ஓடும் முட்டை… துரத்தும் மயில்…

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தி இந்து
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 10, 2020
பார்வையிட்டோர்: 21,643 
 
 

கடகடவென்று உருண்டு ஓடிக்கொண்டிருந்தது ஒரு முட்டை.

“ஐயோ… என் முட்டை உருண்டு ஓடுதே… யாராவது பிடிங்களேன்” என்று கத்திக்கொண்டே முட்டையின் பின்னால் ஓடியது மயில்.

“ஓ… இது உன்னோட முட்டையா? இதோ தடுத்து நிறுத்தறேன்” என்று சொல்லிக்கொண்டே குறுக்கே நின்றது நத்தை.

நத்தையை உருட்டிவிட்டுவிட்டு வேகமாக உருண்டது முட்டை.

‘இது என்ன முட்டையா, கல்லா? எவ்வளவு உறுதியா இருக்கு’ என்று மனதுக்குள் நினைத்தது நத்தை.

“என் முட்டையை யாராவது காப்பாத்துங்களேன்” என்று மீண்டும் கத்திக்கொண்டு சென்றது மயில்.

உடனே எதிரில் வந்த மரவட்டைத் தன் உடலை முறுக்குபோல் சுருட்டிக்கொண்டு, முட்டை முன்னால் வந்தது. முட்டையோ வந்த வேகத்தில் மரவட்டையையும் உருவிட்டுச் சென்றது.

“ஒரு முட்டையை உன்னால தடுத்து நிறுத்த முடியலையா?” என்று கோபத்துடன் கேட்டது மயில்.

“உன் முட்டையைக் காப்பாற்ற நினைத்த எனக்கு நல்ல அடி” என்று சொல்லிவிட்டு மீண்டும் சுருண்டுகொண்டது மரவட்டை.

மீண்டும் மயில், “என் முட்டையை யாராவது காப்பாத்துங்களேன்” என்று கத்தியது.

கொய்யாப்பழத்தைக் கொறித்துக்கொண்டிருந்த அணில் வேகமாக மரத்திலிருந்து இறங்கியது. அணில் வருவதற்குள் அந்த இடத்தை கடந்து சென்றது முட்டை.

“அணில் தம்பி, கொஞ்சம் வேகமாகப் போனால் பிடிச்சிடலாம். நான் பின்னாலேயே வரேன்” என்றது மயில்.

சத்தம் கேட்டு வெளியே வந்தது ஒரு பாம்பு. முட்டையைக் கண்டதும் அதன் நாவில் எச்சில் உறியது.

‘ஓ… மயில் முட்டை. சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு’ என்று நினைத்துக்கொண்டு, வேகமாக ஊர்ந்து சென்றது பாம்பு.

பாம்பைக் கண்டதும் மயிலுக்குத் திக்கென்று இருந்தது. “பாம்பு வந்துவிட்டது. அது விழுங்குவதற்குள் முட்டையைப் பிடி” என்று அணிலைப் பார்த்து அலறியது மயில்.

முட்டை இன்னும் வேகமாக உருண்டது. அணில் முட்டையைத் துரத்தியது. முட்டையையும் அணிலையும் பிடிக்க வேகமாகச் சென்றது பாம்பு. இவற்றுக்குப் பின்னால் புலம்பியபடியே வந்தது மயில்.

எதிரே வந்த காட்டுக்கோழி, “எதுக்கு இப்படி அழுதுட்டும் கத்திக்கிட்டும் ஓடறே?” என்று மயிலிடம் அன்பாக விசாரித்தது.

“மலை மேட்டில் இருந்த முட்டை திடீரென்று உருள ஆரம்பித்தது. அதைப் பிடிக்க நான் வந்தேன். என்னால முடியலை. உதவி செய்ய வந்த நத்தையாலும் முட்டையைத் தடுத்து நிறுத்த முடியலை. அடுத்து மரவட்டை குறுக்கே பாய்ந்தது. அதையும் தள்ளிவிட்டுவிட்டு முட்டை ஓடிவிட்டது. பிறகு அணில் உதவிக்கு வந்தது. ஆனால், அணிலாலும் முட்டையைப் பிடிக்க முடியவில்லை. இந்த நேரத்தில் பொல்லாத பாம்பு முட்டையை விழுங்க வேகமாகப் போயிட்டிருக்கு… நான் என்ன பண்றதுன்னே தெரியலை” என்று கண்ணீர் விட்டது மயில்.

“என்னது… பாம்பு துரத்துதா?” என்று அதிர்ச்சி அடைந்தது காட்டுக்கோழி.

“ஆமாம்…”

“நத்தை நடந்து வருது… மரவட்டை உருண்டு வருது… அணில் ஓடி வருது… பாம்பு ஊர்ந்து செல்லுதுன்னு நிறுத்தி நிதானமா சொல்லிட்டு இருக்கியே… உன்னை நினைத்தால் சிரிப்பா இருக்கு…” என்றது காட்டுக்கோழி.

“என்னை நிறுத்தி கதை கேட்டதோடு இல்லாமல், சிரிக்க வேற செய்யறீயா?” என்று கோபப்பட்டது மயில்.

“சிரிக்காமல் என்ன செய்யச் சொல்றே? பதற்றத்தில் உனக்கு யோசிக்க முடியலையா?”

“நீட்டி முழக்காமல் விஷயத்தைச் சொல்… முட்டையைக் காப்பாத்தணும்.”

“காட்டுக்கோழியான என்னால ரொம்ப ரொம்பக் குறைவான தூரம்தான் பறக்க முடியும். ஆனால், உன்னால எங்களை விட உயரமாவும் வேகமாகவும் பறக்க முடியும் என்பதை மறந்துட்டியா? யார் உதவியும் இல்லாமல் நீயே பறந்து போய் முட்டையைப் பிடிச்சிருக்கலாம். அதை விட்டுட்டு இப்படி அழுதுட்டும் புலம்பிட்டும் ஓடறியே… மயில் என்றால் கம்பீரம் வேண்டாமா?’’ என்று கேட்டது காட்டுக்கோழி.

“அட, ஆமாம். ரொம்பப் பறக்கறதே இல்லைங்கிறதாலே எனக்கு அது நினைவுக்கே வரலை. பதற்றம் அடைந்தால் தெரிந்த விஷயமும் மறந்து போகும்னு சொல்றது சரியாகத்தான் இருக்கு. இதோ கிளம்பறேன்… உனக்கு ரொம்ப நன்றி” என்று சொல்லிவிட்டு, ஜிவ்வென்று பறந்தது மயில்.

மயிலைக் கண்டதும் பாம்பு ஊர்வதை நிறுத்தியது. சட்டென்று பக்கத்தில் உள்ள புதருக்குள் ஒளிந்துகொண்டது.

பறந்து வந்த மயில் முட்டையைப் பிடித்தது.

“எனக்காக இவ்வளவு தூரம் ஓடி வந்த அணிலே, உனக்கு என் நன்றி” என்று சிரித்தது மயில்.

“இனிமேலாவது முட்டையைப் பத்திரமா பார்த்துக்க… நான் வரேன்” என்று மாமரத்தில் தாவி ஏறியது அணில்.

“பொல்லாத முட்டையே… எல்லோரையும் என்ன பாடுபடுத்திவிட்டாய்?” என்று சொல்லிக்கொண்டே தன் இருப்பிடம் நோக்கி நடந்தது மயில்.

– 12.08.2020

Print Friendly, PDF & Email

1 thought on “ஓடும் முட்டை… துரத்தும் மயில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *