கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 12,189 
 
 

சிங்கம் தன் கதையைச் சொன்னது.

பல வருடங்களுக்கு முன், மரச்சிங்கம் உயிருள்ள சிங்கமாக அந்தக் காட்டை ஆண்டுகொண்டிருந்தது. விலங்குகள் நட்பாக வாழ்ந்துகொண்டிருந்தன.

மரச்சிங்கத்தின் தந்தை காலத்தில் இருந்தே காட்டில் நல்லாட்சிதான் நடந்தது. மரச்சிங்கத்துக்கு ஆட்சிப் பொறுப்பைக் கொடுக்கும்போதுகூட, ‘‘குழப்பம் இல்லாமல் இத்தனை வருடங்கள் ஆண்டு வந்திருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் நான் இந்தக் காட்டை மதிப்பதுதான்.

தேவைக்கு மட்டும் வேட்டையாடு. மாமிசம் உண்ணும் சிறுத்தை, புலி போன்ற மற்ற விலங்குகளிடமும் இதே நடைமுறையைச் சொல்லி வை. அப்போதுதான் இந்தக் காடு வசிப்பதற்குகுத் தகுந்த மாதிரி அமைதியாகவும் அழகாகவும் இருக்கும். தேவையற்ற நேரங்களில் விலங்குகளைக் கொன்றால் அவை இந்தக் காட்டை விட்டுப்போய் விடும். அதன் பிறகு உணவுக்கு நீங்கள்தான் சிரமப்பட வேண்டியிருக்கும். அதே போல் உணவுச் சங்கிலியில் ஏதோ ஒரு தொடர்பு உடைந்தால் அதற்கு கீழே உள்ள உயிரினங்கள் பெருகிவிடும்.’’ என்று கூறியிருந்தார் மரச்சிங்கத்தின் தந்தை.

ஒருநாள் முயல்கள் சிங்கத்தைப் பார்க்க வந்தன. ‘‘என்ன பிரச்னை? நரிகள் உங்கள் இருப்பிடத்துக்குள் அத்துமீறி நுழைகின்றனவா?’’ என்று முயல்களிடம் கேட்டார் சிங்கராஜா.

‘‘இல்லை சிங்கராஜா! நீங்கள் சொன்ன பிறகு நாலு கால் நரிகள் அங்கே தேவைக்கு மீறி வருவதே இல்லை. ஆனால் புதிதாக ஏதோ இரண்டு கால் உயிரினங்கள் வருகின்றன. அவற்றின் கையில் முளைத்திருக்கும் பெரிய பெரிய பற்களைக் கொண்டு மரங்களை வெட்டுகின்றன. அதில் எங்கள் பொந்துகளும், புதர்களும் அழிந்து போகின்றன. அதனால் நாங்கள் வாழ்வதற்கு சரியான இட வசதி இல்லாமல் இருக்கிறது.’’ என்றன முயல்கள்.

‘‘சரி! நான் நேரில் போய்ப் பார்க்கிறேன்’’ என்று சொல்லிவிட்டு விரைந்தது சிங்கம். காட்டில் மரங்கள் வெட்டப்பட்டிருந்தன. என்ன நடந்தது என்றே புரியாமல் சிங்கம் சுற்றிக்கொண்டிருந்த போது, இரண்டு மனிதர்கள் கோடாரியால் மிச்சமிருந்த மரங்களை வெட்டத் தொடங்கினார்கள்.

‘அந்த இரண்டு கால் விலங்குகள் மனிதர்கள் என்றும், அவர்கள் கையில் வைத்திருப்பது கூர்மையான கோடாரி’ என்றும் சிங்கராஜாவுக்கு தெரியாது. நேரடியாக அவர்கள் மேல் பாய்ந்தது. சிங்கம் பாய்வதற்குள், கோடாரியால் தாக்கினான். சிங்கம் அடிபட்டு விழுந்தது.

சிங்கத்தின் தொடையில் பெரிதாக காயம் பட்டது. நடக்க முடியாமல் கிடந்த சிங்கத்தின் கண் முன்பே மீதம் இருந்த மரங்களை வெட்டிக்கொண்டு புறப்பட்டார்கள் அந்த மனிதர்கள். சிங்கத்தின் நிலையைப் பார்த்த விலங்குகள், அந்த மனிதர்களின் நிழலை மிதிக்கக்கூட பயப்பட்டன. அதனால் எந்தத் தடையும் இல்லாமல் காட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்தார்கள்.

காடு அழிந்ததால் மழை பெய்யவில்லை. தாவர பட்சிணிகளுக்கு உணவு கிடைக்காமல் இறந்துபோயின. தாவர பட்சிணிகளை உண்டு உயிர் வாழும் மாமிச பட்சிணிகளும் உணவு கிடைக்காமல் அவதிப்பட்டன. காட்டில் அங்கங்கே பல விலங்குகள் செத்து, பிணக்காடாக இருந்தது.

இன்னும் சில தினங்களில் உயிர் துறந்துவிடும் என்ற நிலைமைக்கு சிங்கம் வந்த சமயத்தில் காட்டைக் கடந்து போனார் ஒரு துறவி. பல இடங்கள் பொட்டல் காடாக இருந்ததைப் பார்த்து வருத்தப்பட்டார் அவர். அப்போது ஒரு பாறை மறைவில் முனகிக்கொண்டிருந்த சிங்கராஜாவைப் பார்த்தார். சிங்கராஜாவுக்கு பேசும் சக்தி அளித்த துறவி, அதனிடம் என்ன நடந்தது என்று விசாரித்தார். ‘‘உங்கள் இனத்தைச் சேர்ந்த இரண்டு பேர்தான் மொத்தக் காட்டையும் வெட்டினார்கள். என்னையும் இந்த கதிக்கு மாற்றினார்கள்’’ என்ற சிங்கம் தொடர்ந்து, ‘‘ஐந்தறிவுள்ள விலங்குகளே இயற்கையை மதித்து அதன் விதிகளின் கீழ் இயங்குகிறோம். தேவைக்கு மீறி எந்த விலங்குகளையும் வேட்டையாடுவது கிடையாது. மரங்களை அழிப்பதே கிடையாது. மரங்களை அழித்தால் என்ன பிரச்னையெல்லாம் வரும் என்றும், உணவுச்சங்கிலியை உடைத்தால் என்னவெல்லாம் பாதிப்பு வரும் என்றும் யோசிக்காமல் செயல்பட மனிதர்களுக்கு ஏன் ஆறறிவு?’’ என்று கேட்டது.

சிங்கத்தின் கோபத்தைப் புரிந்து கொண்ட துறவி, ‘‘உங்களைப் போல் தாக்குவதற்கும், ஆபத்திலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்கும் கூர்மையான ஆயுதங்கள் எதுவும் இல்லாத எங்கள் மனிதர்களுக்கு ஆயுதம் இந்த அறிவுதான். ஆனால் அதை அழிவுக்குப் பயன்படுத்தும் போது அது எங்களையே தாக்கும் ஆயுதமாகி விடுகிறது. அவர்களை என்னால் எதுவும் செய்ய முடியாது. ஆனால் அவர்களை சமாளிப்பதற்கும், கட்டளை இடுவதற்கும் தேவையான வலிமையையும், புத்திசாலித்தனத்தையும் உனக்குக் கொடுக்கிறேன். இன்னும் சில நாளில் நீ இறந்து விடுவாய். அதன் பிறகு உன் உடலை ஒரு மரச்சிங்கமாக மாற்றுகிறேன். பார்ப்பதற்கு பொம்மை போல நீ தோன்றினாலும், உன் மனம் விழித்துக் கொண்டுதான் இருக்கும். நினைத்தபோது இப்போதைய உருவத்துக்கு வரவும், யாரிடம் வேண்டுமானாலும் பேசவும் உன்னால் முடியும். இங்கு மிச்சமுள்ள மற்ற விலங்குகளைக் கொண்டு இந்தக் காட்டை மறுபடியும் உருவாக்கு’’ என்றார்.

சிலநாட்களில் சிங்கம் இறந்தது. அதை மரச்சிங்கமாக மாற்றினார் துறவி. காடு மறுபடியும் உருவானது. அதில் இருந்து காட்டுக்கு காவலாக இருந்து வருகிறது மரச்சிங்கம்.

காடுகள் அழிக்கப்படுவது என்பது மனிதன் தோன்றிய காலத்திலேயே ஆரம்பித்த பிரச்னை. ஆனால் தொழில் புரட்சிக்கு முன் காடுகள் அழியும் சதவிகிதம் மிகவும் குறைவு.

முன்பெல்லாம் காடுகள் அழிக்கப்பட்டால் அந்த இடம் புல் தரையாகவோ அல்லது வயல்களாகவோ மாறும். ஆனால் தொழிற்புரட்சி காடுகளை கட்டடங்களாக்கி விட்டது.

இடத்தேவைக்காகவும்,. மரங்களின் தேவைக்காகவும் தான் அதிக அளவில் மரங்கள் வெட்டப்படுகின்றன.

காடுகள் அழிக்கப்பட்டால் அந்த இடத்தில் வேறு எந்த மரங்களோ, செடிகளோ எளிதில் வளராது. அந்தப் பகுதி மண் அதன் செழிப்புத்தன்மையை இழந்து விடும். மண்ணின் வளம் குறையும்.

அதிக அளவில் மண் அரிப்பு ஏற்பட்டு நிலச்சரிவுகள் நிகழலாம். அந்த இடமே பாலைவனம் ஆவதற்கான ஆபத்தும் உண்டு.

அந்த இடத்தின் நீர் சுழற்சி பாதிக்கப்படும். நிலத்தடி நீர் குறையும். அந்தப் பகுதியின் ஈரப்பதம் வெகுவாகக் குறையும்.

காடுகளில் ஆங்காங்கே மூலிகைகள் வளரும். நாம் காடுகளை அழித்தால் அந்த மூலிகைகளின் அழிவு நமக்கு தான் அதிக நஷ்டம்.

அந்தப் பகுதியில் உள்ள உயிரினங்களும் அழிந்து போகும்.

வளிமண்டலத்தில் மாசு ஏற்பட காடுகள் அழிவது முக்கியமான காரணம்.

காடுகளுக்கு பக்கத்தில் ஆறுகள் இருந்தால் அவற்றின் பாதை மாறி பெரும் அழிவுகள் ஏற்படக்கூடிய அபாயம் உண்டு.

காட்டின் ஒரு பகுதியை வெட்டிக் கொண்டிருக்கும் போதே பெரிய காட்டுத்தீ ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

வெளியான தேதி: 16 நவம்பர் 2006

1 thought on “ஏன் ஆறறிவு?

  1. அருமை, இப்படி கதைகள் படிப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம் நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *