(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத் தின் மீது ஏறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின் னர் கீழே இறங்கி அவன் அதனைச் சுமந்தி கொண்டு மயானத்தை நோக்கிச் செல்கையில் அதனுள் இருந்த வேதாளம் எள்ளி நகைத்தது. “மன்னனே! நீ உன் நோக் கத்தை நிறைவேற்றிக் கொள்ள முரட்டுப் பிடிவாதம் பிடிப்பது போலத் தெரிகிறது. இதுபோலத் தன் எண்ணம் நிறைவேற முரட்டுப் பிடிவாதம் பிடித்து முடிவில் அதைக் கைவிட்ட அரசகுமாரி கனகாங்கியின் கதையைக் கூறுகிறேன். கவனமாகக் கேள்” என்று கூறி கதை சொல்ல ஆரம்பித்தது.
மலையகிரியை மந்திரசேனன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனது மகன் இந்திரசேனன் எல்லாக் கலைகளையும் கற்று சிறந்தவனாயும் அழகாயும் இருந்தான். இதனால் அவனுக்கு தன் மகளைக் கொடுத்து மணம் செய்து வைக் கப் பல மன்னர்கள் துடித்துக் கொண்டிருந்தார்கள் அப்படிப் பட்டவர்களில் சந்தனபுர மன்னன் சண்டமாருதனும் ஒருவன்.
சண்டமாருதனின் ஒரே மகள் கனகாங்கி. அவளை சந்திரசேன னுக்கு மணம் செய்து வைக்கச் சண்டமாருதன் எண்ணினான். மந்திரசேனன் அவனது நண்பனும் கூட. அதனால் பேசி ஒரு முடிவிற்கு வர அவன் தீர்மானித்தான்.
கனகாங்கியும் இந்திரசேனனைப் பற்றித் தன் தோழிகள் வாயிலாகக் கேட்டிருந்தாள். அவளும் மணந்தால் இந்திரசேனனையே மணப்பது என்று தீர்மானித்துக் கொண்டாள். தன் தந்தையும் அதையே விரும்புவது கண்டு அவள் தன் எண்ணம் நிறைவேறிவிடும் என எண்ணி மகிழ்ந்தாள்.
சண்டமாருதன் மந்திரசேனனைச் சந்தித்து “நான் இந்திரசேனனை என் மாப்பிள்ளையாக்கிக் கொள்ள விரும்புகிறேன். இதுவரை நாம் நண்பர்களாக மட்டுமே இருந்தோம். இனி சம்மந்திகளாகி விடுவோம்” என்றான். அதைக் கேட்ட மந்திரசேனன் “ஆகா! எனக்கு சம்மதமே. என் மகனை கூப்பிட்டு அவன் அபிப்பிராயத்தையும் கேட்கிறேன்” எனக்கூறி ஒரு பணியாளிடம் உடனே இந்திரசேனனை அழைத்து வரச் சொன்னான்.
மந்திரசேனன் அவனிடம் சண்டமாருதன் கூறியதைச் சொன்னான். இந்திரசேனனோ “என்னை மன்னியுங்கள். நான் இந்தத் திருமணத்திற்கு இசைய மாட்டேன். நான் சாளுவ மன்னர் மகள் சமுத்திரிகாவையே மணக்க விரும்புகிறேன்” என்றான்.
அதைக் கேட்டு மந்திரசேனன் “சரி. உன் இஷ்டம். திருமணம் என்பது உன் வாழ்க்கையோடு சம்மந்தப்பட்டது. நண்பர்களான நாங்கள் சம்மந்திகளாகவும் ஆகி விடலாம் என்று எண்ணினோம். ஆனால் கடவுளின் சித்தம் வேறு விதமாக உள்ளது. அதை நம்மால் மாற்ற முடியாது” என்றான்.
அப்போது சண்டமாருதன் குறுக்கிட்டு “இந்திரசேனா! என் மகள் உன்னையே மனதார விரும்புகிறாள். அவளை நீ வேண்டாம் எனப் புறக்கணிக்காதே” என்றான். இந்திரசேனனோ “நான் மணந்தால் சமுத்திரிகாவைத்தான் மணப்பேன். அதனால் உங்கள் மகளை மணம் செய்து கொள்ள மாட்டேன்” என்று ‘பட்’டென்று கூறிவிட்டான்.
அப்போது சண்டமாருதன் மந்திரசேனனிடம் “நீ நல்லவிதமாக எடுத்துக் கூறி இந்தத் திருமணத்திற்கு சம்மதிக்கவை” என்றான். மந்திரசேனனோ “விவாக விஷயத்தில் அவனை நான் நிர்பந்திப்பது சரியல்ல” என்றான்.
அப்போது சண்டமாருதன் “சரி, சமுத்திரிகாவை மணந்து கொள்வதோடு அவன் என் மகளையும் மணந்து கொள்ளட்டுமே” என்றான். அதற்கு இந்திரசேனனே “எங்கள் வம்சத்தில் எல்லோருமே ஏகபத்தினி விரதத்தை அனுஷ்டிப்பவர்கள். எனவே நீங்கள் கூறுகிறபடி நடக்காது” என்றான்.
அதைக் கேட்ட சண்டமாருதன் கோபம் கொண்டு “நான் சொல்கிறபடி நடக்காவிட்டால் நீங்கள் பயங்கர விளைவுகளைத் தான் எதிர்நோக்க வேண்டிவரும்” எனக் கூறி விட்டுத் தன் நாட்டிற்குக் கிளம்பிப் போய் விட்டான். அதற்கு ஒரு வாரத்திற்குப்பின் மலையகிரி மீது போர் தொடுப்பதாக அவன் அறிவித்தான்.
மந்திரசேனனுக்கு இது மிகுந்த வருத்தத்தையே அளித்தது. வேறு வழியின்றி அவனும் போருக்கான ஏற்பாடுகளைச் செய்யலானான். அப்போது இந்திரசேனன் “தந்தையே! இந்த போருக்கு நான் தானே காரணம். எனவே நானே படைகளுக்கு தலைமை தாங்கிப் போர்க்களத்திற்குச் செல்கிறேன். சண்டமாருதனுக்கு அப்போது தான் என் வலிமை எவ்வளவு என்பது தெரியும்” என்றான்.
சந்தனபுரத்தில் கனகாங்கிக்கும் தன் தந்தை மலையகிரிமீது படை எடுத்துப் போவது கொஞ்சமும் பிடிக்கவில்லை. தன் திருமணத்திற்காக இருநாட்டு வீரர்கள் உயிர் விடுவதை அவள் விரும்பவில்லை. அவள் நன்கு யோசித்துவிட்டு தன் தந்தையிடம் “தந்தையே! நானும் போர்க் கலையை நன்கு கற்றவள். எனவே நான் ஆண் வேடம் அணிந்து போர்புரிய செல்கிறேன். ஆனால் நம் படைகள் எதிரியின் படைகளோடு மோதவேண்டாம். நான் மட்டும் இந்திரசேனனோடு போரிட்டு வெல்கிறேன். பிறகு சமாதான ஒப்பந்தம் செய்யும் போது அவன் நாட்டை அவனுக்குத் திருப்பி கொடுத்து என்னை அவருக்கு மணம் செய்து வைத்துவிடுங்கள்” என்றாள். சண்டமாருதனும் அந்த யோசனையை ஏற்றான்.
கனகாங்கியும் இந்திரசேனனோடு போர்புரிய விசேஷ சக்தி பெறவேண்டும் என நினைத்து குதிரை மீது ஏறி காட்டுக்குள் சென்றாள். அங்குள்ள மகாநந்தர் என்ற யோகியைக் கண்டு தன் பிரச்சினையை கூறினாள். அவரும் “பெண்ணே ! உனக்கு ஒரு மந்திரத்தை உபதேசிக்கிறேன். நீ போர் புரியும் போது உன் வாளுக்கு அபூர்வ சக்தி வேண்டுமென நினைத்து அதை உச்சரி. அந்த வாளுக்கு அந்த ஒரு வினாடி நேரத்திற்கு அந்த சக்தி இருக்கும். அந்த ஒரு வினாடிக்குள் நீ எப்படிப்பட்ட பல சாலியான எதிரியையும் தோற்கடித்து விடலாம். ஆனால் இது உனக்கு ஒரு முறைதான் பயன்படும்” என்று கூறி அனுப்பினார்.
சண்டமாருதன் தன் தரப்பில் இருந்து ஒரு வீரன் இந்திரசேனனுடன் சண்டை இட போவதாயும் அதில் யார் வெற்றி பெறுகிறானோ அத்தரப்பு மன்னனே வென்றவன் எனக் கொள்ள வேண்டும் என்று சொல்லி அனுப்பினான். மந்திரசேனனும் அதற்குச் சம்மதித்தான். அதற்குக் காரணம் வீணாக உயிர் சேதம் ஏற்படுவதைத் தவிர்க்க அவன் விரும்பியதே.
போர்க்களத்திற்கு ஆண் வேடத்தில் கனகாங்கி வந்தாள். இந்திர சேனனும் தயாராக அங்கு இருந் தான். இருவரிடையே வாள் போர் மூண்டது. இந்திரசேனனின் தாக் குதலை கனகாங்கியால் வெகு நேரம் சமாளிக்க முடியவில்லை. அப்போது அவள் தனக்கு மகாநந்தர் உபதேசித்த மந்திரத்தை உச்சரித்தாள். அடுத்த வினாடி அவள் பிடித்திருந்த வாளில் மின்னல் போன்ற ஒளி வீசியது. உடனே அவள் தன் வாளால் இந்திரசேனனின் வாளை தட்டி விட்டாள். அது சற்று தூரத்தில் போய் விழுந்தது. இந்திரசேனனுக்கு அது எப்படி நிகழ்ந்தது என்றே புரியவில்லை.
சண்டமாருதன் இந்திரசேனனை சிறைபிடித்துத் தன் நாட்டிற்குக் கொண்டு சென்றான். மறுநாள் அவன் இந்திரசேனனிடம் “நீ தோற்று விட்டாய். நீ தோற்றது ஆண் வேடத்தில் உன்னோடு வாள் போர் புரிந்த என் மகள் கனகாங்கியிடம்தான். நீ மட்டும் என் மாப்பிள்ளையாகச் சம்மதித்தால் அவளோடு என் நாட்டையும் உனக்கே கொடுக்கிறேன். என்ன சொல்கிறாய்?” என்று கேட்டான்.
இந்திரசேனனும் “என்னை மன்னியுங்கள் மகாராஜா. திருமண விஷயமாக என்னுடைய முடிவு முன்பு நான் கூறியதேதான். அதில் எள்ளளவும் மாற்றம் இல்லை” என்றான். இது கனகாங்கிக்கு அவளது தந்தையின் வாயிலாக தெரிந்தது. அதைக் கேட்ட அவள் மனம் வாடிப்போயிற்று.
சண்டமாருதன் இந்திரசேனனை சிறைபிடித்தான் என்ற செய்தி சமுத்திரிகாவின் தந்தையான சாளுவ மன்னனுக்கு தெரிந்தது. அவன் கோபம் கொண்டு சந்தனபுரி மீது படையெடுப்பதாக அறிவித்தான். அதை அறிந்த சண்டமாருதன் தன் மகளிடம் “கவலைப்படாதே. இந்த சாளுவ மன்னனின் மிரட்டலுக்கு பயப்படமாட்டேன். நம் படைமுன் அவன் படை நிற்க முடியாது. அவன் தோற்று ஓடுவது உறுதி” என்றான்.
கனகாங்கி அதுபற்றி நன்கு யோசித்துப் பார்த்தாள். முடிவில் அவள் தன் தந்தையிடம் “அப்பா! என் மனதை நான் மாற்றிக் கொண்டு விட்டேன். இந்திரசேனனுக்கும் சமுத்திரிகாவுக்கும் நானே முன்னிருந்து திருமணம் செய்து வைப்பது என்று தீர்மானித்து விட்டேன்” என்றாள்.
சண்டமாருதனும் மந்திரசேனனுக்கு ஒரு கடிதம் எழுதினான். அதில் “என் மகள் ஒரு யோகி அருளிய மந்திரத்தின் உதவியால் உன் மகனை வாள் போரில் வென்றாள். அவள் தன் வலிமையால் வெற்றி பெறவில்லை. அதனால் இந்திரசேனன் தோற்றுப் போனான் எனக் கூறமுடியாது. அதனால் உன் நாட்டை உனக்கே தந்து உன் மகனையும் விடுதலை செய்கிறேன்” என்று இருந்தது.
அதன் பிறகு கனகாங்கியே முன் நின்று சமுத்திரிகாவுக்கும் இந்திரசேனனுக்கும் விவாகத்தை நடத்தி வைத்தாள்.
வேதாளம் இந்தக் கதையைச் சொல்லி “கனகாங்கி இந்திரசேனனை மிகவும் விரும்பினாள் என் பதில் சந்தேகமே இல்லை. ஆனால் இந்திரசேனன் அவளை மணக்க ஒப்பவில்லை. ஆனால் கனகாங்கி அவனையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதத்தோடு யோகி மகாநந்தரைக் கண்டு, அவரிடம் மந்திரோபதேசம் பெற்று அதைக் கொண்டு இந்திரசேனனைத் தோற்கடித்தாள். அப்போதும் அவன் கனகாங்கியை மணக்க முடியாது என்றே கூறினான். இதனால் கனகாங்கி அவனைப் பழி வாங்காமல் அவன் விரும்பிய சமுத்திரிகாவையே அவனுக்கு மணம் செய்து வைத்தாளே. இது ஏன்? இப்படி அவள் செய்தது சரியா? இக்கேள்விகளுக்கு சரியான விடைகள் தெரிந்திருந்தும் நீ கூறாவிட்டால் உன் தலை வெடித்து சுக்குநூறாகி விடும்” என்றது.
விக்கிரமனும் “கனகாங்கியின் இயல்பே சமாதானத்தை விரும்புவது. அவள் இந்திரசேனனுடன் வாள் போர் புரிந்தது பல உயிர்கள் வீணாகப் போவதை தடுக்கவே தான். ஆனால் அவளால் இந்திரசேனனை மறக்க முடியாது போனதாலேயே யோகியின் உதவியை அவள் நாடினாள். நாட்டை இழந்த பிறகும் இந்திரசேனன் சமுத்திரிகாவையே மணப்பதாக கூறி உறுதியுடன் இருந்தது கண்டு அவள் அவனது காதல் எப்படிப் பட்டது என்பதை உணர்ந்தாள். பெண்களுக்கே உரிய பெருமை, தியாகம் ஆகிய குணங்கள் அவளிடம் தலைதூக்கின. அதனால்தான் அவளே சமுத்திரிகாவுக்கும் இந்திரசேனனுக்கும் விவாகத்தை நடத்தி வைத்தாள்” என்றான்.
விக்கிரமனின் சரியான இந்தி பதிலாள் அவனது மௌனம் கலையவே, அவன் சுமந்து வந்த உடலோடு வேதாளம் உயரக் கிளம்பிப்போய் மீண்டும் முருங்க மரத்தில் ஏறிக்கொண்டது.
– ஜனவரி 1991