கடற்கரை மலையம்மன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 97 
 
 

(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு காலத்தில் கான்ஹோவாவுக்கு அருகில் ஒரு குக்கிராமம் இருந்தது. அங்கு எளிமையாக வாழ்ந்து வந்த உழவர் குடும்பம் ஒன்று இருந்தது.

அவர்கள் ஒரு சிறு குடிசையில் வாழ்ந்து வந்தார்கள். அந்தக் குடிசை, கட்டுமரக் கொம்பு களைச் சேர்த்துக் கட்டப் பெற்றிருந்தது. வைக் கோலால் கூரை வேயப்பெற்று, மூங்கில் சப்பைகளால் குறுக்குத் தட்டிகள் கட்டப் பெற்றிருந்தது. இந் நாளிலும் அன்னாம் நாட்டுப்புறங்களில் இப்படிப்பட்ட பல குடிசைகளைக் காணலாம்.

அந்தக்குடிசைக்குப் பின்னால் சிறு மரக்காடு சூழ்ந்த ஒரு வெளி நிலம் இருந்தது. அந்த வெளி நிலத்தின் கோடியில் ஒரு சிறிய ஓடை ஓடிக் கொண்டி ருந்தது. அந்த ஓடையில், பருவத்திற் கேற்றபடி நீர் தெளிவாகவோ , கலங்கலாகவோ ஓடிக் கொண்டிருக் கும், அது என்றும் வற்றாமல் ஓடிக் கொண்டிருந்த படியாலும், காட்டுவண்டல் சேர்ந்தபடியாலும், அந்தக் குன்றுவெளிச் செம்மண்தரை முழுவதும் வளமுள்ள பூமியாயிருந்தது. அங்கு தாரோ, யாம், முதலிய கிழங்கு வகைகள் செழிப்பாக வளர்ந்தன.

அவர்கள் வீட்டின் அருகில் இரண்டு மூன்று பண்படுத்தப்பட்ட நெல் வயல்கள் இருந்தன. அவற் றையும் அந்தச் சிற்றோடை வளப்படுத்தியது. இந்த நிலங்களும், ஒரு வாழைத் தோட்டமும், வட்டமான உச்சியையுடைய மாமரம் ஒன்றும், அவர்கள் வளர்த்து வந்த கோழிகளும் வாத்துக்களும், அந்த உழவர் குடும்பத்தினர் வாழ்க்கை நடத்துவதற்கு உதவியாக இருந்தன. அந்த உழவன் அந்தக் காட்டுப் புறத்தில் கிடைத்த பொருள்களைக் கொண்டு தன் திறமையால் ஒரு மீன் பிடிக்கும் கூடையைச் செய்தான். அதனால் ஒவ்வொரு நாள் காலையிலும் ஏராளமான மீன்களைப் பிடித்து வந்தான்.

இப்படியான எளிய வாழ்க்கையில் எவ்விதமான குறைவுமின்றி அந்ந உழவனும் அவன் மனைவியும் பல நாட்களைக் கடத்தி வந்தார்கள்.

அவர்களுக்கு ஒரு மகனும், அவன் பிறந்த இரண் டாண்டு கழித்து ஒரு பெண்ணும் பிறந்தார்கள். இரண்டு குழந்தைகளும் இலையுதிர் காலத்திலேயே அந்தக் காலத்தின் பருவம் முழுத்தன்மையோடு விளங்குகிற மையக் கட்டத்திலேயே பிறந்தார்கள்.

காட்டுப் புறத்தின் அமைதியான சூழ்நிலையில் அந்தக் குழந்தைகள் வளர்ந்து வந்தார்கள். அவர்கள் சில சமயம் தங்கள் தந்தையுடன் மலையடிவாரத் திற்கோ கடலுக்கோ செல்லுவார்கள். அப்போதெல் லாம் அந்தக் கடல் தங்கள் வாழ்க்கையில் விளை யாடப் போகிறது என்று அவர்களுக்குத் தெரியாது.

அந்தப் பையனுக்கு ஏழு வயதும் பெண்ணுக்கு ஐந்து வயதும் ஆகியது. பிஞ்சுக் குழந்தைகளாயிருந்த போதிலும் அவர்கள் தங்கள் தாயாரின் அன்றாட வேலைகளில் உதவி செய்ய ஆவலுடன் முன் வந்தார் கள். பெரும்பாலும் அந்த வெளி நிலத்திற்குச் சென்று காய்ந்த சுப்பிகளைப் பொறுக்கிக் கொண்டு வந்து கொடுப்பார்கள்.

ஒருநாள் வழக்கம் போல் அவர்கள் சுப்பல் பொறுக்கச் சென்றார்கள். அன்று அந்தப் பையன் தன் கையில் ஒரு காட்டரிவாளை ஏந்திக்கொண்டு சென்றான். அந்தக் காட்டரிவாளின் கைப்பிடி நீண்ட மூங்கில் மரத்தால் செய்யப்பட்டிருந்தது. அவன் தன் எதிரில் தென்பட்ட சிறு மரங்களிலிருந்த கொம்பு குச்சிகளை அந்தக் காட்டரிவாளால் சிவுக் சிவுக் கென்று வெட்டித் தள்ளினான்.

இவ்வாறு குச்சி வெட்டிக் கொண்டிருந்த அவன் அதை நிறுத்திவிட்டுத் தன் தங்கையின் எதிரில் சென்று நின்று போர் வீரன் வாள் வீசுவது போல் தன் அரிவாளை வீசிக் காண்பித்தான். அவன் சுழற்றச் சுழற்ற அந்தக் காட்டரிவாள், மின்னி மின்னிப் பாய்ந்தது.

தரையில் பனி படிந்திருந்து ஈரமாகியிருந்ததால் அவன் கால் வழுவியதோ , கத்தியின் பளுத் தாங்காமல் அவன் கை தளர்ந்ததோ தெரியவில்லை, நாடகங் காட்டிக் கொண்டிருந்த அந்தச் சிறுவனின் பிஞ்சுக் கைகளிலிருந்து அரிவாள் நழுவிப் பறந்தது.

அடுத்தகணம் அந்தச் சிறுமி தலையில் அடிபட்டு , இரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தாள். அவள் இறந்து போய் விட்டதாகப் பயந்து விளையாட்டுக்குக் கத்தி வீசிய அந்தச் சிறுவன் காட்டுக்குள் ஓடி மறைந்து விட்டான்.

அவன் தங்கைக்குப் பட்ட காயம் பெரியதாயிருந்த போதிலும், உயிருக்குக் கேடு உண்டாகவில்லை. அந்தக் காட்டின் அருகாமையில் வசித்த ஒரு கிழவியின் கண்ணில் அந்தச் சிறுமி தட்டுப்பட்டாள். அந்தக் கிழவி மந்திர வைத்தியம் தெரிந்தவளாகையால் அவள் விரைவில் அந்த வெட்டுக் காயத்தை ஆற்றிவிட்டாள்.

அந்தப்பெண்ணின் பெந்றோர்கள் ஒருநாள் கோ யிலுக்குப் போயிருந்தபோது, அங்கிருந்த பிட்சு ஒரு வரிடம் தங்கள் பெண்ணின் எதிர்காலம் பற்றிச் சோதி டம் கேட்டார்கள். அவருடைய வாக்கு நல்வாக்காக இருந்தது. அத்தோடு அவள் என்றும் புகழுடம் போடு இருப்பாள் என்றும் மலையும் கடலும் உள்ள வரை மக்கள் நினைவில் அவள் இருந்து வரும்படியான பேற்றை அடைவாள் என்றும் அவர் கூறினார்.

அந்தப் பெண்ணின் காயம் குணமடைந்த சமயம் மழை காலம் துவங்கியது. அவள் அடிக்கடி தன் அண் ணனைப்பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாள் அவளுக்கு அவன் மேல் கோபமேயில்லை . அவன் ஓடி விட்டானே என்று வருத்தமே கொண்டாள். உள்ள படியே அவன் இல்லாமல் வீடு வெறிச்சோடிப்போயிருந்தது. அவன் பெற்றோரும் தங்கள் ஈமப் பிரார்த் தனை செய்ய மகன் இல்லையே என்று வருந்தினார்கள்.

கடல் பக்கத்திலேயே இருந்தது. அவன் த விளையாட்டினால் நேர்ந்த வினையை எண்ணி மனம் வருந்தி அந்தக் கடலில் விழுந்து தன் முடிவைத்தேடி கொண்டானா? அல்லது காட்டிடையே வனவிலங்கு களிடம் சிக்கி மடிந்தானா? ஒன்றும் தெரியவில்லை.

நாட்களும் மாதங்களும் ஆண்டுகளுமாய்க் காலம் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் அந்தக் குடும்பத்தினர் ஓடிப்போன தங்கள் மகனைப்பற்றி ஒரு செய்தியும் கேள்விப்படவில்லை. ஓயாமல் உழைத்துக் கொண் டிருந்த அந்தப் பெற்றோர்கள். தங்கள் மகனை மீண் டும் காண்போம் என்ற நம்பிக்கையின்றியே வாழ்ந்து வந்தார்கள். கடைசியில் தங்கள் பெண்ணுக்குப் பதி னாறு வயதாகும் போது, ஒருவர் பின் ஒருவராகக் கண்ணை மூடி விட்டார்கள். அவர்களுடைய ஈமச் செலவுகளுக்காக அந்தப் பெண் தன் வீட்டை விற்று விட்டாள். பிறகு ஒரு பணக்கார வீட்டில போய் வேலை பார்த்துத் தன் வாழ்க்கையை நடத்தி வந்தாள்.

ஓடிப்போன அவளுடைய அண்ணன் எப்படியோ ஒரு பெரிய துணி வியாபாரியாகி விட்டான். அவன் உயர்தரமான பட்டுத் துணிகள் வாங்கி வந்து வியாபா ரம் செய்வதற்காக பலமுறைகள் சீனாவுக்குப் போய் வந்து பெரும் புகழ்பெற்ற வணிகனாகி விட்டான்.

அவன் தன் சொந்த ஊரான கான்ஹோவாப் பக்கத்தில் ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்து கொண்டு குடித்தனமாக வாழ வேண்டுமென்று விரும்பினான்.

கான்ஹோவாவுக்கு அவன் வந்திருந்த போது, எளிய நிலையிலிருந்த நல்ல குணமுள்ள ஓர் அநாதைப் பெண் அவனுக்கு அறிமுகப்படுத்தி வைக் கப்பட்டாள். அவன் அவளைத் திருமணம் செய்து கொண்டான். முதலில் அவர்கள் வாழ்க்கை மகிழ்ச்சி யாகவே நடந்து வந்தது. மணமாகி ஓராண்டானபின் அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தையும் பிறந்தது. ஆனால், அவர்களுடைய இன்ப வாழ்வு, பாவம் குறுகியதாகிவிட்டது.

ஒரு நாள் மாலையில் அழுது கொண்டிருந்த தன் பிள்ளையைத் தொட்டியிலிட்டுத் தாலாட்டித் தூங்க வைத்துவிட்டு, அந்தப் பெண் குளிக்கச் சென்றாள். ஒரு பெரிய செப்புப் பாத்திரத்தில், தண்ணீரூற்றி “மான் கெட்” என்கிற பழத்தின் தோலைப் போட்டு ஊற வைத்திருந்தாள். அந்தத் தண்ணீரில் தலை தேய்த்துக் குளித்தால், கூந்தல் மென்மையாகவும் பளபளப்பாகவும் கருகருவென்று அழகாகவும் இருக்கும்.

அத்தப் பழத்தோல் ஊறிய தண்ணீரைத் தலை யில் ஊற்றித் தேய்ப்பதற்காக, அவள் தன் கூந்தலை அவிழ்த்து விட்டாள். அப்பொழுது அவளுடைய கூந்தலுக்கிடையில் மண்டையோட்டில் ஓரிடத்தில் வெள் ளையான ஓரு கோடு தென்பட்டது. அது ஒரு வெட்டுக் காயம் போலவேயிருந்தது.

இதைக் கவனித்த அவள் கணவன், அந்த வெட்டுக் காயம் ஏற்பட்டது எப்படி என்று கேட்டான். அவள் சொன்னாள். அதைக் கேட்டு அவன் திடுக்கிட் டான். காட்டுக்குக் குச்சிவெட்டச் சென்ற போது, தான் கத்தி வீசியபோது, தலையில் அடிபட்டு வீழ்ந்த தன் தங்கை இறந்துவிட்டதாக அவன் எண்ணிக் கொண்டிருந்தான். அவள் இறக்கவில்லை. ஆனால், அவளையே தான் மனைவியாகக் கொண்டு விட்டதை எண்ணி மனங்கலங்கினான்.

அவன் ஒரு கொலைகாரனல்ல என்றால், முறை கெட்டவன் – தன் குடும்பத்தின் நற்பெயரைக் கெடுத் தவன் என்றாகிவிட்டது.

விதி செய்த இந்தக் கொடுமையை அவனால் தாங்கமுடியவில்லை. அங்கிருந்து ஓடிவிடுவதென்று முடிவு செய்தான். தன் மனைவியும் மகனும், நன்றாக வாழ்வதற்கு வேண்டிய பொருள் வசதிகளை முதலில் அவன் செய்துவைத்தான். பிறகு பட்டுத் துணி கொள் முதல் செய்ய தூர தேசம் ஒன்றிற்குப் புறப்படுவதாகப் போக்குக் காட்டி அவளிடமிருந்து விடைபெற்றுக் கொண்டான். அவன் கப்பலேறிச் சென்றதை அந்தக் குன்றின் உச்சியில் ஏறி நின்று அவன் மனைவி கவனித்துக் கொண்டு நின்றாள். அலைகடலுக்கு மேலே , சந்திரனின் பொன்னிறமான கதிர்கள் எழுப்பிய அந்த ஒளித்தகடுளின் ஊடே அந்தக் கப்பல் அடி வானத்தில் மறையும் வரை அவள் பார்த்துக் கொண்டே நின்றாள்.

முன்பின் தெரியாமல் தன்னை மணம் புரிந்து கொண்டு பிரிந்து சென்ற அந்தக் கணவனைப் பற்றி எந்தச் செய்தியும் அவள் அறியாமலே காலம் கழிந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும் அவள் தன் குழந்தையுடன் கடற்கரையில் உள்ள மேடு அல்லது பாறையின் உச்சியில் ஏறி நிற்பாள். கடலின் அடி வானத்தை நோக்கி, அங்கு ஏதாவது கப்பல் தோன் றாதா, அதில் தன் கணவன் திரும்பிவர மாட்டானா என்று எதிர்பார்த்துக் கொண்டே இருப்பாள். காலை யில் ஏறினால், மாலையில் பகலவன் மறைந்த பிறகு தான் அவள் அந்த இடத்தை விட்டு அகலுவாள்.

அவள் தன் குழந்தையைத் தாலாட்டியபடியே மனமுருகி வேண்டிக் கொள்கின்ற கீதம் காற்றில் அலைப்புண்டு கடலலைகளின் மேல் மிதந்து வரும்.

ஆராரோ ஆரிரரோ
ஆரரிரோ ஆராரோ!
சீராரும் கண்மணியே என்
செல்வத் திருமகனே!
அன்புடனே நேசித்த
அன்னையையும் பிள்ளையையும்
துன்பமுற்றே ஏங்கவிட்டுத்
தொலை தூரம் போனாரே!
பட்டுத் துணியெடுக்க
பாய்மரத்தில் செல்லுவதாய்
விட்டுப் பிரிந்தாரேன்
வீட்டுக்குத் திரும்பவில்லை?
என்னை மறந்தாரோ?
இல்லை சினந்தாரோ?
உன்னை மறந்தாரோ?
ஊரை மறந்தாரோ?
இளவேனில் காற்றெல்லாம்
என் கண்ணில் நீர்பெருக்கி
உளம் நோகச் செய்கிறதே!
உம் நினைப்பால் வாடுகிறேன்!
கோடையனற் காற்றெல்லாம்
கொண்டு வரும் கண்ணீரீல்
ஆடவரே உம்பிரிவும்
அதிர்ச்சியை யுண்டாக்குதையா!
காலமெல்லாம் காத்திருந்தோம்
கண்மணியும் நானுமிங்கே
மாலையிட்டும் மறந்தீரோ?
மகன் பெற்றும் மறந்தீரோ?

அந்தப் பக்கத்தில் உள்ளவர்கள், கடற்கரை யோரத்தில் கைப்பிள்ளையுடன் நிற்கும் அந்தப் பெண்ணை அடிக்கடி கண்டனர். அந்த வழியாகக் கடலில் செல்லும் படகுக்காரர்களும் அவளை அந்த இடத்திலேயே காணலாயினர். விரிகடலில் செல்லும் போது, தோதான காற்றுகள் அடித்தாலும் அடிக்கா விட்டாலும், அந்தப் பெண் பொறுமையோடு நின்று தன் கணவனை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதை எல்லோரும் கண்டார்கள்.

கடைசியில் தேவ தேவனான இறைவனுக்கு அவள் மேல் இரக்கம் பிறந்தது. அவளுடைய பொறு மையை நிலையாக்குவதற்காக அவர் அவளையும் அவள் குழந்தையையும் ஒரு சிலையாக மாற்றிவிட்டார்!

அதுமுதல் அந்த மலைப்பக்கமாக கடல் வழியே வடதிசை நோக்கிச் செல்லும் படகுக்காரர்கள், அவளை ஒரு சிறு தெய்வமாகப் பாவித்து இந்தப் பழம் பாடலைப் பாடி வேண்டுதல் செய்து கொள்வது வழக்கமாகிவிட்டது.

ஏலேலோ அயிலசா!
ஏலேலோ அயில்சா
ஏங்கி நிற்கும் மலையம்மா
ஏலேலோ அயிலசா!
எங்கள் நலம் காப்பவளே
ஏலேலோ அயிலசா!
தென்திசையின் காற்றுதனைத்
தேவதையே நீ சொல்லி
உன் கணவன் போன வட
திசைப்புறமே ஓட்டுவிக்க
எங்கள் பாய் மரத்தினிலே
இசைந்தடிக்கச் செய்திடுவாய்
எங்கள் மன வேண்டுதலுக்கு
இசைந்திடுவாய் மலையம்மா!
ஏலேலோ அயிலசா!
ஏலேலோ அயிலசா!

– ஒரு ஈயின் ஆசை, சிறுவர்களுக்கான எட்டுக் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 1992, அன்னை நாகம்மை பதிப்பகம், சென்னை.

நாரா. நாச்சியப்பன் (நாராயணன் நாச்சியப்பன்; பாவலர் நாரா. நாச்சியப்பன்) (ஜூலை 13, 1927 - 2000-த்திற்குப் பின்) கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர், அச்சக உரிமையாளர். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் ஒருவர். திராவிட இயக்கம் சார்ந்த பல படைப்புகளை, சிறார்களுக்கான பல நூல்களை எழுதினார். தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது. நாரா. நாச்சியப்பன், அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆத்தங்குடியை அடுத்த முத்துப்பட்டணத்தில், சித. நாரா. நாராயணன் செட்டியார்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *