கண்ணீர் சிந்தாதே!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 18, 2023
பார்வையிட்டோர்: 1,228 
 
 

(1958ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அமைதியினிடையே பானுவின் மெல்லிய விம்மலோசை தெளிவாகக் கேட்டது. பொங்கி பொங்கி வரும் அழுகையை அடக்க என்னதான் முயன்றும், பானுவால் முடியவில்லை. விரல்கள் பதிந்துசிவந்திருந்த கன்னத்தைக் கரங்களால் அழுத்திப் பிடித்துக் கொண்டாள்.

மாலதி ஒரு நாள்கூடப் பானுவைச் சினந்து கொண்டதில்லை. மகளை இலேசாகக்கூடக் கண்டித்திராத மாலதி சற்றுமுன் பானுவை ஏன் அடிக்க வேண்டும்? நினைக்க நினைக்க பானுவின் நெஞ்சு வெந்தது.

விலையுயர்ந்த நெக்லஸைத் தொலைத்துவிட யாருக்குத்தான் மனம் வரும்? அழகான அந்த மாலையை வாங்கி ஒருவாரம்கூட ஆகவில்லை. பண்டிகைப் பரிசாகப் பானுவுக்கு அதனைக் கொடுக்க வேண்டும் என்ற ஆசையோடு மாலையை வாங்கி வந்தார் தந்தை சுந்தரம்! அழகான மாலை: கலையெழிலோடு விளங்கிய அந்தக் கழுத்து மாலை விலைமதிப்புள்ளது. பண்டிகையன்று மாலையைப் பானுவுக்குக் கொடுக்க வேண்டும் என்றுதான் மாலதியும் சுந்தரமும் விரும்பினர். என்றாலும், பானு கேட்டால்தானே! கண்ட மாத்திரத்திலேயே கழுத்தில் போட்டுக் கொள்ள வேண்டும் என்று துடித்தாள்; அடம் பிடித்தாள். அவள் பிடிவாதம் வென்றது!

அந்த மாலை இப்போது எங்கே மறைந்துவிட்டது?

அன்னை வெகுண்டாள்: பானு துடித்தாள். எங்கணும் தேடியும் ஏதும் பயன் இல்லை. புத்தம் புதிய நெக்லஸை ஆவலோடு வாங்கி வந்த தந்தை ஊரிலிருந்து திரும்புகிறவரையில்கூட அந்த மாலையில்லையென்றால் வருந்தாமல் இருக்க முடியுமா? ஒரே ஒரு நிமிடம்…! மாலதியின் கோபம் கங்கு கரையனைத்தையும் கடந்தது! உயிரும் உணர்வுமாகப் பேணும் ஒரே மகள் பானு என்றாலும் ஆத்திரத்தின் முன் அரை நொடியில் அன்பு பறந்துவிட்டது. அதற்குள் பானு பட்டபாடு… துடித்த துடிப்பு! உகுத்த கண்ணீர்.. ?

இளங்குரல் எழுப்பிய அழுகையொலி இன்னமும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. ராஜாவின் நெஞ்சு கனத்தது. நச்சுத்தரங்கங்கள் அவன் நெஞ்சில் எழுந்து மோதிக் கொண்டிருந்தன. ராஜாவின் மேல் அளவற்ற அன்பு பாராட்டினாளே மாலதி, அதனை அவன் பேணிக் கொண்டானா?

ராஜா அந்த வீட்டிற்கு வந்து ஒரு ஆண்டுகூட ஆகவில்லை. வினவுவாரற்ற ராஜாவிடம் அன்பு காட்டித் தம் வீட்டிற்குக் கூட்டி வந்தார் சுந்தரம்!

தூய்மையான அவரது இதயம் ராஜாவின் மேல் மாசற்ற அன்பை அள்ளிச் சொரிந்தது. ஆதரவற்றவனாகத் தான் அவன் வந்து சேர்ந்தான். ஆனாலும் எத்தனை விரைவில் அந்தச் சின்னஞ் சிறு குடும்பத்தோடு இணைந்துவிட்டான்! ‘அண்ணா…1 அண்ணா!” என்று புன்னகை மின்ன அவனை அழைப்பாளே பானு? மென்மையுள்ளங்களை ராஜா உணர்ந்து கொண்டானா?

மாலதிக்கு நிலை கொள்ளவில்லை. பானுவைக் கடுமையாக அடித்துவிட்டது நினைவுக்கு வந்தது. தாயுள்ளம் கசிந்தது. இதயத்திலே புதைந்து கிடந்த ‘அந்த நினைவு’ அன்று எப்படியோ மாலதியினுள்ளே உதித்துவிட்டது ஆயிரமாயிரம் நெஞ்சங்கள் ஆனந்தமாகத் தீபாவளிப் பண்டிகையை வரவேற்கின்றன. ஆனால் மாலதி ? தீபாவளி என்றாலே அறியாத மயக்கம் அன்னை மனத்தை ஏன் கவ்விக்கொள்ள வேண்டும்? காலங்கடந்தும் கழிந்துபோன சம்பவத்தை பெற்ற மனம் ஏனோ மறக்கவில்லை. எப்படி முடியும்?

அப்பொழுது மாலதியும் சுந்தரமும் தஞ்சாவூரில் இருந்தார்கள். ஆனால் அவர்களின் குழந்தை விஜயனுக்குச் சின்ன வயது. மென்னடை பயிலும் சின்னப் பருவம் பண்டிகைக் காலம் அது. தீபாவளி தினத்திற்கு இரண்டு மூன்று நாள் முன்னதாகவே இருவரும் கடை வீதிக்குச் சென்றிருந்தனர். குழந்தை விஜயனையும் இட்டுச் சென்றனர் பெற்றோர். செல்வச் சிறப்பை விளம்பரப் படுத்தும் வண்ணம் விஜயனுக்கு எத்தனை அணிகள் பூட்டியிருந்தனர்! வீதியெங்கும் பண்டிகை ஆரவாரம் நிறைந்திருந்தது. குழந்தையை இந்தக் கூட்டத்தில் ஏன் கொண்டு வந்தோம் என்று ஆகிவிட்டது மாலதிக்கு!

பிரபலமான துணிக்கடையில் நுழைந்தனர். வேண்டியவற்றை வாங்குவதில் மும்முரமாக ஈடுபட்டிருந் தனர் இருவரும். விஜயன் அங்குமிங்குமாகத் தவழ்ந்து நின்றிருந்தான்.

அனைத்தையும் வாங்கி முடித்த வாங்கி முடித்த பின்னர் மாலதி குழந்தையைப் பார்த்தாள். விஜயன் எங்கே? எங்கே? மாலதி மயங்கினாள்.சுந்தரம் விழித்தார். அந்த நெஞ்சங்கள் அலறின இறுதியில் நெடுந்துயரோடு மீளத்தான் முடிந்தது.

அன்று மறைந்த விஜயன் அடிக்கடி அன்னையின் மனத்திலே தோன்றுவான். அப்போதெல்லாம் பெற்ற மனம் பேதுற்றுப் போகும். அழுது அழுது தீர்க்கும். பானு பிறந்த பிறகு மாலதிக்குச் சற்றே அமைதி கிடைத்தது.

மாலை மயங்கிக் கொண்டிருந்தது. ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தான் ராஜா. எதையோ ஆழமாக எண்ண மிடுகிறான் என்பதை அவன் முகம் காட்டிக் கொடுத்தது. அடிக்கொரு தரம் சட்டைப் பையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தான். சட்டைப் பையில் டிக்கெட் உறங்கிக் கொண்டிருந்தது.

நேரம் நகர்ந்தது நிலையத்திலே பரபரப்பு: புகை வண்டி வந்தது. ஆரவாரம் எழுந்து நின்றது. ராஜாவின் மனம் மகிழ்ச்சியால் துள்ளியது. ஆரவாரத்தினிடையே –

“ராஜா!” – குரல் ஒலித்தது.

ராஜா திரும்பினான். பெட்டியொன்றிலிருந்து சுந்தரம் இறங்கினார். அவனருகே வந்தார். கணப் பொழுதிலே அவன் முகம் களையிழந்தது.

“இங்கே எப்படி வந்தாய் ராஜா? நான் இந்த வண்டியில் வருவேன் என்பது உனக்கு எப்படித் தெரியும்?” முகமலர்ச்சியோடு சுந்தரம் பேசினார். ராஜாவால் ஏனோ பேச முடியவில்லை. அவன் விழித்தான். சட்டைப் பையிலிருந்த டிக்கெட் அவனைப் பார்த்து நகைத்தது. புகைவண்டி கிளம்பிவிட்டது.

“வீட்டிற்குப் போகலாமா?” என்று அவனை அவர் கேட்டார். ராஜாவின் தலையசைந்தது.

மாட்டு வண்டி மெல்ல ஓடத் தொடங்கியது. சுந்தரத்தின் முகத்திலே புதுமையொளி சிந்திக்கொண் டிருந்தது. ராஜா உணர்வற்று உட்கார்ந்திருந்தான்.

“ராஜா, ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய்?” – சாந்தமாகக் கேட்டார் அவர்.

“ஒன்றுமில்லை, சார்”

“ராஜா, உனக்கு பொன்னப்பனைத் தெரியுமா?” ராஜாவின் கண்கள் மருண்டன.

“பொன்னப்பனா?” – வியப்போடு அவன் கேட்டான்.

“ஆமாம், ராஜா”

“ஏன் கேட்கிறீர்கள்? பொன்னப்பனை உங்களுக்குத் தெரியுமா. சார்?”

“இன்றைக்குத்தான் தெரியும். கேடி பொன்னப்பனை இன்றுதான் பார்த்தேன்… இன்றுதான் அவன் நெஞ்சு ஓலமிட்டு அழுததைப் பார்த்தேன்…”

“என்ன சொல்லுகிறீர்கள். சார்…”

“பொன்னப்பன்… என்.. என்!…”

“உன்னைப் பெற்றவன் என்று நினைக்கிறாயா, ராஜா?”

“ஆமாம். சார்.. அவரை விட்டுவிட்டு ஓடிவந்து விட்டேன்… என் தந்தைான்!” பரபரப்போடு ராஜா பேசினான்.

“இல்லை ராஜா, இல்லை… நீ எங்கும் ஓடிவந்துவிட வில்லை. வரவேண்டிய இடத்திற்கு வந்துவிட்டாய். பொன்னப்பன் உன்னைப் பெற்றவன் அல்ல ராஜா! அவன் திருடன்! இப்போது திருந்திய மனிதன்!”

“தெளிவாகச் சொல்லுங்கள் சார்!”

“உண்மையைத்தான் சொல்லுகிறேன் ராஜா! பொன்னப்பன்தான் என்னிடம் பேசினான். அவன் அழுதான். அவன் நெஞ்சு அழுதிருக்க வேண்டும்…”

“ஏன்?”

“செய்த குற்றம் அவனை வாட்டி வதைத்திருக்க வேண்டும். ராஜா, என் உள்ளத்தவிப்பு இன்றுதான் அடங்கியிருக்கிறது. நெஞ்சிலே எத்தனை அமைதி நிலவுகிறது. தெரியுமா? பத்து வருஷங்களுக்குமுன் நீ சின்னக் குழந்தை…!”

சுந்தரத்தின் கண்கள் கலங்கின.

“நீங்கள் என்ன பேசுகிறீர்கள் சார்?”

“நீ என் மகன்! நீ ராஜா அல்ல… என் விஜயன்! பண்டிகை நேரத்திலே அன்று உன்னைப் பறி கொடுத் தேன். என்னைவிட்டு எங்கோ தூர தூர விலகிப்போய் இருந்தாய் இத்தனை நாளும் இப்போது கிடைத்து விட்டாய். அன்று உன்னைக் கண்டேன். விளங்காத பற்று உன்மேல் ஏற்பட்டது. வீட்டிற்கு அழைத்துப் போனேன் அன்போடு நடத்தினேன். ஆறுதல் கிடைத்தது”

“புகை வண்டியிலே பொன்னப்பன் என்னைப் பார்த்தான். பேசினான். விரக்தி நிறைந்த அவன் உள்ளத்திலே எத்தனை வேதனை? கண்ணீர் விட்டான். உன்னைப் பற்றிச் சொன்னான். வறுமையால் வாடிய நாளிலே உன்னை உன் நகைக்காக தூக்கிச் சென்றதாகக் கூறினான்!”

“அப்புறம்?” என்றான் ராஜா பரபரப்போடு

“பொன்னம்பலம் சொன்னான்: ‘ராஜா என்று பெயரிட்டேன். அவன் வளர்ந்தான். நான் நாசகாரர் சிலரின் நேசத்திலே சிக்கினேன். சீரழிந்தேன். அறியும் பருவம் வந்தது ராஜாவுக்கு. என்னைப் புரிந்து கொண்டான். ஒரு நாள் என்னைப் பிரிந்து எங்கோ சென்றுவிட்டான். நான் சிறை சென்றேன். சிந்தை திருந்தியது. ராஜா எங்கு சென்று அவதிப்படுகிறானோ என்று எண்ணி நொந்தேன். மாற்றமடைந்த மனத்தோடு சிறையிலிருந்து மீண்டேன் ராஜாவை எப்படியும் உங்களிடம் சேர்த்துவிட வேண்டும் என்று எண்ணித் திரிகிறேன். அவன் எங்கே போனானோ?’ நான் புரிந்து கொண்டுவிட்டேன். நீ தான் விஜயன் என்று முடிவு கட்டினேன்” மகிழ்ச்சியோடு சுந்தரம் மொழிந்தார்.

ராஜாவின் கண்களில் நீர் பெருகி கன்னத்தில் வழிந்தது.

“ஏன் கலங்குகிறாய் விஜயன்?”

“நான் குற்றவாளி… திருடன் சார்!”

“என்ன பேசுகிறாய் விஜயன்?”

“அறியாமல் செய்துவிட்டேன். பானுவின் மாலையை எடுத்து கொண்டு வீட்டைவிட்டு ஓடத் துணிந்துவிட்டேன்! என்னை மன்னிப்பீர்களா சார்?”

“சார்! என்று அழைக்காதே விஜயன்! அப்பா என்று அழை! என்ன நடந்தது விஜயன்?”

விஜயனின் உடல் நடுங்கியது. செய்த தவற்றைச் சொன்னான். பளு குறைந்துவிட்டாற்போன்ற நிம்மதி அவனுள்ளே நிலவியது.

“தெரியாமல் செய்துவிட்டாய். அதைப்பற்றி வருந்தாதே விஜயன்!”

வாசலில் வண்டி நின்றது. மாலதியும் பானுவும் அங்கே வந்தனர். கண்கள் கலங்க ராஜா இறங்கினான்.

“மாலதி. இதோ பார் உன் மகனை! இவன் ராஜா இல்லை, நம் விஜயன். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு நம்மிடமே வந்துவிட்டான்!” – சுந்தரம் ஆனந்தமாகக் கூவினார். மாலதிக்குச் செய்தியனைத்தும் தெரிந்தது நெஞ்சம் குதூகலத்தால் பூரித்தது. பானுவுக்குத் தாங் கொணாத மகிழ்ச்சி.

விஜயன் கண்ணீர் சிந்தினான். அது துன்பக் கண்ணீரா? இல்லை… மாலதியின் பெற்ற மனத்திலே பெரு மகிழ்ச்சி நிலவியது.

“கண்ணீர் சிந்தாதே விஜயன். கண்ணீர் சிந்தாதே!” என்ற வண்ணம் அவன் கண்ணீரைத் துடைத்தாள் தாய்.

– 1958 – ‘கல்கண்டு’ இதழில் பிரசுரமான சிறுகதை, ஜே.எம்.சாலியின் சிறுவர் கதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 2011, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்.

– ஓரு கிளைப் பறவைகள், சிறுவர் நூல், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2009, பூம்புகார் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *