கற்பனை கோட்டை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 7,244 
 
 

ஒரு ஊரில் சுந்தரம் என்று ஒருவன் இருந்தான். அவன் மனைவி பெயர் விஜயா. அவர்கள் வீட்டிற்கு அடுத்த வீட்டில் ஒரு பெரியவர் இருந்தார். அவர் பெயர் ரங்கன். இருவரும் மிகுந்த ஏழை. ஆனாலும் வெட்டிக் கதை பேசுவதில் வல்லவர்கள். கனவுலகத்திலேயே சஞ்சரிப்பவர்கள். உடமை என்று சொல்லிக் கொள்ள அவர்களிடம் சில சட்டிப் பானைகள் தானிருந்தன. ஆனாலும் தினசரி என்ன வியாபாரம் செய்யலாம். என்ன தொழில் செய்யலாமென்று கணவனும், மனைவியும் பேசிக் கொண்டே இருப்பர். ஏதாவது ஒரு தொழில் செய்யலாமென்று தீர்மானிப்பர். உடனே அந்த தொழில் எப்படி விருத்தியாகிறது. எவ்வளவு லாபம் கிடைக்கிறது. தாங்கள் என்னென்ன சுகம் அனுபவிப்பது என்றெல்லாம் வாய் கிழிய பேசி பொழுதை கழிப்பர்.

அதை எல்லாம் அடுத்த வீட்டு ரங்கன் கேட்டுக் கொண்டே இருப்பார். அவருக்கு சிரிப்பு வரும். வெறும் கையால் முழம் போடுகிறார்களே பாவம் என்று எண்ணுவார். ஒரு நாள் கணவன், மனைவி இருவரும் பால் வியாபாரம் செய்வதைப் பற்றி பேச ஆரம்பித்தனர். “”என்னிடம் பணமிருந்தால் பசுக்கள் வாங்குவேன்?” என்றான் சுந்தரம். “”பசுக்களை மேய்ச்சல் தரைக்கு ஓட்டிப் போய் மேய விடுவேன். அங்கே அவைகள் போடும் சாணத்தை கூடையில் எடுத்து வந்து நம் வீட்டுச் சுவற்றில் வரட்டி தட்டுவேன். அவைகளை விற்று காசு சேர்ப்பேன்!” என்றாள் விஜயா.

“”நான் என்ன செய்வேன் தெரியுமா விஜயா? கறந்த பாலைக் கொண்டு போய் விற்று காசாக்குவேன்!” என்றான் சுந்தரம்.

“”விற்காது மீதமான பாலை காய்ச்சி அதை தயிராக்குவேன். தயிரை கடைவேன். வெண்ணை கிடைக்கும். வெண்ணையை காய்ச்சுவேன். நெய் கிடைக்கும், தயிர், மோர், வெண்ணை, நெய் எல்லாம் கூடையில் எடுத்துக் கொண்டு தெருத் தெருவாக போய் விற்பேன். விற்று காசாக்குவேன். காசை பணமாக்குவேன்…” எனக்கு அவ்வளவு திறமை இருக்கு தெரியுமா? என்றாள் விஜயா.

“”அப்படி செய்தும் பால், தயிர், வெண்ணை, நெய் மிச்சமாகி விட்டால் என்ன செய்வது?” என்று கவலைப்பட்டான் சுந்தரம்.

“”இதற்காக கவலைப்படுவார்களா என்ன? நாலு வீடு தள்ளித்தானே என் தங்கை குழந்தை குட்டிகளோடு இருக்கிறாள். அவளுக்கு கொடுத்து விடுவேன்!” என்றாள் விஜயா. அதைக் கேட்டதும் கோபம் பொத்துக் கொண்டது.

“”நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறவைகளை உன் தங்கைக்கும், குழந்தைகளுக்கும் கொண்டு போய் கொடுப்பாயா? அவைகளை நீ கொண்டு போய் கொடுக்காதபடி செய்து விடுகிறேன் பார்!” என்று கத்தியபடி வீட்டிலிருக்கிற நான்கு பானைகளை தயிர், மோர், வெண்ணை, நெய் இருப்பதாக நினைத்துக் கொண்டு எல்லாப் பானைகளையும் உடைத்து விட்டான் சுந்தரம்.

இவைகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார் பக்கத்து வீட்டு ரங்கன் பகல் கனவு கண்டு கடைசியில் தம் கைப் பொருளை இழக்கும் இருவருக்கும் புத்தி வர ஏதாவது செய்ய வேண்டும் என்றெண்ணினார்.

சுந்தரம் வீட்டினுள் நுழைந்தார். அங்கு மூலையில் சார்த்தி வைத்திருந்த ஒரு கோலை எடுத்து வெறும் வெளியில் அப்படி இப்படி வீசி, “”ஹை… ஹை…” என்று விரட்டினார்.

“”ரங்கா…! எதை விரட்டுகிறீர்கள்?” என்றான் சுந்தரம்.

“”உன் பசு என் தோட்டத்தில் நுழைந்து செடிகளை எல்லாம் நாசமாக்கிவிட்டது. எனக்கு நஷ்டஈடு கொடு!” என்றான்.

“”யோவ்! என்னய்யா சொல்ற… இது என்ன புது கதை… எங்ககிட்ட ஏது பசு?” என்று ஒரே நேரத்தில் சண்டைப் போட்டனர் கணவன், மனைவி இருவரும்.

“”இப்போ புரியுதா… இல்லாத பசுக்களை வைத்து சண்டைப் போட்டே இருவரும் இவ்வளவு நாட்கள் பொழைப்பை ஓட்டி விட்டீர்கள். இதனால் லாபம் என்ன? உங்க வீட்டுப் பொருட்கள் போனதுதான் மிச்சம். இனி இந்த கற்பனை கோட்டையை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு உழைக்கிற வழியை பாருங்க!” என்றார்.இருவரும் வெட் கத்தில் தலை குனிந்தனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *