(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒரு மனிதனுக்குத் தன் நாட்டின் மன்னரைக் காணவேண்டும் என்று ஆசை உண்டாயிற்று. தன் நண்பன் ஒருவனிடத்தில் தன் ஆசையை எடுத்துச் சொன்னான். அவன் அரண்மனையில் வேலை பார்க்கும் ஒரு நண்பனிடம் சொல்லி அந்த மனிதனை அரண் மனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தான்.
ஒரு குறிப்பிட்ட நாளன்று அந்த மனிதன், அரண்மனை வேலைக்காரனுடன் மன்னரைக் காணப் புறப்பட்டான்.
இருவரும் அரண்மனையை அடைந்தார் கள். முதல் வாசலைக் கடந்தவுடன், அங்கே, யிருந்த கூடத்தின் நடுவில் ஒருவன் பகட்டான உடையணிந்து அமர்ந்திருந்தான்.
அவனைச் சுற்றிலும் ஏவலரும் காவலரு மாகிய பரிவாரத்தினர் சூழ்ந்து நின்று கொண்டிருந்தனர். அவன் படாடோபமாக அதிகாரங்கள் செய்து கொண்டிருந்தான். அதைக் கண்ட மனிதன் நண்பனை நோக்கி, “இவர் தாம் மன்னரா?” என்று கேட்டான்.
“இவரல்லர்” என்று சொல்லி விட்டு அரண்மனை வேலைக்காரன் உள்ளே அழைத்துச் சென்றான்.
இரண்டாம் வாசலைக் கடந்தார்கள். அங்கே மேலும் படாடோபமாகக் காட்சியளித்தான் ஓர் அதிகாரி. அவனைப் பார்த்து “இவர் தாம் மன்னரா?” என்று கேட்டான் அந்த மனிதன்.
“இல்லை வா” என்று கூறி மேலும் உள்ளே அழைத்துச் சென்றான் அரண்மனை வேலைக்காரன்.
இப்படியே ஆறு வாசலும் தாண்டினார்கள். அங்கங்கே தோன்றிய மேல் அதிகாரிகளைச் சுட்டிக் காட்டி, “இவர்தாம் மன்னரா?” என்று கேட்டுக் கொண்டு சென்றான் அந்த மனிதன்.
“இவரில்லை, இவரில்லை” என்று சொல்லிக்கொண்டே மேலும் உள்ளே உள்ளே அழைத்துச் சென்றான் அரண்மனை வேலைக்காரன்.
ஏழாவது வாசலைத் தாண்டியதும் அங்கே உண்மையான மன்னரே அமர்ந்திருந்தார். அவரைக் கண்ட மனிதன் “இவர்தாமா மன்னர்?” என்று கேட்கவில்லை.
அவருடைய மேன்மைத் தோற்றமும், வீரப் பொலிவும் அவர் தாம் மன்னர் என்ற ஐயத்திற்கிடமற்ற எண்ணத்தை யுண்டாக்கி விட்டன. அவன் உள்ளத்தில் இவருக்குமேல் எவரும் இல்லை என்ற உணர்வைப் பதித்து விட்டன. ஒரு மாபெரும் தலைவர்முன் நிற்கிறோம் என்ற பேருணர்வு தோன்றியது.
அந்த நிலை தனக்குக் கிடைத்ததை எண்ணியெண்ணி, வியப்புற்றுப் பெருமகிழ்வு பொங்கி அவன் பூரித்துப் போய்ப்பேச்சில் லாமல் நின்றான்.
கடவுளின் உண்மையை உணர்ந்தவர்களுக்கு, அந்தக் கடவுள் தன்மையில் ஐயம் தோன்றுவதில்லை. அவர்கள் உறுதியாகக் கடவுளை உணர்ந்து விடுவதனால், “இது கடவுள் தானா?” என்று யாரையும் கேட்பதில்லை. இது கடவுள் தானா என்று கேட்கும் நிலையில் உள்ள எதுவும் உண்மையான கடவுள் ஆகா என்பதை இக்கதையிலிருந்து அறிகிறோம்.
– ஏழாவது வாசல், பகவான் இராமகிருஷ்ணா பரமஹம்சர் சொன்ன கதைகள், முதற் பதிப்பு: 1980, அன்னை நாகம்மை பதிப்பகம், சென்னை.