கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 29, 2022
பார்வையிட்டோர்: 15,146 
 

(1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கரிகாலன் என்பவன் தலைசிறந்த சோழ நாட்டு மன்னன். இவன் இளமையில் மிகுந்த அல்லலை அடைந்தான். தொல்லைகளால் துய ருற்றான். ஆனால், முயற்சியை இழக்கவில்லை. மேலும் மேலும் முயற்சியைக் கைக்கொண்டு முன்னேற்றம் அடைந்தான். சிறையிலிட்டுப் பெருந்தீக்கொண்டு இவனைக் கொல்லுதற்கு இவன் பங்காளிகள் சூழ்ச்சி செய்தனர். அத்துன்பமும் இவனை நெருங்கவில்லை.

வயது நிரம்பிக் கட்டிளைஞனான இவனுக்கு ஓர் ஆவல் உண்டாயிற்று. அஃதாவது, தண் தமிழ் நாடே யன்றி, வடநாட்டையும் தன் ஒரு குடைக்கீழ்க் கொண்டுவருதல் என்பது. அதற் கேற்பத் தன் படையினை இவன் ஒழுங்குபடுத் திக்கொண்டான். வில்வீரர், வாள்வீரர், புரவி வீரர், தேர்வீரர் என்னும் பல திறத்தவர் வீர ஒலி செய்யப் படை புறப்பட்டது.

படை, பாண்டி நாட்டை நோக்கிச் சென் றது. பாண்டி நாடு பணிந்தது.

பாண்டி நாட்டுக்கு மேற்கில் சேர நாடு அமைந்திருந்தது. சோழன் சேர நாட்டின் மேற் சென்றான். அந்நாட்டினை, அப்போது அரசுபுரிந்தவன் சேரமான் பெருஞ்சேரலாதன் என்பவன். அவனும் கரிகாலனைப்போல் வீரம் நிறைந்தவன். தன் நாடு பிறருக்கு அடிமைப் படலாகாது என்று எண்ணும் இயல்பு வாய்ந்தவன்.

சோழர் முன்னணிப்படை சேர நாட்டு எல்லையை அடைந்தது. இதனைச் சேரமான் அறிந்தான். அவன் கண்ணில் நெருப்புப் பொறி பறந்தது. மீசை படபட எனத் துடித்தது. “என்ன எண்ணங்கொண்டான் இச் சோழன்! இவனினும் யான் தாழ்ந்தவனோ! தனக்கு அரச நிலை கிடைத்தால், பிற நாட்டு அரசரது தகுதியைக் கெடுக்க வேண்டுமா? இவன் நாடுதான் உரிமையோடு வாழவேண்டுமா? என் நாட்டினர் அடிமைகளாகத் தொண்டுசெய்ய வேண்டும் என்பது இவன் எண்ணம் போலும்! யான் உயிருடன் வாழும் வரை, இவன் எண்ணம் ஈடேறாது,” என்று கூறினான்.

பின்பு அரசவையிலிருந்த யாவரையும் மன்னன் பார்த்தனன். அங்கிருந்த சேனைத் தலைவனை அவன் கண்கள் தேடின. அவனை விளித்து, “சேனைத் தலைவ! படைகள் அணிவகுக்கப்படட்டும். சோழர்படை நமது நாட்டுள் புகுந்து மக்களுக்குத் தொல்லையை விளைக்குமுன் நாம் முன்னேறிச் சண்டை இடுவோம். இன்று யானே தலைவனாக இருப்பேன்,” என்று கூறினான்.

போர்ப்பறைகள் முழங்கின; கேடகங்கள் ஒன்றோடொன்று பட்டுப் பேரொலி எழுந்தது. ஈட்டிகள் உரைசி எங்கும் ஒலிபரந்தது. குதிரைகள் கனைத்துக் கிளர்ச்சி உற்றன. யானைகள் பிளிறி எழுச்சியுற்றன. வீரர்கள் கடலலைபோல ஆரவாரித் தெழுந்தனர்.

சேரன், தானே தலைவனாய்ப் படையினை நடத்திக்கொண்டு வருகின்றான் என்பதைச் சோழன் அறிந்தான். ‘யானும் படைத்தலைமை ஏற்பேன்,’ எனத் தன் தலைமையின் கீழ்ப் படையினை நடத்தலுற்றான்.

