எதுவும் ஒரு தொழில்தான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: April 14, 2019
பார்வையிட்டோர்: 8,198 
 
 

இரத்தினபுரி என்னும் சிற்றூருக்கு மாதவன் என்னும் இளைஞன் வேலை தேடி வந்தான். அந்த ஊரில் எல்லா இடங்களிலும் வேலை தேடி அலுத்து போனான்.

எங்கும் வேலை கிடைக்கவில்லை. காரணம் இவன் வெளியூர்க்காரன் இவனை நம்பி எப்படி வேலை கொடுப்பது என்று நிறைய பேர் வேலை தர மறுத்து விட்டனர். மாதவன் பாவம் சோர்ந்து போய் விட்டான். அவனுக்கு அவன் அம்மாவிடம் சொல்லி வந்தது ஞாபகம் வந்தது.

அவன் அம்மா சுமார் ஐம்பது மைல் தள்ளி வசித்து வந்தார். கூலி வேலையாளாக அங்குள்ள விவசாய தொழிலுக்கு சென்று கொண்டிருந்தார். மாதவனின் அப்பா இரண்டு வருடங்களுக்கு முன்னர் காலமாகி விட்டார். இதனால் வீட்டில் கஷ்டமான நிலைமை வந்து விட்டது. மாதவன் அப்பொழுது அங்குள்ள பள்ளியில் படித்துக்கொண்டிருந்தான். அப்பா காலமாகிய பின் வீட்டில் நிலவிய வறுமையை கண்டு அம்மாவிடம் நான் எப்படியாவது வெளியூர் சென்று பணம் சம்பாதித்து உனக்கு அனுப்புகிறேன் என்று உறுதி சொல்லி வந்திருந்தான். ஆனால் இங்கு நிலைமையோ வேறாக இருந்தது. எங்கும் வேலை கிடைக்கவில்லை. என்ன செய்வது? பசி வேறு அவன் காதை அடைத்தது. அங்குள்ள் ஒரு கோவிலில் உட்கார்ந்து அடுத்து என்ன செய்வது என்ற கவலையில் ஆழ்ந்திருந்தான்.மறுபடி ஊருக்கே போய் விடலாமா? என்ற் எண்ணம் அவனுக்கு வர ஆரம்பித்து விட்டது.

அப்பொழுது ஒரு பெரிய கார் வந்து நின்றது. அதிலிருந்து பெண்களூம், குழந்தைகளும் இறங்கி கோயிலுக்குள் வந்தனர். வந்தவர்கள் தங்களது மிதியடிகளை எங்கு கழட்டி வைப்பது என்று திகைத்து நின்றனர். இவன் கோயில் வாசலில் உட்கார்ந்திருப்பதை கண்டவர்கள், தம்பி இந்த செருப்பை எல்லாம் பாத்துக்க !

என்று எல்லோரும் செருப்பை கழட்டி வைத்து விட்டு உள்ளே சென்றனர்.

மாதவன் திகைத்து நின்றான். அவன் அவர்க்ளுக்கு பதில் சொல்ல நினைக்கும்

முன்னரே அவர்கள் தங்கள் மிதியடிகளை அவன் முன்னால் கழட்டி வைத்து விட்டு விறு விறுவென உள்ளே நுழைந்து விட்டதால், இனி எங்கும் செல்ல முடியாது, அவர்கள் வரும் வரை காத்திருந்து அவர்கள் மிதியடிகளை ஒப்படைத்து விட்டு செலவதுதான் நல்லது என்று முடிவு செய்தான். பசி வேறு அவனை மயக்க நிலைக்கு கொண்டு சென்றது.

உள்ளே சென்றவர்கள் ஒரு மணி நேரம் கழித்தே வெளியே வந்தனர். வந்தவர்கள் இவன் அருகில் வந்தனர். அப்பொழுது அவன் பசி மயக்க நிலையிலேயே இருந்தான். அவர்கள் விறு விறுவென மிதியடிகளை மாட்டிக்கொண்டு இவனை பார்க்க இவன் நிலைமையை கண்டு அந்த கூட்டத்தில் இருந்த பெரியவர், ஐம்பது ரூபாய் எடுத்து அவன் கையில் கொடுத்தார். இவனுக்கு என்ன கொடுக்கிறார் என்று தெரியாமல் அவர் கொடுத்த்தை வாங்கிக்கொண்டவன் அதை உற்று பார்க்க ரூபாய் ஐம்பதாக இருக்கவும் பயந்து சார் ஐம்பது ரூபாய் கொடுக்கறீங்க சார், இவ்வளவு வேண்டாம் சார் என்று சொன்னான். அந்த பெரியவர் புன் சிரிப்புடன் தம்பி உன்னை பார்த்தா பசியில துடிக்கற மாதிரி இருக்கு, போய் நல்லா சாப்பிடு, அதுக்குத்தான் கொடுத்தேன் சொல்லிவிட்டு காரில் ஏறி சென்று விட்டார்.

மாதவனுக்கு அந்த பசியிலும் ஆச்சர்யமாக இருந்தது. என்ன ஒரு ஆச்சர்யம்.காலையில் பத்து பைசா இல்லாமல் இந்த ஊருக்கு வேலை தேடி வந்த நான் இப்பொழுது ஐம்பது ரூபாய் கையில் வைத்திருக்கிறேன்.ஆண்டவன் யாரையும் கைவிடுவதில்லை. நாம் மட்டும் மனதை இழக்காமல் இருந்தால் போதும். மனதுக்குள் வைராக்கியம் வர எழுந்தவன் முதலில் பசியை போக்க ஏதாவது சாப்பிட்டு விட்டு வந்து யோசிக்கலாம் என்று முடிவு செய்தான்.

சாப்பிட்டு வந்தவுடன் கோயில் நிர்வாக அலுவலகத்துக்கு வந்து ஐயா கோயிலுக்கு வருபவர்களின் மிதியடிகளை நான் பார்த்துக்கொள்ள அனுமதி வேண்டும் என்று கேட்டான்.

அவனுடைய நல்ல நேரம் அப்பொழுதுதான் அங்கு ஒருவர் மிதியடியை கழட்டி வைத்துவிட்டு கோயில் உள்ளே சென்றுவிட்டு வெளியே வந்து பார்த்தபோது மிதியடியை காணாமல் போயிருந்தது. உடனே நிர்வாக அலுவலகத்திற்கு வந்து புகார் கொடுத்துக்கொண்டிருந்தார். இவன் போய் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லவும் கோயில் நிர்வாகம் மகிழ்ச்சியுடன் அனுமதி கொடுத்து அதற்குண்டான சிறிய தொகை ஒன்றை சொல்லி அதனை பெற்றுக்கொள் என்று அனுமதி கொடுத்து விட்டது.

நாட்கள் நகர்ந்தன. சுமார் ஆறு மாதங்கள் ஓடி விட்டது. இப்பொழுது மாதவன்

கோயில் ஒதுக்கி கொடுத்த இடத்தில் மிதியடிகளை பாதுக்காக்க வசதி ஏற்பாடு செய்து அதனை கவனித்துக் கொள்ள,அம்மாவை வர சொல்லி விட்டான். அது மட்டுமல்ல அங்கு வரும் இரு சக்கரம், நாலு சக்கர வண்டிகளை பாதுகாக்கும் வேலையையும் கோயில் நிர்வாகத்திடம் பெற்று, வாகனங்களை பாதுக்காக்கும் வேலையையும் பார்த்துக்கொள்கிறான். கையில் கொஞ்சம் பணமும் சேர்த்து கொண்டிருக்கிறான். அவன் அம்மாவிற்கு பையன் படிப்பு பாழாகி விட்டதே என்ற கவலை இருந்தாலும், வீட்டில் வறுமை ஒழிந்து விட்டதே என்ற நிம்மதியில் இருந்தார்.

மாதவன் இப்பொழுது சுறு சுறுப்பான மிதியடி, இரு சக்கர வாகன பாதுகாப்பு இரு வேலைகளையும் திறம்பட கவனித்துக்கொண்டாலும் எதிர்காலத்தில் அடுத்து பெரிய வேலை ஏதாவது எடுத்து செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறான். அது மட்டுமல்ல, தன் கல்வியை எதிர்காலத்தில் எப்படியாவது நிறைவேற்றி கொள்ள வேண்டும் என்று மனதுக்குள் சபதம் எடுத்து கொண்டிருக்கிறான்.

குட்டீஸ் “சாதாரண மிதியடிதானே” என்று நினைக்காமல் அதை பாதுகாப்பது கூட ஒரு தொழிலாக நினைத்து முன்னேறி இருக்கும் மாதவனை பாராட்டி விடுவோம். வறுமையை கண்டோ அல்லது மற்ற துன்பங்களை கண்டோ மனம் தளராமல் இருந்தாலே கண்டிப்பாய் அதற்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்பதை இந்த கதையில் தெரிந்து கொண்டோமல்லவா?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *