ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி இருந்தான். அவனுடைய நிலத்தின் ஒரு பகுதியை, அடுத்த நிலத்துக்காரன் தன்னுடைய நிலத்தோடு சேர்த்துக் கொண்டு உழுது பயிரிட்டு வந்தான்.
“என்னுடைய நிலத்தின் பகுதியை, நீ உன்னுடைய நிலத்தோடு சேர்த்துக் கொள்ளலாமா? இது நியாயமா?” என்று கேட்டான்.
“நியாயம் அநியாயம் என்பது எனக்குத் தேவையில்லை. அது என்னுடைய நிலத்தை ஒட்டியிருப்பதால், அது எனக்கே சொந்தமானது” என்று முரட்டுத் தனமாகப் பதில் சொன்னான்.
கிராமப் பஞ்சாயத்தாரிடம் போய் முறையிட்டான். அவர்கள் அவனை வரவழைத்து விசாரித்தார்கள். ” அது என்னைச் சேர்ந்தது. திருப்பிக் கொடுக்க முடியாது” என்று மறுத்து விட்டான்.
நிலத்தை இழந்தவன் மிகவும் வருத்தத்தோடு இருந்தான். அவன் மனைவி, “அவனை சும்மா விட்டுவிடக் கூடாது. நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு நியாயம் கேட்கவேண்டும்” என்று யோசனை சொன்னாள்.
விவசாயி உடனே ஒரு வழக்கறிஞரிடம் போய் விவரம் கூறி, வழக்குத் தொடுத்தான்.
நீதிமன்றத்திலே நிலத்தை இழந்த விவசாயிக்குப் பாதகமாக தீர்ப்புக் கிடைத்தது.
”அதற்கு மேல் ஒரு நீதிமன்றம் இருக்கிறது; அங்கே போய் வாதாடலாம்” என்றார் வழக்கறிஞர். அதன்படி அங்கே போய் வாதாடியதில் அதிலும் பாதகமாக தீர்ப்புக் கிடைத்தது.
“இன்னொரு நீதி மன்றம் இருக்கிறது. அதில் நிச்சயம் நமக்கு வெற்றி கிடைக்கும்” என்றார் வழக்கறிஞர்.
விவசாயி, “ஐயா, நான் இழந்த நிலம் சிறு பகுதிதான். அதை மீட்பதற்காக, நான் செலவு செய்த பணம் அந்த நிலத்தின் விலை மதிப்பைக் காட்டிலும் நான்கு மடங்கு ஆகும். மேலும், என்னுடைய விவசாய வேலைகளையும் கவனிக்க முடியாமல் அது வேறு நஷ்டம்! முட்டாள்தனம் செய்து விட்டேன். இனி, இன்னொரு நீதிமன்றத்துக்குப் போகவும் வழக்காடவும் என்னிடம் ஒரு காசு கூட இல்லை. அநியாயக்காரனைக் கடவுள் தண்டிக்கட்டும் என்றான்.
– மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள் – முதற்பதிப்பு: ஜூன் 1998 – முல்லை பதிப்பகம்