எலி வேட்டையும் புலி வேட்டையும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 26, 2024
பார்வையிட்டோர்: 386 
 
 

(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

ஓர் ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். ஒருவன் பெயர் சின்னத்தம்பி. இன்னொருவன் பெயர் பெரியதம்பி. இருவரும் உயிர் நண்பர்கள். 

சின்னத்தம்பி ஒரு குயவனிடம் வேலை பார்த்து வந்தான். பெரியதம்பி ஒரு கொல்லனிடம் வேலை பார்த்து வந்தான். குயவன் கொடுத்த கூலி சின்னத் தம்பிக்குப் போதாமல் இருந்தது. அதனால் அவன் கூட ஒரு தொழில் பார்த்து வந்தான். அந்தத் தொழில் என்னவென்றால், எலி பிடிப்பதுதான். கொல்லன் கொடுத்த கூலி பெரியதம்பிக்குப் போதவில்லை. ஆனால், அவன் பார்ப்பதற்கு வேறு தோதான தொழில் எதுவும் அமையாததால்,கிடைத் ததைக் கொண்டு மன நிறைவுடன் வாழ்ந்து வந்தான். 

அந்த ஊரில் எலித் தொல்லை அதிகம். எலி களைப் பிடிப்பதற்கு அக்காலத்தில் எலிப் பொறிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், ஊர் மக்கள் சின்னத்தம்பியின் உதவியையே நாட வேண்டியிருந்தது. 

யார் வீட்டிலாவது எலிகள் அட்டகாசம் செய் தால், உடனே சின்னத்தம்பிக்கு ஆள் அனுப்பு வார்கள். அவன் தன் முதலாளியான குயவனிடம் அனுமதி வாங்கிக் கொண்டு, அந்த வீட்டுக்குச் செல்லுவான். எலிகள் குடியிருக்கும் வளைகளை யும், அவை வரும் வழிகளையும் ஆராய்வான். இரவில் அவை வந்து அட்டகாசம் செய்யும் அறை களைப் போய்ப் பார்ப்பான். 

அன்று இரவே அந்த வீட்டுக்குச் செல்வான். கையில் சில தேங்காய்த் துண்டுகளைக் கொண்டு செல்வான். அவற்றை அறையில் அங்கொன்றும் இங்கொன்றும் போட்டு வைப்பான். ஒரு தடிக் கம்பை ஓங்கிப் பிடித்தபடி, ஒரு மூலையில் பதுங்கி உட்கார்ந்திருப்பான். 

தேங்காய் வாசம் மூக்கில் பட்டவுடன், எலிகள் ஆனந்தமாக அந்த அறைக்குள் ஓடிவரும். யாரும் இருக்கிறார்களா என்று இருட்டுக்குள்ளே கண்களை விழித்துப் பார்க்கும். ஓசை எதுவும் கேட்கிறதா என்று செவியைத் தீட்டிக் கொண்டு கவனிக்கும். சின்னத்தம்பி மூச்சு விடாமல், ஆடாமல் அசையா மல், மூலையில் உட்கார்ந்திருப்பான். 

யாரும் இல்லை என்று நிச்சயித்துக் கொண்டே எலி சுதந்திரமாகப் பாய்ந்து வந்து தேங்காய்க் கீற்றைக் கடித்து இழுக்கும். அவ்வளவுதான், கண் மூடிக் கண் திறப்பதற்குள் படீரென்று தடிக் கம்பு அதன் முதுகில் விழும். எலி நசுங்கிச் செத்துப் போகும். 

ஓர் எலிக்கு ஒரு பணம் வீதம் சின்னத்தம்பி கொல்லும் எலிகளுக்குப் பணம் எண்ணிக் கொடுப் பார்கள். 

சின்னத்தம்பிக்கு எலி வேட்டையில் மேல்வரும் படி கிடைத்து வந்தது. இதனால் அவன் அந்தத் தொழிலைக் கடைசிவரையில் விடாமல் நடத்தி வந்தான். 

அந்த ஊருக்குப் பக்கத்தில் ஒரு காடு இருந்தது. அந்தக் காட்டில் ஒரு புலி இருந்தது. அது ஒரு முறை தற்செயலாக ஊருக்குள் வந்தது. ஊரில் ஒரு குடிசைக்குப் பின்னால் மரத்தடியில் கட்டிக் கிடந்த ஆட்டை அடித்துக் கொன்று தின்று விட்டது. பிறகு அந்தப் புலி நாள்தோறும் வந்தது. வெட்ட வெளிகளிலும், தோட்டங்களிலும் கட்டிக் கிடந்த ஆடு மாடுகள் அதற்குப் பலியாகி கொண்டு வந்தன. 

புலியின் கொடுமையை ஊர் மக்களால் தாங்க முடியவில்லை. எலி பிடிக்கும் சின்னத்தம்பியிடம் சிலர், “நீ அந்தப் புலியைப் பிடித்து ஊர் மக்கள் தொல்லையைத் தீர்த்தால் என்ன ?” என்று கேட் டார்கள். 

“எனக்கு எலி பிடிக்கத்தான் தெரியும். புலி பிடிக்கத் தெரியாது!” என்று சின்னத்தம்பி சொல்லி விட்டான். இந்தப் புலியைக் கொன்று ஊரைக் காப் பாற்றக் கூடிய ஆள் நம் ஊரில் இல்லையே!” என்று மக்கள் கலங்கினார்கள். 

ஒரு நாள் அந்த ஊர்க் கொல்லனுடைய கன்றுக் சூட்டியைப் புலி கொன்று தின்று விட்டது. கொல்லன் மிகவும் துயரத்தோடு இருந்தான். 

அவன் துயரத்தைக் கண்ட பெரியதம்பி, “ஐயா! எனக்கு அனுமதி கொடுங்கள். நான் காட்டுக்குப் போய் அந்தப் புலியைக் கொன்று வருகிறேன்!” என்றான். 

“நீயா?” என்று வியப்புடனும் அவநம்பிக்கை யுடனும் கேட்டான், கொல்லன். 

”ஆம்! நானேதான்! எனக்கு ஒரு வேலும் உங்கள் அனுமதியும் ஆசியும் கிடைத்தால் போதும்!” என்று உறுதியான குரலில் கூறினான் பெரியதம்பி. 

கொல்லன், அவன் நிமிர்ந்து நின்ற தோற்றத் தையும் கம்பீரமான பேச்சையும் கண்டான். சிறிது நம்பிக்கைதோன்றியது. “போய்வா!” என்று அனுமதி கொடுத்தான். “வெற்றியோடு திரும்பி வா” என்று ஆசி மொழி கூறினான். புதிதாக வடித்த ஒரு வேல் எடுத்துக் கொடுத்தான். 

பெரியதம்பி காட்டுக்குச் சென்றான். புலி யிருக்கும் இடத்தைத் தேடினான். கடைசியில் ஒரு குகை வாசலில் அந்தப் புலி நிற்பதைக் கண்டான். 

மனித வாடை அடித்ததும், அந்தப் புலி பெரிய தம்பி நின்ற பக்கம் திரும்பியது. அவன் மீது பாய ஆயத்தமாகியது. சுறுசுறுப்புடன் பெரியதம்பி தன் வேலை ஓங்கி அதன்மீது எறிந்தான். வேல் புலியின் விலாப்புறத்தில் பாய்ந்தது. அது தடாலென்று சாய்ந்தது. 

செத்து விட்டது புலி என்று எண்ணிக்கொண்டு பெரியதம்பி புலியை நெருங்கினான். ஆனால், அது சாகவில்லை. சாகும் அளவுக்கு வேல் ஆழமாகப் பாயவில்லை.பெரியதம்பி நெருங்கியவுடன் அது திடீரென்று எழுந்தது. பாய்ந்து தாக்கியது. 

பெரியதம்பி பயந்து சும்மா இருந்து விடவில்லை. அதனோடு போராடினான். அது தன் கால் நகங் களால் உடல் முழுவதிலும் கீறுவதையும் பொருட் படுத்தாமல் அதனோடு மல்லுக்கட்டி நின்றான். தன் வலிவை எல்லாம் பயன்படுத்தி அதன் வாயைப் பிளந்து கிழித்தான். அதன் விலாவில் பாய்ந்து தொங்கிக் கொண்டிருந்த வேலைப் பிடுங்கி அதன் தொண்டையில் செலுத்தினான். வாயைப் பிளந்து கொண்டு அது தன் கடைசி மூச்சை விட்டது. 

இறந்து போன அந்தப் புலியை இழுத்துக் கொண்டே ஊர் எல்லைவரை வந்து விட்டான். அதற்கு மேல் அவனால் நடக்க முடியவில்லை. புலி தன் நகத்தால் கீறிய காயங்களிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டே வந்ததால் அவன் வலுவெல் லாம் பறந்து விட்டது. சோர்ந்து போய்க் கால்கள் தடுமாறிக் கீழே விழுந்து விட்டான். 

பக்கத்து வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் இந்தக் காட்சியைக் கண்டு ஓடி வந்தார்கள். பெரிய தம்பியையும் அவன் இழுத்துக் கொண்டு வந்த புலியையும் கண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். ஆனால், பெரிய தம்பியை உடனே மருத்துவரிடம் கொண்டு போகாவிட்டால் அவன் பிழைக்க மாட்டான் என்று தோன்றியது. ஆகவே, அவனை அப்போதே ஊர் மருத்துவர் வீட்டுக்குத் தூக்கிச் சென்றார்கள். 

பெரியதம்பி புலியைக் கொன்ற செய்தியும், அவன் மருத்துவர் வீட்டில் கிடக்கும் செய்தியும், ஊர் முழுவதும் பரவி விட்டது. சின்னத்தம்பியும் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டான். அவன் உடனே மருத்துவர் வீட்டுக்கு வந்தான். பெரிய தம்பிக்கு ஏற்பட்டிருந்த பலமான காயங்களையும், போட்டிருந்த பெரிய மருத்துவர் அவற்றிற்குப் கட்டுகளையும் கண்டு மலைத்துப் போய் நின்று விட்டான்.பெரியதம்பி அப்போதுதான் கண் விழித் தான். சின்னத்தம்பியைக் கண்டு சிரிக்க முயன்றான். 

“பெரியதம்பி, நீ ஏன் இந்த ஆபத்தான வேலைக்குப் போனாய்?” என்று கேட்டான் சின்னத்தம்பி. பெரியதம்பியால் பேசவே முடியவில்லை. 

சில நாட்களில் பெரியதம்பி, மருத்துவரின் பெரு முயற்சியால், முற்றிலும் உடல் நலம் பெற்று விட்டான். 

அவன் புலியைக் கொன்று ஊரைக் காப்பாற்றி யதற்காக ஊர் மக்கள் ஒரு விழாக் கொண்டாட ஏற்பாடு செய்தார்கள். பெரியதம்பியைக் குதிரையில் ஏற்றி வைத்து ஊர்வலம் வந்தார்கள். அவன் மாலைகளைக் கொண்டு வந்து கழுத்தில் மலர் போட்டார்கள். 

இவற்றையெல்லாம் சின்னத்தம்பி பார்த்தான். அருகில் நின்ற ஒருவனிடம், “ஊருக்குத் தொந்தரவு கொடுத்த எலிகளை நான் பிடித்துக் கொல்கிறேன். ஒரு நாளைக்குப் பத்துப் பன்னிரண்டு எலிகளைப் பிடித்து வருகிறேன். என்னைப் பாராட்டுவார் ஒருவர் கூடக் கிடையாது. பெரியதம்பி ஒரே ஒரு புலியைக் கொன்றதற்காக ஊரே திரண்டு விழாக் கொண்டாடுகிறார்கள்! இது என்ன நியாயம்?” என்று கேட்டான். 

அதற்கு அந்த மனிதன் பதில் சொன்னான் : ‘எலியைக் கொல்வதில் வீரம் இல்லை. புலியைக் கொல்வதில் வீரம் இருக்கிறது. எளிய செயல் இலட்சம் புரிந்தாலும் பெருமையில்லை. அரிய செயல் ஒன்று செய்தாலும் பெருமையுண்டு தெரிந்து கொள்” என்றான். 

இதைக் கேட்ட சின்னத்தம்பி வெட்கத்துடன் தலை குனிந்தான். 

கருத்துரை – செய்தற்கு அரிய செயல்களைச் செய்வோரே பெரியோராகக் கொண்டாடப்படுவார்கள்.

– நல்வழிச் சிறுகதைகள் – இரண்டாம் பாகம், முதற் பதிப்பு: ஜனவரி 1965, வானதி பதிப்பகம், சென்னை.

நாரா. நாச்சியப்பன் (நாராயணன் நாச்சியப்பன்; பாவலர் நாரா. நாச்சியப்பன்) (ஜூலை 13, 1927 - 2000-த்திற்குப் பின்) கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர், அச்சக உரிமையாளர். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் ஒருவர். திராவிட இயக்கம் சார்ந்த பல படைப்புகளை, சிறார்களுக்கான பல நூல்களை எழுதினார். தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது. நாரா. நாச்சியப்பன், அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆத்தங்குடியை அடுத்த முத்துப்பட்டணத்தில், சித. நாரா. நாராயணன் செட்டியார்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *