(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அந்தக் சுமுகுமரம் நீண்டு நிமிர்ந்து நின்றது. அதன் அடியில் பல புற்கள் அதிகாரம் மிக்க ஒரு முதலாளியின் எதிரில் பல தொழிலாளிகள் கை கட்டி வாய் புதைத்து நிற்பது போல நின்றன.
அங்கே, திடீரென்று வீசிய இளங் காற்று அப் புற்களை அசைத்து விட அவற்றில் ஒன்று தன்னை அந்த நிலையிலிருந்து கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் அந்தக் கமுகுமரத்தில் மோதி மீண்டது. கமுகுமரத் துக்கோ அது பெரும் ஆத்திரத்தை ஊட்டியது. உடனே அது, ‘சீ… இந்தச் சிறு எதிர்ப்புக்குத் தாக்குப் பிடிக்க முடியாத நீ எப்படித்தான் நீண்டகாலம் உயிர் வாழப் போகின்றாயோ?” என்றது அந்தப் புல்லைப் பார்த்து.
அதற்கு அப்புல்லோ பின்வருமாறு கூறியது: “ஐயா பெரியவரே, எதிர்ப்புக்குத் தக்கவாறு வளைந்து கொடுத்துச் சமயோசிதமாக வாழ எனக்குத் தெரியும். ஆனால் அவ்வாறு நடந்து கொள்ள உனக்குத் தெரியாது. ஆகவே, உனது வாழ்வுதான் எப்போது முடியுமோ என்ற கேள்விக் குறியில் உள்ளது”
‘நான்’ என்ற கர்வம் கொண்ட அந்தக் கமுகுமரம் அதனைக் கேட்டுத் தனக்குள் மெள்ளச் சிரித்துக்கொண்ட து. பின்பு புல்லை நோக்கி, “பொடிப் பயலே! ஆ… அப்படியா சொல்லுகிறாய்? இனி உன்னோடு பேசிப் பயனில்லை. காலம் வரட்டும் பார்ப்போம்” என்று பகர்ந்தது.
கமுகுமரத்தின் பேச்சு அந்தப் புல்லுக்கு முள்ளாய்த் தைத்தது. இருந்தாலும் அது தனது பொறுமையை இழக்கவில்லை. பணிவாக, “அப்படியா… சரி” என்று தனது தலையை அசைத்தவாறு பதிலளித்தது.
மறுகணம், மெள்ள வீசிய காற்று பெரும் புயலாய் மாறிச் சீறியது. அதில் அகப்பட்ட அந்தக் கமுகுமரம் அடியால் முறிந்து தரையில் வீழ்ந்தது. ஆனால் அப்புல்லோ, அந்தப் புயலுக்கு நன்கு வளைந்து கொடுத்து விட்டுத் தனது பழைய நிலைக்கு மீண்டது.
பின்பு அந்தப் புல், குற்றுயிராய்க்கிடந்து அழுது வடித்த கமுகுமரத்தை நோக்கி, ”பெரியவரே, இப்போது பார்த்தீரா… நான் சொன்னது சரியாகப் போய் விட்டதே” என்றது.
அதற்கு, உயிர் பிரியும் நிலையிலிருந்த அந்தக் கமுகுமரத்தினால் எதுவித பதிலுமளிக்க இயலவில்லை. ஆனால் அதன் பார்வை மட்டும், ‘ஆம்… நீ சொன்னது சரிதான்’ என்று கூறுவது போல் தோன்றியது.
– தினகரன் – 1975.07.16.
– நாங்கள் மனித இனம் (உருவகக் கதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1991, கல்முனை ஸாஹிறாக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் வெளியீடு.