தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 10,433 
 
 

எங்கள் குடும்பம் மிகவும் அமைதியான குடும்பம். என் அப்பா, அம்மா, அண்ணன் என அன்பான குடும்பம். என் சிறுவயதில் நான் கஷ்டப்பட்டே என் பாடங்களை நினைவில் வைக்க வேண்டியிருந்தது.

நான் எனது கனவு ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனது கனவு – வானில் சைக்கிளில் பறக்க வேண்டும் என்பதுதான்.

கனவுஎன்னுடைய பறக்கும் சைக்கிள் மாதிரியை தினமும் கற்பனை செய்வேன். வானில் பறவைகள் பறக்கும்போது, நானும் அவற்றின் நடுவே எனது பறக்கும் சைக்கிளில் பறந்து பயணம் செய்வது போல இருக்கும்.

சரி, இதற்கான எரிபொருள் என்ன நிரப்பலாம்? எப்படி வடிவமைக்கலாம்? என்ன தொழில்நுட்பம் பயன்படுத்தினால் பறவைகள் மாதிரி சுதந்திரமாகவும் இலகுவாகவும் வானில் சைக்கிளில் பறக்கலாம்? இப்படிப்பட்ட கேள்விகள் எனது மனதில் அடிக்கடி தோன்றும்.

ஆனால், சமுதாயத்தில் எனது நிலைமையை சொல்லவே வேண்டியதில்லை. “”பறக்கும் சைக்கிளா? ஏன், ஏரோப்ளேன்தான் இருக்கிறதே? இதெல்லாம் உனக்குத் தேவையா? பாடங்களையே உன்னால் நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை… நீயெல்லாம் பறக்கும் சைக்கிள் பற்றிக் கற்பனை செய்வதா? அதற்கு இறக்கை இருக்குமா? உன்னால் இதெல்லாம் முடியவே முடியாது… வீணாகக் கற்பனை செய்து கொண்டிருக்காதே!” -இப்படி ஏளனப் பேச்சுகளைப் பலமுறை கேட்டிருக்கிறேன். சுற்றிச் சுற்றி எங்கும் ஏளனக் கேள்விக் கணைகள்!

இருந்தாலும் என் கனவோ பறக்கும் சைக்கிளிலேயே இருந்தது!

அமைதியான ஓர் இரவில் பளிச்சென்ற வெளிச்சம் என் உள்ளத்தில் பரவியது. புராண காலங்களில் பறக்கும் விமானங்கள் இருந்திருக்கின்றனவே! தேவர்கள் அதில் அங்குமிங்கும் பறந்திருக்கிறார்களே! அப்படியென்றால் பறக்கும் சைக்கிளும் சாத்தியம்தானே! நிச்சயம் ஒருநாள் நான் பறக்கும் சைக்கிளைக் கண்டுபிடிப்பேன் என்று உறுதியெடுத்துக் கொண்டேன்.

மாயக்கண்ணாடியில் தொலைதூர நண்பர்களுடன் உரையாடினார்கள் என்று கேட்டவுடன்… இதெல்லாம் நடக்குமா என்று சிரித்தோம். ஆனால் இப்போது இன்டர்நெட் அதைத் தானே செய்கிறது. வில்லும் அம்பும் கொண்டு விண்ணில் பாணங்களைச் செலுத்தினார்கள் என்று கதைகளில் படித்திருக்கிறோம். இப்போது அவையும் நனவாகி ஏவுகணைகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டனவே?

முகம் பார்க்காமல், மொழி அறியாமல் மற்றவர்களுடன் நட்பு கொள்வது சாத்தியமில்லை என்று நகையாடினோம். இப்போது இ-மெயில், சாட்டிங் என்று விஞ்ஞானத்தால் அதெல்லாம் சாத்தியமாகிவிட்டது.

பழங்காலத்தில் மந்திரம், தந்திரம் என்று சொன்னதெல்லாம் இன்று செயற்கைக் கோள், செல்போன், நெட் என்று விஞ்ஞானமாகிவிட்டது. சாத்தியமே இல்லையென்று கருதப்பட்ட கண்டுபிடிப்புகளெல்லாம் சாத்தியமாகி இருக்கின்றன.

அதனால் ஒருநாள் நம்முடைய புஷ்பக் விமானம் பறக்கும் சைக்கிளாக உருமாறும் என்ற நம்பிக்கை விதைகள் என்னுள்ளத்தில் பதிந்து கொண்டே இருந்தன.

உயர்நிலைக் கல்வி கற்கும் சமயத்தில் எனக்கு வாய்ப்புகள், வழிகள் தெரியவில்லை. ஆயினும் குடும்பத்தின் ஊக்கமும் என்னுடைய முயற்சியும் ஒருநாள் எனது கனவை நனவாக்கும் என்ற நம்பிக்கை எனக்குள் ஆழமாக வேரூன்றிவிட்டது!

2087-ம் ஆண்டு. தமிழ்நாடே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. பிரதமர், முதலமைச்சர், விஞ்ஞானிகள் எனப் பல வி.ஐ.பி.க்கள் வருகை தந்திருந்தனர். விஞ்ஞானி ஒருவரைப் பாராட்டவே இத்தனை பெரிய திருவிழாவுக்கு ஏற்பாடாகி இருந்தது.

சக்தி, ஓர் இளம் விஞ்ஞானி. அவளுடைய சாதனைக்காகத்தான் இந்தத் திருவிழா. மேடையில் கம்பீரமாக அமர்ந்திருந்தவளை, பேசுவதற்காக அழைத்தார்கள்.

மைக் அருகே வந்தவள், தனது பறக்கும் சைக்கிள் “புஷ்பக்’ பற்றி விளக்கமாக எடுத்துக் கூற ஆரம்பித்தாள். அவள் பேசி முடித்ததும் அனைவரும் கைதட்டி ஆரவரித்தார்கள். விஞ்ஞான உலகமே வியந்துபோய் அவளைப் பாராட்டியது!

விழா இனிதே முடிந்தது.

சக்தியைச் சூழ்ந்து கொண்ட நிருபர்கள், “வானில் பறப்பதற்கு பல சாதனங்கள் இருந்தும், நீங்கள் ஏன் பறக்கும் சைக்கிளை உருவாக்கினீர்கள்?’ என்று கேட்டார்கள்.

அதற்கு சக்தி, “விமானத்தின் உள்ளே அமர்ந்து பறந்தாலும் பறவைகள் மாதிரி சுதந்திரமாகப் பறக்கும் உணர்வை அது நமக்குத் தராது. ஆனால் எனது புஷ்பக், நிச்சயம் அந்த உணர்வைத் தரும். பாராசூட்டில் கூட ‘ரிஸ்க்’ அதிகம். ஆனால் எனது புஷ்பக்கில் அந்தச் சிரமம்கூட இருக்காது. நமது புராணக் கதைகளில் வந்தவற்றை நான் அறிவியல் மூலம் சாதித்திருக்கிறேன். அவ்வளவே!’ என்றாள்.

அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுக் கொண்ட சக்தி தனது வீட்டுக்குத் திரும்பினாள். வீட்டுக்குள் நுழைந்தவுடன் தனது பாட்டியின் புகைப்படத்துக்கு நேரே போய் நின்றாள். அவளது கண்களிலிருந்த ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது.

“என்னால் முடியாவிட்டாலும், தலைமுறைகளைக் கடந்து என் கனவை, நம்பிக்கை விதையை, நீ மரமாக்கி சாதனை புரிந்திருக்கிறாய்…’ என்று பாட்டி தன்னை அரவணைத்துக் கொண்டு கூறுவதை சக்தி உணர்ந்தாள்.

“பாட்டி, உனது கனவான பறக்கும் சைக்கிள்…. ஆம்… புஷ்பக் நனவாகிவிட்டது..!’ என்று சக்தியின் மனம் ஆனந்தமாகக் கூவியது.

– ஆர். மீரா பாரதி (மார்ச் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *