(1941ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
முன்னுரை
ஷேக்ஸ்பியர் உலகறிந்த புலவர் என்பது யாவரும் அறிவர். அவர்தம் நாடகங்கள் நவில்தொறும் நயம் பயப்பன. ஆங்கிலத்தில் சார்லஸ் லாம் (Charles Lamb) எழுதிய ஷேக்ஸ்பியர் கதைகளைத் தழுவியே தமிழில் கதைகளும் எழுதப்பெற்றுள்ளன. இப்போது மூன்றாம் புத்தகமாக நடுவேனிற் கனவு (A Midsummer Night’s Dream), சிம்பலின் (Cymbeline), கார்காலக் கதை (The Winter’s Tale), ஒதெல்லோ (Othello) ஆகிய நான்கு கதைகளும் வெளிவருகின்றன. இப்பதிப்பில், சிறுவர்கட்குக் கதைகள் நன்றாய் மனத்திற் பதியும் பொருட்டுக் கதை உறுப்பினர்களையும் கதைச் சுருக்கத்தையும் ஒவ்வொரு கதையின் முகப்பில் எழுதிச் சேர்த்திருக்கிறோம். இளைஞர்கள் படித்து இன்புறத்தக்க எளிய இனிய நடையில் எழுதப்பட்டிருக்கின்றன. ஆதலின், இவற்றைக் கற்கும் மாணவர் அறிவு வளர்ச்சியுடன் மொழித் தேர்ச்சியும் பெறுவர் – சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.
கதை உறுப்பினர்
ஆடவர்
1. பிரபான் ஸியோ: வெனிஸ் நகர்ச் செல்வன் – டெஸ்டி மோனா தந்தை.
2. ஒதெல்லோ: கருநிற மூர் வகுப்பினன் – சிறந்த வீரன் – வெனிஸ் படைத்தலைவன்-டெஸ்டிமோனா காதற் கணவன்.
3. மைக்கேல் காசியோ: படைத் துணைத்தலைவன் –ஓதெல்லோவின் நண்பன்- காதல் தூதன் – ஒதெல்லோ தந்த உயர்வால் அயாகோ பகைமை ஏற்றவன்.
4. அயாகோ: படைஞன் – காசியோ உயர்நிலையால் ஒதெல்லோவிடம் பகைமை கொண்டவன் – வஞ்சகன்.
5. ராடெரிகோ: டெஸ்டிமோனாவின் மறுக்கப்பட்ட செல்வனான பழங் காதலன்.
6. மொந்தானே: படைக்கலப் பணியாள்.
பெண்டிர்
1. டெஸ்டிமோனு: பிரபான்ஸியோ மகள் – ஒதெல்லோவின் காதல் மனைவி.
2. அயாகோ மனைவி.
கதைச் சுருக்கம்
வெனிஸ் நகர்ச் செல்வனான பிரபான்ஸியோவின் மகள் டெஸ்டிமோனாவை அந் நகர்ப் படைத்தலைவனான கருநிற மூர் வகுப்பைச் சேர்ந்த ஒதெல்லோ காதலித்து, மறைவாய் அழைத்துச்சென்று மணந்து கொண்டான். அது வகையில் உதவிய மைக்கேல் காசியோ என்ற நண்பனைத் தன் படை யில் ஒதெல்லோ உயர்பணி தர, அதனால் பகைமையும் பொறாமையும் கொண்ட அயாகோ என்ற படைஞன், டெஸ்டிமோனாவின் மறுக்கப்பட்ட பழங்காதலனும் அறி விலியுமான ராடரிகோ என்ற செல்வனை ஏவி அவன் மூலம் இரவில் மறைந்து வெளியேறும் காதலரைப் பிர பான்ஸியோவின் ஆட்களைத் தேடும்படி செய்தான். பிர பான்ஸியோ பேரவையில் ஒதெல்லோமீது மாயத்தால் தம் மகளை மருட்டியதாகக் குற்றம் சாட்டினான். டெஸ்டிமோனா வின் காதற் சொற்கள் ஒருபுறம், அத்தறுவாயில் ஸைப் பிரஸில் துருக்கிப்படையை எதிர்க்க ஒதெல்லோவின் பணி இன்றியமையா திருந்தது மற்றொருபுறம், அவ்வழக்கைப் புறக்கணிக்க வைத்தது. ஒதெல்லோ டெஸ்டிமோனாவுடன் ஸைப்பிரஸ் சென்றான்.
அத் தீவில் முதல் நாள் காவலுக்கு வைக்கப்பெற்ற காசியோ அயாகோ தூண்டுதலால் குடித்து நிலை தவற, அந்த அயாகோ ராடரிகோ மூலம் மணியடித்து இதனை வெளிப் படுத்திக் காசியோவைப் பணியினின்றும் அகற்றும்படி செய் தான். பின் காசியோவிடம் டெஸ்டிமோனா மூலம் ஒதெல் லோவை மனமிரங்கச் செய்யலாம் என்று தூண்டி, மறுபுறம் அவன் டெஸ்டிமோனாவிடம் மறைவாகப் பேசுகிறான் என்று ஒதெல்லோ மனத்தில் பொறாமையையும் தூண்டினான். டெஸ்டிமோனாவின் கைக்குட்டையைத் திருடிக் காசியோ விடம் சேர்ப்பித்து அதனையும் ஒரு தெளிவாகக் காட்டி ஒதெல்லோவை வெறிப்படுத்த, அவன் டெஸ்டிமோனாவைக் கொன்றான். அதற்கிடையில் ராடரிகோவைத் தூண்டிக் காஸியஸும் கொல்லப்பட்டான். சாகுமுன் ராடரிகோ சொற்களாலும், அவன் பையில் இருந்த கடிதத்தாலும், காசியோ தூய்மையும் அயாகோ சூழ்ச்சியும் தெளிவு பட்டுப்போயின. தன் பிழையுணர்ந்து ஒதெல்லோ வாள் மீது வீழ்ந்திறந்தான். அவன் பெருமிதத்தையும், டெஸ்டிமோனா தூய்மையையும் காசியோவின் எளிமையையும் மக்கள் போற்றினர்.
4. ஒதெல்லோ
க. ஒதெல்லோவின் காதல்
இத்தாலி நாட்டின் சிறந்த நகரங்களுள் வெனிஸ் ஒன்று. அதன் நகரவை உறுப்பினருள் “பிரபான்சியோ என்ற செல்வர் ஒருவர் இருந்தார். அவருடைய புதல்வி எல்லாவகையான நற்குண நற்செய்கைகளும் பொருந்திய டெஸ்டிமோனா ஆவள். அவளை அடையும் விருப்பத்துடன் பல நாட்டிலிருந்து செல்வக் குமரர் பலர் வந்து வந்து, தம் விருப்பம் ஈடேறாது ஏமாந்து போயினர். புற அழகே போன்ற அக அழகும் மிக்க இவ்வரிய நங்கை அவர்களது புற அழகில் மயங்காது அக அழகே அழகென நாடி நின்றாள். அதனால் பிறர் எதிர்பாரா வகையில் அவள் தன் நாட்டினர் அனை வரையும் விடுத்து மூர் என்ற கரு நிறமுடைய வகுப் பைச் சார்ந்த ஒதெல்லோ என்பவனுக்கே தனது காதலை உரிமைப்படுத்தினாள்.
டெஸ்டிமோனாவின் காதலுக்கு உண்மையில் ஒதெல்லோ தகுதியுடையவன் என்பதில் ஐயமில்லை. அவன் உடல் நிறம் கறுப்பாயினும், உள்ள உயர்வு எத்தகைய உயரிய பண்புடைய செல்வ நங்கையும் பாராட்டத்தக்க தன்மையுடையதாகவே இருந்தது. அவன் ஒரு சிறந்த போர் வீரன்; போரில் அஞ்சா நெஞ்சமுடையவன்; வீரம் ஒன்றின் மூலமாகவே போரில் சிறைப்படுத்தப்பட்ட ஓர் அடிமையின் நிலையினின்று படிப்படியாக உயர்ந்து வெனிஸ் படையின் தலைவனானவன். நகராண்மை மன்றத்தின் பகைவர்க ளாகிய துருக்கியரை அடக்கி ஒடுக்கி அதனைக் காத்தவன் அவனே. நகராண்மைக் கழகத்தார் அவனை மிகவும் நன்கு மதித்திருந்தனர். அதோடு டெஸ்டி மோனாவின் தந்தையும் அவனிடம் மிகுந்த நட்புக் கொண்டு தம் வீட்டிற்கு அவனை அடிக்கடி அழைத்து அவனுடன் விருந்துண்டு மகிழ்வார்.
ஒதெல்லோ பல நாடுகளையும் சுற்றிப்பார்த்தவன் : டெஸ்டிமோனாவிற்குப் பெண்களின் இயற்கைப்படி அவனுடைய பலவகையான வாழ்க்கைச் செய்திகளை யுங் கேட்பதில் ஆர்வம் மிகுதி. அவனும் அதற்கேற் பத் தான் ஈடுபட்டிருந்த போர்கள், முற்றுகைகள், படையெடுப்புக்கள்; நிலத்திலும் நீரிலும் தனக்கு நிகழ்ந்த இடையூறுகள், பீரங்கி முனைகளிலும், கோட்டை மதிற் பிளவுகளிடையே இரு திறத்துப் படைகளும் எதிரிட்டுக் கைகலந்த சண்டைகளிலும் மயிரிழை அளவில் தான் தப்பிய அருஞ் செய்திகள் ; தான் சிறைப்பட்டமை ; அடிமையாக விற்கப்பட் டமை ; வாங்கப்பட்டமை ; விடுதலை செய்யப்பட் டமை முதலிய தன் வரலாறுகளை அவளிடம் கூறு வான். அவ்வரலாற்றினிடையிடையே தான் கண்ட புதுமை வாய்ந்த செய்திகள் ; அகன்ற பாலை வனங் கள், நினைப்பினும் மயிர்க் கூச்செறியும் இரு நிலக் குகைகள், முகில் தவழும் மலைகள்; மனிதரைத் தின் னும் அரக்கர்கள், தோள்களுக்குக் கீழ்ப்பக்கந் தலையையுடைய கவந்தர்கள் முதலிய வியத்தகு மக்க ளின் கதைகள் பலவும் விரித்துரைத்து அவளுக்கு எல்லையில்லாக் களிப்பு உண்டுபண்ணுவான்.
இக் கதைகளினிடையே அவள் மனம் ஈடுபட் டிருக்கும் போது சில சமயம் வீட்டு வேலைக்காக அவள் அவ்விடம் விட்டுப் போகவேண்டி வரும். அப்போது அவள் மனமெல்லாம் ஒதெல்லோவின் கதையில் ஈடுபட்டிருக்கும். ஆகவே அவள் வேலையை மிக விரை வில் முடித்துவிட்டு, முன்னிலும் பன்மடங்கு ஆர்வத் துடன் அவன் கதையைக் கேட்க அவன் முன் வந்து உட்கார்ந்துகொள்வாள். ஒரு சமயம் அவள் இங்ஙனம் தான் துண்டு துண்டாகக் கேட்ட அவன் வாழ்க்கை வரலாறு முழுமையும் அடி முதல் முடிவுவரை ஒரே கோவையாக உரைக்கும்படி அவனைக் கோரினாள். அவனும் அவள் கண்களில் இன்பநீர் ஊற்றெடுக்க மெய்ம்மயிர் சிலிர்ப்ப அதனை உருக்கத்துடன் கூறி, அவளைத் தன் அன்புக்கு உரிமைப்படுத்தினான்.
அக்கதையின் நற்பகுதிகளைக் கேட்கும் சமயம் அவள் மனமென்னும் பெட்டகத்தினின்றும் வெளிப் பட்ட ஒவ்வொரு பெருமூச்சும் புலவருடைய பாட்டுக் களைக் கேட்டுக் களித்து அவர்களுக்கு முடிமன்னர் ஈயும் ஒவ்வொரு பொற்காசுக் கொப்பாக அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. ஆகா / அப்போது அவள் முகத்தில் கண்ட வியப்பென்ன, இரக்கமென்ன! அவற்றைக் கேட்டு அவள் தான் அடைந்த துயரத்தை எண்ணி, ‘நான் கேட்டதே தவறு’ என்பாள். ஆனால், அதே சமயம், ‘ஆ! கடவுள் என்னையும் இத்தகைய வீரச்செயல்கள் செய்யத்தக்க ஆடவனாகப் படைத்தா னீல்லையே!’ என மறைமுகமாக அவனைப் பாராட்டு வாள். என் காதலைப் பெறவேண்டு மென்று உன் நண்பர் எவரேனும் விரும்புவராயின், இக்கதையை இப்படிச் சொல்லும்படி நீ அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தால் போதும்’, என்பாள். பெண்களது மடமையைப் பீறிட்டெழுந்த இக் காதற் குறிப்பைத் துணைகொண்டு, வெற்றி தராதெனத் தான் ஒதுக்கித் தன்னகத்தே வைத்திருந்த தனது காதலை அவனும் வெளிப்படையாகக் காட்டலானான். நாளடைவில் அவர்கள் காதல் முற்றிக் களவியல் முறையில் மனம் ஒத்து மணம் புரிந்துகொண்டனர்.
இந்த அகமணத்தை வெளிப்படையாகக் கூறிப் பிரபான்ஸியோவின் மருமகனாக ஏற்கப்படுவதற்கு ஒதெல்லோவின் பிறப்புரிமையும் நிறமும் ஒரு புறமும் வாழ்க்கை முறையில் அவனுக்கு ஏற்பட்டிருந்த நிலை மற்றொருபுறமும் தடையாயிருந்தன. பிரபான்ஸியோ தன் புதல்வி டெஸ்டிமோனாவுக்குத் தனது மனப் போக்கின்படி நடக்க உரிமை தந்திருந்தது உண் மையே. ஆனால், அவ்வுரிமையை நன்முறையில் தன் கருத்துப்படியே பயன்படுத்துவாள் ; பிற வெனிஸிய மங்கையரைப்போலவே தானும் உயர்நிலையுள்ள நகரவை உறுப்பினர் ஒருவரையோ, அல்லது அதற்கும் மேற்பட்ட நிலையுடைய ஒருவரையோ தனக்குத்துணை வனாகத் தேர்ந்தெடுப்பாள்’ என்றுதான் அவன் மனப் பால் குடித்து வந்தான்.
அவர்கள் தம் உறவை எவ்வளவு நாள் மறைத்து வைத்திருக்க முடியும்? விரைவில் அது பிரபான்ஸி யோவுக்கும் தெரியவந்தது. அவன் உடனே சீறி யெழுந்து, நகராண்மை மன்றத்திற்குச் சென்று ஒதெல்லோவின்மீது குற்றஞ்சாட்டி, ‘இக் கருநிற அடிமை நன்றி கெட்டவன் ; என் நட்புரிமையைப் பாழ்படுத்தித் தூய உள்ளத்தினளாகிய என் புதல்வியை மாயத்தாலோ மந்திரத்தாலோ கெடுத்து, அவளை என் விருப்பத்திற்கும் மனித இயற்கைக்கும் மாறாக நடக்கும்படி வற்புறுத்தியிருக்கிறான்’, என்று முழங்கினான்.
வெனிஸ் நகரச் சட்டப்படி மந்திரத்தால் பிறரை மயக்குவோருக்குக் கொலைத்தண்டனை அளிக்கப்பட்டு வந்தது. ஆயினும், ஒதெல்லோவுக்கு வாய்ப்பாக அந்நேரம் துருக்கியர் ஸைப்பிரஸ்மீது படையெடுப்ப தாகச் செய்தி வந்தது. ஸைப்பிரஸ் தீவு அந்நாள் வெனிஸியர் ஆட்சிக் குட்பட்டிருந்தது. எனவே, அதைப் பாதுகாக்க வெனிஸ் நகராண்மை மன்றத் தார்க்கு ஒதெல்லோவின் உதவி இன்றியமையா திருந் தது. அவனைவிட அப்பொறுப்பு வாய்ந்த பணிக்கு ஏற்றவர் அந்நகரில் இலர். எனவே, ஒதெல்லோ உயிருக்கு இடையூறு தரும் குற்றம் சாட்டப்பட்ட அதே நேரத்தில் வெனிலின் உயிருக்கே அவன் உதவி யும் இன்றியமையாததாய் இருந்தது.
பிரபான்ஸியோவின் பெருஞ் செல்வத்தையும் நகராண்மை மன்றில் அவர் உறுப்பினர் என்ப தையும் நோக்க, அவர் வழக்குப் புறக்கணிக்கத் தக்கதாக இல்லை. அதோடு அவர், சீற்றத்தால் எதிரியின் குற்றத்தை மிகைப்படுத்திக் கூறினர். ஆனால், அச் சீற்றமே ஒதெல்லோவின் பக்கமாக நின்று உதவிற்று என்னலாம். ஒதெல்லோவிடம் இக் குற்றச்சாட்டு வகையில் உனது விடை என்ன என்று கேட்டபோது, அவன் , சீற்றத்திற்கு எதிர்ச் சீற்றம் இன்றி, ‘காதலர் காதற் கன்னியர் மனத் தைக் கவரப் பொதுப்படையாகக் கையாளும் மாய வித்தைகளையன்றி வேறெவ்வகை மாயத்தையும் நான் அறியேன். அன்பு கனிந்த மொழிகளும் உரையாட லுமே நான் இழைத்த மாயம், என்று உண்மைக் கதையை உள்ளவாறே கூறினான். இதுவும், தமது நகர்ப்பணிக்கு அவனது இன்றியமையாமையும் சேர்ந்து, நகர்த்தலைவர் மனத்திலும் நகரத்தார் மனத் திலும் அவன் மீது நன்மதிப்பை உண்டுபண்ணின . நகரத்தலைவர், “இத்தகைய கபடற்ற நேரடியான காதல் பிரபான்ஸியோவின் மகளை மட்டுமன்று; யார் மகளையும், என் மகளைக்கூடக் கவர்ந்திருக்கும் என் பதில் எனக்கு ஐயமில்லை,” என்று வெளிப்படையாகக் கூறினார்.
ஒதெல்லோவின் இக் கூற்றிற்கு டெஸ்டி மோனாவின் உரைகளும் சான்று பகர்ந்தன. வெளியே வந்து ஆடவர் முன் பேசியறியாதவள் அவள்; ஆயினும் அன்று தந்தை எதிரிலும், அவரை யொத்த நகரத்துப் பெரியார் அனைவரது முன்னிலையிலும் வந்து நின்று அவள், ‘நான் ஒழுக்கத்துடன் வாழ்ந்து வந்தவள்; கல்வி கேள்விகளில் தேர்ச்சியுடையவள்; எனவே, என் கட்சியை உரைக்க எனக்கு உரிமை உண்டு. என் தந்தைக்குக் கீழ்ப்படிவது எனக்குக் கடமையே என்பதை நான் நன்கு அறிவேன்; ஆனால் என் தலைவனுக்கும் கணவனுக்கும் நான் அதனினும் உயர்ந்ததோர் கடப்பாடுடையேன்; இதனை என் தந்தை அறிவர்; இவ்வுரிமைபற்றியே என் தாய் தன் தந்தையினும் அவரை உரிமையுடையவராகப் பின் பற்றினாள்’ என்று அவள் கூறிய மொழிகள் பசுமரத் தாணி போல் நயமுடையவையாகவும் மறுக்கக்கூடா தவையாகவும் இருந்தன.
இங்ஙனம் தமது தசையே தமக்கு எதிர்வழக் காடித் தமது கட்சியை முறித்ததென்று பிரபான்ஸியோ கண்டார். கண்டு நிலைமைக் கேற்ப அவர் தம் மனத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு தம் புதல் வியை வேண்டா வெறுப்பாக ஒதெல்லோவிடம் ஒப்ப டைக்க இசைந்தார். ஆயினும், அவளது முடிவால் தமக்கேற்பட்ட மன எரிவை அவர் வெளிப்படை யாகக் காட்டாதிருக்க முடியவில்லை. ‘எனக்கு டெஸ்டிமோனாவை யன்றி வேறு பிள்ளை யில்லாதது நன்றாயிற்று; அன்றேல், அவள் நடந்து கொண்ட முறையைப் பார்த்தபின் பிற குழந்தைகளை அடக்கு முறையால் கட்டுப்படுத்தி, அவர்கள் வாழ்வுக்கு இடையூறு செய்யவேண்டி நேர்ந்திருக்கும்’ என்று அவர் முணுமுணுத்துக் கொண்டார்.
உ. அயாகோவின் பொறாமைப் புயல்
காதற்போரில் இங்ஙனம் ஒருவகையாக வெற்றி கண்ட பின் உடன் தானே படைப்போருக்கும் ஏற் பாடு செய்யவேண்டியதாயிருந்தது. டெஸ்டிமோனா பட்டுடுத்துப் பஞ்சணை மெத்தையிற் கிடப்பதே காதல் எனக் கொள்ளாது கணவனுடன் இன்ப துன்ப மனைத்தையும் பங்கு கொள்வதே காதல் எனக் கொண்டவள். எனவே தானும் கணவ னுடன் போரில் கடுமையையும் இடையூறுகளையுந் தாங்கத் துணிந்து முன் வந்தாள்.
ஒதெல்லோவும் டெஸ்டிமோனாவும் ஸைப்பிரஸில் இறங்கியதும், புயலால் துருக்கியப் படை தானா கவே சிதறடிக்கப்பட்ட தென்று நற்செய்தி வந்தது. எதிர்பார்த்த பகைவரினிடையூறு இதனால் அகன்றது. ஆயினும், புறப் பகைவரது போர்தான் நின்றது. ஒதெல்லோவின் பக்கத்தே அவன் எதிர்பாராத இடத் திலும் உள்ள மொத்த வாழ்க்கையிலும் அவனுக்கே திராக ஒரு வாழ்க்கைப்போர் அவனை நிலைகுலைக்க எழுந்தது.
ஒதெல்லோ தன் நண்பர்களுள் மைக்கேல் காசியோ என்பவனையே முதன்மையான நண்பனாகக் கொண் டிருந்தான். இவன் வீரமும், நேரிய தோற்றமும் உடையவன். பெண்களிடம் நாகரிகமாகவும் நயமா கவும் நடந்துகொள்ளும் இயல்பினன். ஒதெல்லோ டெஸ்டிமோனாவின் காதலை நாடி நின்ற சமயம் அவனது திறனைப் பயன்படுத்தி, அவனைத் தன் காதல் தூதனாக்கிக்கொண்டான். கள்ளங் கபடற்ற மனமும் சிறுமையான நினைவுகளுக்கு இடந்தராப் பெருந்தகை மையும் உடைய ஒதெல்லோ அவனிடம் பற்றும் நம்பிக்கையும் வைத்திருந்தது இயல்பே. டெஸ்டி மோனாவும் தான் காதலித்த கணவன் நீங்கலாக, வேறெவரையும் விட அவனிடம் நம்பிக்கையும் நல்லெண்ணமும் உடையவளாகவே இருந்தாள். மண வினைக்கு முன் இருந்த இந் நட்புறவு மணவினைக்குப் பின்னும் அவனுடன் இருவருக்கும் இருந்தே வந்தது. யாதொரு தங்கு தடையு மின்றிச் சூதற்ற நிலையில், ஒதெல்லோ இருக்கும் போதும் சரி இல்லாதபோதும் சரி, மைக்கேல் காசியோவும் டெஸ்டிமோனாவும் நகைத்து உரையாடியும் களித்தும் நேரம் போக்குவ துண்டு. இந்நட்பின் குற்றமற்ற தன்மையும் உயர் வுமே தீயோன் ஒருவன் எறிந்த தீக்கணைக்கு அதனை எளிதில் இரையாகச் செய்தல் என்னல் வேண்டும்.
ஸைப்பிரஸுக்கு வருவதற்குச் சற்று முன்ன தாகவே ஒதெல்லோ காசியோவுக்குத் தனக்கடுத்த தோர் உயர்பணி தந்தான். காசியோவைவிட முதலில் உயர்ந்த நிலையில் இருந்து இவ்வுயர்வால் அவனுக்குக் கீழ்ப்பட்டுவிட்ட அயாகோ என்னும் படைஞனுக்கு இவ்வுயர்வு கண்ணுறுத்தலா யிருந்தது. அயாகோ பார்வையில் காசியோ அதற்கு எவ்வகையிலும் தகுதி யுடையவனாகப் படவில்லை. ‘பெண்களிடையே பசப் பித் திரிவதற்குத்தானே இவன் தகுதியுடையவன்? இவனுக்குப் போரைப்பற்றி என்ன தெரியும்?’ என அவன் கூறுவதுண்டு. இது முதல் அவனுக்குக் காசியோ’வின் பெயர் நஞ்சாயிற்று. காசியோவுக்கு உயர்வு தந்ததாலோ அல்லது வேறெவ்வகை நினை வாலோ ஒதெல்லோவின் பேரிலும் எல்லையிலாக் கசப்பும் வயிற்றெரிச்சலும் ஏற்பட்டு நாளாக நாளாக வேரூன்றித் தழைத்து வளர்ந்து வந்தது. சமயம் ஏற்பட்ட போதெல்லாம் அவன் உள்ளதும் இல்லதும் ஆக ஒதெல்லோ காசியோ இவர்களைப் பற்றிய தீய கருத்துக்களைப் போற்றிப் பெரிதாக்கிப் பொறாமைத் தீயை வளர்த்து வந்தான்.
அயாகோ இயற்கையாகவே வஞ்சமும் கைத் திறனும் உடையவன். மனித இயல்பையும் மனிதர் மனப்போக்கையும் அறிந்தவன். மனிதர் மனத்தை உள்ளூர நின்று. ஆற்றி வைக்கும் உணர்ச்சியாற்றல் களையும், அவற்றை இயக்கும் நெறியையும், அவற் றால் துன்பத்தை மிகுதியாக விளைத்துப் பிறரைத் துன்புறுத்தும் வகையையும் அவன் நன்குணர்ந்தவன். தன் எதிரிகளாகிய ஒதெல்லோ , காசியோ ஆகிய இவர்களுள் காசியோமீது ஒதெல்லோவுக்குத் தப் பெண்ணம் உண்டாகும்படி மட்டும் செய்துவிட்டால், எதிரி கையாலேயே எதிரியை – ஒரு வேளை எதிரிகள் இருவரையும் கொன்று ஒழித்துவிடலாகும் என்று அவன் எண்ணி மனக்கோட்டை கட்டலானான்.
கூ. காசியோமீது குற்றச்சாட்டு
பகைவர் படை உலைந்ததும், படைத்தலைவரும் அவர் தலைவியும் தம்மிடையே வந்திருப்பதும், ஸைப் பிரஸ் மக்களுக்கு எல்லையில்லாக் களிப்புத் தந்தன. அக்களிப்பில் அவர்கள் எங்கும் விழாக் கொண்டாடத் தொடங்கினர். பாலும் நறுந்தேனும் எங் கும் ஒழுகின. ‘ஒதெல்லோ வாழ்க, டெஸ்டிமோனா வாழ்க’ என்னும் ஆரவாரத்தினிடையே பொற் கலங்களும் வெள்ளிக்கிண்ணங்களும் கணகண என ஒலித்தன.
அன்றிரவு படைப்புலம் காவல்காக்கக் காசியோ அமர்த்தப்பட்டான். படைஞர்கள் மட் டுக்கு மிஞ்சிக் குடிக்கவோ, தம்முட் சண்டையிட்டு மக்களை வெருட்டவோ செய்யாதபடி பார்க்க அவ னுக்கு ஆணை தரப்பட்டது. அயாகோவின் ஆழ்ந்த சூழ்ச்சிகளுக்கு அன்றைய இரவே மிகவும் வாய்ப் புடையதா யமைந்தது. அவன் துணைத்தலைவனாகிய காசியோவிடம் பொய்ப்பற்றுக் காட்டி, அவனது உடல் நலத்தையே விரும்பி வற்புறுத்துபவன் போல அவனை மேன்மேலும் குடிக்கச் செய்தான். குடிக்கும், இன்மொழிக்கும் இணங்கும் இயல்புடைய காசியோ அயாகோவின் சூதை அறியாது வரம்பற்றுக் குடியில் மூழ்கி அறிவிழந்தான். அந்நிலையில் அயாகோ தனது அரிய வேலைப்பாட்டை இன்னும் மிகைப்படுத்தி டெஸ்டிமோனாவின் பெயரையும் புகழையும் இடையே இழுக்க, அவன் அப் பெயரைத் தகாத வகையில் கூறிப் பிதற்றத் தொடங்கினான். டெஸ்டி மோனாவின் பழங் காதலர்களுள் செல்வச் செருக்கில் மிகுந்தும், அறிவில் குறைந்தும் விளங்கிய ராடரிகோ என்பவனை அயாகோ வேண்டுமென்றே அவ்விடத் திற்கு அழைத்துக்கொண்டு வந்திருந்தான். அவனும் குடித்திருந்ததால் டெஸ்டிமோனாவின் பெயரைக் கேட்டதும் காசியோவை எதிர்க்க, இருவர்க்கும் இடையே கடுமொழிகளும் அடிதடியுமாயின. அவர் களை விலக்கும் நோக்கம் கொண்டு வந்த மொந்தானோ என்னும் பணியாளனும் இப் பூசலில் காயமடைந்தான்.
இவ்வளவையும் பார்த்து இதுதான் குழப் பத்தைப் பெருக்கச் சமய மென்று நினைத்து அயாகோ சென்று நகர மண்டபத்தின் மணியை அடித்தான், நகர மக்கள் அதுகேட்டுக் கலவர மடைந்து வந்து கூடுவாராயினர். ஒதெல்லோவும் விரைந்து எழுந்து வந்து பார்த்துக் காசியோவின் நிலையைக் கண்டு வியப் படைந்தான். அயாகோ மிகுந்த திறமையுடன் தான் காசியோவுக்கு உற்ற நண்பன் போலவும் அவனை மறைத்துப் பேசுபவன் போலவும் நடித்து, அவனிடம் தானே உண்டு பண்ணிய குற்றத்தைப் பன்மடங்கு மிகைப்படுத்திக் காட்டினான். அவன் நட்பின் பெய ரால் காசியோவைப் பாதுகாக்க விரும்புவதாகக் காட்டக் காட்ட , ஒதெல்லோவுக்குக் காசியோவின் பேரில் தப்பெண்ணம் வளர்ந்து கொண்டே வந்தது. அது, அயாகோ குறிப்பாக மறைத்துரைக்கும் உரை களைப் பன்முறையும் வருந்திக் கிளறி முழுப்பொய்ம் மைத் திறனையும் காட்ட அவனுக்கு இடம் கொடுத் தது. போர்க்களத்தில் விருப்பு வெறுப்பென்று பாரா மல் ஒழுங்கொன்றையே தலைமையாகக் கவனிக்கும் இயல்புடையவன் ஒதெல்லோ . ஆதலால் காசியோ வைத் தன் நண்பனென்றும் பாராமல் ஒதெல்லோ பணியினின்றும் நீக்கிவிட்டான்.
ச. டெஸ்டிமோனாவின் இல்வாழ்க்கைக்கு உலை
இங்ஙனமாக அயாகோவின் சூழ்ச்சித் திட்டத் தின் முதல்படி நிறைவேறிற்று. காசியோவைப் பணியிலிருந்து நீக்கியாயிற்று. அவனிடம் ஒதெல் லோவுக் கிருந்த பற்றுதலைக் கலைத்தாயிற்று. ஆனால், இவ்வளவில் நின்றுவிட அவனது பொறாமைத் தீ இடம் தரவில்லை. அவ்வெறுப்பை விதையாக மட்டும் வைத்துக்கொண்டு பகைப்புலத்தில் அழிவுப் பயிரை வளர்க்க அவன் எண்ணினான்.
அதற்கிசையக் காசியோ அவனையே தன் உற்ற நண்பனாக நினைத்து அவனிடம் சென்று நான் இப்படி அறிவிழந்து கீழ்மகனது செயல் செய்துவிட்டேனே! எனக்கு இத் தண்டனைகூடப் போதாது’ என்று வருந்தினான். ஆனால், அயாகோ வினயமாக, அவன் குற்றம் அவ்வளவு பெரிதொன்று மில்லை. யாவர்க்கும் இயற்கையானதே என்றும், ஒதெல்லோ முன் சினத் தாலேயே இத் தண்டனை தந்தான் என்றும் கூறினான். மேலும், ‘தலைவர் எவ்வளவோ பெரியவர் ; ஆயினும் அவருக்குந் தலைவியான – டெஸ்டிமோனாவினிடமே உண்மையில் எல்லா வல்லமைகளும் அடங்கியுள்ளன’ என்றும், ‘ அவள் இரக்கமான உள்ளமும் அன்பும், உடையவளாதலால் தலைவரை அடுப்பதைவிட அவளை அடுத்தால் இச்சிறு குற்றம் மன்னிக்கப்பட்டுக் காசியோ மீண்டும் தன் பணியைப் பெறலாம்’ என்றும் அவன் எடுத்துக் கூறினான். இம்மொழிகள் இனிமையும் தகுதியும் உடையவையேயாயினும், அவற்றைக் கூறும் உள்ளத்தின் நஞ்சால் அவை தீய முடிபுகளுக்குப் பயன்படுத்தப்பட்டன.
அயாகோவின் உரைப்படியே காசியோ நடந் தான். எதிர்பார்த்தபடியே டெஸ்டிமோனாவின் கனிந்த உள்ளத்தில் காசியோவின் வேண்டுகோள் நற்பயன் அளித்தது. ‘என் தலைவரிடம் நல்லுரை கூறி – உனக்குக் கட்டாயம் உன் பணியை நான் மீட்டும் வாங்கித் தருவேன். உனக்கு உதவி செய்யக் கிடைத்த இத்தறுவாயில் நான் உனக்காக உயிரிழப்ப தாயினும் பின் வாங்கேன்’ என்ற பெருந்தகை மொழிகள் ஊழ்வலி முந்துறுவதாலோ என்னவோ அவள் நாவினின்றெழுந்தன.
அம் மொழிகளின்படியே ஒதெல்லோ வந்ததும் அவள் அவனுக்காகப் பரிந்து பேசினாள். ஒதெல்லோ எளிதில் அவள் மொழிகளை மறுக்கக் கூடவில்லை யாயினும், அன்று காசியோ மீதிருந்த கடுஞ்சினத்தின் ஆற்றலால் ‘ சரி பார்ப்போம், வரட்டும்’ என்று இழுத்துக் கூறவே அவள் அவன் குறிப்பறியாமல் (பெருந்தன்மை யுடையோர் பலரது அழிவுக்கு இக் குணமே காரணம் என்பது காண்க.) அடுத்தடுத்து இச்செய்தியை வற்புறுத்திக் கூறுவாளாயினள். ” இத்தகைய மாபெரும் குற்றம் அவ்வளவு விரைவில் மன்னித்துத் தள்ளத்தக்கதன்’றென அவன் கூறிய தற்கு மாறாக அவள், ‘இன்னே மன்னிக்கவேண்டும்; ‘தவறினால் இன்றே மன்னிக்கவேண்டும். அன்றேல், நாளை விடிந்த உடனாவது மன்னிக்கவேண்டும்’ என்று பன்னிப்பன்னி மன்றாடினாள். காசியாவின் கழிவிரக்கத்தையும் பணிவையும் அவள் விரித்துரைத் தாள். அவன் குற்றம் சிறிது; இத்தகைய பெருந் தண்டனை அதற்குத் தகாதென வாதாடினாள்.
இவ்வளவுக்கும் இணங்காது அவன் தயங்கு வதைக் கண்டு தீவினையால் அவள் தன் பழங்காதல் நினைவுகளையே தனது இறுதித் துருப்பாகப் பயன் படுத்தினாள். ‘ என் தலைவ! இச் சிறு செய்திக்காக நான் இவ்வளவு கூறவேண்டுமா? அதுவும் காசியோ வகையில்! தாங்கள் என்னை அடையும் எண்ணத் துடன் காதல் தூதனாக அனுப்பப்பட்டவனும், நான் உங்களைக் குறைவாகப் பேசியபோது மறுத்து உங் களைப் புகழ்ந்து என்னை உங்களுக்குரியவளாகச் செய் தவனுமான காசியோ வகையில் நான் இவ்வளவு கூறவேண்டுமா? காதலுக்காக எவ்வளவோ பெரிய செய்திகளையும் மனிதர் விட்டுக்கொடுப்பர். இச் சிறு செய்திக்கே இடந்தராவிட்டால் அத்தகைய பெருந் தேர்வுகளை உங்கள் காதலுக்கு நான் கொடுப்ப தெவ்வாறு?” என்று பலவாறாகப் பேசினாள். ஒதெல்லோ மறுக்கக் கூடாமல், ‘சற்றுப் பொறுமையாக மட்டும் இரு; உன் விருப்பப்படி எப்படியும் செய்வேன்’ என்றான்.
டெஸ்டிமோனாவிடம் மீண்டும் ஒருமுறை தனது வேண்டுகோளை வற்புறுத்திவிட்டுக் காசியோ மறை வாக வெளியேகும் சமயம் பார்த்து, அயாகோ ஒதெல் லோவை அவ்விடம் கூட்டிக்கொண்டு வந்தான். அப் போது அயாகோ தனக்குள் சொல்லிக்கொள்வது போல மெல்ல ‘ இதெல்லாம் நன்றாயில்லை ‘ என்று மறைவில் சிறுபொடி வைத்துக் கூறினான். ஒதெல்லோ அச்சமயம் அதனைக் கவனிக்கவில்லை. ஆனால், அஃது அவன் மனநிலை யறிந்து பக்குவமாக நல்ல நிலத்தில் விதைத்த விதையாய்ப் பின் பயன் விளைத்தது. அல் விதைக்கு உயிரூட்டுவதுபோல் டெஸ்டிமோனா இல் லாதபோது அவன், ‘நீங்கள் டெஸ்டிமோனாவைக் காதலித்தபோது காசியோவுக்கு அக்காதல் செய்தி தெரியுமோ?’ என்று ஒரு கேள்வி கேட்டான். ஒதெல்லோ அவனே அக் காதலுக்கு இடையீடாய் நின்றவன் என்றபோது, அயாகோ ஏதோ பெரிய தோர் உள்ளுறைக் கருத்துடையவன் போலப் புருவங் களை நெரித்துக்கொண்டு தன்னை அறியாமல் உட் கிடக்கையை வெளியிடுபவன் மாதிரி, ‘அதுவும் அப்படியா !’ என்று பெருமூச்சு விட்டான்.
இப்போது ஒதெல்லோவின் மனத்தில் சிதறிக் கிடந்த பல செய்திகளும் ஐயப்பாடுகளும் ஒன்றுடன் ஒன்று கலந்து உருப்பெறத் தொடங்கின. ‘அயாகோ நேர்மையுடையவன், சர்சியோவிடம் கொண்ட நட்பி னாலேதான் உண்மையை வெளியிடத் தயங்குகிறான்’ என்ற எண்ணம், அவனது ஒவ்வொரு குறிப்பிற்கும் எல்லையற்ற பொருள் கொடுக்கும்படி அவனைத் தூண் டிற்று. எனவே, அவன் அயாகோவிடம் ‘ஒளிவு மறைவின்றி எனக்கு உண்மையைக் கூறுக’ என்றான்.
ரு. பொய்யும் சொல்வன்மையினால் மெய்யாம்
ஓர் உயரிய நாடக ஆசிரியன் தன் கதைப் போக் கைத் தன் உரைகளாற் கூறாமல் பிறருடைய உரை யாடல்களாலேயே இணைத்துக்கொண்டு கூட்டுவான். அதுபோல அயாகோவும் தான் ஒதெல்லோவின் மனத்தில் எழுப்ப நினைத்த இருண்ட எண்ணங்களை நேரிடையான மொழிகளால் கூறாமல், குறிப்பாகப் பல செய்திகளாலும் புனைவுரைகளாலும் இயற்கையாய் எழும் வண்ணம் கூறத்தொடங்கினான். ‘ மனதிற்பட் டவை யெல்லாம் உண்மைகள் ஆகுமா? பல சமயம் மிக இருண்ட நினைவுகள் மனத்தில் எழுவதுண்டு. அவை உண்மையாயும் இருக்கலாம்; பொய்யாகவும் இருக்கலாம். அவற்றை ஆராயாது கூறினால் எவ் வளவு தீங்கு விளையும்” என்று தன்னையும் காத்துத் தான் கூறவிரும்பும் செய்தியின் இயல்பையும் குறிப் பாகக் காட்டினான். ‘அதனால் எத்தனையோ நல்லவர் கள் கெட்டபெயர் அடையும்படி தேரும்’ என்று கூறி ஒதெல்லோவின் குழம்பிய ஐயத்தை ஒருவரிருவர்மீது செலுத்தினான். ‘அதிலும் மனைவியைப்பற்றிக் கண வன் ஐயம் கொள்ளுதல் மிகக் கொடிது. இருவர்க்கும் அது தீது. வாழ்க்கை அமைதியும் அதனால் கெடும்’ என்று கூறி, ஒதெல்லோவின் மனத்தில் குமுறி யெழும் ஐயப் புயலை டெஸ்டிமோனா பக்கமாகச் சாய்த்தான்.
யானைகளையும் சிங்கங்களையும் எதிர்த்துப் போரிட்டு வெல்லும் வல்லமையுடைய சிங்கவேற் றைப் பல்லாயிரக்கணக்கான சுண்டெலிகள் பலநாள் தொடுத்துப் பொருது வதைத்துக் கொல்ல முடியு மன்றோ? அதுபோல் டெஸ்டிமோனாவின் மீதும் அவளது கற்பின் மீதும் ஒதெல்லோ வைத்திருந்த மாறாத பற்றையும் நன்மதிப்பையும் அயாகோ என் னும் மந்திரக்காரன் ஏவிய ஐயங்களும் தூண்டுதல்களும் சென்று தாக்கத் தொடங்கின. அப் பற்றின் உறுதி முதலில் அவற்றைச் சிதறடித்தது. ‘என் மனைவி ஓர் அழகி என்பதும், மனிதரது கூட்டுறவு களியாட்டம் உரையாடல் இவற்றில் விருப்புடையவள் என் பதும் எனக்குத் தெரிந்தவையே, ஆனால் இவை மட் டிலும் குற்றங்கள் ஆகிவிடா. உண்மையில் கற்பு இருக்கும் இடத்தில் இவை சிறந்த குணங்கள் ஆம். அக்கற்புக்குக் குறைவு கூற நான் மும்முறை தயங்கு வேன்’ என்று ஒதெல்லோ கூறினான்.
ஒதெல்லோவின் இவ்வுறுதியையும், மனைவியின் கற்பில் குறைவு கருதத் தயங்குவதையும் அயாகோ மிகவும் போற்றினான். ‘டெஸ்டிமோனா கறையுடை யவள் என்பதற்குத் தெளிவென்ன?’ என்று அவன் நேரில் கேட்டபோது, ‘அதற்குத் தெளிவே இல்லை. அது வெறும் ஐயப்பாடே. அதன் சுழலில் நீங்கள் விழவே கூடாது’ என்று அயாகோ தனது உண்மை எண்ணத்திற்கு நேரெதிரான மொழிகள் கூறினான். ‘ஆனால் அவள் மீது குருட்டு ஐயுறவு கொள்வது எவ்வளவு தவறோ அவ்வளவு அவள் மீது குருட்டு நம் பிக்கை வைப்பதும் தவறேயாகும். கறுப்பர்களாகிய நீங்கள் கபடறியாதவர்கள். இத்தாலியர், அதிலும் இத்தாலியப் பெண்கள் இயல்பை இத்தாலியராகிய நாங்களே நன்கு அறிவோம்’ என்று ஐயத்தின் மீது அயாகோ தன் சொல் துருத்தியால் காற்றை ஊதி னான். மேலும், உங்கள் காதலை ஏற்றதே அவள் இயற்கைக்கு மாறானது அன்றோ? அவள் தந்தை கூட அதனை ஏதோ மாயக்காரத்தனம் என்றுதானே நம்ப இடமிருந்தது!’ ‘காதலுக்காகத் தந்தையை வஞ்சிக் கத் துணிவு கொண்டவள் கணவனையும் வஞ்சிக்கலா மன்றோ?’ என்று கூறிய உரை கணைபோல் ஓதெல் லோவின் உள்ளத்தையுங் கடந்து அவனது உயிர் நிலை யையே ஊடுருவிச் சென்றது.
இவ்வளவு சொல்லிவிட்டு, ‘ஐயையோ, என்ன காரியம் செய்துவிட்டோம்; ஒருவர் மனை வாழ்க் கைக்கு உலைவைத்துவிட்டோமே’ என்று திடுக்கிட் டுப் பின்வாங்குபவன் போல அயாகோ பின் வாங்கி னான். ஆனால் ஒதெல்லோ அதற்கு இடங்கொடாமல் தன் மனத்தில் எழுந்த காட்டுத்தீயை வெளிக் காட் டாது மறைத்துக்கொண்டு, “நீ அறிந்ததைக் கூறுவதில் பிழையில்லை. நான் ஒன்றும் ஆய்ந்தோயாது நம்பு பவன் அல்லன். காசியோமீது ஐயப்பட இடமுண்டா என்பதைக் கூறுக’ என்றான். வானம் பார்த்த வறண்ட புலம்போல் இப்பணிக்கே காத்திருந்த அயாகோ காசியோவின் நேர்மைக் குணத்தின் மீதும் போர் தொடுக்கலானான். தன் இனத்தாரிடையே அழகுமிக்கார் பலரை வெறுத்து டெஸ்டிமோனா ஒதெல்லோவைத் தெரிந்தெடுத்தது பிறர்க்கிணங்காத் தன் ஆண்மையை உணர்த்தவில்லையா? காதலிக்கும் போதே உங்களையும் காசியோவையும் அவள் ஒப்பிட்டு உங்க ளிருவரிடையே யுள்ள தோற்ற வேற்றுமை, நடை வேற்றுமை இவற்றைக் கவனித்துத் தானே இருப்பாள். அவள் காசியோவுக்காக மன்றாடுவது வெறும் பரிவுக்கு மேற்பட்டதாக இல்லையா?’ என் றெல்லாம் ஒதெல்லோ மனதிற் படக் கூறியபின், ‘இதனைத் தேர்ந்தறிய வேண்டின், காசியோவை மன்னித்துப் பணியில் ஏற்றுக்கொள்ளும் வகையில் சற்றுத் தாமதம் செய்தால் போதும். அப்போது அவள் நடையிலிருந்து உண்மை அறியலாகும்’ என்று தூண்டினான். இங்ஙனம் டெஸ்டிமோனாவின் நற்குணமும் உயர்வுமே இந் நயவஞ்சகக் கொடியோன் கையில் அவள் அழிவுக்காக விரிக்கப்பெற்ற வலையாயிற்று.
சு. கைக்குட்டையே கழுத்துக் குட்டையாதல்
தக்க முடிவான சான்றுகளின்றி மனைவிமீது ஐயம் கொள்ளலாகா வென அயாகோ ஒதெல்லோ வை வற்புறுத்தி வேண்டிக்கொண்டான். ஒதெல்லோவும் அங்ஙனமே பொறுமையை இழவாமல் அவள் செயலை ஆராய்வதாக உறுதி கூறினான்! ஆனால் நாவின் உறுதி எங்கே, மன உறுதி எங்கே. இனி, ஒதெல்லோ இழந்த அமைதி இழந்த அமைதிதான் ! அபினி முத லிய மயக்க மருந்துகளாலோ மந்திரத்தாலோ அஃது அமைவதும் அன்று. அவன் எண்ணத்துக்கும் மொழிக்கும் செயலுக்கும் உள்ள தொடர்பு அற்றது. உண்ணும்போது அவன் உண்டானும் அல்லன் ; உடுக்கும் போது அவன் உடுத்தானும் அல்லன், துயிலோ அவன் கண்களிடம் விடைபெற்றுச் சென்று விட்டது. இனி அவை சென்றடையும் துயில் ஒழியாத் துயில் ஒன்றேயாம். அணிவகுப்பையும் கொடி வகுப்பையும் கண்டு துள்ளிக் குதிக்கும் அவன் உள்ளம், போர்முரசு கேட்டுப் போருக்கு முனைந்து துடிக் கும் அவன் உள்ளம், குறுதியாறுகளிடையேயும் கொன்று வீழ்த்தப்பட்டுருளும் யானைகளிடையேயும் கலங்காத உறுதியுடைய அவனது உள்ளம், இன்று இப்பொய்மைப் புனைவின் முன் அறிவற்று உரை யற்று செயலற்றுத் தத்தளித்தது.
அவர் மனம் பித்துக் கொண்டவர் மனம் போல் ஊசலாடியது. ஒரு சமயம் டெஸ்டிமோனா உண் மையில் தூயளே என்று எண்ணுவான் ; ஒரு சமயம் அவள் கபடியே என்பான் ; இன்னொரு சமயம் அவள், எப்படியிருந்தால் என்ன, நான் அவளை அணுகா திருந்தேனில்லையே என்பான். வேட்டை நாய்களா லும் வேடர்களின் சுழல் வெடிகளாலும் காய மடைந்து விழப்போகும் காட்டுமுள்ளம்பன்றி இறுதி யாகத் தன் முழுவன்மையையும் காட்டிச் சீறிவிழு வதுபோல் அவன் ஒருதடவை தன் சினமனைத்தை யும் சேர்த்து அயாகோவின் மீதே பாய்ந்து அவன் கழுத்தைப்பற்றி இழுத்து, ‘எனக்குக் கண்கூடான சான்று வேண்டும்; கண்கூடான சான்று வேண்டும்’ என்று கூறி அவனை உறுக்கினான். அதனைச் சரி யான தறுவாயாகக் கொண்டு அயாகோ தன்னைப் பொய்யன் என்று சொன்னதற்காகச் சினங்கொண் டவன் போன்று, ‘நானாக என் நன்மைக்காகவா இவ் வளவு உமக்குச் சொன்னது? யார் எக்கேடு கெட் டால் எனக்கென்ன? இதோ, உமக்குக் கண்கூடான சான்றாவேண்டும்; சரி தருகிறேன் ! உம் மனைவி கையில் முன் இலந்தைப்பழம் போன்ற புள்ளிகள் உடைய கைக்குட்டை இருந்ததன்றோ? அஃது இப் போது காசியோவிடம் எப்படி வந்தது என்று கேளும்’ என்றான். அத்தகைய ஒரு கைக்குட்டை உண்மை யில் தானே அவளுக்கு அளித்தது என்று ஒதெல்லோ ஒத்துக்கொண்டான்.
ஒதெல்லோ: இப்போது அது காசியோவிடம் இருக்கிறதென்று உமக்கு எப்படித் தெரியும்?
அயாகோ: அவன் அதைக் கொண்டு முகந்துடைப்பதை இன்று காலையில் கண்டேன்.
ஒதெல்லோ: ‘சரி; நான் நேரில் ஆராய்கிறேன். நீர் சொல்வது உண்மையாயின், அக்காசியோவை மூன்று நாட்களுக்குள் தூக்கிலிடுவேன். அதன் பின், அந்தக் கொடிய அழகிய நச்சுப் பாம்பைக் கொல்ல உலகில் இல்லாப் புதுவகை தேடுவேன்’ என்றான்.
‘சீற்றத்திற்குக் கண்ணில்லை’ என்பர். ஒதெல்லோவிற்குத் தன் மனைவி, தன் நண்பன் இருவர் உயிரையும் ஒழிக்கத்தக்க பெரிய குற்றச்சாட்டிற்கு இந்தச் சிறு கைக்குட்டையே போதிய சான்றாகப் பட்டது. உண்மையில் டெஸ்டிமோனாவுக்கோ, காசியோவுக்கோ இக்கைக்குட்டைக்கதை ஏற்பட்ட வகை தெரியாது. அயாகோவின் மனைவி டெஸ்டி மோனாவுக்குத் தோழியாயிருந்தாள். அயாகோ அக் குட்டையைப் பார்த்து மாதிரி எடுத்துக்கொண்டு தருவதாக அதனை மறைவாய் எடுத்துவரச் செய்து காசியோ கண்ணிற்படும்படி வழியில் போட்டு வைத் தான். அதன் அழகைக் கண்டு வியந்த காசியோ, வினை வலி முன் இழுப்ப, அதனை எடுத்துக்கொண் டதனாலேயே அயாகோ இவ்வளவு புனைவும் செய்ய முடிந்தது.
அன்றிரவு ஒதெல்லோ தன் மனைவியைக் கண்ட போது தனக்குத் தலையிடிப்பதாகவும், எனவே நெற்றியில் அவளது கைக்குட்டையைக் கட்டும்படியும் கூறினான். அவள் அதற்கு ஏதோ ஒரு கைக்குட்டை கொணரவும், ‘இது வேண்டா. நான் கொடுத்த கைக்குட்டையை எடு’ என்றான். அவள் தேடிப் பார்த்துக் காணவில்லை’ என்றாள். உடனே ஒதெல்லோ, அக்கைக்குட்டை தன் குடும்பத்தில் வழி வழி வந்த தெய்வத்தன்மை மிக்கதொரு கைக் குட்டை என்றும், அதை இழந்தவர் கணவன் அன்பை இழப்பர் என்றும் அச்சுறுத்தினான். டெஸ்டி மோனா இது கேட்டு உண்மையிலேயே தன் கணவன் அன்பை இழப்போமோ என்று அஞ்சினாள்; (இழந்து விட்டோம் என்பதை அடுத்த நொடியே அவள் அறிய இருந்தாள் ) அதன்பின் ஒதெல்லோவின் முகமும் மொழியும் செயலும் மாறிவிட்டன. பேய்போல் விழித்தான்; பாம்பு போல் சீறினான்; புலிபோல் பாய்ந்தான். டெஸ்டிமோனா இதன் மாயம் ஒன்றும் அறியாமல் இதெல்லாம் காசியோவுக்காகத் தான் பரிந்து பேசுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் நடிக்கும் நடிப்புப் போலும் என்று நினைத்தாள்.
தன் கணவனது மனத்தில் ஏதேனும் தப்பெண்ணம் இருக்குமோ என்று ஒரு சமயம் அவள் ஐயுறுவாள். ஆனால் அவள் கற்பின் உயர்வே இவ்வையத்தைக் கண்டித்தது. என் கணவனாவது, தப்பெண்ணமாவது; கதிரவனிலும் கறை இருக்குமோ?’ என்று அவள் மனம் கூறிற்று. ‘வெளியுலகில் அவருக்கு ஏதோ மனக்குழப்பம் தரும் செய்தி கிடைத்திருக்கும். அதனாலேயே என்னிடம் இப்படி நடந்துகொள்கிறார்;’ என்று நினைத்தாள் உலகின் சூதறியாத அவ் ஆர ணங்கு. ‘மனிதர் என்ன இருந்தாலும் மனிதர் தானே’ வானவர் அல்லரே. மண நாள் அன்றுபோல் என்றும் இருப்பர் என்றெண்ண முடியுமா? அவரது காதலில் சற்று ஏற்றத்தாழ்வு இருக்கத்தானே செய்யும்’ என்று தன்னைத் தேற்றிக்கொண்டாள், உயர்நெறியில் தளராத அந்நங்கை நல்லாள்.
