ஒருநாள் சுயநலக்காரனான தம்பு ஊர் ஓரமாக <உள்ள சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தான். நடுச் சாலையில் ஒரு முள் செடி கொத்தாகக் கிடந்தது. அவன் அதை எடுத்து ஓரமாக வீசாமல், முள் செடியைத் தாண்டி வீட்டுக்குப் போய் விட்டான்.
"யாராவது முள் செடி குத்தி சாகட்டும்... எனக் கென்ன வந்தது? நல்ல வேளை நான் பார்த்து விட்டேன்,' என்று சொல்லிக் கொண்டே போனான்.
சிறிது நேரத்திற்குப் பிறகு அந்தப் சாலையின் வழியாகப் பள்ளியில் இருந்து வந்து கொண்டிருந்த தம்புவின் மகன் பாலு, அந்த முள் செடியில் கால் வைத்து விட்டான். அவ்வளவுதான்! கூர்மையான இருந்த முட்டுகள், “நறுக்’ என்று அவன் காலில் பாய்ந்தன.
நொண்டிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தான். பாதையில் முள் தைத்த விஷயத்தைத் தந்தையிடம் கூறினான்.
“நான் அந்த முள் செடியை எடுத்து ஓரமாகப் போட்டு இருந்தால், என் மகன் காலில் முள் குத்தி இருக்காது’ என்று எண்ணி மிகவும் வருந்தினான் தம்பு.
மறுநாள் காலையில் பாலுவின் முள் தைத்த கால் பெரிதாக வீங்கி விட்டது. வலி பொறுக்க முடியாமல் துடித்தான்.
தம்பு அவனை உள்ளூர் டாக்டரிடம் அழைத்துச் சென்று காட்டினான்.
டாக்டர், பாலுவின் காலைச் சோதனை செய்து பார்த்துவிட்டு, ”தம்பு! உங்கள் மகனின் காலில் விஷ முள் குத்தி, விஷம் பாதம் வரை பரவி விட்டது. பட்டணத்துக்குப் போய் பெரிய டாக்டரிடம் காட்டுங்கள்,” என்றார்.
தம்பு உடனே பாலுவைப் பட்டணத்துக்கு அழைத்துச் சென்று ஒரு பெரிய டாக்டரிடம் காட்டினான். அவர் பாலுவின் காலை பரிசோதித்து விட்டு, “”நல்ல வேளையாக உடனே வந்தீர்கள். சிறிது தாமதித்து வந்தாலும் பையனின் காலை எடுக்க வேண்டி இருக்கும்,” என்று கூறி விட்டுச் சிகிச்சை அளித்தார்.
பாலுவுக்கு சிகிச்சை செய்ய இரண்டாயிரம் ரூபாய் செலவானது. அன்று அந்த முள்ளை எடுத்து ஓரமாகப் போட்டு இருந்தால், இவ்வளவு செலவும், சிரமமும் இருக்காது என்பதை உணர்ந்தார் தம்பு.
இப்போது எல்லாம், “எனக்கு என்ன வந்தது?’ என்று கூறுவது இல்லை. ஏனென்றால் அது அவன் 2000 ஆயிரம் பணம் செலவழித்துக் கற்றுக் கொண்ட பாடம் ஆயிற்றே… பொதுநலத்தில் மிகவும் கரிசனையோடு நடந்துக் கொள்கிறான் தம்பு.
– டிசம்பர் 2011