காட்டில் தேர்தலோ தேர்தல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 11, 2018
பார்வையிட்டோர்: 7,020 
 
 

காட்டில் வசிக்கும் மிருகங்களுக்கு, அவர்கள் தலைவனாக ஒருவரை தேர்ந்தெடுப்பதற்கு தேர்தல் நடை பெற உள்ளது. ஜனாதிபதியான சிங்கம் முன்னிலையில் இந்த தேர்தல் நடை பெறும் என தேர்தல் குழு தலைவர் கரடியார் அறிவித்து விட்டார். யார் யார் போட்டியில் கலந்து கொள்கிறார்களோஅவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என கரடியார் தலைமையிலான தேர்தல் அலுவலகம் அறிவித்து விட்டது.புலியாரை நிற்க சொல்லி பூனைகள் இனத்தலைவர் வற்புறுத்தினார்.புலியார் மறுத்து விட்டார். என்னால் யாரிடமும் பேசிக்கொண்டிருக்க முடியாது, ஒரே அடியில் பிரச்சினையை முடித்து விடுவேன். அதனால் மற்ற மிருகங்கள் என்னிடம் பேச்சு வார்த்தைக்கு வர பயப்படும், ஆகவே நான் இந்த போட்டிக்கு வரவில்லை, என சொல்லி விட்டது.உடனே பூனைகள் இனத்தலைவர் தம் இனம் சார்பாக சிறுத்தையை நிற்க வைக்க்லாம் என முடிவு செய்து விட்டன.அதே போல் நாய்கள் இனத்தின் தலைவர் தம் இனத்தின் சார்பாக “ஓநாயை” நிறுத்தலாம் என முடிவு செய்தன. ஓநாயும் சம்மதம் தொ¢வித்து விட்டது.

குதிரைகள் இனம் சார்பாக வரிக்குதிரையை நிற்க வைக்க அதன் தலைவர் கேட்டார். “வரிக்குதிரையார்” முதலில் மறுத்தவர் பின் தயங்கி தயங்கி ஒப்புக்கொண்டார். இருந்தாலும் வலிமையான சிறுத்தை இனத்தையும்,ஓநாய் இனததையும் சமாளிக்க கூட்டணி அவசியம் என்று சொல்லிவிட்டார். உடனே குதிரை இன தலைவர் யானை இனங்களின் தலைவரிடம் பேச்சு வார்த்தை நடத்த ஐமப்து ஐம்பது என்ற விகிதத்தில் பிரித்துக்கொண்டால் கூட்டணிக்கு சம்மதம் என சொல்ல குதிரை இனங்களின் தலைவர் அதற்கு ஒப்புக்கொண்டார்.இப்பொழுது குதிரையும் யானையும் இணைந்த கூட்டணி உருவாகி விட்டது. தேர்தல் செய்திகளை தொகுத்து வழங்க, “தினப்புறா” பத்திரிக்கையும், சிட்டுக்குருவி பத்திரிக்கையும்,தயாராகி விட்டன. அதற்காக புறாக்களை காடு பூராவும் அனுப்பி செய்தி சேகரிக்க “தினப்புறா” பத்திரிக்கையும்,”சிட்டுக்குருவி”பத்திரிக்கையும் அது போல சிட்டுக்குருவிகளை அனுப்பின.

அந்த அந்த கட்சிகள் சார்பாக தேர்தல் அறிக்கையை அறிவித்தன. சிறுத்தையார் நிற்கும் கட்சி சார்பாக 1. பூனைகளை, மனிதர்கள் துன்புறுத்தினால் நடவடிக்கை எடுப்போம். 2.காட்டில் உள்ள அசைவ மிருகங்களின் குடும்பங்களுக்கு இலவசமாக மாமிசங்களும், சைவ மிருகங்களுக்கு ஒரு கட்டு புல்லும் வழங்கப்படும் என அறிவித்தன.

“ஓநாயார்” அணி சார்பாக எங்கள் அணி வெற்றி பெற்றால் 1. மனிதர்கள், நாய்களை நினைத்தபடி வேலை வாங்குதல் கூடாது. 2. ஷிப்ட் முறையில்தான் நாய்களுக்கு வேலை வழங்க வேண்டும், 3.வாரம் ஒரு முறை மாமிச உணவு வழங்க வேண்டும், 4. பாதையில் இருக்கும் நாய்களை துன்புறுத்தும் மனிதர்களின் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். 5.அனைத்து மிருகங்களுக்கும் தண்ணீர் வசதி ஏற்படுத்தி தரப்படும் என அறிவித்தன.

வரிக்குதிரையார் அணியும், யானையார் அணியும் கூட்டாக தங்கள் தேர்தல் அறிக்கையாக 1. அனைவருக்கும் புல் கட்டு இலவசம்,மாமிசங்களும் இலவசம்,2. மனிதர்களால் கைவிடப்பட்ட குதிரைகளுக்கு மறு வாழ்வு கொடுப்பது, 2. அவர்கள் இனமான கழுதையார் இனம் மனிதர்களால் திட்டமிட்டு அழிக்கபடுவதை தடுப்பது,3 எருமை இனங்களையும் காப்பது, 4. உழவுக்கு மட்டுமே எருதுகளை பயன்படுத்த வேண்டும்,5.அதிக பாரம் ஏற்றி மாடுகளை மனிதர்கள் தொல்லை செய்யக்கூடாது,6.கன்று குட்டிகளுக்கு பால் வைத்து விட்டுத்தான் மீதமுள்ளதை மனிதன் எடுத்துக்கொள்ள வேண்டும்.இப்படி பல வாக்குறுதிகளை அளித்தன.

பிரச்சாரம் அனல் பறக்க ஆரம்பித்தது. எண்ணிக்கையில் யார் அதிகம் இருக்கிறார்கள் என்று ஆளாளுக்கு ஒரு கணக்கை சொல்லி, தாங்கள்தான் வெற்றி பெறுவோம் என முழக்கமிட்டன.நாட்டில வசிக்கும் பூனைகள், நாய்கள்,குதிரைகள், கழுதைகள், இவைகளுக்கு எங்கு ஓட்டு போட வைப்பது என்ற குழப்பம் வந்தது.

ஊரை ஒட்டி ஒரு வாக்கு சாவடி வைத்து எல்லா மிருகங்களும் அங்கு வந்து ஓட்டு போட வைப்பது என்று கரடியார் தலைமையிலான தேர்தல் கமிசன் முடிவு செய்தது.

இன்றுடன் வேட்பு மனு தாக்கல் முடிவைடையும் நிலையில் தடீரென நத்தையார் தேர்தல் கமிசன் அலுவலகத்தில் வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தது .மற்ற மிருகங்கள் ஆட்சேபிக்க, நத்தையார் நான் வேட்பு மனு தாக்கல் செய்ய ஒரு வாரம் முன்பே கிளம்பி விட்டதாகவும், சரியாக கடைசி நாளில் வந்து தாக்கல் செய்து விட்டதால் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வாதிட்டது. கூடவே நத்தையார் சார்பாக வண்டுகளும்,பாம்புகளும் வாதிட்டதால், வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதன் பின் நத்தையார் சார்பாகவும் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. 1. ஊர்வன அனைத்துக்கும் மனிதர்கள் தொல்லை படுத்தக்கூடாது,2.காடுகளை அழித்து விலங்குகளின் வாழ்விடங்களை விட்டு விரட்டக்கூடாது.3.விவசாய நிலங்களில் பூச்சி மருந்து தெளிப்பதாக கூறி ரசாயன கலவைகளை தெளிக்க கூடாது, இதனால் பூச்சி இனங்கள் அடியோடு அழிக்கப்படுகிறது,இயற்கை மருந்துகளை அடிப்பதால் பூச்சிகள் விலகிவிடுமே தவிர அதன் உயிருக்கு அபத்து வராது.இப்படி பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டது.

காடே அல்லோகலப்பட்டது. தேர்தல் பிரச்சாரம் படு தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.ஒவ்வொரு இனததை சேர்ந்த விலங்குகளும், மற்ற இனத்தை சேர்ந்த விலங்குகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை கலக்கிக்கொண்டிருக்கின்றன.

“காடு நலம் பெற உங்கள் வாக்கு அவசியம் ” என்று விளம்பரங்களை கரடியார் தலைமையிலான தேர்தல் கமிசன் காடு, மலை,செடி, கொடிகளில், தொங்க விட்டு அனைத்து விலங்குகளையும் ஓட்டு போட வைக்க முயற்சி செய்தன.

திடீரென மீன் இனததை சேர்ந்தவர்களும்,தண்ணீருக்குள் வாழ்பவர்களும் தேர்தல் கமிசன் தலைவர் கரடியாரை சந்தித்து ஒரு மனு அளித்தன. எங்கள் இனத்துக்கு என்று தனியாக ஒரு வாக்கு சாவடி ஆற்றுக்குள்ளோ, குளத்துக்குள்ளோ வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆற்றுக்குள் முதலை இனங்களுக்கு தனியாகவும்,மீன், தவளை,மற்ற இனங்களுக்கு தனியாகவும் வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டன்.நீர் யானைகளுக்கு நிலத்திலும், நீரிலும் ஓட்டை போட அனுமதி அளித்தன.தவளைகளும் கொடி பிடிக்க, அவைகளுக்கும், இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

தேர்தல் நாளும் வந்தது. அனைத்து வாக்கு சாவடிகளிலும் விலங்குகள், பறவைகள், பூச்சிகள், வரிசையாக நின்று வாக்களித்தன.எந்த கலவரமுமின்றி தேர்தல் அமைதியாக நடந்ததற்கு கரடியாரை விலங்குகள் பாராட்டின.

மறு நாள் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. யாரும் எதிர்பாராவிதமாக “நத்தையார்” அமோகமாக வெற்றி பெற்று இந்த காட்டுக்கு தலைவனாக அறிவிக்கப்பட்டார். பூச்சி இனங்களும், ஊர்வன இனங்களும், எண்ணிக்கையில் அதிகமாக இருந்த்ததால் அனைத்தும் நத்தைக்கே ஓட்டை போட்டு பெரு வெற்றி பெற செய்து விட்டன.

வெற்றி அறிவிக்கப்பட்டு பதவி ஏற்க நத்தையாருக்கு மூன்று நாட்கள் ஆகியது. அது மேடை ஏறி, சிங்கத்திடம் உறுதி பொழி ஏற்க அவ்வளவு காலமாகிவிட்டது.

பூச்சி இனங்களை தவிர மற்ற விலங்குகளுக்கு நத்தையாரை பேட்டி எடுக்க மிகுந்த சிரமப்பட்டன. அதிலும் யானையாருக்குத்தான் மிகுந்த சிரமம், ஒவ்வொரு முறையும் நத்தையாரை பார்த்து ஏதாவது பேச வேண்டுமென்றாலும், மண்டியிட்டு குனிந்து பின் எழுவது என்பது அப்பப்பா கொடுமையாக இருந்தது.

பெயர்: ஸ்ரீ.தாமோதரன் பிறந்த வருடம் 1966, தனியார் மருத்துவமனையின் துணை மருத்துவ கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். “மனித நேயம்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது. தினமலர் வார பத்திரிக்கையில் இரண்டு மூன்று கதைகள் வெளி வந்துள்ளன. “நிலம் விற்பனைக்கு அல்ல” சிறுகதை இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” எனது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *