ஏழையின் சிரிப்பில்…

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 9,638 
 
 

ஒரு பக்தனின் கனவில் இறைவன் காட்சியளித்தார். அவரிடம் அவன், “கனவில் வரும் தாங்கள் நேரில் வரக்கூடாதா?’ என்று பெருமூச்சுடன் கேட்டான்.

“நாளை வருகிறேன்…’ என்றார் கடவுள்.

ஏழையின் சிரிப்பில்மறுநாள் எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டுக் கடவுளின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தான் பக்தன்.

அப்போது குடுகுடு கிழவர் ஒருவர் வந்து, “ஐயா, பசி… ஏதாவது போடுங்களேன்…’ என்று கெஞ்சினார்.

கடவுள் வரும் நேரத்தில் இந்தப் பிச்சைக்காரர் வந்து நிற்பதைக் கண்டு எரிச்சலடைந்த பக்தன் அந்தக் கிழவரை விரட்டியடித்தான்.

மதியம் ஆனது.. கடவுள் வரவில்லை… பிரசாதங்களும் மற்ற உணவுகளும் அப்படியே இருந்தன.

அப்போது கைக்குழந்தையுடன் ஓர் ஏழைப் பெண் வந்து பிச்சை கேட்டாள். கடவுள் இன்னும் வராததால் பொறுமையிழந்த நிலையிலிருந்த அவன் அந்த ஏழையையும் விரட்டி விட்டான்.

மாலையும் வந்தது. கடவுள் இன்னும் வந்தபாடில்லை! பக்தனுக்குப் பசி எடுக்க ஆரம்பித்தது.

கடவுள் இப்படி ஏமாற்றிவிட்டாரே என்று பக்தன் எண்ணியபோது, ஒரு நாய் வீட்டிற்குள் நுழைந்து கடவுளுக்காக வைத்திருந்த உணவு வகைகளைச் சுவைக்க ஆரம்பித்தது.

ஆத்திரமடைந்த பக்தன், ஒரு தடியை எடுத்து நாயை அடித்து விரட்டினான். அது வலி பொறுக்க முடியாமல் கத்திக் கொண்டே ஓடி மறைந்தது.

மிகுந்த விரக்தியுடன் பக்தன் படுக்கையில் படுத்துக் கொண்டு யோசித்துக் கொண்டிருந்தான்.

அப்படியே தூங்கிப் போய்விட்டான்.

மீண்டும் கடவுள் பக்தனின் கனவில் காட்சியளித்தார்.

“கடவுளே, தாங்கள் இப்படி என்னை ஏமாற்றலாமா? உங்களுக்காக நாள் பூராவும் காத்திருந்தேன். நீங்கள் வரவேயில்லையே…’ என்று கேட்டான்.

அதற்கு கடவுள், “நான் ஏமாற்றவில்லை! நான் மூன்று முறை உன்னைத் தேடி வந்தேன். நீதான் ஒவ்வொரு முறையும் என்னை விரட்டிவிட்டாயே? இப்போது என்னைக் குற்றம் சொல்லி என்ன பிரயோசனம்?’

என்று பதிலளித்தார்.

தனது வீட்டைத் தேடிவந்த ஏழைகளின் வடிவில் கடவுளைக் காணத் தெரியாமல், நல்ல மனமில்லாமல் அவர்களை விரட்டியதுக்காக வருந்தினான் அந்த பக்தன்.

-செவல்குளம் “ஆச்சா’ (மார்ச் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *