ஒரு தேவதையும், மயிலும் !

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 16, 2012
பார்வையிட்டோர்: 17,157 
 

முற்காலத்தில் பறவைகள், விலங்குகள் யாவும் மனிதர்களைப் போலவே பேசும் திறன் படைத்திருந்தன. ஒருநாள் காட்டில் அவைகளுக்குள் ஒரே சண்டை. காரணம் தங்கள் தங்கள் அழகைப் பற்றிய பெருமை. அழகை ஆராதிக்காதவர்கள் யார்?

இவைகளின் சண்டையை மிகவும் சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு தேவதை, “ஓ இவைகள் ஏன் இப்படி மனித குலத்தைப் போல் அடித்துக் கொள்கின்றன? இருக்கட்டும் நான் போய் என்னாலான உதவிகளை இவைகளுக்கு செய்து, இவைகளின் சண்டையை தீர்த்து வைக்கிறேன்!’ என்று நினைத்து நல்ல மனதுடன் அவைகளின் முன் ஆஜராயிற்று.

OruThevathaiyum

“”நண்பர்களே! நான் தேவலோகவாசி. உங்களுக்கு உதவுவதற்காகவே வந்துள்ளேன். உங்களில் யாருக்கேனும் உங்கள் அழகில் திருப்தியில்லையென்றால் என்னால் உங்களுக்கு நிச்சயமாக உதவ முடியும். உங்கள் முகத்தை, ஏன் உங்கள் உடலைக் கூட என்னால் திருத்தி அமைக்க முடியும். உங்களில் யாருக்கு என்ன உதவி வேண்டுமோ தயங்காமல் சொல்லுங்கள். நான் மனமார உதவுகிறேன்!” என்றது.

“யார் இவள்? யார் இவள்? இவள் யார் எங்களின் அழகைப் பற்றி கேள்வி கேட்க?’ என்ற திமிர் அவைகளுக்குள் துளிர்விட, சட்டென அவைகள் மவுனமாயின. ஆனால், அந்த நல்ல உள்ளம் படைத்த தேவதை அதையெல்லாம் லட்சியம் செய்யலாமல், தன் அருகில் இருந்த குரங்கைப் பார்த்தது.

“”சகோதரா! உன்னை எல்லாரும் பரிகாசம் செய்கிறார்களே, உனக்கு வருத்தமாக இல்லையா? நீ சரி என்று சொல். கண் இமைக்கும் நேரத்தில் உன்னை மிக அழகானவனாக மாற்றிவிடுகிறேன்!” என்றது.

இதைக் கேட்ட குரங்கின் முகம் சிவந்தது, “”அட யார் வேண்டுமானாலும் சிரிக்கட்டும். எனக்கு அதைப் பற்றி அக்கறை இல்லை. எனக்கு மிக அழகிய கால்கள், அதற்கு இணையாக இரண்டு கரங்கள். மேலும், என் அழகிற்கு மெருகூட்டுவது என் நீண்ட வால். என்னைப் போல் மரத்திற்கு மரம் மிக லாவகமாகத் தாவ யாரால் முடியும்? அந்த வேகத்திற்கு ஈடாக ஒரு பறவையால் கூட முடியாது.

“”இதோ என் அருகில் கோரத்தின் மொத்த உருவாக நிற்கிறானே இந்த குதிரை, இவனை விட எத்தனை மடங்கு அழகானவன் நான் தெரியுமா? இவன் என்னைவிட பல மடங்கு விகாரமாக பெரிய உருவம் கொண்டவன். என் அழகிய வாலை விட மிக கோரமான தடிமனான அடர்த்தியான வாலை மிக ஜம்பமாக ஆட்டிக் கொண்டிருக்கிறானே. இவனின் இந்த இரண்டு அடி நீள அசடு வழியும் முகத்தை வேண்டுமானால் திருத்தி அமையேன் பார்க்கலாம்!” என்றது மிக ஜம்பமாக.

“”ஏய்! ஏய்! அயோக்கிய பதரே! என்னைப் பற்றி என்னடா சொல்றே?” என்று சீறிய குதிரை தன் பலம் கொண்ட மட்டும் குரங்கை உதைத்து நொறுக்கியது. பின் தேவதையைப் பார்த்து, “”சிநேகமான நண்பனே! சொல் என் அழகிற்கு என்ன குறைச்சல்? நான் மிக பளபளப்பாக, மிகவும் அழகாக இருக்கிறேன். என் அழகிய வாலால் ஈக்களை மட்டும் அல்ல, வேண்டாதவர்களையும் விரட்டி அடிக்கிறேன். ஆகையால் உன் உதவி எனக்குத் தேவையில்லை.

“”வேண்டுமானால் கோரத்தின் மொத்த உருவான என் இனிய நண்பன் இந்த யானையை திருத்தி அழகாக்கு. பாவம் மலைபோன்ற இவனின் கறுத்த உடல், மிகவும் தடித்த உலக்கை போன்ற கால்கள், படு கோரமான உலக அதிசயமான நீண்ட மூக்கு, இந்த லட்சணங்களுக்கு சற்றும் ஒவ்வாத மிகவும் குட்டையான வால். இவனுக்குத்தான் உன் உதவி மிகவும் தேவை. என் அழகிற்கு இணையாக இவனை மாற்று நண்பா!” என்றது மிகவும் அட்டகாசமாக.

இதைக் கேட்ட யானைக்கு வந்த கோபத்தை பார்க்க வேண்டுமே. “”டேய்! அயோக்கிய ராஸ்கல்!” என்று கர்ஜித்துவிட்டு, தன் தும்பிக்கை நிறைய தண்ணீரை நிரப்பி குதிரை மேல் பாய்ச்சியது. தன் வாலை சுழற்றி தன் அருகில் இருந்தவர்களை துரத்தி, தன் கால்களால் தரையில் ஓங்கி ஓங்கி அடிக்க, மண்ணும் சகதியும் கூடியிருந்த கூட்டத்தின் மேல் ஒரே சகதி அபிஷேகம்!

“”என் அழகிற்கு என்ன குறைச்சல்? இதைவிட என்னை எப்படி அழகாக்குவாய்? என் உருவம்தான் என் பலம், என் அழகு. உனக்கு உன் திறமையை வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பம் வேண்டுமெனில், அதோ அந்த மரத்தில் உட்கார்ந்திருக்கும் மிக பரிதாபத்திற்குரிய அந்த மயிலைப் பார். அழகான மூக்கில்லை, பித்தளை கெட்டிலின் மூடியைப் போன்ற சின்னத்தலை, பாவம். செத்த காக்கையைப் போல் கறுத்த சிறகுகள். குச்சி குச்சியாக விளக்குமாற்று குச்சிபோன்ற வால். தயை செய்து அவனை அழகாக்கு. உம் சீக்கிரம். உன் கை வண்ணத்தைப் பார்க்க மிக ஆவலாக இருக்கிறது!” என்றது மிக ஜம்பமாக.

உடனே சட்டென்று மரத்திலிருந்து, “”பெருமைக்குரிய கருணையான தேவதையே! தயவு செய்து என்னை அழகாக்கு. குரங்கைப் போன்ற கால்கள் இல்லை. குதிரையைப் போன்ற வாலில்லை. யானையைப் போன்ற உடலும், மூக்கும் இல்லை. இவர்களைப் போல் பெருமைபட்டுக் கொள்ள என்னிடம் என்ன இருக்கிறது. தயவு செய்து எனக்கு உதவு. என்றென்றும் உனக்கு நான் நன்றிக் கடன் பட்டவனாக இருப்பேன்!” என்றது மிகவும் சோகம் கூப்பிய குரலில்.

“”மயிலே! கவலைப்படாதே. உன் தன் அடக்கத்திற்கு என்றுமே மதிப்புண்டு. அதற்கு வெகுமதியாக இதோ பார்!” என்று சொல்லி கண் இமைக்கும் நேரத்தில் தன் கைவண்ணத்தை காட்ட ஆரம்பித்தது.

“”இனி உன் மிக அழகான நீளமான தோகையைக் கண்டு உலகமே வியக்கும். உன் தோகையில் நான் தீட்டப் போகும் கண்களைப் போன்ற மிகவும் கவர்ச்சியான கண்கள், அரண்மனையில் பிறக்கும் இளவரசிக்குக் கூட இருக்காது!” மேற்கொண்டு பேச்சை முடிக்கும் முன், ஓ அங்கே கண்கவர் மயிலாக உருமாறியது.

கூடியிருந்த அந்த மிருகங்களின் கூட்டம், பெருமை கொழுந்து விட்டு எரியும் கண்களுடன் அதனை பார்த்து வியந்தன. “ஐயோ இந்த தேவதையை பார்த்து தப்பு கணக்கு போட்டு நம் தலையில் நாமே மண்ணை வாரி போட்டுக் கொண்டு விட்டோமே’ என்று மனதிற்குள் புழுங்கிக் கொண்டன என்று சொல்லவும் வேண்டுமா?

– நவம்பர் 19,2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *