எலி இரும்பைத் தின்றது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 4, 2024
பார்வையிட்டோர்: 52 
 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு பட்டணத்தில் இரண்டு செட்டிமார்கள் இருந்தார்கள். இருவரும் நெடுநாள் நண்பர்களாக இருந்தார்கள். அவர்களில் ஒருவன், அயல் நாடு போக வேண்டி யிருந்ததால், தன்னிடம் உள்ள ஆயிரம் துலாம் இரும்பையும், தன் நண்பனிடம் பாதுகாப்பாக வைத்துவிட்டு வெளிநாட்டுக்குப் போய்விட்டான். 

வெளிநாடு சென்றவன் திரும்பி வந்து கேட்ட போது, ‘இரும்பை யெல்லாம் எலி தின்று விட்டது’ என்று நண்பன் கூறி விட்டான். ‘சரி, போனால் போகிறது!’ என்று சொல்லிவிட்டு, மீண்டும் அவன் முன்போல நண்பனாகவே இருந்து வந்தான். 

பிறகு ஒரு முறை அந்த நண்பனுடைய வீட்டில் ஒரு விருந்து நடந்தது. விருந்துக்கு அந்த வெளி நாடு சென்று வந்த வணிகன், தன் நண்பனுடைய வீட்டில் எண்ணெய் தேய்த்துக் கொண்டான். நண்ப னுடைய பிள்ளைக்கும் எண்ணெய் தேய்த்து விட் டான். பிறகு அந்தப் பிள்ளையையும் கூட்டிக் கொண்டு குளத்திற்கு குளிக்கச் சென்றான். குளித்த பின், அந்தப் பிள்ளையைத் தகுந்த ஓரிடத்தில் ஒளித்து வைத்து விட்டுத் தான் மட்டும் திரும்பி வந்தான். 

வீட்டுக்குத் திரும்பி வந்து சேர்ந்த வணிகனைப் பார்த்து, அவனுடைய நண்பன் ‘என் பிள்ளை எங்கே?’ என்று கேட்டான். ‘உன் பிள்ளையைப் பருந்து தூக்கிக் கொண்டு போய் விட்டது!’ என்றான் வணிகன். உடனே மற்ற வணிகனுக்குக் கோபம் வந்து விட்டது. ‘எங்கேயாவது பிள்ளையைப் பருந்தெடுத்துப் போகுமா?’ என்று சண்டைக்கு வந்து விட்டான். வாய்ச்சண்டை முற்றிக் கைச் சண்டையாகி விட்டது. உடனே அங்கிருந்தவர்கள் இருவரையும் ஊர் வழக்காளர் முன்னே அழைத்துச் சென்றார்கள். 

வழக்காளர் அந்த வணிகனைப் பார்த்து ‘ஏனையா இது என்ன வேடிக்கை! எங்கேயாவது பிள்ளையைப் பருந்து தூக்கிக் கொண்டு போகுமா?’ என்று கேட்டார். 

‘ஐயா, ஆயிரம் துலாம் இரும்பில் ஓர் அணுவும் மீதி வையாமல், எலி கடித்துத் தின்றிருக்கும் போது, பிள்ளையைப் பருந்து தூக்கிப் போவது என்ன அதிசயம்?’ என்று கேட்டான். 

‘இந்த அதிசயம் எங்கே நிகழ்ந்தது!’ என்று வழக்காளர் விசாரித்தார். 

உடனே அவன் முன் நடந்தவைகளைக் கூறினான். 

‘அப்படியானால், நீ செய்தது சரிதான்!’ என்று சொல்லி விட்டு, வழக்காளர் அந்த வணிகனுடைய நண்பனைப் பார்த்து, ‘ஆயிரம் துலாம் இரும்பையும் நீ திருப்பிக் கொடுத்தால், அவன் உன் பிள்ளையைத் திருப்பிக் கொடுப்பான்’ என்று தீர்ப்பளித்தார். ‘சரி’யென்று ஒப்புக்கொண்டு இருவரும் திரும்பினார்கள். 

அந்த நண்பன் முன் இரும்பைத் திருடி விற்ற போது விலை குறைத்திருந்தது. இப்போது விலை கூடிவிட்ட படியால் அவன் பெரு நஷ்டப்பட்டு வீடு வாசல் எல்லாவற்றையும் விற்று ஆயிரம் துலாம் இரும்பையும் வாங்கிக் கொடுக்க வேண்டியிருந்தது. இதனால் அவன் ஏழையாகி விட்டான். 

வஞ்சகம் செய்பவர்கள் வாழ மாட்டார்கள்.

– பஞ்சதந்திரக் கதைகள், பகுதி-1 – நட்புப் பிரித்தல், முதற் பதிப்பு: மார்ச் 1996, அன்னை நாகம்மை பதிப்பகம், சென்னை.

நாரா. நாச்சியப்பன் (நாராயணன் நாச்சியப்பன்; பாவலர் நாரா. நாச்சியப்பன்) (ஜூலை 13, 1927 - 2000-த்திற்குப் பின்) கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர், அச்சக உரிமையாளர். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் ஒருவர். திராவிட இயக்கம் சார்ந்த பல படைப்புகளை, சிறார்களுக்கான பல நூல்களை எழுதினார். தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது. நாரா. நாச்சியப்பன், அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆத்தங்குடியை அடுத்த முத்துப்பட்டணத்தில், சித. நாரா. நாராயணன் செட்டியார்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *