ஓரிடத்தில் விசாலமான ஆலமரம் ஒன்று இருந்தது. அந்த ஆலமரத்தின் ஒரு காகமும் அதன் பெட்டையும் கூடு கட்டி வாழ்க்கை நடத்தி வந்தன.
அந்த ஆலமரத்தின் அடிமரப் பகுதியில் பெரிய பொந்து ஒன்று இருந்தது. அந்தப் பொந்தை ஒரு கரும்பாம்பு உறைவிடமாகக் கொண்டிருந்தது.
பெண் காகம் தனது கூட்டில் முட்டைகள் இட்டுக் குஞ்சுகள் பொறிக்கும்.
ஆண் காகமும், பெண் காகமும் இரைதேடச் செல்லும் சமயமாகப் பார்த்து பொந்தில் இருக்கும் கருநாகம் மரத்தின் மீது ஏறி காகக் குஞ்சுகளைத் தின்றுவிட்டு இறங்கி விடும்.
திரும்பி வந்து பார்க்கும் போது குஞ்சுகள் காணாமல் போய் விட்டது கண்டு காகங்கள் மிகவும் மன வேதனை அடையும்.
ஒன்றிரு தடவைகள் என்று இல்லாமல் ஒவ்வொரு தடவையும் பெண் காகம் குஞ்சு பொரிப்பதும், அவற்றை கருநாகம் உண்பதும் வழக்கமான நிகழ்ச்சியாகி விட்டன.
குஞ்சுகள் காணாமல் போவதற்கு மரத்தடிப் பொந்தில் வாழும் கருநாகந்தான் காரணம் என்பதைக் காகங்கள் கண்டு கொண்டன.
ஆனால் காகங்களால் கருநாகத்தை என்ன செய்ய முடியும்? தலைவிதியே எனச் சில காலத்தை ஓட்டின.
திரும்பத் திரும்ப தன் குஞ்சுகளை இழக்கும் அவலத்தைப் பெண் காகத்தால் சகித்துக் கொள்ள இயலவில்லை.
ஒருநாள் அது தன் கணவனை நோக்கி, நாதா “நமது குஞ்சுகளையெல்லாம் ஒவ்வொரு தடவையும் கருநாகம் தின்று விடுகின்றதே! இனியும் இந்தத் துக்கத்தையும் மனவேதனையையும் என்னால் சகித்தக் கொள்ள முடியவில்லை. சனியன் பிடித்த இந்த மரத்தை விட்டு விட்டு வேறு ஒரு பாதுகாப்பு நிறைந்த மரத்திற்குக் குடி போய் நிம்மதியாக வாழ்க்கை நடத்துவோம்” என்று கண்ணீர் உகுந்து மனம் கசிந்துருகிக் கூறிற்று.
பெண் காகம் கூறியதைக் கேட்டு மன வேதனையுற்ற ஆண் காகம் தன் மனைவியை நோக்கி “அன்பே, உன் மனக்குமறல் எனக்கு விளங்காமலா இருக்கிறது! தொடர்ந்து நிகழும் இந்த அவலம் காரணமாக நான் படும் துயரம் கொஞ்ச நஞ்சமல்ல. என்றாலும் சில விஷயங்களை நாம் எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கின்றது. நீண்ட காலமாக வசித்து வரும் இந்த இடத்தைவிட்டு வேறு இடத்திற்குச் செல்ல என் மனம் ஒப்பவில்லை. ஆனால் அதற்காகக் கரும்பாம்பின் அட்டூழியத்தைப் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நான் கூற மாட்டேன். ஏதாவது ஒரு உபாயம் செய்து இந்த பாம்பைக் கொன்றாக வேண்டும்” என்று ஆண் காகம் கூறிற்று.
“கொடிய விஷ ஜந்துவான் இந்தக் கருநாகத்தை நம்மால் கொல்ல முடியுமா?” என்று சந்தேகத்தோடு பெண்காகம் கேட்டது.
“கருநாகத்தைக் கொல்லும் அளவுக்கு வலிமையோ வல்லமையோ எனக்கு இல்லை என்பது உண்மைதான். ஆனால் நல்ல அறிவாற்றல் மிக்க நல்ல நண்பர்கள் பலர் எனக்கு இருக்கிறார்கள். அவர்களிடம் யோசனை கலந்து இந்தக் கருநாகத்தை நிச்சயமாக என்னால் ஒழித்துக் கட்ட முடியும்” என்று ஆவேசத்துடன் கூறியது ஆண் காகம்.
பிறகு தன் மனைவியைப் பார்த்து, “அன்பே, பாம்பைக் கொல்ல உடனடியாக நடவடிக்கை மேற் கொண்டாக வேண்டும். நீ பத்திரமாக இரு. நான் நண்பன் ஒருவனைச் சென்று பார்த்துவிட்டு விரைவில் திரும்பி வருகிறேன்” என்று கூறிவிட்டுப் புறப்பட்டது.
கொஞ்ச தொலைவில் வசித்து வந்த ஒரு நரி காகத்தின் நெருக்கமான நண்பன். நல்ல அறிவாற்றலும் தந்திர சுபாவமும் படைத்த அந்த நரியைத் தேடிக்கொண்டு காகம் அங்கு போய்ச் சேர்ந்தது.
நரி தன் நண்பன் காகத்தை மகிழ்சியுடன் வரவேற்றது.
“நண்பனே, ஏன் முகவாட்டத்துடன் இருக்கிறாய். உனக்கு என்ன துன்பம் நேர்ந்தது?” என்று நரி பரிவுடன் கேட்டது.
காகம், தான் வாழும் மரத்தடியில். பொந்தில் வசிக்கும் கருநாகம் செய்யும் அட்டூழியத்தை மன வேதனையுடன் எடுத்துக் கூறி, எங்கள் குஞ்சுகளைத் தின்று வாழும் கருநாகத்தை அழிக்க நீதான் ஏதாவது ஒரு உபாயம் கூற வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.
நரி தன் நண்பனுக்குப் பலவாறாக ஆறுதல் கூறி, “நண்பனே, கவலைப்படாதே! அடாது செய்யும் அக்கிரமக் காரனக்கு தானாகவே அழிவு வந்து சேரும். பேராசையில் மீன்களைக் கொன்று தின்று அட்டூழியம் புரிந்த கொக்கிற்கு அதன் பேராசையே எமனாக வந்தது போல கருநாகம் தானே தன் அழிவினைத் தேடிக்கொள்ளும் காலம் நெருங்கி விட்டது” என்று செப்பியது.
“நண்பனே, கருநாகத்தைக் கொல்வதற்கு ஓர் உபாயம் சொல்லி உதவ வேண்டும்” என்று கேட்டுக் கொண்டது.
நரியும் நல்ல உபாயம் ஒன்றைக் காகத்திற்குக் கூறி, நண்பனே, இந்த யோசனையைச் செயற்படுத்து, கருநாகத்தின் ஆயுள் முடிந்துவிடும் என்று சொல்லியது.
காகம் நண்பன் நரியிடம் விடைபெற்றுக் கொண்டு அக்கணமே அதன் யோசனையைச் செயற்படுத்தும் முயற்சியினைத் தொடங்கியது.
அந்த நாட்டின் அரசி வழக்கமாக நீராடும் குளக்கரைக்குச் சென்று காகம் ஒரு மரத்தில் மறைவாக அமர்ந்து அரசியின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தது.
சற்று நேரத்திற்கெல்லாம் அரசி தனது தோழிகளுடன் குளத்திற்கு வந்து சேர்ந்தாள்.
தன்னுடைய விலை உயர்ந்த ஆபரணங்களையெல்லாம் கழற்றிக் கூரைமீது வைத்துவிட்டு அரசி நீராடுவதற்காக குளத்தில் இறங்கினாள்.
காகம் உடனே பறந்து வந்து மிகவும் மதிப்புமிக்க முத்துமாலை ஒன்றைத் தனது அலகால் கொத்தி எடுத்துக் கொண்டு பறந்தோடியது.
அந்த எதிர்பாராத நிகழ்ச்சியைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அரசியும் தோழிகளும் கூக்குரலிட்டனர்.
உடனே சில தோழிகள் சென்று காவலர்களிடம் நடந்த நிகழ்ச்சியைக் கூறினார்கள்.
காவலர்கள் பறந்து செல்லும் காகத்தைத் துரத்திக் கொண்டு கூச்சலிட்டவாறு பின் தொடர்ந்து சென்றார்கள்.
காகம் பறந்தவாறு நேராகத் தான் குடியிருக்கும் ஆலமரத்திற்குச் சென்றது.
அதற்குள் காவலர்கள் அந்த அரத்தருகே வந்து சேர்ந்தார்கள்.
காகம் தனது அலகில் கொத்திப் பிடித்திருந்த அரசியின் அணிகலனை காவலர்கள் கண் பார்வையில் படும் விதமாக கருநாகத்தின் பொந்துக்குள் போட்டு விட்டது.
காவலர்கள் கரும் பாம்புப் புற்றை இடித்து நகையைத் தேடினார்கள்.
புற்றுக்குள் இருந்த கருநாகம் சீறிக்கொண்டு வெளியே வந்தது.
காவலர்கள் அந்தக் கருநாகத்தைக் தடியால் அடித்துக் கொன்றனர்.
பிறகு புற்றை நன்றாக இடித்துப் பெயர்த்து அரசியின் அணிகலனைத் தேடி எடுத்துக் கொண்டு சென்று விட்டனர்.
அதன் பிறகு அந்தக் காகக் குடும்பம் நிம்மதியாகவும், மகிழ்ச்சியுடனும் வாழ்க்கை நடத்த தொடங்கியது.