(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒரு மரக் கிளையில் ஆணும் பெண்ணுமாக இரண்டு காகங்கள் கூடு கட்டிக் கொண்டு வாழ்ந்து வந்தன. அந்தக் காகங்கள் அம்மரக் கிளையில் நெடு நாளாகத் தங்கியிருந்து வந்தன. அந்த மரத்தில் இருந்த ஒரு பொந்துக்குக் கரும்பாம்பு ஒன்று புதி தாக வந்து சேர்ந்தது. அந்தக் கரும்பாம்பு, பெண் காகம் இடுகின்ற முட்டைகளை எல்லாம் ஒன்று விடாமல் குடித்துக் கொண்டிருந்தது. காகங்களால் இதைப் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை.
ஆண் காகம் தன் உயிர் நண்பனான நரி யொன் றிடம் போய் யோசனை கேட்டது.
‘அந்தப் பாம்பைக் கொல்வதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன். அரசியாரின் குளியல் அறைக்குப் பறந்து போ. அவர்கள் குளிக்சுச் செல்லும் போது கழற்றி வைக்கும் நகைகளில் ஒன்றைக் கொண்டு வந்து பொந்தில் போட்டு விடு. பிறகு என்ன நடக் கிறது என்று பார்!’ என்றது நரி.
காகம் அப்பொழுதே அரண்மனைக்குப் பறந்து சென்றது. அரசி அப்போதுதான் நகைகளைக் கழற்றி வைத்துவிட்டுக் குளிக்கத் தொடங்கினாள். காகம் போய் ஒரு நகையைக் கௌவிக் கொண்டு பறந்தது. அரசி கூவினாள். உடனே வேலை ஆட்கள் ஓடி வந்தார்கள். அரசி நடந்ததைக் கூறிய தும், வேலையாட்கள் காகத்தைப் பின் தொடர்ந்து ஓடி வந்தார்கள், காகம் பறந்து வந்து, பாம்பு இருந்த பொந்துக்குள் நகையைப் போட்டுவிட்டு வேகமாகப் பறந்து சென்றது. பின் தொடர்ந்து வந்த வேலைக்காரர்கள் இதைக் கண்டார்கள். உடனே வேகமாக ஓடி வந்து அந்த மரப் பொந்தைப் பிளந்தார்கள். உள்ளேயிருந்த பாம்பு சீறிக் கொண்டு வெளியில் வந்தது. அரண்மனையாட்களில் ஒருவன் தன் வாளால் அதை இரு துண்டாக வெட்டிப் போட்டான். பிறகு வேலைக்காரர்கள் பொந்துக்குள் கிடந்த நகையை எடுத்துக் கொண்டு போய் அரசியிடம் கொடுத்தார்கள்.
காகங்கள் எவ்விதமான கவலையும் இல்லாமல் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து மேலும் பல நாட்கள் இன்பமாக வாழ்ந்து வந்தன.
சூழ்ச்சியினால் எதையும் எளிதாக முடிக்கலாம் என்பதற்கு இந்தக் கதை ஓர் எடுத்துக் காட்டாகும்.
– பஞ்சதந்திரக் கதைகள் (படங்களுடன்), முதற் பதிப்பு: மார்ச் 1996, அன்னை நாகம்மை பதிப்பகம், சென்னை.