ஏமாந்த வேதியன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 4, 2024
பார்வையிட்டோர்: 75 
 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஓர் ஊரிலே ஒரு வேதியன் இருந்தான். அவன் தெய்வங்களுக்கு ஒரு வேள்வி செய்வதாக வேண்டிக் கொண்டான். வேள்வியில் பலி கொடுப்பதற்கு ஓர் உயிர் வேண்டியிருந்தது. அதற்காக அவன் வெளியூர் சென்று, ஒரு செல்வனிடத்தில் தன் வேண்டுதல் பற்றிச் சொன்னான். அந்தச் செல்வனும், வேதியனிடம் அன்பு கொண்டு வேள்விக்காக ஓர் ஆடு கொடுத்தான். அந்த ஆட்டைத் தன் தோள்மீது தூக்கி வைத்துக் கொண்டு வேதியன் தன் ஊர் நோக்கிப் புறப் பட்டான். 

அவன் ஆட்டுடன் வருவதை வழியில் மூன்று வஞ்சகர்கள் கண்டார்கள். அந்த ஆட்டை அவனிட மிருந்து பறிப்பதற்கு அவர்கள் ஒரு சூழ்ச்சி செய் தார்கள். 

வழியில் போய்க்கொண்டிருக்கும் வேதியனிடம் முதலில் ஒருவன் வந்தான். ‘ஐயா வேதியரே, நாயைத் தோளில் தூக்கிக் கொண்டு போகிறீரே? நாய்க்குப் பயப்பட வேண்டாமா?’ என்று கேட்டான். 

யாகத்திற்காக நான் கொண்டு செல்லும் ஆட்டைப் பார்த்து, நாய் என்கிறாயே! உன் கண் கெட்டுப் போய்விட்டதா?’ என்று பதில் அளித்து விட்டு வேதியன் நடந்தான். 

சிறிது தூரம் சென்றதும், இரண்டாவது வஞ்சகன் வேதியன் எதிரில் வந்து, ‘பெரியவரே, செத்துப்போன கன்றுக்குட்டியைத் தூக்கிக் கொண்டு போகிறீர்களே. உங்கள் குலத்துக்கும் தகுதிக்கும் பொருத்தமாயிருக்கிறதா?’ என்று கேட்டான். 

‘ஆட்டைப் பார்த்துக் கன்றுக் குட்டி என்கிறாயே, உன் கண் என்ன குருடா?’ என்று கோபத்துடன் கேட்டுவிட்டு மேல் நடந்தான் வேதியன். 

சிறிது தூரம் சென்றதும் மூன்றாவது வஞ்சகன் குறுக்கில் வந்தான். ‘இது என்ன நிசத்தனம்? சண்டாளன் கூட இப்படிச் செய்யமாட்டானே? வேதியரே கழுதையைச் சுமந்து செல்லுவது சரி தானா?’ என்று கேட்டான். 

இதைக் கேட்டவுடன் வேதியன் மனத்தில் ஐயம் தோன்றியது. நான் ஆட்டைத் தூக்கிக் கொண்டு வருகிறேன். ஆனால், வழியில் பார்த்த ஒவ்வொருவரும் வெவ்வேறு மாதிரியாகப் பேசுகிறார்கள். அப்படியானால், ஒவ்வொரு முறையும் அந்த ஆடு வெவ்வேறு விதமாகக் காட்சியளித்திருக்க வேண்டும். இது சாதாரண ஆடாக இருக்க முடியாது. மாயவித்தை செய்யும் இராட்சத ஆடாக இருக்க வேண்டும். இதை இனிச் சுமந்து போவது கூடாது, அதனால் ஏதும் கெடுதி நேரலாம் என்று எண்ணி அதைக் கீழே இறக்கிவிட்டுச் சென்று விட்டான். வஞ்சகர்கள் அந்த ஆட்டைப் பிடித்துச் சென்று வெட்டிக் கொன்று சமைத்துத் தின்றார்கள். 

– பஞ்சதந்திரக் கதைகள், பகுதி 3 – அடுத்துக் கெடுத்தல், முதற் பதிப்பு: மார்ச் 1996, அன்னை நாகம்மை பதிப்பகம், சென்னை.

நாரா. நாச்சியப்பன் (நாராயணன் நாச்சியப்பன்; பாவலர் நாரா. நாச்சியப்பன்) (ஜூலை 13, 1927 - 2000-த்திற்குப் பின்) கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர், அச்சக உரிமையாளர். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் ஒருவர். திராவிட இயக்கம் சார்ந்த பல படைப்புகளை, சிறார்களுக்கான பல நூல்களை எழுதினார். தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது. நாரா. நாச்சியப்பன், அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆத்தங்குடியை அடுத்த முத்துப்பட்டணத்தில், சித. நாரா. நாராயணன் செட்டியார்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *