கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 7,589 
 

ஓர் ஊரில் மங்கன் என்று ஒரு சிற்பி இருந்தான். அம்மி, ஆட்டுக்க்கல், உரல் மட்டுமே செய்யத் தெரிந்த அவனைச் சிற்பி என்று அழைக்கக் கூடாதுதான். ஆனாலும் மங்கனுக்குத் தன்னை எல்லோரும் சிற்பி என்று புகழவேண்டும் என்று அடங்காத ஆவல். அவன் பிள்ளையார் செய்ய நினைப்பதெல்லாம் குரங்காகத்தான் முடிந்தது.

இதற்கெல்லாம் மங்கன் அயர்ந்து விடவில்லை. எதையோ செய்யத் தொடங்கி எப்படியோ முடிந்த விந்தையான வடிவங்களையெல்லாம் பெருமிதத்தோடு சேர்த்துவைத்திருக்கிறான்.

வாய்ப்புக் கிடைத்தால், மாட்டிக்கொள்ளும் இளித்தவாய் வெளியூர்க்காரர்களிடம், திறமையாகப் பேசி விற்றும் விடுவான். ஆனால் உள்ளூர்க்காரர்கள் அம்மி, ஆட்டுக்கல்லைத் தவிர வேறு எதையும் வாங்க முன்வருவதில்லை. கல்லும் உளியுமாக எப்போதும் திரிந்ததால் கல்லுளிமங்கன் என்றே அழைத்தார்கள்.

இந்த ஊரில் இருக்கும் வரை புகழ்பெற முடியாது என்ற முடிவுக்கு வந்தான் மங்கன். ஒருநாள் ஊரைவிட்டுக் கிளம்பிப் பக்கத்து நாட்டு எல்லையை அடைந்தான். அங்கே ஒரு பெரிய மலை இருந்தது. பெரிய பெரிய பாறைகளைக் கண்டவுடன் மங்கனுக்கு ஒரே மகிழ்ச்சி.

‘‘ஆகா… இந்தப் பாறைகளையெல்லாம் உடைத்துக் கல்லாக்கி அழகிய சிற்பங்களைச் செதுக்குவேன்’’ என்று கூச்சலிட்ட மங்கன் மலையடிவாரத்தில் கூடாரம் அமைத்துத் தங்கினான்.

குன்று முழுவதையும் செதுக்கி ஒரு பெண் வடிவத்தைப் வடிக்க முடிவு செய்தான்.

மரங்களையும் விழுதுகளையும் வைத்து சாரங்களை உருவாக்கி, குன்றில் கட்டினான். நாள்தோறும் அயராமல் செதுக்கத் தொடங்கினான்.

அங்கே வந்த இடையர்கள், மங்கனின் நீண்ட தாடியையும் பழுப்பேறிய உடைகளையும் பார்த்து பெரிய சிற்பி என்றே எண்ணிக் கொண்டார்கள்.

செய்தி பரவியது. நான்கு படைவீரர்கள் சூழ ஊரே திரண்டு அங்கே வந்தது. அதைக் கண்டதும் மங்கனுக்குத் தலைகால் புரியவில்லை. அவர்களைப் பார்க்காததுபோல் செதுக்கிக்கொண்டு இருந்தான்.

அவனைப் பார்த்து, ‘‘சிற்பியாரே! மேலே இருக்கும் மலைக் குகையில் ஒரு அரக்கன் இருக்கிறான். அவன் ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஊருக்குள்ளே புகுந்து, மக்களைக் கொன்று ஆடு மாடுகளைத் தூக்கிச் சென்றுவிடுவான். அவன் வெளிவரும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது…’’ என்று கத்தினான் ஒரு படைவீரன்.

மங்கனுக்கு வீரன் சொன்னது சரியாகக் காதில் விழவில்லை. ‘‘எல்லாம் எனக்குத் தெரியும். நான் பார்த்துக்கொள்கிறேன். அதற்காகத்தானே இந்த அரக்கியை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்!’’ வழக்கம் போல அவன் கைத்திறமை காலை வாரிவிட்டிருந்தது. ஓர் அழகிய பெண் வடிவத்தைச் செதுக்கக் கிளம்பிய கைகள், ஓர் அரக்கியின் வடிவத்தைச் செதுக்கிக் கொண்டிருந்தன.

ஊர் மக்களும், வீரர்களும், அந்தச் சிற்பி, அரக்கனை ஒழித்துக் கட்டத்தான் ஏதோ ஒரு திட்டத்துடன் அரக்கியைச் செதுக்கிக் கொண் டிருக்கிறார் என்றே நம்பினார்கள்.

பிறகென்ன? கல்லுளி மங்கனுக்கு அரச மரியாதை கிடைத்தது. நாள்தோறும் சுவையான சாப்பாடு, விதவிதமான காய்கனிகள், தேன், பால் என ஊர்மக்கள் கொடுத்தார்கள். அவனது சிற்பத்தை ‘ஆகா… ஓகோ’ என்று புகழ்ந்து தள்ளினார்கள். இதெல்லாம் எதற்காக என்பது மங்கனின் மூளையில் ஏறவேயில்லை…

இப்படியாக நாட்கள் நகர்ந்தன. கல்லுளி மங்கன் செதுக்கும் பெரிய அரக்கி சிற்பத்தைப் பற்றி அந்த நாட்டு அரசரும் கேள்விப்பட்டார்.

அரக்கனை ஒழிக்க அரசர் எவ்வளவோ முயற்சி செய்திருந்தார். அரக்கனை அழிப்பவர்களுக்கு தன் மகளை மணமுடித்துத் தருவதாகவும், ராஜ்ஜியத்தில் பாதியைத் அளிப்பதாகவும் அறிவித்திருந்தார். எந்த வீரனும் அரக்கனைக் கொல்ல முன்வரவில்லை.

அந்த நிலையில்தான் கல்லுளிமங்கனைப் பற்றிக் கேள்விப்பட்டார் அரசர். அவனைப் பார்க்கவும் அவனது திட்டம் பற்றி அறிந்துகொள்ளவும் இளவரசியோடு கிளம்பினார்.

அங்கே மிகப் பெரிய அரக்கியைச் செதுக்கியிருந்தான் மங்கன். அவனுக்குத் திறமை இருந்ததோ இல்லையோ மிடுக்கும் அழகும் இருந்தன. அன்று புத்தாடைகள் உடுத்தி, தாடி மீசையெல்லாம் ஒழுங்குபடுத்திக் கொண்டு அழகாகக் காட்சியளித்தான் மங்கன்.

அரசரும் இளவரசியும் சிலையை வியந்து போற்றினார்கள். அருகே பணிவோடு நின்றுகொண்டு இருந்தான் மங்கன். இளவரசி அவனைப் பார்த்துக் கேட்டாள், ‘சிற்பியாரே, அரக்கி சிலை அருமையாக இருக்கிறது. ஆனால் இதைக்கொண்டு அந்த அரக்கனை எப்படி அழிக்கப் போகிறீர்கள்?’’

இளவரசியின் அழகில் மயங்கிப் போயிருந்த மங்கனுக்கு இப்போதும் உண்மை உறைக்கவில்லை. ‘‘திட்டத்தை விளக்க முடியாது இளவரசி. ஆனால் எப்படியும் வெற்றி எனக்குத்தான்!’’ என்றான்.

அரசரும் இளவரசியும் அவனை வாழ்த்திவிட்டுக் கிளம்பினார்கள்.

அரக்கன் தூக்கம் கலைந்து எழுந்துவரும் நாள் நெருங்கியது. ஊர்மக்கள் உடைமைகளுடன் ஊரைவிட்டு வெளியேறும்போது ‘சிற்பியாரே உங்களைத்தான் நம்பிக்கொண்டு இருக்கிறோம்’ என்று கூறிச் சென்றார்கள்.

அப்போதுதான் மங்கனுக்கு முழு உண்மையும் புரிந்தது. ‘ஆகா! மாட்டிக்கொண்டோமே… நாமாவது அரக்கனைக் கொல்வதாவது!’ என்று தலையில் அடித்துக்கொண்டான். அன்று இரவோடு இரவாகத் தப்பி ஓடிவிட முடிவெடுத்தான்.

ஆனால் இளவரசியைப் பற்றிய நினைவு அவனைப் போகவிடாமல் தடுத்தது. அவளுடைய நம்பிக் கையைப் பொய்யாக்க அவன் விரும்பவில்லை. உயிரைக் கொடுத்தாவது அரக்கனைக் கொன்றுவிடுவது என்று இறுதி முடிவு எடுத்தான் மங்கன்.

அவனுக்கு ஓர் எண்ணம் தோன்றியது. பத்துப் பதினைந்து கனமான அம்மி உரல்களின் நடுவே துளையிட்டான். துளைகளில் வலுவான கயிற்றை நுழைத்து மாலைபோல் அம்மி உரல்களைக் கோத்தான். பிறகு கயிற்றின் இருமுனைகளையும் முடிச்சுப் போட்டான். வீரர்களின் உதவியோடு அந்தக் கல் மாலையை அரக்கி சிலையின் கழுத்தில் அணிவித்தான்.

பிறகு அரக்கி சிலையின் முதுகுப் பகுதியில் ஒரு பெரிய பள்ளத்தை ஏற்படுத்தி, அதற்குள் ஒளிந்து கொள்ள முடிவு எடுத்தான்.

மறுநாள் நள்ளிரவு. இரண்டு பெரிய தீப்பந்தங்கள் சிலை அருகே எரிந்துகொண்டு இருந்தன. மூங்கிலால் ஒலிபெருக்கி ஒன்றைச் செய்து, அரக்கனின் வருகைக் காகக் காத்திருக்கத் தொடங்கினான் மங்கன்.

அரக்கன், மலை போன்ற உடலுடன், பெரும் கர்ஜனையோடு, மலையிலிருந்து இறங்கி வந்தான்.அருகே வந்ததும் ஒலிபெருக்கிக் குழல் மூலம் அரக்கியைப் போல கடூரமான குரலில் பேசி அரக்கனை வம்புச் சண்டைக்கு இழுத்தான் மங்கன். தீப்பந்தங்களின் ஒளியில் அரக்கியின் பெரும் சிலையைக் கண்ட அரக்கன் கடும் சினத்தில் சிலையைத் தாக்கப் பாய்ந்து வந்தான். சிலையின் வயிறு உயரமே இருந்த அரக்கன் சிலையைக் கட்டிப்பிடித்து நொறுக்க முயன்றான். மங்கன் அரக்கி சிலையின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த கல் மாலையை வெட்டினான். உடனே கனமான அம்மி, உரல்கள் அரக்கனின் தலையில் விழுந்தன. பாய்ந்து கீழே இறங்கிய மங்கன், குற்றுயிராய்க் கிடந்த அரக்கனின் மார்பில் உளியைச் செருகிக் கதையை முடித்தான்.

பிறகென்ன? மங்கன் வெற்றி வீரனாக, இளவரசியை மணந்து கொண்டான். ராஜ்ஜியத்தின் பாதியையும் மன்னனிடமிருந்து பெற்றுக்கொண்டான்.

இப்போது சிற்பி மங்கனார் அரண்மனைத் தோட்டத்தில், அழகிய மனைவியின் சிலையை வடித்துக் கொண்டிருப்பதாகக் கேள்வி…

சிலையும் நன்றாகவே வருகிறதாம்! ஏனென்றால் சிலையைத் தொடங்கும்போது மங்கனார் ஓர் அரக்கி உருவத்தை நினைத்துத்தான் தொடங்கினார். ஆனால் அது வழக்கம்போல் & தவறுதலாக & அழகான இளவரசியாய் மாறிவிட்டதாம்!

வெளியான தேதி: 01 ஆகஸ்ட் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *