ஒரு நாள், கையில் உள்ள ஐந்து விரல்களுக்குள் எந்த விரல் முக்கியமானது என்ற பிரச்சனை உண்டாயிற்று.
கட்டை விரல், “நான் தான் முக்கியம், என் உதவி எல்லோருக்கும் தேவை” என்று பெருமையுடன் கூறியது.
அடுத்த விரல், “என்னைக் கொண்டே எல்லோரும் சுட்டிக் காட்டுவதால், எனக்கு ஆள்கட்டி விரல் என்று பெருமை உண்டு” என்று கூறியது.
நடுவிரலுக்கு மிகவும் கோபம், “எல்லோரையும் விட நானே உயரமானவன்” என்று இறுமாப்புடன் கூறியது.
நான்காவது விரல் அமைதியாக, “உங்களில் எவருக்கும் இல்லாத பெருமை எனக்கு மட்டுமே உண்டு. தங்க மோதிரத்தையோ வைரமோத்திரத்தையோ என்மீது போடுவதால், மோதிர விரல் என்ற மதிப்பு எனக்கே உண்டு” என்று அமைதியாகக் கூறியது. ஐந்தாவது விரலான சுண்டு விரல், “வணக்கம் என்று சொல்லி ஒருவரை வணங்கினாலும், அல்லது கடவுளை வணங்கினாலும், எப்போதும் நான்தான் முதலில் நிற்கிறேன். நீங்கள் நால்வரும் எனக்குப் பின்னே அல்லவே நிற்கிறீர்கள்?” என்று கூறியது.
பிரச்சினை முடிவாகவில்லை.
அப்போது ஒருவன், ‘லட்டு லட்டு’ என்று கூறிக் கொண்டிருந்தான்.
எல்லா விரல்களும் ஒன்று சேர்ந்து அவனிடம் லட்டை வாங்கி கொண்டன.
இப்போது எந்த விரல் முக்கியமானது?
– மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள் தொகுப்பிலிருந்து (ஜூன் 1998).