முடிதரித்த இருவேந்தர்களையும் தலைவர்ளாகக் கொண்டன கடலை ஒத்த படைகள். வெண்ணிப்பறந்தலை என்னுமிடத்தில் எதிருற்றன. வாள்வீரர், வாளினை வீசி எதிர்ப்பட் டோரைக் கொன்றனர். எதிரிருப்போர், பகைவர் வாள்வீச்சுத் தம்மேற் படாதிருக்குமாறு தம் உடல் முழுவதுங் கேடகத்தால் மறைத்துக் கொண்டு போரிட்டனர். வில்வீரர் தம் குறி பிழையாவண்ணம் அம்பெய்தனர். ஈட்டியாளர் தம் பகைவருடலில் தம் படையை மாட்டினர். இங்ஙனம் இரு திறத்தினரும் தம் ஆற்றலைக் காட்டிப் போரிட்டனர். செந்நிறக் குருதி மண்ணில் படிந்தது. மண் தன் நிறத்தை இழந்து செந்நிற மாயிற்று. முதலில் சிற்றருவி யாய் ஓடிய குருதி பின்னர்ப் பேர் ஆறாய்ப் பெருகியது.

சேரமான் படை, சோழர் வன்மையை எதிர்த்து நிற்கும் ஆற்றல் அற்றுச் சிறிது பின் வாங்கத் தொடங்கியது. சேரன், “இப்போழ்து என் வீரரை, யான் இப்படியே விட்டுவிடின் பின்னர் இவர்கள் ஓடுவர். ஆதலின், இப்போதே இவருக்குத் தக்க உணர்ச்சியை உண்டாக்க வேண்டும்,” என்று எண்ணினான். முன்னர், படையின் பல இடங்களிலிருந்து ஆங்காங்குக் கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டிருந்தனன். இப்போது அதனை விடுத்துச் சேனையின் முன் அணிக்கே வந்தனன்.

“சேர வீரர்களே! சேரவாரீர். மலைநாட்டு மக்களே! நாம் உயிருடன் வாழும் போதே, நம் மலைமங்கையின் மானம் எனும் அணி கவரப் படல் அழகிதோ? மானம் உயிரினும் சிறந்தது. வீரம் நம் செல்வம். செல்வத்தைச் செலவிட்டு மானத்தைக் காப்பாற்றல் வேண்டும். உயிர் ஒரு பொருட்டன்று,” என வீரங்கிளர்ந்தெழப் பேசினன்.

பின்வாங்கிய சேரர் நின்றனர். எதிர்ப் புணர்ச்சி கொண்டு காலை முன்னோக்கி வைத்தனர். சோழரை எதிர்த்தனர். காரணம் யாது? சேரமான் சொற்கள், வீரர் செவி வழிச் சென்றன. உள்ளத்திற் சோர்ந்துகிடந்த வீரம் எனும் பசும்பயிர்க்கு அச்சொற்கள் நல்ல நீருணவு ஆயின. வீரப்பயிர் மயக்கம் தெளிந்தது; தலை நிமிர்ந்தது. விளக்கம் உற்றது.

புத்துணர்ச்சியுடன் போரிடும் சேரருக்குச் சோழர் உடைகின்றனர். ‘மலைபோல் வரும் மலை நாட்டு வீரரை அசைத்தலும் தம்மால் ஆகாது போலும்!’ என அஞ்சுகின்றனர். ‘தக்ககாலம் இதுவே’ என்றுணர்கின்றான் சேரன். முன்னணியில் பல இடங்களில் நின்று உணர்ச்சியை உண்டாக்கும் சொற்களைக் கூறு கின்றான். சேரன் முயற்சி அவ்வளவில் நின்றுவிடவில்லை. தானும் போர்வீரனைப்போல் படையைத் தாங்கிப் போரிடுகின்றான். சோழ வீரர் நலிகின்றனர். எதிரேறும் வன்மையை இழக்கின்றனர், பின் வாங்குகின்றனர்.

கரிகாலன், தன் படை பின்னடைவதை அறிந்தான். சில நாழிகைக்குள் சேரன் முழுத் தோல்வியை அடைவான் என்று இவன் முன்பு எதிர்பார்த்தான். நிலைமை வேறாயிற்று. கார ணம் யாது எனக் கருதினான். சேரர்படையினை ஊன்றிக் கவனித்தான். சேரமானைப் படைத்தலைப்பில் கண்டான். அவன் ஆற்றும் பெருஞ் செயலை அறிந்தான். போர் அப்போது நடக்கும் முறையிலேயே விடப்பட்டால், வெற்றி சேரனைப் பற்றும் எனத் துணிந்தான். தான் வெற்றி பெற முயன்றான்.

“சேரர் தலைவனில்லையேல், சேரர் தோல்வியுறுதல் உறுதி. அவருக்கு உணர்ச்சி ஊற்றாக இருப்பவன் சேரமானே. அவன் வீழ்த்தப்படுவானானால் போரும் முடிவுபெறும்,” என்று நினைத்துத் தானும் சேனையின் முன்னிடத்தை அடைந்தான்.

தன் கை வில்லிலிருந்து பல அம்புகளைச் சேரமானைக் குறியாக வைத்து எய்தான். சேரமானும் அவ்வம்புகளைத் தன் கேடகத் தில் தாங்கித் தானும் அம்புகளை எய்தான். இருவரும் வெற்றி தோல்வி இல்லாமல் சண்டை இட்டனர். ஒருவரை நோக்கி ஒருவர் நெருங்கினர். விற்சண்டை வேண்டாம் என விடுத்தனர். வேற்சண்டையைக் கைக்கொண்டனர். ஒருவரை ஒருவர் கொல்லுதற்கு இடம் பார்த்தார்கள். கரிகாற் பெருவளத்தான் ‘எப்போது சிறிது இடைவெளி கிடைக்கும்; கைக்கேடகம் சிறிது இடம் தரினும் போதும்,’ என்னும் ஒரே குறிப்புடன் இருந்தான், ‘இனிக் காலம் தாழ்க்கலாகாது,’ எனச் சேரன் மார்பினையே குறியாக வைத்துத் தன் கூரிய வேற்படையை எறிந்தான். அப்படைக் குத்தினை விரைந்து கேடகத்தில் ஏற்கச் சேரமான் முற்பட்டான். ஆனால், அவன் கால்கள் இரத்தப் பசையால் சிறிது சறுக்க, ஒரு புறமாகச் சாய்ந்தனன். இதனைச் சோழன் கண்டான். தன் நிலை தவறும் ஒருவன் மேல் படை எறிதல் தக்கதன்று. இதனை உணர்ந்தவன் அரசன் கரிகாலன்! ஆனால், அவன் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. வேல், அவன் கையினின்றும் எழுந்துவிட்டது. நொடிப்பொழுதில் சேரமானுடைய முதுகில் அது ஒரு பக்கமாகப் பாய்ந்தது. இருபுறத்து வீரரும், ‘ஆ’ என்று அலறினர்.

SangaNool2வீரம் செறிந்த சேரமான் முதுகில் புண் உண்டாய் விட்டது! வீரர் புறப்புண்ணைக்கண்டு வெட்கப்படுவர். மார்பில் படும் புண்ணையே செல்வம் எனப் போற்றும் சீரியோருக்கு, முதுகுப் புண் எவ்வளவு துன்பத்தை உண்டாக்கும்! ஆதலால், பகைவரும் நண்பரும் மனம் வருந்தினர். ‘இவன் முதுகில் நம் வேல் பட்டதே! என்னே நம் வீரம்!’ எனக் கரிகாலனும் மனம் கருகினான்.

கால் சறுக்கிச் சாய்ந்த சேரமான் முதுகில் வேற்படை பட்ட அளவில், குருதி பீரிட்டுக் கொண்டு வெளிவந்தது. ஆயினும், அவன் உயிர் போகவில்லை. சேரமான் நடந்ததை உணர்ந்தான்; மனம் உடைந்தான். வேல் பாய்தலால் உண்டாகிய புண்ணின் வழியே வெளிவந்த செந்நீரினும், கண்ணீர் மிகப் பெருகிற்று; ஏன்? ‘மானம் உயிரினும் சிறந்தது’, எனத் தன் வீரர்களுக்கு அவன் கூறவில்லையா? அவனுக்கும் அவ்வுணர்ச்சி இருக்குமன்றோ ? “ஐயோ! முதுகில் பாய்ந்த வேல், என் உயிரைக் கொல்லாது என்னை இந்நிலையில் விடுத்ததே,” என்று எண்ணி ஏங்கினான். “நடந்ததைப்பற்றி வருந்துவானேன்?, வேல்
போக்காத உயிரை யான் போக்குவேன்,” என்ற முடிவிற்கு வந்தான். வீரர்க்கு உயிரினும் விழுமியது வீரம் ஒன்றே.

போர்க்களத்தை விடுத்தான். ஆறிடு மணல்மேடொன்றைத் தேர்ந்துகொண்டான். அங்கே சென்றான். வடதிசை நோக்கி அமர்ந்து, உணவை ஒழித்து ஆண்டவனை எண்ணி இருந்தான். நாள் பல ஆயின. உணவின்மையால் உரம் குறைந்தது; உடல் நலிந்தது; உயிர் பிரிந்தது.

மாணவர்களே! நீங்கள், வீரத்துடன் போர்புரிந்த கரிகாலனைப் புகழ்வீர்களா? கால் தவறுதலால் நேர்ந்த புறப்புண்ணும் ஆகாது என நாணி உயிர்விடுத்த சேரமானைப் புகழ்வீர்களா? மானமும் வீரமும் வாய்ந்த இவர்கள் இருவரும் நம் மூதாதையர்கள் என எண்ணும் போது, நமக்கு இந்நிலை எவ்வளவு உருக்கந் தருகின்றது.

“மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்.” – குறள்.

– சங்கநூற் கதைகள், முதற் பதிப்பு: ஜனவரி 1942, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *