எருதும் சிங்கமும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 4, 2024
பார்வையிட்டோர்: 55 
 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தென்னாட்டில் மகிழாரூப்பியம் என்று ஓர் ஊர் இருந்தது.அங்கு வர்த்தமானன் என்ற பெயருடைய ஒரு வணிகன் இருந்தான். அவன் வெளிநாடுகளில் வாணிகம் செய்ய விரும்பி, தன்னிடம் இருந்த சரக்கு களைக் கட்டை வண்டியில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டான். ஒரு காட்டு வழியாகப் போகும் போது வண்டி மாடுகளில் ஒன்று காலிடறி விழுந்து விட்டது. அந்த மாட்டின் கால் பிசகி அது நொண்டியாகி விட்டது. 

இதைக் கண்ட வணிகன், அந்த மாட்டை அவிழ்த்து விட்டுத் தன் சரக்குகளை ஆட்களின் தலையில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டான். அந்த மாட்டைப் பார்த்துக் கொள்வதற்காக ஓர் ஆளை வைத்து விட்டுப் போனான். 

‘சாகிற மாட்டுக்குக் காவலென்ன காவல்! என்று அந்த ஆளும் புறப்பட்டுப் போய்விட்டான். 

ஆனால், அந்த மாடு சாகவில்லை. நொண்டிக் காலோடு மெல்ல மெல்ல நகர்ந்து நகர்ந்து சென்று காட்டில் நன்றாக மேய்ந்தது. தீனி ஏற ஏற அது கொழுத்து வளர்ந்தது. ஊட்டத்தினால் அதன் கால் ஊனமும் சரியாகி விட்டது. பிறகு அது அந்தக் காடு முழுவதும் விருப்பம்போல் சுற்றித் திரிந்து, நன்றாக மேய்ந்து பெரிய எருதாகி விட்டது. 

அந்தக் காட்டை ஒரு சிங்கம் ஆண்டு வந்தது. அந்தச் சிங்கம் தண்ணீர் குடிப்பதற்காக ஒரு நாள் யமுனை யாற்றுக்குச் சென்றது. அப்போது அந்தப் பக்கத்தில் திரிந்து கொண்டிருந்த எருது முழக்கம் செய்தது. கடல் முழக்கம் போல் அந்த முழக்கம் பெரி தாக இருந்தது. சிங்கம் அதற்கு முன் அத்தகைய பேரொலியைக் கேட்டதில்லை யாகையால், நடுங்கிப் போய்விட்டது. “இதேது புதிதாக இருக்கிறதே!” என்று பயந்து அது தண்ணீர் குடிக்கவும் மறந்து நின்று விட்டது. 

சிறிது தூரத்தில் இரண்டு நரிகள் நின்று கொண் டிருந்தன. சிங்கத்தின் அமைச்சன் பிள்ளைகளாகிய அவை இதைப் பார்த்து விட்டன. அவற்றில் ஒரு நரி, மற்றொன்றைப் பார்த்து, “நம் அரசன் ஏன் நடுங்கி நின்று வீட்டான்?” என்று கேட்டது. 

”அதைப் பற்றி நமக்கென்ன கவலை? அதைத் தெரிந்துகொள்வதால் நமக்கென்ன இரை கிடைக்கப் போகிறதா, அல்லது பெருமை கிடைக்கப்போகிறதா. தனக்குத் தொடர்பில்லாத ஒரு காரியத்தில் தலையிடு கிறவன் ஆப்புப் பிடுங்கிய குரங்கு போல் அவதிப் பட வேண்டியது தான்” என்றது இன்னொரு நரி. 

‘“அப்படியல்ல. என்ன இருந்தாலும் சிங்கம் நம் அரசன். அரசர்களுக்குப் பணி செய்வது பெருமை யானது. அதனால் பெரியோர்களுடைய நட்பு உண் டாகும்; பல உதவிகளும் கிடைக்கும். நாய்கள், ஈரம் சிறிதும் இல்லாத எலும்பையும், பல்லசையும் வரை விடாமல் கௌவிக்கடித்துத்தின்னும். ஆனால் மிகுந்த பசியோடிருக்கும் சிங்கமோ மதயானையை அடித்துக் கொன்று தன் பசியைத் தீர்த்துக் கொள்ளுமேயல்லா மல், சிறிய உயிர்களைக் கொல்லாது. நாய், ஈனத் தனமாகத் தன் வயிற்றை ஒடுக்கி வாலைக் குழைத்துக் குழைத்து முகத்தைப் பார்த்துக் கெஞ்சி எச்சிலை வாங்கியுண்ணும். ஆனால் யானையோ, எவ்வளவு பசியிருந்தாலும், சிறிதும் கெஞ்சாது. தன் பாகன் வலியக் கொண்டு வந்து ஊட்ட ஊட்ட உணவை யுண்ணும். இப்படிப்பட்ட பெருமை யுடையவர்களோடு சேர்ந்து வாழ்வதே வாழ்க்கை” என்றது முதல் நரி. 

“சிங்கத்திற்கு நாம் அமைச்சர்கள் அல்லவே, இதைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டும்?’ என்று மறுத்தது இரண்டாவது நரி. 

“எந்த ஒரு காரியத்தையும் தந்திரமாகச் செய் தால் உயர்வை யடையலாம். யோசனை யில்லா விட்டால் சிறுமைதான் உண்டாகும். நல்ல செயல் களைச் செய்து நன்மை யடைவது அரியதுதான். தீய செயல்களைச் செய்து கேடடைவது எளிது. 

“ஏரியின் நீரைக் கரைபோட்டுக் கட்டுவது அரிது. அதை உடைத்துக் கெடுப்பது எளிது. ஒரு கல்லை மலையில் ஏற்றுவது அரிது. அதைக் கீழே உருட்டி விடுவது எளிது. அரியனவா யிருந்தாலும் பெரிய செயல்களையே செய்து பெருமையடைய வேண்டும். அறிவுடைய பெரியோர்கள் வாழ்வது ஒரு கணம் போல் இருந்தாலும் பெருமையோடும் புகழோ டும் வாழ்வார்கள். கருமை நிறமுள்ள காக்கையோ, எச்சிலைத் தின்று கொண்டு பல நாள் உலகில் வாழ்ந்திருக்கும். பெருமையும் சிறுமையும் அவரவர் செயலால் ஏற்படுவதே! இவற்றில் அருமையான செயல்களைச் செய்கின்றவர்களுக்கே பெருமை யுண்டாகும்” என்று கூறியது முதல்நரி. 

‘நல்லது இப்பொழுது என்ன செய்ய வேண்டும்’ என்று கேட்டது இரண்டாவது நரி. 

‘நம் மன்னனாகிய சிங்கம் வருத்தப்பட்ட காரணத்தை அறிந்து, அதன் மனத் துயரத்தை நீக்குவேன். அவனுடைய அமைச்சனாக இருந்து நம் நரிக்குலத்துக்கு இன்ப வாழ்வு ஏற்படச் செய்வேன்’ என்றது முதல் நரி. 

‘மோந்து பார்ப்பவர்கள் போல் வந்து, கடித்து விடக் கூடிய தன்மை யுடையவர்கள் அரசர்கள். அரசர்களும், தீயும், பாம்பும் ஒரே மாதிரி தான்’ என்று இரண்டாவது நரி கூறியது. 

‘நெருங்கி வளர்ந்திருக்கும் கொடி, பக்கத்தில் இருக்கும் மரத்தின் மேலேதான் படரும். அதுபோல், பெண்களும், மன்னர்களும் அருகில் இருந்து இனிமை யாகப் பேசுபவர்களிடமே அன்பு கொள்ளுவார்கள். நானும் என் திறமையால் சிங்கத்தின் நட்பைப் பெறு வேன்’ என்று உறுதியாகக் கூறியது முதல் நரி. 

‘நன்று, நீ வெற்றியடைக!’ என்று இரண்டா வது நரியும் மனந்துணிந்து வாழ்த்துக் கூறியது. 

முதல் நரி விடை பெற்றுக் கொண்டு சிங்கத்தின் முன்னே சென்று கை கூப்பி நின்றது. 

‘இந்த நாள் வரை உன்னைக் காணோமே, எங்கு போயிருந்தாய்?’ என்று கேட்டது சிங்கம். 

‘அரசே, ஒன்றுமில்லாமல் வந்து என்ன பயன்? இப்போது தங்களிடம் வரவேண்டியகாரியம் ஏற்பட்ட தால் வந்தேன். என்னைச் சிறியவன் என்று எண்ணி ஒதுக்கிவிடாதீர்கள். உங்களுக்கு வெற்றியும் பெரு மையும் உண்டாகும்படி செய்வேன். நல்ல அறிஞர் களின் துணை கொண்டே அரசர்கள் நீதிகளை இயற்றுவார்கள். அவர்களுடைய அரசும் பெருமையு டன் விளங்கும். ஒளி பொருந்திய வாளும், இனிமையான இசையும் இன்பந்தரும் யாழும், பரந்த உலக மும், அழகிய பெண்களும், அறிவு நிறைந்த பெரி யோரும், பயன் மிக்க நூல்களும் ஆகிய இவையெல் லாம், வைத்துக் காப்பாற்றுகின்றவர்களின் தன்மை யாலேதான் சிறப்படையும். அதுபோல் அரசு சிறக்க அறிஞர் துணை தேவை’ என்றது நரி. 

‘நரியே, நீ அமைச்சருடைய மகன் அல்லவா? அதனால்தான் உயர்ந்த ஆலோசனைகளைக் கூறு கின்றாய். நீ என்னிடமே இருந்து, உண்மையாக வேலை செய்து வா!’ என்று சிங்கம் கூறியது. 

உடனே நரி துணிச்சலுடன் ‘அரசே, தங்கள் மனத்தில் ஏதோ பயம் ஏற்ட்ெடிருக்கிறது போல் தோன்றுகிறதே!’ என்று கேட்டது. 

‘ஆம், இதுவரை இந்தக் காட்டில் நான் கேட்டறி யாத ஒரு பெருமுழக்கத்தைக் கேட்டேன். அதனால் என் மனம் கலங்கியிருக்கின்றது. முழக்கம் எவ்வளவு பெரியதோ, அவ்வளவு பெரியதாய் அந்த முழக்கம் செய்த மிருகமும் இருக்க வேண்டும் அல்லவா? அந்த மிருகம் என்னைக் காட்டிலும் பெரியதாய் இருக்கு மோ என்று அஞ்சுகிறேன். வழுக்கி விழ இருந்தவ னுக்கு ஊன்றுகோல் கிடைத்தது போல் சரியான சமயத்தில் நீ வந்தாய். என் கவலை நீங்க ஒரு வழி கூறு’ என்று மனம் விட்டுப் பேசியது சிங்கம். 

‘அரசே வெறும் ஒலியைக் கேட்டுப் பயப்படுவது சரியன்று. முன் ஒரு நரி இது போலத்தான், பெரும் சத்தத்தைக் கேட்டுப் பயந்தது. கடைசியில் பார்த் தால் அது வெறும் தோல் முரசாக இருக்கக் கண்டது. நீங்கள் பயப்பட வேண்டாம். நான் போய் இந்த முழக்கத்தின் காரணத்தை அறிந்து வருகிறேன்’ என்று சொல்லி நரி புறப்பட்டது. 

காட்டுக்குள்ளே தேடிக் கொண்டு சென்ற நரி, சிறிது தூரத்தில் அந்தக் காளை மாட்டைக் கண்டது. அதனுடன் பேசி அதன் நட்பைப்பெற்றது. சிங்கத்தி டம் திரும்பி வந்து, அரசே, ‘அது நம்மைப் போல் ஒரு மிருகம் தான். ஆனால் முரட்டு மிருகம். இருந் தாலும் அது தங்களுடன் நட்புக் கொள்ளவே விரும்பு கிறது’ என்று கூறியது. 

‘அப்படியானால், அதை இங்கே அழைத்து வா’ என்று சிங்கம் கூறியது. 

நரி அவ்வாறே எருதை அழைத்து வந்து சிங்கத் திடம் விட்டது. எருதும் சிங்கமும் அன்று முதல் உயிர் நண்பர்களாய் வாழத் தொடங்கின. சிங்கம் அந்த எருதையே தன் அமைச்சனாக்கிக் கொண்டது. இவ்வாறு பல நாட்கள் கழிந்தன. 

ஒரு நாள் காட்டு மிருகங்களும் அமைச்சர்க ளாகிய நரிகளும் ஒன்று கூடி, ”அரசனுக்கோ நம்மி டம் அன்பில்லை. இரையே நமக்குச் சரியாகக் கிடைக்கவில்லை. இனி நாம் என்ன செய்வது?’ என்று ஆலோசித்துக் கொண்டிருந்தன. அப்போது முதல் நரி இரண்டாவது நரியைப் பார்த்து, ‘யானை தன் மத்தகத்தைக் கொத்துவதற்குத் தானே பாகனிடம் அங்குசத்தை எடுத்துக் கொடுத்ததுபோல், இந்த மாட்டையும் சிங்கத்தையும் நட்புக் கூட்டி வைத்து நமக்கு நாமே கேடு செய்து கொண்டோம். தங்களால் தாங்களே கெட்ட மூன்று பேருடைய கதைபோல் இருக்கிறது நமது கதையும்’ என்று வருத்தத்துடன் கூறியது. 

‘இப்போது நாம் என்ன செய்வது?’ என்று இரண்டாவது நரி கேட்டது. 

‘கவலைப்படாதே, சூழ்ச்சியாக அவ்விருவரு டைய நட்பையும் குலைத்து விடுவோம். பிறகு நாம் இந்தக் காட்டையே நம் கைவசப்படுத்திக் கொள்ள லாம்’ என்று உறுதியுடன் பேசியது முதல் நரி. மேலும் அது தொடர்ந்து, ‘எப்படியோ கைவிட்டுப் போனதை மீண்டும் கைகூடச் செய்வதும், இடையூறு கள் வராமல், தடுத்துக் கொள்வதும், முயற்சியினால் அருமையான செல்வத்தைத் தேடி அடைவதும், எல்லாவற்றையும் நன்கு ஆராய்ந்து செய்வதும் ஆகிய காரியங்களில் வல்லவன் தான் சரியான அமைச்சன்’ என்றது. 

‘இவ்வளவு நெருங்கிய நட்பாய் இருக்கும் சிங்கத்தையும், எருதையும் நம்மால் பிரிக்கமுடியுமா? இது ஆகிற காரியமா?’ என்று கேட்டது இரண்டாவது நரி. 

‘பூ! சூழ்ச்சியால் ஆகாத காரியம் எதுவும் இல்லை. காகம் கரும்பாம்பைக் கொன்றதும், முயல் ஒரு சிங்கத்தைக் கொன்றதும், நண்டொன்று கொக் கைக் கொன்றதும் எல்லாம் சூழ்ச்சியால்தான்!’ என்று கூறியது முதல் நரி. 

‘உண்மைதான். சூழ்ச்சியால் இவர்கள் நட்பைப் பிரிக்கமுடியுமே யல்லாமல் வேறு வழியில்லை. நீ அதற்கானதைச் செய்’ என்றது இரண்டாவது நரி. 

சிங்கம் தனியாக இருக்கும் வேளை பார்த்து, ‘அரசே, தங்களுக்கு ஒரு தீமை ஏற்பட இருப்பதை அறிந்து நான் எச்சரிக்கவே வந்தேன்’ என்று புதிர் போட்டது போல் கூறியது. 

‘அப்படியென்ன தீமை யது?’ என்று சிங்கம் கேட்டது. 

‘அரசே, இதைப்பற்றி முன்னாலேயே சொல்லி யிருப்பேன். ஆனால், உங்கள் மனத்தில் உள்ள விருப்பத்தின் காரணமாக நான் சொல்லக் கூடிய உண்மையைப் பொய்யாக எண்ணி விடுவீர்களோ என்று பயப்பட்டேன். அந்தப் பயத்தினால் தான் இதுவரை எதுவும் சொல்லவில்லை’ என்று நல்ல வன் போலப் பேசத் தொடங்கிய நரி மேலும் தொடர்ந்து கூறியது. “ஆனால், என் மனம் கேட்க வில்லை. நீங்கள் என்ன நினைத்தாலும், எவ்வளவு கோபம் கொண்டாலும், எவ்வாறு தண்டித்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் தங்களுக்குத் தீங்கு வராமல் காப்பாற்ற வேண்டிய வழிகளைச் செய்ய வேண்டியது என் கடமை என்று தோன்றியது. தங்களுக்கு நேரான புத்தி சொல்லி, செய்யவேண்டிய தைச் செய்யும்படி செய்து விட்டால்தான், பகை வர்கள் ஒழிவார்கள் என்று உறுதி கொண்டேன். நல்ல ஆலோசனைகள் சொல்லி அரசனுடைய மயக் கத்தை அகற்றுவதும், தகுந்த சூழ்ச்சிகளைச் செய்து பகைவர்களை அழிப்பதும், முன்னோர்கள் இயற்றி வைத்த ஆட்சி நூல் முறை தப்பாமல் அரசாளச் செய் வதும் அமைச்சர்களின் கடமையல்லவா? அதனால் தான் நான் இனி மேலும் சும்மாயிருக்கக் கூடா தென்று துணிந்து வந்தேன். அரசே, தாங்கள் பழைய சேனை அமைச்சரை விலக்கிவிட்டு, இந்தக் கொம்பு மாட்டை அந்தப் பதவியில் வைத்துக் கொண்டீர்கள். தாங்களோ அதனிடம் நட்புக்கொண்டு, அன்பினால், அதை உயர்ந்த இடத்தில் வைத்தீர்கள். ஆனால் அந்தப் பொல்லாத மாடோ, தானே இந்தக் காட்டை அரசாள வேண்டும் என்று நினைக்கிறது. அதற்கு எப்போது வேளை வரும் என்று காத்திருக்கிறது!” 

இதைக் கேட்டதும் சிங்கத்திற்குச் சிரிப்பாக வந்தது. ‘சே! என்ன வார்த்தை சொன்னாய்? அந்த எருது என்னிடம் வந்து சேர்ந்த போது என்னிடம் என்றும் நட்பாக இருப்பதாக ஆணையிட்டுக் கூறி யதே! தன் வாக்குறுதியை மீறி அது என் அரசைத் தரன் ஆள நினைக்குமா? ஒருகாலும் அப்படியிருக் காது’ என்று மறுத்துக் கூறியது. 

‘அரசே, எதையும் நான் நன்றாக விசாரியாமல் சொல்லவே மாட்டேன். தன் பலத்திற்கு உங்கள் பலம் ஈடாகாதென்று என் எதிரிலேயே தங்களை இகழ்ந்து பேசியது அந்த மாடு. இன்னும் அது எவ்வளவு கொழுப்பாய்ப் பேசியது தெரியுமா? இதற்கு மேலும் தாங்கள் என்னை நம்பவில்லை என்றால், நான் என்ன சொல்ல இருக்கிறது?’ என்று நரி சலித்துக் கொண்டது. 

‘அரசரை இகழுகின்ற ஓர் அமைச்சனையும், பிற அமைச்சர்கள் பலரும் வருந்தும்படி செய்கின்ற அரசனையும் திருமகள் விலகிச் செல்வாள். ஆட்சி யும் அவர்கள் கையை விட்டுப் போய்விடும். நல்ல குலத்தில் பிறந்தவர்களாகவும், அறிவிற் சிறந்தவர் களாகவும் உள்ளவர்களை விலக்கிவிட்டு ஒரே ஒருவனை மட்டும், தலைமை அமைச்சனாக வைத்த வுடன் அவனுக்கு ஆணவம் உண்டாகி, அவன் அரசையே கைப்பற்றிக்கொள்ள எண்ணமிடுகிறான். கடைசியில் அவன் தன் அரசனையே கொல்லவும் நினைப்பான். தம்மைப் பெருமைப்படுத்திப் போற்று கின்றவர்களுக்கு கைமாறு செய்யாமல், மூடர்களுக்கு உபகாரம் செய்ய முந்திக்கொண்டு செல்பவர்கள் தமக்குத்தாமே கெடுதல் செய்து கொள்பவர்கள் ஆவார்கள். நஞ்சு கலந்த சோற்றையும்,அசைந்து ஆடுகின்ற பல்லையும், வஞ்சகர்களின் நட்பையும், தன்னை மிஞ்சி நடக்கின்ற அமைச்சர்களையும், உடனுக்குடன் அகற்றி விட வேண்டும். இல்லா விட்டால், அதனால் பெருந் துன்பம் உண்டாகும் என்று பலவாறாக நரி எடுத்துக் கூறியது. 

‘அப்படி அந்த எருது எனக்கு என்ன தீமை செய்து விட்டது, சொல்!’ என்று சிங்கம் கேட்டது. 

‘அரசே, அது தங்களை இகழ்ந்து பேசுகிறதே அது ஒன்றே போதாதா?’ என்று நரி கேட்டது. 

‘இருக்காது. நாமே அதன் நட்பை விரும்பி ஏற்றுக் கொண்டோம். அப்படியிருக்க அது நமக்குத் தீமை செய்ய நினைக்கக் காரணமே யில்லை. அப்படியே அது தீமைசெய்ய முற்பட்டாலும், அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டுமேயல்லாமல் நாம் அதற்குத் தீமை செய்யக் கூடாது’ என்று சிங்கம் பெருந்தன்மையுடன் கூறியது. 

அப்போது அந்த நரி இடை மறித்து, ‘அரசே, அரச பதவியிலும் செல்வத்திலும் ஆசையில்லாத வர்கள் யாரேனும் இருக்கிறார்களா? அந்தக் காளை மாடு பொல்லாதது. அதை நீங்கள் நம்பிக் கொண் டிருப்பதே சரி இல்லை. எப்போது, எந்த வகையால் உங்களைக் கொல்லலாம் என்று அது சமயம் பார்த் துக் கொண்டிருக்கிறது. நல்ல அறிவுடைய அமைச்சர்கள் சொல்லும் புத்திமதி முதலில் நஞ்சைப் போல் தோன்றினாலும் பின்னால், அளவில்லாத செல்வத்தையும், வாழ்க்கையையும், இன்பத்தையும் உண்டாக்கும். தீயவர்களின் ஆலோசனை முதலில் அமுதம் போலத் தோன்றுமேனும், விரைவில் எல்லாவற்றையும் இழக்கச் செய்யும். தனக்கு வேண்டியவர் களை விட்டுவிட்டு வேண்டாதவர்களின் உதவியை நாடுகின்ற ஒருவன், துன்பம் என்கிற முதலையின் வாயில் அகப்பட்டு, துணை செய்வார் யாருமின்றி உயிரை இழக்க நேரிடும். அமுதூற்றி வளர்த்தாலும் எட்டி மரத்தின் நச்சுக் குணம் மாறாது. பாலூற்றி வளர்த்தாலும் பாம்பு நஞ்சைத்தான் கக்கும். தேனை ஊ ற்றி ஊற்றி வளர்த்தாலும் வேப்பமரத்தின் கசப்பு மாறாது. அதுபோல, தீயவர்களுக்கு எத்தனை நன்மை செய்தாலும் அவர்களுடைய கெட்ட எண்ணம் மாறாது. தீயவர்களை அடியோடு அழித்துவிட வேண்டும். அப்போதுதான் தீமை அழியும். இத்த னையும் ஏன் சொல்லுகிறேன் என்றால், அரசனுக்கு ஓர் அபாயம் வந்தால் அதை முன் கூட்டியே அறிவிப் பது அமைச்சன் கடமையாகும். தன் அறிவினாலே அந்த அபாயம் வராமல் தடுப்பதும் அரசனுக்கு மன உறுதி உண்டாக்குதலும் அந்த அமைச்சனுக்குரிய கடமைகளாகும். நான் இவ்வளவு எடுத்துச் சொல்லி யும் தாங்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. மதம் பிடித்த யானையைப் போல் மனம்போன வழியில் செல்வதும், பெருங்கேடு ஏற்பட்ட காலத்தில், அமைச்சர்களை வெறுத்துப் பேசுவதும் மன்னர்களின் இயல்பாகப் போய்விட்டது’ என்றது நரி. 

‘சரி, நான் இன்று அந்த எருதை இது பற்றிக் கேட்கிறேன்’ என்றது சிங்கம். 

‘சரிதான், சரிதான்! இதைவிட வேறு என்ன ஆபத்து வேண்டும்? சூழ்ச்சிக்காரன் ஒருவனைப் பற்றிய யோசனைகளை மனத்தில் வைத்துக் கொள் ளாமல், அவனிடமே வாய்விட்டுச் சொன்னால் அதைவிட ஆபத்து வேறு என்ன வேண்டும்? 

‘தனக்கென்று சிறப்பாக ஆசிரியர் கூறிய உபதேச மொழிகளையும், தன் மனைவியிடம் கண்ட இன்பத்தையும், தன்னிடம் இருக்கும் செல்வத்தை யும், தன் கல்வியையும், வயதையும், தான் செய்யும் தருமத்தையும், தன் ஆலோசனையையும் பிறர் அறியக் கூறக் கூடாது. கூறினால், அதனால் ஏற்படும் பயன் அழிந்து போகும்’ என்று உபதேசம் புரிந்தது நரி. 

‘என்னை அந்த மாடு என்ன செய்துவிட முடியும்?’ என்று சிங்கம் தன் வலிமையும் ஆங்காரமும் தோன்றக் கேட்டது. 

‘அந்த மாட்டை நம்புவதே கூடாது. அதைப் பக்கத்தில் வைத்திருப்பதே சரியல்ல. அதை மேலும் கூட வைத்துக் கொண்டிருந்தீர்களானால் மூட்டைப் பூச்சியால் அழிந்த சீலைப் பேனைப் போல் அழிய நேரிடும்’ என்று எச்சரித்தது நரி. 

‘அந்த எருது என்னைக் கொல்ல நினைத்திருக் கிறது என்பதை நான் எப்படித் தெரிந்து கொள் வது?’ என்று சிங்கம் கேட்டது. 

‘இப்போது அதைத் தெரிந்து கொள்ள முடி யாது. அது வாலை முறுக்கிக் கொண்டு, கொம்பை அசைத்து எகிரிக் குதித்துப் பாய வரும் போதுதான் தெரியும்! அரசே, உங்கள் நன்மைக்காகத்தான் இவ் வளவும் சொன்னேன். மனத்தில் வைத்துக் கொள் ளுங்கள். வாய்விட்டுச் சொல்லிவிடாமல் நீங்கள் எதற்கும் தயாராக இருங்கள். அந்த மாடு தங்களைப் பாயவரும்போது நீங்கள் அசட்டையாக இருந்து விடாதீர்கள். உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடும். பாயவரும் மாட்டை உயிர் பதைக்கப் பதைக்க வதைத்துக் கொல்லுங்கள்’ என்று சொல்லிவிட்டு நரி சிங்கத்திடமிருந்து புறப்பட்டது. எருதைப் போய்க் கண்டது. 

‘நரியப்பா, நலம் தானே?’ என்று நலங் கேட்டு வரவேற்றது எருது. 

‘காளையரசே! இந்தச் சிங்க அரசனிடம் சேவை செய்து வாழ்பவர்களுக்கு நலம் எங்கிருந்து வரும்? பொல்லாத பாம்பு போல எப்போதும் கொலைத் தொழிலே குறியாய் வாழும் இந்தச் சிங்கத்தைச் சேர்ந்து விட்டோம். நமக்குக் கிடைக்கும் செல்வத் தால் அதன் பயன் கிடையாது. நாம் எண்ணுகின்ற ஏண்ணங்களாலும் ஏதும் பயனில்லை. நாம் எதைத் தான் அனுபவிக்க முடிகிறது?’ என்று நரி கேட்டது. 

‘நரியப்பா, மனத்தில் வஞ்சகம் இல்லாமல், மன்னன் மனமறிந்து நடந்து கொண்டால் துன்ப முண்டோ? எவ்வளவு கோபக்காரராக இருந்தாலும் நம்மிடம் அன்பாய் இருப்பார்களே! தங்கள் சுற்றத் தாரைப்போல நம்மையும் கருதி உயர்வு தருவார் களே!’ என்று எருது கூறியது. 

‘காளை யரசே, செல்வத்தை யடைந்து அத னால் கிடைக்கும் இன்பத்தை அடையாதவர்கள் இல்லை. பெண்களின் இன்பத்தை யடைந்து அத னால் தங்கள் பலம் இழக்காமல் வாழ்ந்தவர்கள் இல்லை. கொடிய சாவுக்குத் தப்பி வாழ்ந்தவர்களும் இல்லை. அதுபோல் அரசர்கள் மனம் விரும்பும்படி நடக்கக் கூடியவர்களும் இந்த உலகத்தில் இல்லை. 

‘தீயவர்களைச் சேர்ந்து நலமடைந்தவர்கள் யாருமே இல்லை. பிச்சைக்குப் போய் துன்பப்படாத வர்கள் ஒருவரும் இல்லை. களவுத் தொழிலினாலே பெருஞ் செல்வத்தை உண்டாக்கிக் கொண்டவர்கள் எவரும் இல்லை. அதுபோல பயமற்ற அரசர்களாலே வாழ்வு அழியாதவர்களும் யாருமே இல்லை. 

‘நல்ல இடத்தை அடைந்து, தங்கள் நல்ல காலத்தினாலே, நல்ல பொருளை அடைந்து நல்ல தோழர்களைப் பெற்று, நடுக்கமில்லாத மனவுறுதி படைத்தவர்கள் சில நாள் இன்ப வாழ்வு வாழ் வார்கள். மற்றவர்கள் எப்போது எந்தக் கணத்தில் அழிவார்கள் என்று சொல்ல முடியாது’ என்று கூறி முடித்தது நரி. 

‘நரியப்பா, இதெல்லாம் எதற்காகச் சொல்கி றாய். அரசர் உனக்கு என்ன கேடு நினைத்தார்?” என்று காளை கேட்டது. 

‘அரசர் வஞ்சகமாய் நடந்து கொண்டாலும் அதை வெளியில் சொன்னால், சொல்பவர்களுக்குத் தான் அவமானம் உண்டாகும். இந்தச் செய்தி அரச னுக்குச் சிறிது தெரிந்தாலும் என்னைக் கொன்று விடுவான்’. 

‘இருந்தாலும் நீயும் நானும் மனம் ஒன்றிய நண் பர்கள். ஆகையால்தான் சொல்கிறேன். நாளைக்குச் சிங்கமன்னன் தன் சேனைகளுக்கெல்லாம் ஒரு பெரிய விருந்து வைக்கப் போகிறான். அதற்கு உன்னைத்தான் கொன்று கூறு போட எண்ணியிருக் கிறான்’ என்று கூறி முடித்தது நரி. 

இதைக் கேட்டதும் அந்த எருதின் நெஞ்சு கலங்கியது. ‘நரியப்பா, அரசன் என்னைக் கொல்ல நினைத்ததற்கு என்ன காரணம்?’ என்று நாக்குழறக் கேட்டது. 

‘இளைத்தவர்கள் மேல் எல்லாருக்குமே கோபம் வரும் என்பார்கள். கொடிய அரசர்களின் கோபத் திற்குக் காரணம் யாரால் அறிய முடியும்? 

பரந்து கிடக்கும் கடலின் ஆழத்தை அளந்தா லும் அளக்கலாம்; உலகத்தின் சுற்றளவை அளந்தா லும் அளக்கலாம்; மலையின் உயரத்தை அளந்தா லும் அளக்கலாம்; பெண்களின் மனத்தை அளந்தா லும் அளக்கலாம்; தன்னிடம் வருபவர்களை இரைக் காகக் கொல்லும் இந்த அரசர்களின் மனத்தை யாராலும் அளக்க முடியாது. 

‘மின்னல் கொடிபோன்ற பெண்களின் மனம் எப்போதும் காமுகரையே விரும்பி நிற்கும். பொன் னெல்லாம் உலோபிகள் சேர்த்து வைத்திருக்கும் பொருளோடுதான் போய்ச் சேரும். பெருமழையும் கடலிலே போய்த்தான் பெய்யும். அதுபோல், அரசர் களும் அருகதை இல்லாதவர்களைத்தான் விரும்பிக் கூடுவார்கள். 

‘ஏதாவது ஒரு காரணத்தால் அரசன் கோபம் கொண்டிருந்தால், வேறொரு காரணம் கூறி அவன் மனத்தைத் திருத்திவிட முடியும். காரணம் இல்லா மலே கோபம் கொண்டவனை எப்படி மனம் மாற்ற முடியும்? அன்று உன்னை அழைத்து வந்து அதிகாரம் கொடுத்தது சிங்கம். இன்று கொல்ல நினைக்கிறது. இதையெல்லாம் நினைத்தால் பாவ மாயிருக்கிறது!’ என்று நரி இரக்க பாவத்துடன் பேசியது. 

‘துட்டர்களுக்கு தொடர்ந்து நன்மை செய்வதும், மூடர்களிடம் இனிய மொழி பேசுவதும், ஊமைக்கு உபதேசம் செய்வதும் நட்டமே தவிர ஒரு நன்மையும் இல்லை. 

‘அறிவில்லாதவனுக்கு நல்லறிவு புகட்டுவதும். தீய அற்பர்களிடத்தும் தன் இல்லாமை கூறி இரப் பதும், துன்பமும் நோயும் தரும் பெண்களைக் காப் பதும், கல்லின்மேல் எறிந்த கண்ணாடி வளையல் போல் பயனின்றிக் கெடும். 

‘உப்பு மண் நிலத்தில் பெய்த மழையும், செவிடர் களுக்குச் செய்த உபதேசமும், தீயவர்களுக்குப் படைத்த சோறும் ஒன்றுதான். 

‘சந்தனமரக் காட்டிலும், தாமரைக் குளத்திலும், தாழைச் செடியிலும் பாம்பும் முதலையும் முள்ளும் சேர்வதுபோல் அரசர்களைத் துட்டர்கள் போய்ச் சூழ்ந்து கொள்வார்கள். 

‘ஆகவே நல்லறிவு படைத்தவர்கள், மன்னர் களிடம் போய்ச் சேர்ந்தால், அம்மன்னர்களை மன மாறுபாடடையச் செய்வதும், அவர்களைக் கொல்ல நினைப்பதும், சூதுகள் புரிவதும் துட்டர்களின் இயற்கை நீதியேயாகும், 

இப்படி யெல்லாம் நரி கூறியதும் அந்த மாடு துயரத்துடன், ‘சிங்க மன்னனின் இனிய சொல்லும், ஆதரவான பேச்சும். அன்புப் பார்வையும் எல்லாம் உண்மை என்று நான் நினைத்துக் கொண்டிருந் தேன். கடைசியில் அவன் என்னைக் கொன்றுவிட முடிவு செய்து விட்டானா? இது நீதியா? நியாயமா?’ என்று கேட்டது. 

‘உனக்கு நமது மன்னன் வணக்கம் சொல்லிய தும், உன்னைத் தழுவிக் கொண்டதும், அருகில் வைத்து உபசாரங்கள் செய்ததும் எல்லாம், ஒரு நாள் கொன்று விடலாம் என்ற எண்ணத்தோடு தான். 

‘கடவுள் இருளைக் கடக்க விளக்கைப் படைத் தார். கடலைக் கடக்கத் தோணியை உண்டாக்கி னார். ஆனால் தீயவர் நெஞ்சில் உள்ள வஞ்சகத் தைக் கடக்கத் தக்க எதையும் அவர் உண்டாக்க வில்லை. 

‘யானையின் வெறியை அங்குசத்தால் அடக்க லாம். வெயிலின் கொடுமையை விசிறியால் தணிக்க லாம். அற்பர்களின் வெறியை அடக்க மட்டும் வழி யில்லை. அவர்கள் செத்தால்தான் அது அவர்க ளோடு சேர்ந்து அழியும். 

‘பூவில் இருக்கும் தேனை உண்டு இன்பமாக வாழ்வதை விட்டு, யானையின் மத நீரை உண்ணப் போய் அதன் முறம் போன்ற காதினால் அடிபட்டுச் சாகும் வண்டு. அதுபோல் நல்லவர்கள் பேச்சைக் கேட்காமல், தீயவர்கள் சொல்வதைக் கேட்டு ஒழிந்து போவது துடுக்குடைய அரசர்களின் தன்மை. 

‘தீயவர்களின் சேர்க்கையால் நல்லவர்களும் நட்டம் அடைவார்கள்; அதனால் ஒரு நன்மையும் வராது. ஒரு காகம், ஓர் ஒட்டகத்தை அழித்த கதை யும் இதைப் போன்றது தான். 

‘கொடியவர்களோடு கூடியவர்கள் யாராயிருந் தாலும் அவர்கள் உயிர்விட்டு ஒழிய வேண்டியது தான். மூர்க்கத்தனமுள்ள அரசர்கள் கையில் இறப்ப தை விடப் போரில் இறப்பது சிறப்பாகும். 

‘போரில் உயிர் விட்டால் சுவர்க்கம் போகலாம்- இல்லாவிட்டால் இந்த உலகத்தை ஆளலாம். வீணாக, ஒன்றுக்கும் பயனில்லாமல் உயிரை விட்டால், சொர்க்கமும் கிடைக்காது; பூமியும் கிடைக்காது; நரகத்தில் தான் போய்ச் சேர வேண்டும். 

‘பகைவர்களோடு போரிட்டு இறந்தவர்கள் இறந்தவர்களாகக் கருதப்பட மாட்டார்கள். உயிருக் குப் பயந்து கொண்டு உயிரோடு இருப்பவர்கள் வெறும் நடைப் பிணங்களேயன்றி வேறல்லர். 

‘அறிவில்லாதவர்கள், தங்களுக்கிருக்கும் பலத் தை வைத்துக் கொண்டு மற்றவர்களைச் சிறியவர்கள் என்று மதித்து விடுகிறார்கள். இது எப்படி யிருக்கிற தென்றால் சிட்டுக் குருவியை அற்பமென்று நினைத்து கடைசியில் கடலரசன் தன் வீராப்பு அடங்கியதைப் போலிருக்கிறது.’ என்று பல கதை களைக் கூறி, நரி காளை மாட்டுக்குக் கோபத்தை உண்டாக்கி விட்டது. 

எல்லாவற்றையும் உண்மை என்று நினைத்துக் கொண்ட எருது, ‘ஒப்புயர்வில்லாத அந்தச் சிங்கத் தைச் சண்டையிட்டுக் கொல்ல எப்படி முடியும்? அதற்கு ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும்’ என்று நரியைத் தானே கேட்டது. 

‘சிங்கம் உன்னைக் கொல்ல வரும்போது, கோபத்துடன் வரும். அப்போது அதன் உடல் நடுங் கிக் கொண்டிருக்கும். வாயைப் பிளந்து கொண்டு கண்கள் சிவக்க அது பாய்ந்து வரும். அந்த சமயம் பார்த்து வாலைத் தூக்கிக் கொண்டு தலையையும் கொம்பையும் ஆட்டியபடி எதிரில் சென்று போரிடு என்று நரி வழி சொல்லியது. 

இவ்வாறு எருதை முடுக்கிவிட்டு நரி, நேரே சிங்கத்திடம் சென்றது. 

‘இன்று எருது தங்களைக் கொல்ல வருகிறது. அரசே, எச்சரிக்கையாயிருங்கள்’ என்று சொல்லி விட்டுச் சென்றது. 

சிறிது நேரத்தில் எருது அங்கே வந்தது அப் போது சிங்கம் கோபத்தோடு அதை உற்றுப் பார்த் தது. அதன் கண்கள் சிவந்திருந்தன. இதைக் கண்ட தும், ‘நம்மோடு சண்டை செய்யச் சிங்கம் தயாராக இருக்கிறது’ 

என்று நினைத்துக் காளைமாடு வாலைத் தூக்கிக் கொண்டு கொம்பை ஆட்டியபடி ஓடி வந்தது. 

சிங்கம் அதன் வாயைப் பிளந்து கொண்டு அதன் மேல் சீறிப் பாய்ந்தது. மண்ணும் விண்ணும் அதிர, கடலும் மலையும் அதிர, அவை ஒன்றொடொன்று மோதிப் போரிட்ட காட்சி பார்க்கப் பயங்கரமா யிருந்தது. 

இரண்டு நரிகளும் இந்தப் பயங்கரமான காட்சி யை ஒரு புதர் மறைவில் நின்று பார்த்துக் கொண்டிருந்தன. காரணமில்லாமல் அவையிரண்டும் ஒன்றையொன்று உதைப்பதும் மோதுவதும் அறைவதும் கண்ட இரண்டாவது நரிக்கு மனம் பொறுக்கவில்லை. 

அது, முதல் நரியைப் பார்த்து, ‘போதும், அரசர்க்குத் துன்பம் உண்டாக்குவது தெய்வத் துரோகம் அல்லவா? சண்டையை விலக்கி மீண்டும் நட்பை உண்டாக்கி விடுவதுதான் சரி. 

‘உண்மை யில்லாமல் புண்ணியம் தேடுவோரும், உறவினர்களைக் கெடுத்துச் செல்வம் சேர்ப்போரும், பலாத்காரத்தினால் பெண்களை அடைவோரும், உயிருக்குயிரான இருவரைக் கெடுத்துத் தாம் வாழ நினைப்போரும் உலகில் இன்பமடைய மாட்டார்கள். துட்ட புத்தி கெட்டதைப் போலவும், இரும்பை எலி தின்ற தென்ற செட்டியைப் போலவும் துன்பமடை வார்கள். ஆகவே, நீ இப்போதே போய் அவர்கள் சண்டையை விலக்கி விடு’ என்று பலவாறாக எடுத்துச் சொல்லியது. 

இதைக் கேட்ட முதல் நரி ஒருவாறாக மனம் தேறிச் சிங்கத்தை நோக்கிச் சென்றது. அதற்குள் சிங்கம் எருதைக் கொன்று விட்டது. 

செத்துக் கிடந்த மாட்டைக் கண்டு சிங்கம் கண்ணீர் விட்டுப் புலம்பிக் கொண்டிருந்தது. 

அருகில் சென்ற முதல் நரி, சிங்கத்தைப் பார்த்து, *சண்டைக்கு வந்தவனைத்தானே கொன்றீர்கள்? இதற்கு ஏன் அழ வேண்டும் அரசே?’ என்று கேட்டது. 

ஒரு நன்மையும் தராத நச்சு மரமானாலும், நாம் வளர்த்ததை நாமே வெட்டுவதென்றால் உளம் பொறுக்குமோ, உலகம் புகழும் ஓர் அமைச்சனைக் கொல்லுகின்ற அரசனுக்குப் பெரும் கேடு வராதா?” என்று கூறிச் சிங்கம் வருந்தியது. 

‘அரசே, கடமைப்படி நடவாதவர்களையும், தன் சொல் கேளாத மனைவியையும், மனத்தில் கபடம் நினைத்திருக்கும் தோழனையும், பெரும் போரிலே புறமுதுகிட்டு ஓடும் சேனையையும், ஆணவ வெறி பிடித்திருக்கும் அமைச்சனையும் முன்பின் பாராமல் அழித்து விடுவதே சிறந்த நீதியாகும். இவர்களால் கிடைத்த இன்பத்தைப் பற்றி அரசர்கள் நினைத்துப் பார்க்க வேண்டியதில்லை.’ 

இப்படிப் பலவிதமாகக் கூறி, அந்தச் சிங்கத் தின் நெஞ்சில் இரக்கமே இல்லாமல் அடித்து விட்டது முதல் நரி. 

பிறகு, இரண்டாவது நரியையும் சேர்த்துக் கொண்டு செத்துக் கிடந்த எருதின் உடலை இழுத் துச் சென்று காட்டின் வேறொரு பக்கத்தில் கொண்டு போய்ப் போட்டுத் தன் இனமாகிய நரிகளுக்கெல் லாம் விருந்திட்டுத் தானும் தின்று மகிழ்ந்திருந்தது. 

– பஞ்சதந்திரக் கதைகள், பகுதி-1 – நட்புப் பிரித்தல், முதற் பதிப்பு: மார்ச் 1996, அன்னை நாகம்மை பதிப்பகம், சென்னை.

நாரா. நாச்சியப்பன் (நாராயணன் நாச்சியப்பன்; பாவலர் நாரா. நாச்சியப்பன்) (ஜூலை 13, 1927 - 2000-த்திற்குப் பின்) கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர், அச்சக உரிமையாளர். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் ஒருவர். திராவிட இயக்கம் சார்ந்த பல படைப்புகளை, சிறார்களுக்கான பல நூல்களை எழுதினார். தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது. நாரா. நாச்சியப்பன், அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆத்தங்குடியை அடுத்த முத்துப்பட்டணத்தில், சித. நாரா. நாராயணன் செட்டியார்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *