. அவளைச் சுற்றிச் சுற்றி வந்தது.

அது வீட்டிற்குள் போகாமல் தாத்தா பார்த்துக் கொள்வார். தாழ்வாரத்திலும், முன் பக்கத்திலும் சுதந்திரமாகச் சுற்றி வரும்; விளையாடும். சுற்றுச் சுவர் இருந்ததால் வீட்டிற்கு வெளியில் போகாது. காம்பவுண்டு கதவு எப்பொழுதும் பூட்டியிருக்கும்.

பள்ளிக்கூடத்திலிருந்து கலை வருவதைப் பார்த்தால் மெல்லிசையாக மிஞ்ஞா என்று குரல் கொடுக்கும். எங்கிருந்தாலும் அவள் குரல் கேட்டால் ஓடி வந்துவிடும். அதற்கு அவள் கண்மணி என்று பெயர் வைத்தாள். அவள் அந்தப் பெயர் சொல்லிக் கூப்பிட்டால் திரும்பிப் பார்க்கும் அளவிற்குப் பழகிவிட்டது.

கண்ணனுக்கும் அது பிடித்துவிட்டது. அவனும் சில நேரம் அதோடு விளையாடுவான். தாத்தாதான் அதன் பாதுகாவலர். அப்பா, அவ்வப்போது, “”என்ன கலை, உன் செல்லக்குட்டி எப்படி இருக்கு?” என்று கேட்பார். அம்மாதான் அந்தப் பூனைக்குட்டியைக் கண்டு கொள்வதில்லை. கலைக்கு அது கொஞ்சம் வருத்தம்.

பூனைக்குட்டி ஓரளவு பழகிவிட்டது. ஆதலால், வீட்டின் தாழ்வாரம், முன் பக்கம், வீட்டுத் தோட்டம் என்று சுற்றி வரும். இடையில் தாத்தா அதற்குக் கிண்ணத்தில் பால் ஊற்றி வைப்பார். குடித்து விட்டுச் சுற்றி வரும். கவலை இல்லாமல் கலை பள்ளி சென்று வருவாள்.

அன்று வெள்ளிக்கிழமை. தாத்தா காலையிலேயே கிளம்பி அவரது நண்பரின் வீட்டு நிகழ்ச்சி ஒன்றிற்காகப் பக்கத்து ஊருக்குப் போய்விட்டார். கலைக்குப் பூனைக்குட்டியைத் தனியே விட்டுச் செல்வதைப் போன்ற உணர்வு. வேறு என்ன செய்ய? அதற்கு “டாடா’ சொல்லிவிட்டு கலை பள்ளிக்குப் புறப்பட்டாள். பூனைக்குட்டியும் அதனை ஏற்றுக்கொண்டதைப் போல “மிஞ்ஞா’ என்று குரல் கொடுத்தது.

மாலை பள்ளி முடிந்தவுடன் வேகவேகமாகக் கலை வீட்டிற்கு வந்தாள். வெளிக் கேட்டைத் திறந்தாள். வழக்கமாக வெளி கேட்டைத் திறக்கும் “கிரீச்’ சப்தம் கேட்டால், குரல் கொடுத்துக் கொண்டு பூனைக்குட்டி வந்துவிடும். அன்று அது வரக் காணோம்.

“”கண்மணி…. கண்மணி” என்று குரல் கொடுத்தாள். ஓர் அரவமும் இல்லை. எங்கும் அமைதி.

வீடு பூட்டியிருந்தது. வழக்கம்போல் அம்மா கோவிலுக்குப் போயிருப்பாள். சாவியைத் தாழ்வாரத்தில் மேலே ஒரு கட்டையில் வைத்திருப்பாள். அதை எடுத்துக் கதவைத் திறக்கக்கூடத் தோன்றவில்லை.

கலை பையைத் திண்ணையிலேயே வைத்து விட்டு, வீட்டுத் தோட்டம் முழுக்கத் தேடிப் பார்த்தாள். கூப்பிட்டுக் குரல் கொடுத்து ஓய்ந்துவிட்டாள். பூனையைக் காணோம். அழுகை அழுகையாய் வந்தது. அடக்கிக்கொண்டாள். சோர்ந்து போய் திண்ணையில் அமர்ந்துவிட்டாள்.

கண்ணன் வந்தான். கலையைப் பார்க்கப் பாவமாக இருந்தது. “”என்ன கலை இப்படி உட்கார்ந்திருக்கே?” என்று கேட்டான்.

கலை, “”அண்ணா, பூனைக்குட்டியைக் காணோம்” என்று நடந்ததைக் கூறினாள். அவளது கண்களிலிருந்து நீர் ததும்பி வழிந்தது. தங்கையைப் பார்க்க கண்ணனுக்குப் பாவமாக இருந்தது.

“”என்ன கலை, இதுக்கா அழுகிற! உன் பூனைக்குட்டி எங்கும் போயிருக்காது. நான் தேடிப் பார்க்கிறேன்” என்று கூறிவிட்டு வீட்டைச் சுற்றித் தேடிப் பார்த்தான்; காணோம்.

“”ஒரு வேளை வெளியில் போயிருக்குமோ?” என்று கூறிவிட்டு, தெருவுக்குச் சென்று தேடிப் பார்த்தான். வெறுங்கையோடு திரும்பி வந்தான். ஏமாற்றம்.

இரண்டு பேரும் திண்ணையிலேயே அமர்ந்திருந்தனர். வெளியூர் போன தாத்தா வந்தார். பேரனும் பேத்தியும் சோர்ந்து போய் திண்ணையில் அமர்ந்திருப்பதைக் கண்டார்.

“”என்ன கலை, கப்பலா கவுந்து போச்சு, கன்னத்திலே கை வச்சு உட்கார்ந்திருக்கே?” என்று கேட்டார்.

கலையால் பேசக்கூட முடியவில்லை. தேக்கி வைத்திருந்த சோகம் வெடித்துக் கொண்டு வெளிவந்தது. தேம்பித் தேம்பி அழுதாள். கண்ணன்தான் நடந்ததைக் கூறினான்.

“”அடடா, பூனைக்குட்டியைக் காணோமா? சின்னக்குட்டி. பாவம். எங்கே போயிருக்கும்? ஆளில்லாத வீட்டிலே பூனைக்குட்டி கத்துறதைப் பார்த்து யாராவது பிடிச்சிக்கிட்டுப் போயிருப்பாங்களோ? இங்கேயிருந்தா நம் பேச்சுக் குரல் கேட்டு இதுக்குள்ளே ஓடி வந்திருக்குமே” என்று தாத்தா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அவரும் பேரன் பேத்திகளோடு திண்ணையில் அமர்ந்துவிட்டார்.

“”அம்மா மட்டும் வீட்டுக்குள்ளே பூனையைச் சேர்த்திருந்தா, இப்படிக் காணாமப் போயிருக்காது” என்று கண்ணன் தன் கருத்தைக் கூறினான்.

“”ஒங்க அம்மாதான் பிடிவாதக்காரியாச்சே” என்று தாத்தா கண்ணன் கூறியதை ஆமோதித்தார். மறுபடி அங்கு அமைதி.

சாமி கும்பிட்டுவிட்டு தேங்காய் பழக் கூடையோடு அம்மா வந்தாள். விபூதியை எடுத்து நீட்டினாள். தாத்தா, விபூதியை எடுத்துப் பூசிக்கொண்டு, பேரன் பேத்திக்கும் பூசிவிட்டார்.

“”என்ன வீட்டுக் கதவைக் கூடத் திறக்காமா மூணு பேரும் திண்ணையிலேயே உட்கார்ந்துக்கிட்டிருக்கீங்க?” என்று கேட்டுக்கொண்டே அம்மா சாவியை எடுத்து வீட்டைத் திறந்தாள்.

கண்ணன், “”அம்மா, நம்ம கலையோட பூனைக்குட்டியைக் காணோம்… அதான்” என்று இழுத்தான்.

“”பூனைக்குட்டியை அனாதை மாதிரி வீட்டுக்கு வெளியே விட்டுட்டுப் போனா எப்படி இருக்கும்? காலைலே நம்ம வீட்டைச் சுற்றிச் சுற்றி ஒரு தெரு நாய் வேற வந்திச்சு. அதான் பத்திரமா இருக்கட்டும்னு பூனையை வீட்டுக்குள்ளே விட்டுப் பூட்டிட்டுப் போனேன்” என்றாள் அம்மா. கதவைத் திறக்கும் சத்தம் கேட்டு, “”மிஞ்ஞா” என்று குரல் கொடுத்துக்கொண்டே பூனை வெளியில் வந்தது.

“”கண்மணிக்குட்டி” என்று பூனைக்குட்டியை ஓடி எடுத்துக்கொண்டு, “”அம்மா… என் செல்ல அம்மா. நன்றிம்மா” என்று அம்மாவுக்குத் தன் அன்பை கலை வெளிப்படுத்தினாள்.

எல்லோரின் முகத்திலும் மகிழ்ச்சி. பூனை, கலை தூக்கியதில் உற்சாகமாக இருந்தது.

அப்பொழுது அப்பா வந்தார். “”என்ன எல்லோரும் வெளியில்?” என்று கேட்டார். கண்ணன் நடந்ததைச் சொன்னான்.

அப்பா, “”அப்படியா? அம்மா ஏத்துக்கிட்டா பூனையைக் கொண்டுகிட்டு உள்ள வர வேண்டியதுதானே! இனி அது வீட்டுக்குள்ளே இருக்கட்டும்” என்றார்.

அம்மாவின் அன்பு உள்ளத்தைப் புரிந்து கொண்ட கலை அம்மாவைக் கட்டிக் கொண்டாள். பூனைக்குட்டி தனது நன்றியைக் காட்ட அம்மாவின் பாதங்களைப் பற்றிக் கொண்டது.

– பொன்மாரி (பெப்ரவரி 2013)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *