தொழிற் சாலையில் வேலை செய்யும் தொழிலாளி ஒருவன் சூதாடி, கடனாளி ஆகி விட்டார். கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் திண்டாடினான்.
கடன் கொடுத்தவரோ தொல்லைப் படுத்தினார், நெருக்கினார். தன்னோடு வேலை செய்யும் சக தொழிலாளியிடம் சென்று கடன் தந்து உதவும்படி வேண்டினான்.
“என்ன தேவைக்குக் கடன் கேட்கிறாய் ?” என்று கேட்டார்
“சூதாட்டத்தில் ஈடுபட்டேன். பணத்தை இழக்க நேரிட்டது. இழந்த – பணத்தை மீட்டு விடலாம் என்று மீண்டும் விளையாடினேன். எல்லாவற்றையும் இழந்து, இப்போது கடனாளி ஆகி, துன்புறுகிறேன்.” என்று உண்மையைக் கூறினார்.
“சரி, இப்பொழுது நான் கடன் கொடுத்தால், அதை எப்படி எனக்குத் திருப்பித் தருவாய்!” என்று கேட்டார்.
“மாதா மாதம் சிறு தொகையாகத் தந்து விடுகிறேன்” என்றான் அவன்.
“இப்போது என்னிடம் கடன் வாங்கி, அவருடைய கடனை தீர்த்து விடுவாய், பிறகு, எனக்கும் உனக்கும் தகராறு உண்டாகும். பழைய கடனைத் தீர்ப்பதற்காக புதுக் கடன் வாங்குவது முட்டாள் தனமாகும். இப்பொழுதும் ஒன்றும் தொல்லை இல்லை.
பழைய கடன்காரனிடம் சென்று, மாதந்தோறும் சிறு தொகை தருவதாகப் பணிவோடு சொல்லு, அவனும் சம்மதிப்பான். புதிதாக கடன் வாங்குவதற்காக முயற்சிக்காதே. மாதம்தோறும் கொடுத்து விடு; கடனும் தீர்ந்துவிடும். நிம்மதியாக இருக்கலாம்” என்று அறிவுறுத்தினார்.
அவனும் அவர் கூறியபடியே செய்து கடன் தொல்லையில் இருந்து விடுபட்டு அமைதியாக வாழ்ந்தான்.
– சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1997, முல்லை பதிப்பகம், சென்னை.