எ. டெஸ்டிமோனாவின் முடிவு
அடுத்த தடவை ஒதெல்லோ டெஸ்டிமொனா வைக் கண்டபோது, தெளிவாகவே அவள் கற்புநெறி தவறி, இன்னொருவனைக் காதலிப்பவள் என்று அவ ளிடம் கூறி அவளை வைதான். காதலிக்கப்பட்டவன் எவன் என்று மட்டும் கூறவில்லை. இதைக்கேட்டதும் அவள் உள்ளம் பருந்தின் பிடியுட்பட்ட புறாப்போல் துடித்தது. அவள் கண்கள் கலங்கிக் கண்ணீர் வழிந் தன. நேர்மையான காலங்களில் அதன் ஒரு துளி விழுமுன், அவன் ஒரு நூறு தடவை உயிர் விட்டிருப்பான். இப்போது அவன் மனம் கல்லாய்விட்டது. உணர்ச்சியற்று, ‘இந்த நாள் மட்டுந்தான் உனக்குத் துன்ப நாளென்று நீ அழுகிறாய்போலும்’ என்றான். அவன் குறிப்பைத் தன் உயர் குணத்தின் காரண மாகவே அவள் அறிந்தாளில்லை. ‘எனக்கு எல்லாத் தீமைகளையும் தாங்க முடியும். வறுமையும் சரி, பிணி யும் சரி, அவமதிப்பும் சரி; எனக்கு ஒன்றுமில்லை. ஆயின், உன் வஞ்சம், உன் ஏமாற்று, உன் அடாப்பழி என் நெஞ்சை அடர்த்து விட்டது. நீ என் வாழ்க்கைக் கொரு களை; நீ அழகால் மயக்கும் நமன் ; நீ கண் பார்வை ஒன்றினாலேயே கொல்லும் நச்சுப் பாம்பு’ என்று பலவாறாக அவன் பிதற்றிப் புலம்பினான், ஏசி னான், அழுதான். அவன் தன் கையை நெரித்துக் கற கறவென்று பற்களைக் கடித்தான். விழிகள் அழலெழ உறுத்து நோக்கினான். ‘நீ உலகில் பிறந்த நாள் எத்தகைய கரி நாளோ’ வென்றான். இறுதியில் எதையோ எண்ணி, அவன் சட்டென்று வெளியே சென்றான்.
இவ்வளவும் கேட்டும் அவள் கலங்கினாளேயன்றி உரைக்கு உரை பகரவும் இல்லை. என்ன என்றோ, ஏன் என்றோ காரணம் வினாவவும் இல்லை. கணவன் மொழியில் அன்பில்லை என்ற ஒன்றிலேயே அவள் உள்ளம் கல்லாய்ப் போயிற்றுப் போலும், உரைக்கு மாறாக உரைதரல் அவள் அறிந்தது. அன்பிற்கு மாறாக அன்பு தருதல் அவள் செயல். கொடுமைக்கு மாறாக அவள் செய்வதெல்லாம் செயலற்றுச் சாவாமல் சாவது ஒன்றே. ‘என்னைக் குறைகூறும்போது நான் குழந்தையாகிவிடுகின்றேன். குழந்தையை மென் மொழிகளால் அல்லவோ திருத்தல் வேண்டும். வன்மொழி கூறினால் அஃது என்ன செய்யும்’ என்றாள், உடலென்னும் சிறு சிறையுட்பட்ட இப்பேருயிர்க் காரிகை.
கணவனை நெடுநேரம் எதிர்பார்த்திருந்து பின் டெஸ்டிமோனா படுக்கை சென்று கண்ணயர்ந்தாள். வெளியிருளை நிலவாக்கும் காரிருள் செறிந்த கருத் துக்களுடன் – கற்புக்கே கனிவு தரும் அக் காரிகை பைக் கொல்லும் முடிவுடன் , ஒதெல்லோ அவள் படுக்கையறையுள் நுழைந்தான். வானுலகத்து அரம் பையர் அழகும் பின்னிட , மாசு மறுவற்ற சலவைக் கல்லிற் கடைந்த பொற்பு மிக்க பதுமைபோன்று அவள் கிடந்ததைக் கண்டு, கொல்லவந்த அவன் கண் களும் கதறிக் கண்ணீருகுத்தன. புன்முறுவல் பூத்து வாடியது போன்ற அவளது முகத்தில் அந்நேரத்திலும் முத்தமிடாதிருக்க – மீண்டும் மீண்டும் முத்தமிடா திருக்க அவனால் முடியவில்லை. ஆனால், அவன் தன் மனத்தை உளியாக்கிக்கொண்டு வந்திருந்தான். அக்கண்ணீர்களைப் பார்த்து, ‘நீங்களும் அவள் பக்கத்தில் நிற்கும் கொடியவர்கள்’ என்றான். முத்தங்களைப் பார்த்து, ‘நீங்களே அவளுக்குப் பிறந்த கடைசிக் குறளிகள்’ என்றான்.
அவன் கண்ணீரின் ஈரமும் முத்தங்களின் வெம்மையும் அவளைத் துயிலினின்றெழுப்பின. அவனது கலங்கிச் சிவந்த கண்களிலும், துடிதுடிக்கும் உதடு களிலும், முகத்தோற்றத்திலும் அவனது கொடிய கருத்து வெளிப்பட்டது. அடுத்த நொடியில் அவன் உரைகளும் அதனைத் தெளிவுபடுத்தின. ‘உனது இறுதி வணக்கத்தை இறைவனுக்குத் தெரிவித்துக் கொள். உன் உடலைக் கொன்றாலும் உன் உயிர் நலனைக் கொல்ல நான் விரும்பவில்லை’ என்றான் அவன். அப்போது தான் (முன் கேட்டிருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும்!) அவள் அவன் சினத்தின் காரணம் கேட்டாள். விளக்கிக் காரண காரியங்களை ஆராயும் நேரமா அது! அவன் தொடர்பற்ற பிதற்றுதலிடையே ‘கைக்குட்டை’ ‘காசியோ’ என்ற மொழிகள் மட்டுமே அவள் செவியின் உட்புலனிடையே பட்டன. அதற்குள் ஒதெல்லோ, குருதியின் ஒரு சொட்டுக்கூடச் சிந்தாது அவளைக் கொல்வேன் என்று கருதிப் படுக்கையிற் கிடந்த தலையணைகளை அவள் மீது அடுக்கி அவற்றாலேயே அவளை அழுத்தித் திணறவைத்து உயிரை மாய்த்தான்.
அ. புயலுக்குப்பின்
இதற்குள் அயாகோவின் கையாள் ஒருவனால் காசியோ உடலெங்கும் குத்துண்டு ஒதெல்லோ முன் குற்றுயிருடன் கொண்டுவந்து நிறுத்தப்பட்டான். தன் உள்ளுறைகளைக் காக்க எத்தகைய தீச்செயலுக் கும் அஞ்சாத அயாகோ காசியோவைக் கொல்ல ஏவிய ஆளையும் கொன்றுவிட்டான். ஆனால், அவன் சட்டைப்பையில் கிடைத்த கடிதங்களால் காசியோ வின் தூய்மையும் அயாகோவின் பழிச்செயல்களும் காவலருக்கு வெளிப்பட்டன. இவற்றைக் கேட்ட ஒதெல்லோ இடியுண்ட நாகம்போல் அறிவிழந்து விழித்தான். தன் மனைவியின் உயர்வையும் தன் அறி யாமையின் தடிப்பையும் உணர்ந்து அவன் உயிர்நிலை மின்னலால் கருகியது போல் கருகிற்று. இனித் தன் வாழ்நாளின் ஒவ்வொரு நொடியும் தனக்கு மீளா நரகினும் கொடிதாம் என உணர்ந்து அவன் தன் வாள்மீது வீழ்ந்து மடிந்தான்.
டெஸ்டிமோனாவின் மாசற்ற கற்பையும், ஓதெல்லோவின் உயர்வையும் வெனிஸ் மக்கள் அனைவரும் கண்களில் நீர் சொரியப் போற்றி, அவர்கள் வாழ்க்கையை அழித்த கொடியோனாகிய அயாகோவைத் தூக்கிலிட்டனர்.
– K.அப்பாதுரைப் பிள்ளை, சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் (மூன்றாம் புத்தகம்), முதற் பதிப்பு: 1941, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை.