ஓங்கி நின்ற ஒதிய மரம்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: April 14, 2023
பார்வையிட்டோர்: 3,490 
 
 

வருடங்கள் பல கடந்தும் தெம்போடு அங்கே நின்றுகொண்டிருந்த ஒதிய மரத்துக்கு ஆச்சரியம். இதுநாள் வரை வெட்டவெளியில் தனி மரமாக நின்று பேச்சுத் துணைக்கு யாருமின்றி ஏங்கி அழுதுள்ளது. சுற்று வெளியில் ஒரு பூச்சி நடமாட்டம் இருந்ததில்லை. புற்கள்கூட முளைக்காமல் பொட்டல்வெளியாக இருக்கும் பூமி. தனிமை இவ்வளவு வருடங்களாக அதற்குப் பழகிவிட்டது. இன்றோ, அதிசயமான பேச்சொலிகள் கேட்டது. தன் இலைகளைச் சிலுப்பிக்கொண்டு பார்த்தது. அந்த இடத்தில் சில மனிதர்கள் நின்றிருந்தார்கள். அதில் ஒருவரின் குரல்தான் கம்பீரமாக ஒலித்தது.

‘யார் இவர்? எல்லோருக்கும் தலைவர்போல தோன்றுகிறது. கைகளில் நிழலுக்குக் குடையைப் பிடித்திருக்கிறார். அவர் அமர்வதற்காக நாற்காலி போடப்பட்டுள்ளது. அட… அந்த நாற்காலியும் என் நிழலின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. என்ன சொல்லப்போகிறார்?’ என ஆர்வத்துடன் கவனித்தது ஒதிய மரம்.

“எல்லோரும் கேட்டுக்குங்க. இந்த இடத்தில் மாவட்டத்திலேயே பெரிய பூங்காவை அமைக்கப்போறோம். பெரிய அளவில் திறப்பு விழா நடக்கப்போகுது. பெரிய பெரிய ஆள்கள் வரப்போறாங்க. அதனால், வேலைகள் வேகம் வேகமா நடக்கணும். புதர்களை வெட்டி மண் தட்டிப்போடுங்க. பாத்தி கட்டி, எல்லா வகையான செடிகளையும் வைக்கணும்” என்றவர், இன்னும் பல வேலைகளை அடுக்கினார்.

ஒதிய மரத்துக்கு அடுத்துப் பேசியது எதுவும் ஏறவில்லை. ‘என்னது… எனக்கு அருகில் நிறையச் செடி கொடிகளா?’ என்று அடித்த காற்றில் ‘உய்’ என்ற உற்சாக ஒலி எழுப்பி ஆர்ப்பரித்தது.

‘இதற்காக எவ்வளவு நாள்கள் காத்திருந்தேன். இனி, நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள். அது மட்டுமா? பூங்காவுக்கு நிறைய மனிதர்கள் வருவார்கள். குழந்தைகள், பெண்கள், முதியோர் எனப் பலரும் வருவார்கள். விதவிதமாகக் கதைகள் பேசி மகிழ்வார்கள். நாமும் அந்த மகிழ்வில் பங்கேற்கலாம்’ என்று நினைத்தது.

அப்போதுதான் அந்த வார்த்தைகள் காதில் விழுந்தன. “சாமி… எல்லாம் சரிங்க. இந்த ஒதிய மரத்தை என்ன செய்ய? தேவையில்லாத மரம். பூங்கா அழகையே கெடுத்துடும். வெட்டிடலாமா?” எனக் கேட்டார் ஒருவர்.

மூச்சைப் பிடித்துக்கொண்டு, இலைகளில் அசைவின்றிப் பதிலைக் கேட்கத் தயாராக நின்றது ஒதிய மரம். “என்னது மரத்தை வெட்டறதா? அது பாட்டுக்கு அங்கே இருக்கட்டும். பூங்கா அமைக்கறோம்னு சொல்லி, ஒரு மரத்தை வெட்டறது சரியில்லே” என்றார் அவர்.

‘அப்பாடா’ என அவருக்கு நன்றி கூறியது ஒதிய மரம். இது நடந்து முடிந்து மூன்று மாதங்கள் சட்டென்று ஓடிப்போய்விட்டன. பொட்டல் காட்டில் நின்றிருந்த ஒற்றை மரத்துக்கு அருகில், இப்போது பச்சைப்பசேல் பூந்தோட்டம். திறப்பு விழா வண்ண விளக்குகளுடன் கோலாகலமாக நடந்தது. மஞ்சள், சிவப்பு, வெள்ளை என ரோஜா பூக்களிலேயே பல வண்ணங்கள் இருந்தன. செவ்வந்தி பூக்கள், மஞ்சள் நிறத்தில் பளிச்சிட்டன. சிகப்பு வண்ணச் செம்பருத்திகளும் ரோஸ் வண்ண அரளிப்பூக்களும் அழகில் போட்டிபோட்டுக் கண் சிமிட்டின. தினம் தினம் மனிதர்கள் வந்தார்கள்.

ஒதிய மரம், இப்போதெல்லாம் தனிமை என்ற வார்த்தையையே மறந்துவிட்டது. அன்றும் அப்படித்தான். அங்கு வந்திருந்த மனிதர்களை வேடிக்கை பார்த்தபடி இருந்தது. ஒதிய மரத்தின் கீழ் இருந்த ரோஜா, சிகப்பு மொட்டுக்களோடு ஒய்யாரமாக ஆடிக்கொண்டிருந்தது. ஒதிய மரத்துக்குத் தானே பூத்ததுபோல சிலிர்ப்பு. ரோஜா செடியின் பக்கம் திரும்பி, சந்தோஷமாகச் சொன்னது, “நண்பா… உன் பூக்கள் மிக அழகாக உள்ளன. அவை எனக்கும் சேர்த்து அழகைத் தருகின்றன. ரொம்ப நன்றி!’’

ஆனால், விருட்டென்று முகத்தைத் திருப்பிக்கொண்ட ரோஜா, “ஒதிய மரமே… நீ என் நண்பன் அல்ல. உன்னை யாருக்கும் பிடிக்காது. உன்னால் யாருக்கும் எந்த லாபமும் இல்லை. என் அழகைக் கெடுப்பதுபோல என் அருகில் நிற்கிறாய். நீ இல்லாமல் போனால்தான் எனக்கு நிம்மதி. என் மலர்களின் அழகை உன் கறுப்பு நிழலால் மறைக்கிறாய்” என்று எரிச்சலோடு கூறியது.

ஒதிய மரம் வேதனையோடு, “என்னால் லாபம் இல்லை என்று சொல்லாதே. என் நிழலில் உன்னைப் பாதுகாக்கிறேன்” என்றது.

“முட்டாள் மரமே… என்னைக் காத்துக்கொள்ள நான் முட்கள் வைத்திருக்கிறேன். நீ யாருக்கும் தேவையில்லை” என்றது ரோஜா.

“அப்படிச் சொல்லாதே… பயனற்றவர்கள் என்று யாருமில்லை. ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விஷயத்தில் பயன் தருவார்கள்’’ என்றது ஒதிய மரம்.

“போதும் வெட்டிப்பேச்சு” என்று ரோஜா சொல்லிக்கொண்டிருக்கும்போதே லேசாகத் தூறல் ஆரம்பித்து. அது, பெரிய மழையாகப் பொழிய ஆரம்பித்தது.

“ஓடி வாங்க… ஓடி வாங்க… இங்கன பெரிய குடை இருக்கு!” ஏதோ பள்ளியிலிருந்து பிக்னிக் வந்திருந்த குழந்தைகளில் ஒன்று சொல்ல, பெரிய கூட்டமாக ஒதிய மரத்தின்கீழ் வந்து நின்றார்கள்.

“ஹரிணி சொன்ன மாதிரி பெரிய குடைதான். இயற்கையின் கொடை. -எவ்வளவு அழகாக இருக்கு” என்றார், அவர்களை அழைத்து வந்திருந்த ஆசிரியர்களில் ஒருவர்.

“ஆமாம்! இந்த மரம் இல்லாவிட்டால் நாம் முழுவதும் நனைந்திருப்போம். எனக்குக் காய்ச்சல் வந்திருக்கும்” என்று சொன்னது வண்டு போலிருந்த மற்றொரு வாண்டு.

“இந்த மரத்தின் இலையிலிருந்து கீழே சிதறும் தண்ணீரைப் பார். நட்சத்திரம்போல ஜொலிக்குது” – கைகளில் விழுந்த துளியைப் பிடித்தபடி இன்னொரு குழந்தை ரசித்தது.

இந்த அமளியில் பக்கத்திலிருந்த ரோஜாவை யாரும் கண்டுகொள்ளவில்லை. மழைவிட்டுக் குழந்தைகளும் சென்றுவிட்டன.

“மன்னித்துவிடு ஒதிய மரமே!” – ரோஜா பதியன் தலையைச் சாய்த்துச் சொன்னது.

“பரவாயில்லை நண்பா!” என்று புன்னகையுடன் இலைகளை அசைத்தது ஒதிய மரம். உருவில் மட்டுமின்றி, பண்பிலும் ஓங்கி நின்றிருந்தது ஒதிய மரம்!

– Oct 2017

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *