கற்றவர்கள் கண்டதில்லை!

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 8,401 
 
 

குருக்கள் காயத்ரி ஜபத்தை முடித்தார். கீதை விளக்க உரையை வாசிக்க ஆரம்பித்தார்.

அவர் அருகே வந்த அவருடைய மனைவி, “”என்னங்க, வேத பாராயணத்துக்கு இதுவா நேரம்? சமைக்கிறதுக்கு ஆத்துல எதுவுமில்லை. எல்லாத்தையும் மூடி வெச்சுட்டு சீக்கிரமா உஞ்சவிருத்திக்குக் கிளம்புங்கோ…” என்றாள்.

கற்றவர்கள் கண்டதில்லை“”போகலாம்டீ, இப்போ என்ன அவசரம்?” என்றார் குருக்கள்.

“”நீங்க ஒரு காப்பியோட இருந்திடுவேள். என்னால அப்படி இருக்க முடியாது. பசி உயிர் போறது…” என்று சொல்லிக்கொண்டே சென்றாள்.

குருக்கள் வாசிப்பைத் தொடர்ந்தார். ஒரு சுலோகத்துக்குக் கீழே இருந்த விளக்கம் அவருக்கு ஏகப்பட்ட சந்தேகங்களை ஏற்படுத்தியது.

“உண்மையான பக்தர்களுக்கு கஷ்டம் நேரும்போதெல்லாம், பகவான் நேரில் தோன்றி அவர்களுடைய கஷ்டங்களைத் தீர்த்து வைப்பார்’ என்று அதில் இருந்தது.

பகவான் நிச்சயமாக உதவுவார். மறைமுகமாக அல்லது மற்றவர்கள் மூலமாக உதவுவார். “நேரில் தோன்றி’ கஷ்டங்களைத் தீர்த்து வைப்பார் என்பது நம்புகிற மாதிரி இல்லையே! கடவுள் மனிதர்களுக்குக் காட்சி அளித்ததாக இந்தக் கலியுகத்தில் கேள்விப்பட்டதே இல்லையே என்றெல்லாம் எண்ணிய குருக்கள் சட்டென்று ஒரு காரியத்தைச் செய்தார். சிவப்பு மை பேனாவை எடுத்து “நேரில் தோன்றி’ என்ற இரண்டு வார்த்தைகளை அடித்துவிட்டு, திருப்தி அடைந்தவராக எழுந்து, உஞ்சவிருத்திக்குப் புறப்பட்டார்.

ஊரெல்லாம் சுற்றியும் குருக்களுக்கு அன்று உணவு தருவார் யாரும் இல்லை. நண்பகல் வேளையில் சோர்ந்து போய் நிழலுக்காக ஒரு மரத்தடியில் அமர்ந்தார். பசி, மயக்கம், களைப்புடன் மரத்தில் சாய்ந்தவர், குளிர்ந்த காற்றில் குறட்டைவிட ஆரம்பித்துவிட்டார்.

அதே சமயம் –

குருக்கள் வீட்டுக் கதவு தட்டப்பட்டது.

கதவைத் திறந்த குருக்களின் மனைவிக்கு ஆச்சரியம்! அவள் எதிர்பார்த்த குருக்களுக்குப் பதிலாக ஒரு 18 வயதுச் சிறுவன் நின்றான். கார்மேகத்தின் நிறம். தலையில் பெரிய மூட்டை. இரண்டு கைகளிலும் பைகள்.

“”யார் வேணும் உனக்கு?” குருக்களின் மனைவி கேட்டாள்.

“”குருக்களய்யா வீடுதானே இது?”

“”ஆமா…”

“”நான் அவரோட மாணவன்…”

“”மாணவனா, உன்னை இதுவரைக்கும் நான் பார்த்ததில்லையே! சரி, என்ன வேணும் உனக்கு?”

“”குருக்களய்யா இதையெல்லாம் உங்களிடம் குடுத்துட்டு வரச் சொன்னார்” என்றவாறு எல்லாவற்றையும் இறக்கி வைத்தான்.

“”எல்லாம் சரியா இருக்கான்னு பாத்துக்கோங்க மாமி. ஏதாச்சும் குறைஞ்சுதுன்னா அவர் என்னை இன்னொருவாட்டி அடிப்பார்”

“”இன்னொருவாட்டியா?”

“”ஆமா, ஏற்கெனவே ஒரு அடி விழுந்துடுச்சு முதுகிலே!” என்று முதுகைத் திருப்பிக் காண்பித்தான், அவன். அவன் சட்டையில் இடமிருந்து வலமாக ஒரு ரத்தக் கோடு!

பதறிப்போன குருக்கள் மனைவி, “”எதுக்காக உன்னை இப்படிப் போட்டு அடிச்சிருக்கார்?” என்று கேட்க,

“”என்னால ஒண்டியா இதையெல்லாம் தூக்கிட்டுப் போக முடியாதுன்னு சொன்னேன்… அவருக்குக் கோபம் வந்துடுச்சு…”

“”அதுக்காக இப்படியா அடிக்கிறது? மன்னிச்சுக்கோ தம்பி, அவர் அடிச்சதுக்காக நான் உன்கிட்டே மன்னிப்புக் கேட்டுக்கறேன்” என்றாள்.

“”பரவாயில்லே மாமி, இதெல்லாம் எனக்குப் பழக்கப்பட்டதுதான்” என்றான் அந்தச் சிறுவன்.

“”இதுல என்ன அனுப்பியிருக்கார்?” என்றவாறு மூட்டையைப் பிரித்தாள், குருக்கள் மனைவி.

உள்ளே அரிசி, பருப்பு, நெய், எண்ணெய், மளிகைச் சாமான்கள். பைகளில் கறிகாய் வகைகள். எல்லாமே ஒரு மாதத்துக்குத் தேவையானவை.

“”தம்பி, சமைக்கிறதுக்கு எல்லாமே இருக்கு. சித்த திண்ணையில உக்காரு. சமைச்சதும் வயிறார சாப்டுட்டுப் போ” என்றாள்.

“”சரி மாமி” என்ற சிறுவன் திண்ணைக்குச் சென்றான்.

அவள் அவசர அவசரமாக உலையில் அரிசியைக் களைந்து போட்டு, கறிகாய் நறுக்கி, பருப்பை வேகப் போட்டு…

வெகுவேகமாக சமையல் நடந்தது.

மரத்தடியில் திடுக்கிட்டுக் கண்விழித்த குருக்கள், சற்றே சரிய ஆரம்பித்துவிட்ட உச்சி வெயிலைப் பார்த்து மணி இரண்டு இருக்கலாம் என்று ஊகித்தார். வீட்டில் மனைவி பசியும் பட்டினியுமாக இருப்பாளே, இன்று பார்த்து எதுவுமே கிடைக்கவில்லையே, எப்படி நான் வீட்டுக்குப் போய் அவள் முகத்தில் விழிப்பேன்… என்றெல்லாம் எண்ணிக் கலங்கினார். எழுந்து நடக்க ஆரம்பித்தார்.

வீடு நெருங்கியபோது, நெய் வாசனையுடன் பெருங்காயம் கமழும் சாம்பார் மணம் குருக்களை வரவேற்றது. அவருக்கு ஆச்சரியம். மகிழ்ச்சி.

சமையற்கட்டில் இருக்கும் காலி டப்பாக்களை வைத்து இவளால் எப்படி மணக்க மணக்க சமைக்க முடிந்தது? என்று எண்ணியவாறு, வீட்டுக்குள் கால் வைத்தார்.

“”நீங்க செஞ்சது சரியா?” என்று சின்னக் கோபத்துடன் கேட்டவாறு, அவர் அருகே வந்தாள் மனைவி.

குருக்கள் புரியாமல் விழித்தார்.

“”உங்க மாணவனைப் போட்டு இப்படியா அடிக்கிறது? பாவம் சின்னப் பையன். பிரம்பால அவன் முதகில ரத்தக் கோடு போட்டிருக்கீங்களே?”

“”என்னடி உளர்றே! எனக்கு மாணவனும் கிடையாது. நான் யாரையும் அடிச்சதும் கிடையாது…”

“”உங்களுக்கு மாணவன் கிடையாதா? வெளில திண்ணையில உக்கார்ந்திருக்கிறது யாரு?”

“”திண்ணையில யாரும் இல்லையே!”

“”என்னது, யாரும் இல்லையா?” என்றவாறு வாசலுக்கு விரைந்தாள் மனைவி.

காலித் திண்ணையைப் பார்த்துவிட்டு, ”பாவம், உங்களுக்குப் பயந்து சாப்பிடாமப் போயிட்டான் போலிருக்கு. நீங்க அனுப்பினதையெல்லாம் தூக்க முடியாம தூக்கிட்டு வந்தான்…”

“”நான் எதையுமே அனுப்பலயே, கொஞ்சம் விவரமாச் சொல்றியா?” என்று குழப்பத்துடன் கேட்டார், குருக்கள்.

“”நீங்க எதையுமே குடுத்துவிடலயா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டவள், நடந்தவைகளை விவரித்தாள். குருக்களுக்கும் ஆச்சரியம்.

“”இன்னொரு தடவை சொல்லு! பையன் எப்படி இருந்தான்?”

“”கருப்பா இருந்தான். அவன் முதுகில சிவப்புக் கோடு…”

“”சிவப்புக் கோடா!”

“”ஆமா!”

சிவப்புக் கோடு என்று மனைவி சொன்னதும், குருக்களுக்குக் கீதை விளக்க உரையில், சிவப்பு மையினால் “நேரில் தோன்றி’ என்ற வார்த்தைகளை அடித்தது அவர் நினைவுக்கு வந்தது.

உடனே பூஜை அறைக்கு ஓடினார். அந்தப் புத்தகத்தை எடுத்து விரித்துப் பார்த்தார்.

காலையில் அவர் போட்ட கோடு மாயமாக மறைந்திருந்தது.

உடனே கிருஷ்ணர் விக்ரகத்தைப் பார்த்தார்.

“”கண்ணா! உன் கீதையின் மகத்துவம் புரியாமல் ஒருகணம் சந்தேகப்பட்டுவிட்டேன். என்னை மன்னித்துவிடு” என்று கெஞ்சினார். அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த மனைவியிடம் குருக்கள் சொன்னார் –

“”வீட்டுக்கு வந்தது வேறு யாருமில்லேடி. சாட்சாத் கிருஷ்ண பரமாத்மாவேதான்!” என்றார்.

உடனே மனைவி, “”வந்தது கிருஷ்ண பரமாத்மாவா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டவாறு கிருஷ்ணர் சிலையின் முன்பாக விழுந்து கண்ணீர் மல்க வணங்கினாள்.

அப்போது குருக்கள் –

“”ஆமா! நான் வேதங்கள் கற்றிருந்தும் கண்ணன் எனக்குக் காட்சியளிக்கவில்லை. நீ எதையுமே படிக்காதவள் ஆனால், நீ முழுநம்பிக்கையோடு அவனிடம் சரணடைந்து அல்லும் பகலும் அவனையே தியானிப்பவள். என் அவநம்பிக்கையால் கீதையில் இருந்த இரண்டு வார்த்தைகளை அடித்தேன். அதனால் உஞ்சவிருத்தியில் எனக்கு உணவு கிடைக்கவில்லை. உன் அளவில்லாத பக்தியால்தான் அவர் நேரில் உன்முன் தோன்றி, தேவையானவைகளைக் கொடுத்திருக்கிறார். அவர் முதுகில் நீ பார்த்த கோடு, கீதையில் நான் என் அவநம்பிக்கையால் கிழித்த சிவப்புக் கோடு. இப்போது, என் தவறை நான் உணர்ந்துவிட்டேன்” என்றார்.

“”சாப்பாடு தயாராக இருக்கிறது. வாங்க, சாப்டுக்கிட்டே பேசுவோம்…” என்றாள், குருக்களின் மனைவி.

– சுமந்திரன் (செப்டம்பர் 2012)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *