ஒரு சிறிய நாட்டை சிற்றரசன் ஒருவன் ஆட்சி செய்து வந்தான்.
தத்தன் என்ற காவலாளி , அரண்மனையில் வாயில் காப்போனாகப் பணிபுரிந்து வந்தான். அவன் அரசனிடம் மிகுந்த விசுவாசம் கொண்டிருந்தான்.
அரசனைக் கொல்ல வந்த சில ஒற்றர்களை அவன் மிகவும் துணிவுடன் விரட்டி, அடித்திருக்கிறான், சிலரைக் குத்திக் கொன்று, அரசனைக் காப்பாற்றி யிருக்கிறான்.
அவனுடைய ராஜவிசுவாசத்தை அறிந்த அரசன், அவனுடைய ஏழ்மை நிலையைப் போக்கக் கருதினான்.
ஒரு நாள், பாத்திரம் நிறைய பொன்னும் மணியும் போட்டு, அதை இறுக மூடி, காவலாளி வீட்டுக்குச் செல்லும் போது, அவனுக்குப் பரிசாகக் கொடுத்தான் அரசன்.
அதைப் பெற்றுக் கொண்டு காவலாளி வீட்டுக்குச் செல்லும்போது, ஒரு துறவி ஒரு பொன்னைக் கொடுத்துவிட்டு, அவனிடமிருந்த பாத்திரத்தைப் பெற்றுக் கொண்டான்.
பாத்திரத்தில் இருந்தது என்ன என்பது அவனுக்குத் தெரியாததால், ஒரு பொன்னை பெரிதாக நினைத்து மகிழ்ந்தான்.
அந்தப் பாத்திரத்தை துறவி அரசனிடம் கொண்டுபோய்க் கொடுத்து இனாம் பெற்றுச் சென்றான்.
மறுநாளும், ஒரு பாத்திரத்தில் சில பொருள்களை வைத்து மூடி காவலாளி தத்தனிடம் கொடுத்தான் அரசன்.
அதையும் அரசாங்க ஊழியன் ஒருவன், இரண்டு பொன்களைக் கொடுத்து அவனிடமிருந்து பெற்றுக் கொண்டு சென்றான்.
அதைக் கொண்டு போய் அவன் அரசனிடம் கொடுத்து இனாம் பெற்றான்.
மூன்றாம் நாளும், ஒரு பாத்திரத்தில் ஒரு முத்து மாலையை வைத்து காவலாளியிடம் கொடுத்தான் அரசன்.
மற்றொரு அரசாங்க ஊழியன் மூன்று பொன்னைக் கொடுத்து, காலவாளியிடமிருந்து பாத்திரத்தைப் பெற்றுக் கொண்டு சென்று, அரசனிடம் கொடுத்தான்.
காவலாளி தத்தனின் வறுமை நீங்கவில்லை என்பதையும், அவன் ஆசைப்படவில்லை என்பதையும் அரசன் உணர்ந்தான்.
மீண்டும் ஒரு பாத்திரத்தில் பொன்னும் பொருளும் வைத்து, தத்தனுக்குக் கொடுத்தான். அவன் அரசனை வணங்கி, அதை வாங்கும் போது, பாத்திரத்தின் மூடி திறந்து, அதில் உள்ள பொன்னும் பொருளும் கீழே விழுந்தன.
அப்போது தான் காவலாளி தத்தனுக்கு உண்மை தெரிய வந்தது.
அரசன் மூன்று தடவை கொடுத்த பாத்திரங்களை தன்னுடைய வறுமைப் புத்தியினால் என்ன இருக்கிறது என்று பாராமல் அப்படியே, கொடுத்து விட்ட முட்டாள் தனத்தை நினைத்து, தன்னை நொந்து கொண்டான் தத்தன்.
இம்முறை பாத்திரம் தத்தனிடம் சேர்ந்தது. அதில் உள்ளதை அவன் உணரச் செய்ததை எண்ணி அரசன் மகிழ்ந்தான். மனநிறைவு பெற்றான்.
வறுமையில் வாடுபவன் கிடைத்தது போதும் என்று நினைப்பான்.
– மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள் – முதற்பதிப்பு: ஜூன் 1998 – முல்லை பதிப்பகம்