கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: February 22, 2018
பார்வையிட்டோர்: 16,486 
 

பரப்பரப்பான நகரத்தின் சாலை அது. வாகனங்கள் அங்கும் இங்குமாக அலைமோதிக் கொண்டிருந்தன. ‘பீங்! பீங்!’ என வாகனங்கள் எழுப்பிய சத்தங்கள் காதைத் துளைத்தன. சாலையோரங்களில் நின்று கொண்டிருந்தவர்கள் சாலையைக் கடக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தனர்.

“சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” என வேகமாக அந்த வாகன நெரிசலை உடைத்துக் கொண்டு முகிலனின் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. சாலையின் ஓரமாக முகிலன் சைக்கிளை வேகமாகச் செலுத்திக்கொண்டிருந்தான். அவனுக்கு முன்னால் சைக்கிளின் பிடியைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்கும் குமரன் நடுங்கியே போய்விட்டான்.

“வேகமா போவதே! பயமா இருக்கு..” எனக் கத்தினான் குமரன்.

முகிலன் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. அவன் சைக்கிளைப் பலம் கொண்டு மிதிப்பதிலேயே கவனமாக இருந்தான். உணவகத்தில் அமர்ந்திருந்தவர்களில் சிலர் முகிலனைப் பார்த்து ஏதோ முணுமுணுத்தனர்.

“ஸ்கூல் உடுப்பைப் போட்டுக்கிட்டு… பாருங்க… என்னா பண்றானுங்க நம்ப பையனுங்க” என ஒருவர் ஆதங்கத்தோடு கூறினார்.

முகிலன் காதில் எதுவுமே விழவில்லை. சைக்கிளின் மிதியை மேலும் வேகமாக மிதித்தான். குறிப்பிட்ட நேரத்திற்குள் அங்குப் போய் சேர்ந்தாக வேண்டும் என மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தான். மதிய வெயில் தலையைச் சுட்டது.

ஒரு முற்சந்தியை நெருங்கியது முகிலனின் சைக்கிள். எதிரே வாகனம் வந்தால்கூட தெரியாத அளவிற்கான வளைவு அது. முகிலன் கொஞ்சம்கூட சைக்கிளின் வேகத்தைக் குறைக்கவில்லை. குமரன் கண்கள் இரண்டையும் இறுக மூடிக் கொண்டான்.

‘எதிரில் கார் வருது… என்ன இந்தப் பையனுங்க சைக்கிளை இப்படி ஓட்டுறானுங்க?’ என அந்தத் திருப்பத்திற்கு அருகில் நின்று கொண்டிருந்த ஒரு பெரியவர் நினைத்தார்.

“முகிலன்ன்ன்ன்! பார்த்து..” எனக் கத்தியே விட்டான் குமரன்.

“கவலைப்படாத குமரா! நான் உன்னைப் பத்திரமா போய் சேர்த்துருவேன்” எனக் கூறிவிட்டு சைக்கிளின் வேகத்தை மேலும் கூட்டினான் முகிலன்.

‘என்ன நடந்தாலும் குமரனை உடனே போய் அங்க சேர்த்திடணும்’ என முகிலன் மனதில் உறுதி எடுத்துக் கொண்டான்.

சாலையில் முகிலன் சைக்கிள் ஓட்டுவதைப் பார்த்த பலர் அவனைத் திட்டியிருப்பார்கள். கடுமையான சொற்களைக் கொண்டு அவன் மீது கோபம் கொண்டிருப்பார்கள். முகிலனின் கால்கள் அதை உணரவில்லை. அவனுடைய குறிக்கோள் அனைத்தும் உரிய நேரத்தில் குமரனைக் கொண்டு சேர்ப்பதுதான்.

10 நிமிடத்திற்குள் முகிலனும் குமரனும் சைக்கிளுடன் விவேகானந்தா தமிழ்ப்பள்ளியின் வளாகத்திற்குள் நுழைந்தார்கள். மணி 2.00-ஐ நெருங்கியிருந்தது. சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு குமரனின் புத்தகப்பையை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு முகிலன்தான் முன்னே ஓடினான்.

“சார்ர்ர்ர்ர்.. நடனப் போட்டி எந்த இடத்துலே நடக்குது?” என மூச்சிரைக்க எதிரில் வந்த ஆசிரியரிடம் கேட்டான் முகிலன்.

பிறகு மேலே இரண்டாவது மாடியிலுள்ள மண்டபத்தை நோக்கி ஓடினான். குமரன் திகைப்புடன் முகிலனைப் பின் தொடர்ந்து ஓடி வந்து கொண்டிருந்தான். மண்டபம் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என நிறைந்து காணப்பட்டது. அங்கும் இங்கும் தேடியப் பிறகு முகிலன் குமரனின் நண்பர்கள் ஓர் ஓரமாய் கவலையில் அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டான். குமரனின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அவர்களை நோக்கி ஓடினான்.

“குமரன் வந்துட்டான்! குமரன்…” அங்கிருந்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தனர்.

குமரன் சரியான நேரத்திற்குப் போயிருக்காவிட்டால் அவர்களின் 7 பேர் அடங்கிய நடனக்குழு போட்டியில் பங்கெடுத்திருக்க முடியாது. அவசர அவசரமாக குமரனும் அவனுடைய குழு உறுப்பினர்களும் உடையை மாற்றிவிட்டு நடனத்திற்குத் தயாராகினார்கள்.

பாடல் ஒலித்ததும் குமரனின் குழு மிகச் சிறப்பாக ஆடத் துவங்கினர். குமரன் ஆடிக் கொண்டிருந்தாலும் அவனுடைய கலங்கிய கண்கள் மண்டபத்தில் தன்னுடைய நண்பன் முகிலன் எங்கு நின்று கொண்டிருக்கிறான் என்றே தேடிக்கொண்டிருந்தன.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *